சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
2020ம் ஆண்டு தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரையில் வராத ஒரு சோதனை வருடமாகவே அமைந்துவிட்டது. கொரோனா தொற்று மற்ற தொழில்களைக் காட்டிலும் சினிமாவை பெரிதும் பாதித்துவிட்டது.
நூறாண்டு கால தமிழ் சினிமாவில் முதல் முறையாக சினிமா தியேட்டர்கள் எட்டு மாதங்கள் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சினிமா படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. மற்ற தொழில்கள் ஓரளவிற்கு படிப்படியாக மீண்டு வந்தாலும் சினிமா மீள்வதற்கு இன்னும் சில மாதங்களுக்கும் மேலாகலாம்.
கொரோனா தொற்று - பட வெளியீடு பாதிப்பு
ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் பாதி, நவம்பர் மாதத்தில் பாதி, டிசம்பர் மாதம் என 4 மாதங்களில் மட்டுமே தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகின.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த மார்ச் மாதத்திலேயே தியேட்டர்களை உடனடியாக மூடினார்கள். அதனால் மார்ச் 13ம் தேதியுடன் புதிய படங்களின் வெளியீடுகள் நின்று போயின. அதன்பின் நவம்பர் மாதம் 10ம் தேதி தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்ட பிறகு நவம்பர் 14ம் தேதி தான் புதிய படங்கள் மீண்டும் வெளியாகின.
விபிஎப் கட்டணப் பிரச்சினையின் காரணமாக அந்த நிறுவனங்கள் அளித்த சலுகைகளின் காரணமாக பல சிறிய பட்ஜெட் படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகின. அவற்றில் பெரும்பாலான படங்களின் நடிகர்கள், நடிகைகள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள கூட ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.
ஜனவரி 3ம் தேதி முதல் கொரானோ தொற்றுக்கு முன்பாக தியேட்டர்கள் மூடப்படுவதற்கு முன்பு மார்ச் 13ம் தேதி வரையில் 48 படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. அதன்பின் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின் 37 படங்கள் வெளியாகின.
மொத்தமாக இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பெரிய வெற்றியையோ, வசூலைக் குவிக்கும் படங்களாகவோ அமையவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம்.
கவனிக்க வைத்த படங்கள்
ரஜினிகாந்த் நடித்த தர்பார், தனுஷ் நடித்த பட்டாஸ், ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மாறாக மற்ற நடிகர்கள் நடித்த சில படங்கள் வசூல் ரீதியாக ஓரளவிற்கும் அதற்கு மேலும் லாபத்தைக் கொடுத்துள்ளதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ, சந்தானம் நடித்த டகால்டி, ஹிப்ஹாப் தமிழா நடித்த நான் சிரித்தால், அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே, ரிச்சர்ட் நடித்த திரௌபதி, துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு, சந்தோஷ் பி ஜெயக்குமார் நடித்த இரண்டாம் குத்து ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன.
ஏமாற்றம் தந்த படங்கள்
சசிகுமார் நடித்த நாடோடிகள் 2, ஜீவா நடித்த சீறு, ஜிப்ஸி, விக்ரம் பிரபு நடித்த வானம் கொட்டட்டும், அருண் விஜய் நடித்த மாபியா, சிபிராஜ் நடித்த வால்டர், சந்தானம் நடித்த பிஸ்கோத், ஆகிய படங்கள் வரவேற்பைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்தைத்தான் தந்தன.
ரசிகர்கள் வித்தியாசமான தரமான படங்களைத்தான் எதிர்பார்க்கிறோம் என்பதை எத்தனை முறை அழுத்தமாகச் சொன்னாலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் வரும் படங்கள் ஒவ்வொரு வருடமும் குறைவாகவே இருக்கின்றன.
கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்கள் இந்த ஆண்டு வெளியாகவில்லை.
மக்கள் மனதை மாற்றிய ஓடிடி
மொபைல் ஆப்கள் மூலம் படங்களைப் பார்க்கும் வசதியை ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ 5 போன்ற தளங்கள் கடந்த சில வருடங்களாக தங்களது வாடிக்கையாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இந்த கொரோனா தொற்று பேருதவியைப் புரிந்துவிட்டது.
