'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
கொரோனா நோய் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கிட்டத்தட்ட 50வது நாளை எட்டி வருவதால் பல துறைகளும் முடங்கி உள்ளன. அதில் கோடிகளில் புரளும் சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு காலத்தில் மட்டும் ரூ.500 கோடி முடங்கி போய் உள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். படப்பிடிப்பு நடத்த அனுமதி தராவிட்டாலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காகவாது அனுமதி தாருங்கள் என திரையுலகினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கொரோனா தங்கள் வாழ்வை எந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை திரைக்கு முன்னாலும், பின்னாலும் இருக்கும் திரைக்கலைஞர்களை கேட்டோம். அவர்களின் மனக்குமுறல்கள் இதோ...
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி, சசிகுமார் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் 3 படங்களில் வேலை பார்த்து வருகிறேன். கொரோனாவால் அப்படியே படப்பிடிப்பு நிற்கிறது. கிட்டத்தட்ட 2020ம் ஆண்டை மறந்துவிட்டதாகவே கருதுகிறேன். 50 சதவீதம் ஊழியர்களுடன் பல தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதேப்போன்று திரைத்துறைக்கும் அனுமதி வழங்கினால் அன்றாடம் வருமானம் ஈட்டும் பலர் பயன் அடைவர்.
படப்பிடிப்புகள் பெரும்பாலும் திறந்தவெளியில் நடப்பதால் நிச்சயம் பெரிய பாதிப்பு இருக்காது. நடிகர்களும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார்கள். தயாரிப்பாளர்களும் தகுந்த முன்னேற்பாடுகளை செய்வார்கள் என நம்புகிறேன். மற்ற துறையை விட எங்களின் சினிமா துறையை கண்டிப்பாக பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். அரசின் முடிவிற்காக காத்திருக்கிறோம் என்றார்.
ஸ்டில்ஸ் சிற்றரசு
20 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலரது படங்கள் என 60 படங்களில் வேலை பார்த்துள்ளேன். இப்படி ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தது இல்லை. கொரோனா அதிர்ச்சியளிக்கிறது. நாளுக்கு நாள் நோயின் தீவிரம் அதிகமாகிறது. படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இழந்துள்ளோம் உண்மை தான். ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து இருந்தால் சுலபமாக இந்த நோய் தொற்றி இன்னும் பாதிப்பு அதிகமாகி இருக்கும். ஆகவே அரசு எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டு, நம்மை பாதுகாத்து கொள்வது நல்லது என்றார்.
காஸ்டியூம் டிசைனர் சத்யா
சிம்பு, தனுஷ், ராகவா லாரன்ஸ், சசிகுமார், விஷால், ஜெயம் ரவி, ஜீவா என பல நடிகர்களுக்கு காஸ்டியூம் டிசைனராக உள்ளேன். இதுவரை 37 படங்களில் வேலை பார்த்துள்ளேன். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் எல்லா காஸ்டியூம் நான் பண்ணியது தான். கொரோனாவால் எங்களை பெரிய அளவில் முடக்கி போட்டுள்ளது. ஒரு படத்திற்கு மூன்று லட்சம் சம்பளம் என்றால் அதை மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக தருவார்கள். வீட்டு வாடகை, இஎம்ஐ., மற்ற இதர செலவுகள் எல்லாமும் அதில் தான் பார்க்க வேண்டும். சில மாதங்கள் வேலை இருக்காது. நான் ஒரு துணிக்கதை வைத்துள்ளேன். அதற்கு வாடகையே ரூ.40 ஆயிரம். பிறகு ஊழியர்களின் சம்பளம் எல்லாம் பார்க்கணும். இப்படி பல பிரச்னைகள் இருக்கு. இதை எப்படி சமாளிக்க போகிறோம் என தெரியவில்லை.
