90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு |
சென்னைக்கு ஒவ்வொரு அடையாளங்கள் உள்ளன. தமிழ் சினிமாவிற்கு முக்கிய அடையாளங்களாக இருப்பவை வடபழனி, சாலிகிராமம் மற்றும் அதை சுற்றிய அருணாச்சலம் ரோடு பகுதிகள். 24 மணிநேரம் படப்பிடிப்பு, டப்பிங், இசை கோர்வை என பிஸியாக இருந்த இந்த பகுதி இப்போது கொரோனா வைரஸால் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உலகமெங்கும் மக்களை வீட்டிற்குள் முடக்கி போட்டுள்ள கொரோனா, தென்னிந்திய சினிமாவின் இதயமாக திகழ்ந்த இந்த பகுதியை எப்படி மாற்றி உள்ளது என்பது பற்றி சற்றே பின்நோக்கிய பல சுவாரஸ்யமான தகவல்களுடன் இங்கு பார்க்கலாம்.
வடபழனி, சாலிகிராமம் ஏரியா முன்பு தோப்புகளும், நீர், நிலைகள் நிறைந்த இடங்களாக இருந்துள்ளது. பின்னர் காலப்போக்கில் படப்பிடிப்பு தளங்களாகவும், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களாகவும் மாறி போகின. தமிழ் படப்பிடிப்புகள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நான்கு மொழி படப்பிடிப்புகளும் இங்கு தான் நடந்துள்ளது. இதனால் தான் தென்னிந்திய சினிமாவின் தலைமை இடமாக சென்னை திகழ்ந்தது. அன்றைக்கு படப்பிடிப்புகள் எதுவும் வெளிபுறங்களில் நடக்கவில்லை. பெரிய பெரிய ஸ்டுடியோக்களிலேயே நடந்தன. சரி புகழ் பெற்ற ஸ்டுடியோக்களை பார்க்கலாம்.
ஏவிஎம் ஸ்டுடியோ
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஸ்டுடியோ தளங்களில் முக்கியமானது ஏவிஎம். ஆரம்பத்தில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இந்நிறுவனம் இயங்கி வந்தது. பின்னர் 1948களில் சென்னை வடபழனி பகுதியில் பெரிய ஸ்டுடியோவாக விரிவுப்படுத்தினார் மெய்யப்ப செட்டியார். சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஸ்டுடியோவை, அன்றைய காலக்கட்டத்தில் வெறும் 35 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே அந்த இடம் வாங்கப்பட்டதாம். படப்பிடிப்பு தளம், டப்பிங் ஸ்டுடியோ, பிரீவியு தியேட்டர் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்தது. 70 ஆண்டுகளை கடந்த இந்நிறுவனத்தை மெய்யப்ப செட்டியாருக்கு பின் அவரது வாரிசுகள் திறம்பட நிர்வகித்தனர். தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்ததில் இந்நிறுவனத்திற்கு பெரும் பங்கு உள்ளது. இப்போது இந்த ஸ்டுடியோவில் ஒரு பகுதியில் மட்டுமே படப்பிடிப்புகள் உள்ளிட்ட பிற பணிகள் நடக்கின்றன. ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது. ஆனால் முன்பு போல் இந்நிறுவனம் பட தயாரிப்பில் ஈடுபடவில்லை.
ஜெமினி ஸ்டுடியோ
சென்னை, நுங்கம்பாக்கம் அருகே ஜெமினி ஸ்டுடியோ செயல்பட்டது. இதன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் பத்திரிக்கையில் வேலை பார்த்து வந்த சமயத்தில் அவருக்கு குதிரை ரேஸில் அதிக ஆர்வம் இருந்தது. பலமுறை தோற்றுப் போனவர், ஒருமுறை துணிச்சலாக பத்தாயிரம் ரூபாய் கட்டிய அவரின் குதிரை வெற்றி பெற்றது. அப்போது கிடைத்த மிகப்பெரிய தொகையை கொண்டு, 1940ல் தீக்கிரையாகி ஏலத்திற்கு வந்த மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோவை விலைக்கு வாங்கி, அதை ஜெமினி ஸ்டுடியோவாக மாற்றி விரிவுப்படுத்தினார். பல இந்தி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அப்போது பாஸ் என்று அழைத்த ஒரே நபர் வாசனை தானாம். ஆனால் இப்போது அந்த ஸ்டுடியோ செயல்பாட்டில் இல்லை. அங்கு ஒரு தனியார் ஓட்டல் வந்துவிட்டது.