தியேட்டர்கள் மூடப்பட்ட காரணத்தாலும், டிவிக்களில் போட்ட படங்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பியதாலும் மக்களின் கவனம் மெல்ல மெல்ல ஓடிடி தளங்களின் பக்கம் திரும்பியது. தாங்கள் விரும்பும் படங்களை எந்த விதமான விளம்பர இடையூறு இல்லாமலும் பார்க்கும் வசதியை ஓடிடி தளங்கள் வழங்கி வருகின்றன.
ஓடிடி ஆதிக்கம்
பழைய படங்களைப் பார்க்கவே வாடிக்கையாளர்கள் புதிதாக வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள் அவர்களை மேலும் ஈர்க்க புதிய படங்களை வெளியிட்டால் என்ன என்று யோசித்தார்கள். அதன் விளைவாக தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே புதிய படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் முறையை இந்த ஆண்டில் வேறு ஒரு கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றார்கள்.
இதற்கு முன்பும் ஒரு சில படங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அவை அந்த அளவிற்கு கவனத்தை ஈர்க்கவில்லை. இந்த ஆண்டில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம் என பெரிய அளவில் விளம்பரப்படுத்தி தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
கொந்தளித்த தியேட்டர் உரிமையாளர்கள்
தியேட்டர்களில் படங்களை வெளியிடாமல் ஓடிடி தளங்களில் வெளியிடும் முறைக்கு தியேட்டர்காரர்கள் கொந்தளித்தார்கள். எதிர்காலத்தில் ஒத்துழைப்பு தர மாட்டோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அனைத்தையும் மீறி பொன்மகள் வந்தாள் படம் மே 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏமாற்றியது. அப்படத்திற்கு முன்னதாகவே ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன், ஆர்கே நகர் படங்கள் வந்ததும் பலருக்குத் தெரியவில்லை. அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் வெளிவந்த பத்து படங்களும் ஏமாற்றத்தையே தந்தன.
கவனிக்க வைத்த ஓடிடி படங்கள்
விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம் படம் டிஜிட்டல் தளங்களில் படத்தைப் பார்க்க தியேட்டரைப் போல டிக்கெட் கட்டணத்தை தனியாக வசூலித்தது. எதிர்பார்த்ததை விடவும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்ததாகச் சொன்னார்கள்.
அதன்பிறகு வந்த சில படங்கள் மீண்டும் ஏமாற்றினாலும், தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த சூர்யா நடித்த சூரரைப் போற்று, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களுக்கு லாபம் என்றார்கள். அவை எந்த அளவில், எப்படி லாபத்தைக் கொடுத்தன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அப்படங்களை அதிகமாகப் பார்த்தார்கள் என்ற தகவல்கள் மட்டும் வெளியானது. அட்லீ தயாரித்த அந்தகாரம் படமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.
நேரடியாக டிவியில்
ஓடிடிக்களில் கூட வெளியிடாமல் நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்பு செய்தார்கள். ஓடிடி தளங்களில் மட்டும் இந்த ஆண்டில் 24 படங்கள் வெளிவந்தன. வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகமாகுமா அல்லது குறையுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
ஆந்தாலஜி படங்கள்
ஓடிடி தளங்களுக்கான ரசிகர்களை மேலும் ஈர்க்க சில முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் நடித்த ஓடிடி ஒரிஜனல் படங்களையும் தயாரித்து வெளியிட்டார்கள். அந்த விதத்தில் ஆந்தாலஜி படங்களாக புத்தம் புது காலை, பாவக் கதைகள் ஆகியவை ஓடிடியில் வெளியாகின. இவற்றிற்கான வரவேற்பு ரசிகர்களிடம் அதிகமில்லை, இருந்தாலும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இவற்றை பெரிதாக வரவேற்றார்கள். சென்சார் இல்லாத இவை ஆபாசக் காட்சிகள், ஆபாச வசனங்கள் என எல்லை மீறி இருக்கின்றன. வீட்டிற்கே நேரடியாக வரும் இப்படியான படங்களுக்கு சென்சார் கண்டிப்பாக வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது.
தியேட்டரில் 100ஐ தாண்டவில்லை
கடந்த சில ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டில் கொரானோ தாக்கத்தால் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கையே 100ஐத் தாண்டவில்லை.
யார் டாப்?
