தினமலர் விமர்சனம்
சில வருடங்களுக்கு முன் காதலே ஜெயம் என்ற படத்தை தயாரித்து நடித்த பாண்டிச்சேரி விளம்பர புள்ளி வி.நடராஜன், வி.என்.ஆர். எனும் பெயர் சுருக்கத்துடன் நடித்து, தயாரித்திருக்கும் படம்தான் க (கஜா). பெயரில் மாற்றம் கண்ட வி.என்.ஆர். நடிப்பில் முன்னேற்றம் காணாதது வருத்தம்!
கதைப்படி ஹீரோ, ஆன்ட்டி ஹீரோ என இரட்டை வேடங்கள் ஏற்று நடித்திருக்கும் வி.என்.ஆர்., ஆன்ட்டி ஹீரோ எனும் அர்த்தத்தை தப்பாக புரிந்து கொண்டதாலோ என்னவோ, படம் முழுக்க ஆன்ட்டிகளை... அதுவும் திருமணம் ஆன பெண்களை துரத்தி, தன் காமத்திற்கு இரையாக்குகிறார் ஆன்ட்டி ஹீரோ கஜா! அப்படி தன் அலுவலக உயரதிகாரியின் மனைவியையே ஒரு சந்தர்ப்பத்தில் கஜா தன் காமத்திற்கு இரையாக்க... அதை அந்த அதிகாரியும் பார்த்து விடுகிறார். அவமானத்தால் குடும்பத்துடன் அவருக்கு தற்கொலை செய்து கொள்கிறார் அதிகாரி. அவருக்கு பதிலாக உயர் அதிகாரியாக வருகிறார் ஹீரோ வி.என்.ஆர்.! அவரது புது மனைவி அக்ஷயாவையும் கஜா ஏற்கனவே அடையத் துடித்து, ஏமாந்திருப்பது பின்னர் தெரியவருகிறது. அப்புறம் என்ன? கஜா வென்றாரா? அவரை அக்ஷயா கொன்றாரா? என்பதுதான் க்ளைமாக்ஸ்!.
டபுள் ஆக்டிங்கில் வி.என்.ஆர்., நிற்கிறார், நடக்கிறார், பைக் ஓட்டுகிறார், அக்ஷயாவுடன் டூயட் பாடுகிறார், புவனேஸ்வரியுடன் குத்தாட்டம் போடுகிறார், பாய்ந்து புகுந்து சண்டை போடுகிறார். மொத்தத்தில் தனியாக காமெடி காட்சிகள் பெரிதாக இல்லாத குறையை போக்குகிறார். பேஷ்! பேஷ்!
கதாநாயகி அக்ஷயா பாத்திரம் அறிந்து பக்காவாக நடித்திருக்கிறார். இதுநாள்வரை புடவை, சுடிதாரில் கவர்ச்சி காட்டி வந்த புவனேஸ்வரி முதன் முதலாக டூ - பீஸில் குத்தாட்டம் போட்டு, வி.என்.ஆரிடம் இருந்து நம்மை காப்பாற்றியிருக்கிறார்.
மணி சர்மாவின் இசையில் பாடல்களும், டி.ரவிசங்கரின் ஒளிப்பதிவும் புவனேஸ்வரி மாதிரியே சற்றே ஆறுதல்! புதியவர் ஆர்.கணபதி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்கு பொறுப்புகளை ஏற்று இருக்கிறார். கதை, திரைக்கதையில் இருக்கும் திருப்தியும், புதுமைகளும் வசனத்திலும், இயக்கத்திலும் இல்லாதது வருத்தம்!
க என்கிற கஜா : ஏ ரக மஜா