இந்தசமயத்தில் எனக்கு ஒரு சின்ன யோசனை. இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களுக்கு நல்ல மதிப்பு. திரைத்துறையை சேர்ந்த பெரிய நடிகர்கள் ஒரு வீடியோ ரெடி பண்ணி, அதை தனித்தனியாக இணையதளங்களில் ஒளிப்பரப்பினால் அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு அன்றாடம் வருமானம் ஈட்டும் சினிமா தொழிலாளர்களுக்கு கொடுத்து உதவலாம். ஊரடங்கில் மக்கள் எல்லாரும் வீட்டில் தான் இருக்காங்க. நிறைய பேர் சமூகவலைதளங்களை பயன்படுத்துறாங்க. இதை நமக்கு சாதகமாக்கி வருமானம் ஈட்ட வழி வகை செய்யலாம். அதற்கு திரைத்துறையினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
டப்பிங் பொறுப்பாளர் விஜயலட்சுமி
1999லேயே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக உறுப்பினர் அட்டை பெற்றேன். பொறுப்பாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எங்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் போராட்டமானது தான். நாங்கள் வேலை பார்த்த படங்களின் தயாரிப்பாளர்கள் இன்னும் சம்பளம் தரல. பல தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா பிரச்சினைகள் முடிந்த பிறகு தான் சம்பளம் தர முடியும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களை நம்பி வேலை பார்க்கும் டப்பிங் கலைஞர்களை சம்பளம் இல்லை என்று எப்படி திருப்பி அனுப்ப முடியும். அதனால் எங்களின் நகைகளை அடமானம் வைத்து சிலருக்கு சம்பளம் வழங்கினோம்.
சீரியல்களில் ஒரு எபிசோடுக்கு ரூ.200 முதல் 250 வரையும், அதே ஒரு நடிகருக்கும் பேசும் போது ஒருநாளைக்கு ரூ.1500 கிடைக்கும். இதை வைத்து தான் அவர்கள் குடும்பம் நடத்த வேண்டி இருக்கும். எங்களுக்கான சம்பளத்தை நிலுவை இன்றி கொடுத்தாலே போதும் ஒரு மாதத்தை அவர்கள் குடும்பத்தை ஓரளவுக்கு பார்தது கொள்ள முடியும். அதையும் மீறி தற்போதைய சூழ்நிலையில் வேலை கிடைத்தாலும் போதும் என்றே உள்ளனர். மேலும் நாங்கள் மைக் முன்னாடி பேசுபவர்கள். ஒருவருக்கு சளி இருமல் இருந்தால் ஏசி அறையில் மற்றவர்களுக்கு அது கண்டிப்பாக பரவும். தற்போதைய சூழலில் அடுத்த சில மாதங்களுக்கு எங்களின் வாழ்க்கை போராட்டமாக இருக்க போகிறது என்று நினைக்கும்போது பயமாக உள்ளது என்றார்.
காளி வெங்கட் நடிகர்
சமீபகாலமாக நான் கவனித்த ஒரு விஷயம், மக்கள் அதிகமாக வெப்சீரிஸ் பார்த்து வருகிறார்கள். இந்த கொரோனா காலக்கட்டம் இன்னும் அதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதை அந்த நிறுவனங்கள் இன்னும் சிறப்பாக செய்யும் என நினைக்கிறேன். கொரோனா பிரச்னையை எல்லாம் கடந்து படப்பிடிப்பு தொடங்கினால் கூட ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் மட்டுமே 10 பேர் வருவார்கள். அப்போது தொற்று பரவாது என்று எப்படி உத்தரவு தர முடியும். நிமிடத்திற்கு நிமிடம் சமூக இடைவெளியை பார்த்துக் கொண்டே இருப்பது கஷ்டம். இதையெல்லாம் மீறி படப்பிடிப்பு நடத்த முடியுமா என்பது கேள்விக்குறி.