சில நடிகர்கள், நடிகைகள் வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஒரு சிலர் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்கள். அந்தவகையில் ஹீரோவாக நடித்தவர்கள் நடிகர்களில் ஜீவா(ஜிப்ஸி, சீறு), சந்தானம் (டகால்டி, பிஸ்கோத்), விக்ரம் பிரபு (வானம் கொட்டட்டும், அசுரகுரு) ஆகியோர் அதிக பட்சமாக தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.
ஹீரோயினாக நடித்தவர்களில் நடிகைகளை பொறுத்தமட்டில் வெல்வெட் நகரம், கன்னிராசி, டேனி ஆகிய மூன்று படங்களில் நடித்து வரலட்சுமி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக நயன்தாரா (தர்பார், மூக்குத்தி அம்மன்), அதுல்யா ரவி (என் பெயர் ஆனந்தன், நாடோடிகள் 2), அஞ்சலி (நாடோடிகள் 2, சைலன்ஸ்), ஐஸ்வர்யா ராஜேஷ் (வானம் கொட்டட்டும், க/பெ.ரணசிங்கம்), வாணி போஜன் (லாக்கப், ஓ மை கடவுளே) ஆகியோர் தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்களில் விஷால் சந்திரசேகர் (டாணா, கன்னிராசி) இரண்டு படங்களுக்கு இசையமைத்து முதலிடத்தில் உள்ளார்.
9 இசையமைப்பாளர்கள்
அனிருத், ஷான் ரோல்டன், விவேக், மெர்வின், இனோ கெங்கா, மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், கேபர் வாசுகி, ஊருகா ஆகிய 9 இசையமைப்பாளர்கள் இணைந்து தாராள பிரபு படத்திற்கு இசையமைத்தனர்.
ஐடி ரெய்டில் சிக்கிய விஜய்
மாஸ்டர் படத்தின் ஷுட்டிங்கிற்காக நடிகர் விஜய் நெய்வேலியில் இருந்தார். அப்போது திடீரென வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. நெய்வேலியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை வாகனத்தில் அழைத்து வந்தது, நாள் முழுக்க அவரது வீடுகளில் சோதனை நடந்தது அப்போது பரபரப்பானது. பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் அவர் எடுத்த மாஸ் செல்பி இந்திய அளவில் டிரண்ட் ஆனது.
பல குழப்பங்கள்
எந்த ஆண்டிலும் காணாத சில பல குழப்பங்களையும் இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகம் சந்தித்துள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என தயாரிப்பாளர்களுக்காக ஒரு முக்கியமான இருந்த சங்கம், உடைந்து மேலும் இரண்டு புதிய தயாரிப்பாளர் சங்கங்கள் உருவாகின. தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என ஒரு சங்கம் ஆரம்பமானது. அதன்பின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்து அதில் தோற்ற டி.ராஜேந்தர் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை ஆரம்பித்து ஒரு சில வாரங்களிலேயே அதன் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
விபிஎப்., பிரச்னை
விபிஎப் கட்டணங்களைத் தயாரிப்பாளர்கள் இனி கட்ட மாட்டோம் என அனைத்துத் தயாரிப்பாளர் சங்கங்களும் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் வரையில் கட்டண சலுகைகளை அந்த நிறுவனங்கள் அறிவித்தன. அடுத்த மாதம் அதன் நிலை எப்படி மாறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
டும் டும்
நடிகர்கள் மஹத், யோகி பாபு, பாகுபலி புகழ் பிரபாஸ், ஆரவ், நடிகைகள் காஜல் அகர்வால், மியா ஜார்ஜ், சீனா தானா புகழ் ஷீலா, சனா கான், ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்தாண்டு இல்லற வாழ்வில் தங்களை இணைத்து கொண்டனர்.
சம்பளத்தை குறைத்த நட்சத்திரங்கள்
கொரோனா தொற்றால் சினிமா பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் அவர்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. விஜய் ஆண்டனி, ஹரிஸ் கல்யாண் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களைத் தவிர வேறு யாரும் சம்பளத்தைக் குறைப்பதாக அறிவிக்கவில்லை.
நடிகர்களை தாக்கிய கொரோனா
நிக்கி கல்ராணி, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், சரத்குமார், ஐஸ்வர்யா அர்ஜுன், விஷால் அவரது தந்தை தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட தமிழ் திரைப்பிரபலங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர்.
