கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் இர்பான் கான்(54), சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்தவர் இர்பான் கான். பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு தான் இவரது தாயார் சாயிதா பேகம் முதுமை காரணமாக மரணம் அடைந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது இறுதி சடங்கில் கூட இர்பான் கலந்து கொள்ள முடியாமல் இருந்தார். இதனால் மன அழுத்த பிரச்சினைக்கு ஆளாகி இருந்தார்.
மேலும் கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் இர்பான் கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமாக இருந்து வந்த நிலையில் இன்று(ஏப்., 29) காலை உயிர் பிரிந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 1966ம் ஆண்டு ஜன., 7ம் தேதி பிறந்தார். இளமை காலத்தில் கிரிக்கெட் வீரராக திகழ்ந்த இர்பான், நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமில் படித்த இவர் பின்பு மும்பைக்கு சென்று டிவி தொடர்களில் நடித்து வந்தார். அங்கு அவர் நடித்த பல தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 1988ம் ஆண்டு சலாம் பாம்பே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின் பல படங்களில் நடித்தார். குறிப்பாக ஆரம்ப காலத்தில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என அசத்தி வந்த இவர் ஹாலிவுட்டில் வெளியான ஜுராசிக் வேல்டு, லைப் ஆப் பை, அமேசிங் ஸ்பைடர் மேன் போன்ற பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
ஹாசில், மக்பூல், லைப் இன் ஏ மெட்ரோ, மும்பை மேரி ஜான், தல்வார், லஞ்ச் பாக்ஸ், மதாரி, ஆன், காரிப் காரிப் சிங்கிள், பான் சிங் தோமர், 7 கூன் மாபியா, டி-டே, கண்டே, பிக்கு, இங்கிலீஷ் மீடியம், லைப் ஆப் பை ஆகியவை அவர் நடித்த முக்கிய படங்கள். ஊரங்கிற்கு முன்னதாக அவர் நடித்த ஆங்கிரேஸி மீடியம் என்ற படம் வெளியானது. அதுவே அவரின் கடைசி படமாக அமைந்துவிட்டது.
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு சுதபா தேவேந்திர சிக்தர் என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.
திரைப்பிரபலங்கள் இரங்கல்
இர்பான் கானின் மறைவு பாலிவுட் திரைப்பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கால் வெளியே செல்ல முடியாத சூழலில் பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, சோனல் சவுகான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சோனாலி குல்கர்னி, ஹுயுமா குரேஷி, ராகேஷ் ரோஷன் உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்களும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.