நடிகர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல, அவர்களும் மனிதர்கள் தான் என்பதை இந்த கொரோனா உணர்த்தி உள்ளது. நடிகர்கள் பிம்பம் எனக்கு கிடையாது. திறமையால் முன்னுக்கு வந்தேன் என்று சொல்வதை விட ரசிகர்களால் இந்த இடத்தில் இருக்கிறேன். இப்போது எனக்குள் இருக்கும் பெரும் கவலையே திரைத்துறை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது தான். என்னதான் அரிசி, பருப்பு என கொடுத்தாலும் சினிமாவில் தினசரி சம்பளம் பெறுபவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு என்று சில பண தேவைகள் இருக்கிறது. இதற்கு சீக்கிரம் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
ஒப்பனைக் கலைஞர் சரவணன்
நான் இந்த துறையில் 17 ஆண்டுகளாக உள்ளேன். படங்களுக்கு மேல் வேலை பார்த்துள்ளேன். ஐஸ்வர்யா ராய் பர்சனல் மேக்கப் மேனாக ரோபோ, ராவணன் படங்களில் பணியாற்றி உள்ளேன். தனுஷ், அனுஷ்கா, திரிஷா இன்னும் பல முன்னணி நடிகர்களுடன் வேலை பார்த்துள்ளேன். பெப்சியில் 25 ஆயிரம் பேர் உறுப்பினராக உள்ளார்கள். இவர்களில் 22 ஆயிரம் பேர் கஷ்டப்படும் ஊழியர்கள், தினசரி சம்பளம் வாங்குபவர்களாக இருப்பார்கள். 22 ஆயிரம் பேருக்கும் தினம் வேலை கிடைப்பது இல்லை. ஒரு 10 பேருக்கு கிடைத்தால் கூட பெரிய விஷயம். ஊழியர்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு போனால் தான் மொத்தமாக ஒரு சம்பளம் கிடைக்கும்.
சினிமா தொழிலாளர்களுக்கு முதல் மனைவி வேலை தான். அப்புறம் தான் வீடு. பாதிபேர் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாது. அதிகாலையில் ஷுட்டிங் போனால் நள்ளிரவு தான் திரும்புவார்கள். பிறகு மறுநாள் அதேமாதிரி கிளம்பி விடுவார்கள். எங்களது தொழிலில் கால, நேரமே கிடையாது. எதிர்பாராத விதமாக என் சொந்த ஊரான சாத்துருக்கு வந்தேன். கொரோனாவால் சென்னை திரும்ப முடியவில்லை. அதனால் இப்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிந்தது. சென்னையில் இருக்கக்கூடிய எங்கள் மக்கள் நிறைய பேரு பாதிப்பில் இருக்காங்க. இது ஒரு சோகமான காலம். எப்போதும் சரியான நேரத்திற்கு சம்பளம் கொடுக்கிற கம்பெனிகளால் கூட இந்த காலகட்டத்தில் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்காங்க. எங்களுக்கு வர வேண்டிய தொகை இப்போது கொஞ்சம் வந்தால் கூட எங்களால் ஏதோ கொஞ்சம் நிம்மதியாக வாழ முடியும். மீண்டும் எப்போது வேலை ஆரம்பிக்கும் என காத்திருக்கிறோம் என்றார்.
படப்பிடிப்பு தளங்களில் பாத்திரங்களை சுத்தம் செய்யும் கே ஸ்ரீப்ரியா
25 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன். நாங்கள் பார்ப்பது பெண்கள் மட்டுமே வேலை செய்யும் ஒரு துறை தான். பெப்சி அமைப்பு மூலம் 207 பேர் உறுப்பினராக உள்ளோம். தினசரி ஊதியம் தான் எங்களுக்கு. இதில் வேலை பார்க்கும் பெண்கள் பலரும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள். ஒரு நாளைக்கு ரூ.600 சம்பளம். கொரோனாவால் இப்போது பெரும் பாதிப்பு எங்களுக்கு. பெப்சி அமைப்பு மூலமாக அரிசி கொடுத்தாங்க. அதை வைத்து கஞ்சி குடிக்கிறோம்.