அழ வைத்து சென்ற பிரபலங்கள்
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூத்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். நடிகரும் டாக்டருமான சேது மாரடைப்பால் அகால மரணமடைந்தார். இயக்குனர்கள் விசு, பாபு சிவன், மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன், கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தனர். கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகர் தவசி, சின்னத்திரை புகழ் காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி, சின்னத்திரை புகழ் நடிகை சித்ரா ஆகியோரும் இந்தாண்டு மறைந்தனர்.
கட்டுப்படுத்த முடியாத பைரசி
இவ்வளவு சிக்கல்களுடன் இந்த ஆண்டு நகரும் வேளையில் பைரசி தளங்களை முற்றிலுமாக கட்டுப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் யாருமே முயற்சிகள் எடுக்கவில்லை. தியேட்டர்களில் படங்கள் வெளியாகும் போது படம் வெளிவந்த பிறகுதான் பைரசி தளங்களில் திருட்டுத்தனமாக அந்தப் படங்கள் வெளியாகும். ஆனால், ஓடிடி தளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே பைரசி தளங்களில் படங்கள் வெளியாகி அதிர்ச்சியைக் கொடுத்தன.
முடங்கிய 100 படங்கள்
கொரோனா பரவல் காரணமாக எட்டு மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்ட காரணத்தால் இந்த வருடத்தில் வெளியாக வேண்டிய பல படங்கள் வெளியாகவில்லை. இன்னும் 100 படங்களாவது இந்த ஆண்டில் வெளிவந்திருக்க வேண்டும். அவற்றின் வெளியீடு அடுத்த ஆண்டில் இருக்க வாய்ப்புள்ளதால் கடும் போட்டி ஏற்படும்.
100னாலும் 10தான்
கடந்த சில ஆண்டுகளாகவே 200 படங்கள் வெளிவந்தால் அதில் 10 படங்கள் மட்டுமே வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று வந்தன. இந்த ஆண்டில் 100 படங்கள் வந்தாலும் அதில், தர்பார், பட்டாஸ், சைக்கோ, டகால்டி, ஓ மை கடவுளே, நான் சிரித்தால், திரவுபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தாராளபிரபு, இரண்டாம் குத்து ஆகிய 10 படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன. இந்த எண்ணிக்கை எப்போது அதிகமாகும் என்றுதான் தெரியவில்லை.
2000 கோடி நஷ்டம்
இந்த ஆண்டில் பல படங்கள் வெளிவராத காரணத்தால், முடக்கத்தால் சுமார் ரூ.2000 கோடியாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். எவ்வளவோ பிரச்சினைகள் ஆண்டுக்காண்டு வந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் ஒன்று கூடி பேசி ஒரு முடிவெடுத்து சினிமாவை இன்னும் அதிகமாக வாழ வைக்கலாம்.
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி
நான் அரசியலுக்கு வருவது உறுதி, மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று ஆணித்திரமாக சொன்ன நடிகர் ரஜினிகாந்த், கட்சி அறிவிப்பு பற்றி வெளியிட ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். இதன்மூலம் 96 முதல் அரசியல் போக்கு காட்டிய ரஜினி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
திடீர் கட்சி : அப்பா - மகன் மோதல்
விஜய்க்கு தெரியாமலேயே அவரது அப்பா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு கட்சியை ஆரம்பித்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்பா - மகன் இடையே நேரடியாக பனிப்போர் உருவானது. பின்னர் அவரது அம்மா சோஷாபா சந்திரசேகர் மேற்கொண்ட சமரச முயற்சியில் எஸ்.ஏ.சி., அந்த கட்சியை அப்படியே விட்டுவிட்டார்.
புத்தாண்டில் விடிவு பிறக்கட்டும்
எந்த ஆண்டிலும் இல்லாத பிரச்சினை இந்த ஆண்டு வந்த நிலையில், கருத்து பேதங்களும் அதிகமாக ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கான விடிவு வரும் புத்தாண்டிலாவது கிடைக்கட்டும்.
சினிமாவை மட்டுமே நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ள சில லட்சம் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அதை யாராவது முன்னெடுத்துச் செய்ய வேண்டும் என்பதே திரையுலகினரின் ஆசையாக இருக்கிறது.