எங்க வேலை காலையில் டீ, காபி குடிப்பதில் ஆரம்பித்து அதன்பின் காலை, மதியம், இரவு உணவு என தொடர்ந்து பாத்திரம் கழுவி கொண்டே இருக்கும் ஒரு வேலை. காலை 5.30 மணிக்கு வடபழனி ஏவிஎம் தியேட்டர் எதிரில் புரொடக்ஷன் வண்டி வந்து எங்களை அழைத்து சென்றால் இரவு தான் வீடு திரும்புவோம். பெப்சி அமைப்பில் முதல்முறையாக துணை செயலாளர் பொறுப்பிற்கு நான் வந்துள்ளேன். அதுவே பெரிய சந்தோஷம். இந்த காலக்கட்டத்தில் பெப்சி பெரிதும் துணையாக உள்ளது. இப்போதைக்கு எங்களுக்கு வேலை வேணும், அதற்கு படப்பிடிப்பு துவங்கணும், அப்போது தான் நாங்கள் சம்பளம் வாங்கி எங்கள் குடும்பத்தை பார்க்க முடியும் என்றார்.
பிக்பாஸ் புகழ் டேனி போப்
சென்னையில் கொரோனா தொற்று அதிகம் இருக்ககூடிய ஒரு பகுதியில் தான் நான் இருக்கிறேன். ஆனால் 15 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டதால் வெளியில் வர வேண்டிய அவசியம் இல்லை. இரவு 10 மணிக்கு மேல் தெருவில் வரும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்துகிறோம். கொரோனா ஊரடங்கு எல்லோரும் சாதாரண வாழ்க்கையை வாழணும் கற்று கொடுத்துள்ளது.
படம் ரிலீஸ் ஆகுதோ இல்லையோ சின்ன நடிகர்கள் தொடங்கி பெரிய நடிகர்கள் வரை, தினசரி சம்பளம் வாங்கும் பிற தொழிலாளர்கள் உட்பட எல்லோருக்கும் சம்பள பாக்கி வச்சுடாங்க. அதை தயாரிப்பாளரகள் மனமுவந்து கொடுத்தால் கூட ஒரு இரண்டு மாதம் படப்பிடிப்பு இல்லை என்றாலும் குடும்பத்தை சமாளிக்க முடியும் என்பது என் கருத்து. இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு நான் பதிவு செய்யணும். சில சங்கங்கள் பிஎப் மாதிரியான ஒரு தொகையை சம்பளத்தில் எடுத்து கொள்கிறார்கள். இனி வரும் காலங்களில் இதுபோன்று ஒரு பிடித்தம் செய்தால் இதுபோல் பேரிடர் காலங்களில் அந்த பணத்தை கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர், இயக்குனர் சிவி குமார்
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி போன்ற படங்களை தயாரித்த சிவி குமார் கூறுகையில், தியேட்டர்களை எவ்வளவு சீக்கிரம் திறக்கிறார்கள் அவ்வளவு திரைத்துறைக்கு நல்லது. பாதுகாப்பான இருக்கைகள் நோய் தொற்று பரவாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. தியேட்டர் திறந்தால் மட்டுமே புதுப்படங்களை ரிலீஸ் செய்ய முடியும்.
தற்போதைய சூழலில் ரூ.500 கோடிக்கு மேல் பணம் முடங்கி உள்ளது. இதனால் வாங்கிய பணத்திற்கு எப்படி வட்டி கட்ட போகிறோம் என தெரியாமல் தயாரிப்பாளர்கள் பலர் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். சினிமா துறை இயல்பு நிலைக்கு திரும்ப ஓராண்டு ஆகும். எனவே வரி செலுத்துவதில் தளர்வு உள்ளிட்டவைகளை அரசு செய்து எங்களுக்கு உதவ வேண்டும். டைட்டானிக் காதல், 4ஜி ஆகிய படங்களை ஏப்ரலிலும், ஜாங்கோ படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தோம். இதுதவிர இன்னும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்து வந்தன. கொரோனாவால் இவை எல்லாமே முடங்கி உள்ளது. என்னைப் போன்று பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளோம். எப்போது இயல்பு நிலைக்கு திரும்பி படப்பிடிப்பை நடத்தி ரிலீஸ் செய்ய போகிறோம் என தெரியவில்லை என்றார்.
நடிகரும், தயாரிப்பு நிர்வாகியுமான வெங்கட் சுபா
கொரோனா காலத்தில் தமிழ் சினிமா செய்ய வேண்டிய முதல் வேலை படப்பிடிப்பை நடத்த வேண்டும். மற்றொன்று பாதுகாப்போடு தியேட்டர்களை திறக்க வேண்டும். நான் படப்பிடிப்பு நடத்த தயாராக உள்ளேன். பெப்சி, அரசு அனுமதி தந்தால் அரசின் சட்டத்திட்டங்களை மதித்து, தகுந்த பாதுகாப்போடு, சமூக இடைவெளி உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒரு மருத்துவர் என படப்பிடிப்பை தொடர நான் உறுதி அளிக்கிறேன். மேலும் படப்பிடிப்பில் வேலை பார்ப்பவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாட்களும் வேலை முடியும் வரை ஓரிடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு முறையான 34 நாட்கள் பேட்டா வழங்கி படப்பிடிப்பு நடத்துவது என்று பல திட்டங்களை வைத்திருக்கிறேன்.
பொதுவாக ஒரு படப்பிடிப்பு தளத்தில் 100 பேர் இருப்பார்கள். வெறும் 20 பேருக்கு அனுமதி கொடுங்கள் நான் படப்பிடிப்பை நடத்தி காட்டுகிறேன். கதை, இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் என நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் படப்பிடிப்பை தொடர அரசின் அனுமதி வேண்டும். எங்களின் படப்பிடிப்பு தளத்தை அரசு கண்காணிக்கலாம். நாங்கள் கொடுத்த வாக்கை தவறினால் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உறுதியளிக்கிறேன்.
கொரானா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாத்தியமானது ஒன்று. அதேப்போல் படத்தை முடித்து தியேட்டருக்கு வரும் போது 50 பேரை மட்டும் தியேட்டருக்குள் அனுமதியுங்கள். அந்த கலெக்சன் மட்டும் எனக்கு போதும். தகுந்த பாதுகாப்பு அளியுங்கள், படம் பார்க்க வருபவர்களின் இருக்கைக்கு சென்று ஸ்னாக்ஸ் வழங்குங்கள். முக்கியமாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் அரசு எந்த வரியும் வாங்கக் கூடாது என வேண்டுகிறேன்.
இயக்குனர், தயாரிப்பாளர் கண்ணன்
இந்த கொரோனாவில் நான் தப்பித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அதர்வாவின் தள்ளி போகாதே, சந்தானத்தின் பிஸ்கோத்து ஆகிய இரண்டு படங்களின் வேலைகளும் டப்பிங் வரை முடித்து விட்டேன். இரண்டு படங்களும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தேன். கொரோனாவால் பல குழப்பங்கள் நடந்து விட்டது. ரிலீஸ் செய்ய வேண்டிய பல படங்கள் வரிசையில் இருக்கின்றன. எப்போது என் படம் ரிலீசாகும் என்ற ஒரு சூழலும் உள்ளது. முதலில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள படங்களை ரிலீஸ் செய்து அந்த தயாரிப்பாளர்கள் காப்பாற்ற வேண்டும்.
50% படப்பிடிப்பு முடிந்த பல படங்கள் இருக்கின்றன. மீதம் இருக்கின்ற படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் இக்கட்டான சூழ்நிலை. எல்லா புறாக்களுமே வலையில் மாட்டிக்கொண்ட மாதிரியான ஒரு சூழல். ஒவ்வொன்றாக மெதுவாக வெளியில் எடுக்க வேண்டும். அனைத்தும் பறந்தால் தான் நமக்கு நிம்மதியாக இருக்கும். திரைத்துறையில் அத்தனை வேறுபாடுகளையும் கடந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய சமயம் இது. ஹீரோக்கள், டெக்னிசியன் என எல்லாரும் சேர்ந்து அவர்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை தயாரிப்பாளர்களுக்கு செய்து கொடுத்தால் அது பெரிய அளவிற்கு அவர்களை ஆசுவாசப்படுத்தும் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு உரிமம் விற்க முடியாது. திரையரங்கம் இப்போதைக்கு திறக்க இயலாத சூழ்நிலை. இப்போது இருக்கும் இரண்டு வழி ஒன்று ஓடிடி பிளாட்பார்ம், இன்னொன்னு டிவி சேனல்கள். இதற்கு மூத்த அனுபவம் வாய்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல முடிவு எடுக்கணும். கொரோனாவுக்கு நிச்சயம் மருந்து கண்டுபிடிப்பாங்க. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவாங்க என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
கலை இயக்குனர், நடிகர் கிரண்
இரண்டாம் உலகம், அனேகன் கவண், தானா சேர்ந்த கூட்டம் உட்பட 15 படங்களில் கலை இயக்குனராகவும், வேலையில்லா பட்டதாரி, பாயும்புலி, கதகளி, காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளேன். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் வேலை பார்த்துள்ளேன். படங்களைப் பொறுத்தவரையில் ஒரு படம் முடித்த பிறகுதான் இன்னொரு படத்தை கமிட் பண்ணுவேன். இப்போது எந்த வேலையும் இல்லாமல் சிரமமான சூழ்நிலையில் இருக்கிறேன்.
கொரோனா பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும் 50 சதவீதம் சினிமா தொழில் நடக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி நடக்கும் பட்சத்தில் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்னுடைய துறைக்கே குறைந்தது 6 பேர் தேவைப்படுவார்கள். அப்படி மற்ற துறைகளை சேர்த்தால் குறைந்தது 50 பேராவது செட்டில் இருப்பாங்க. இப்படியான நிலையில் எப்படி 10 - 15 பேரை வைத்து வேலை செய்ய முடியும். இல்லையேன்றால் முன்கூட்டியே திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளையும் அந்த துறை சார்ந்தவர்களை வைத்து முதல் நாளே செய்துவிட்டால் ஓரளவுக்கு சமாளிக்கலாம். கொரோனா தொற்றிலிருந்தும் நம்மை காப்பாற்றலாம். படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்தந்த பணியாளர்களை உடனே அனுப்பி வைத்துவிட வேண்டும். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது அந்த செட்டுக்கே பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எங்களுக்கு வேலை வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதைவிட பாதுகாப்பு முக்கியம் என்கிறார்
ஜீனியர் ஆர்டிஸ்ட் ஏஜென்ட் ரமணபாபு
25 ஆண்டுகளாக 500 படங்களுக்கு மேல் வேலை பார்த்துள்ளேன். பெப்சி அமைப்பில் கூடுதல் செயலாளராக பணியாற்றி உள்ளேன். ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். படப்பிடிப்பு இல்லாமல் இப்போது பெரும் சிரமத்தில் உள்ளோம். பெப்சியில் இருந்து உதவி வருது. அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய், அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்த உதவி என கொஞ்சம் சமாளித்து வருகிறோம். தினம் படப்பிடிப்புக்கு வேலைக்கு போனால் தான் எங்களுக்கு சம்பளம். ஒரு நாளைக்கு ரூ.500. அதில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டிற்கு ரூ.400 சம்பளம். படப்பிடிப்பு தளத்திலேயே மூன்று வேளை சாப்பாடு கொடுத்துருவாங்க. அதனால் எங்களுக்கு சாப்பாட்டு பிரச்னை இருக்காது. இப்போது படப்பிடிப்பு இல்லை, ரொம்ப கஷ்டப்படுறோம்.
ஜூனியர் ஆர்டிஸ்ட்டை பொருத்தவரைக்கும் 200 பேர் 300 பேர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டால் தான் அத்தனை பேருக்கும் அன்றைக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் இனி இந்த மாதிரி கூட்டத்தோடு சேர்ந்து படப்பிடிப்பு நடத்துவாங்களா, மக்கள் எல்லாருக்கும் வேலை கிடைக்குமா என்பது சந்தேகம். கொரானோ பிரச்னைகள் முடிந்து எல்லாம் சரியான பிறகும், இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாரையும் வர வைப்பாங்களானு தெரியல. திரைத்துறையில் பாதிப்பு நிறைய இருக்கு. அதில் அதிகமாக பாதிக்கப்படப்போவது நாங்கள் தான். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம், நல்ல தீர்வு கிடைக்கும் என அரசை நம்பி உள்ளோம் என்றார்.