விஜயா வாகினி ஸ்டுடியோ
விஜயா வாகினி ஸ்டுடியோவை கட்டிய நாகேஸ்வரராவுக்கு சொந்த தொழில் வெங்காய வியாபாரம். அவருக்கு படம் எடுக்க வேண்டும் என்று ஆசை வரவே, வாகினி ஸ்டூடியோவை கட்டியதோடு, பட தயாரிப்பிலும் ஈடுபட்டார். அந்தக்காலத்தில் ஆசியாவிலேயே மிக அற்புதமான ஸ்டுடியோவாக இது திகழ்ந்தது என்பார்கள்.
பிரசாத் ஸ்டுடியோ
இன்றைக்கும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பிரசாத் ஸ்டூடியோ அவ்வளவு எளிதில் உருவாகவில்லை. பிரசாத் ஸ்டுடியோ நிறுவனர் மும்பை சென்று மூட்டை தூக்கி பல கடினமான வேலை செய்து, அதன் பிறகே சினிமா ஆசையால் சென்னை வந்து இந்த ஸ்டுடியோவை கட்டினார். பிறகு ஐதராபாத்தில் இன்னும் விரிவுப்படுத்தினார். பிரசாத் ஸ்டூடியோவில் பெரிய அளவில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு பின்னாளில் லேப் ஆகவும் விரிவாக்கப்பட்டன. தற்போதைய ஸ்டுடியோக்களில் இன்றும் சிறப்பாக இயங்கி வரும் ஸ்டுடியோக்களில் இதுவும் ஒன்று.
பரணி ஸ்டுடியோ
நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்ட பானுமதி தான், பரணி ஸ்டுடியோவை உருவாக்கினார். தமிழ் தவிர்த்து பல மொழிகளின் படப்பிடிப்பும், டப்பிங்கும் இங்கு தான் நடந்தது. வடபழனியில் தான் மெஜஸ்டிக் ஸ்டுடியோவும் இருந்துள்ளது. இங்கு தான் கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாத போன்ற பலர் இரவு, பகலாக பாடல்களை ரெக்கார்டிங் செய்துள்ளனர்.
சியாமளா ஸ்டுடியோ
வடபழனி ஏரியாவில் நடிகை விஜயசாந்தி வீடு செல்லும் வழியில் 1970களில் சியாமளா ஸ்டுடீயோ இயங்கி வந்துள்ளது. அன்றைய காலக்கட்டத்தில் வெளிப்புற படப்பிடிப்புகள் அதிகம் நடக்காததால் இங்குள்ள ஸ்டுடியோவில் அதிக படப்பிடிப்புகள் நடந்தன.
ஜமீன் பங்களாக்குள் ஸ்டுடியோ
வட பழனி அருணாச்சலம் ரோட்டில் உள்ள இப்போதைய சூர்யா மருத்துவமனை, பல ஆண்டுகளுக்கு முன் நீர் நிறைந்த குட்டையாக இருந்திருக்கிறது. இரவில் வெளியே வர கூட பயப்படுவார்களாம். அங்கு பிரசாத் ஸ்டுடியோ அருகில் ஜமீன் பங்களா ஒன்று இருந்துள்ளது. அதற்குள் தியேட்டர் ஒன்று கட்டியிருக்கிறார்கள். பொம்மை படம் அங்கு தான் படமானது. கே.ஜே.யேசுதாஸ் பாடிய, நானும் பொம்மை... பாடலும் அங்குள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் தான் நடந்துள்ளது.
அருணாச்சலம் ஸ்டுடியோ
அருணாச்சலம் ஸ்டுடியோ ஏ.கே.வேலனால் கட்டப்பட்டது. அங்கு டப்பிங் தியேட்டர் ஒன்று கட்டினார்கள். அதில் வணங்காமுடி என்ற படத்திற்கு ரெக்கார்டிங் செய்த கோவிந்தசாமி எடிட்டருக்கு உதவி எடிட்டராக பணிபுரிந்தார் ஜெயம் ரவியின் அப்பா மோகன். அப்போது அவர் வாங்கிய சம்பளம் ரூ.50. பிழைப்பு தேடி மதுரையிலிருந்து ஒரு மாதம் காலம் நடந்தே சென்னை வந்த இவர் இங்கு இந்த பணியில் சேர்ந்துள்ளார். இயக்குனர் சிவாவின் தாத்தா சாமி கும்பிடுவதில் ஆர்வம் இல்லாதவர். ஆனால் அவரே அருணாச்சலம் ஸ்டுடியோவில் ஒரு பிள்ளையார் கோயில் கட்டி, கடைசி வரை அதை சுற்றி வந்துள்ளார்.
கோடே பார்க்
கோடம்பாக்கத்திற்கு கோடே பார்க் என்ற பெயர் இருந்தது என்கிறார் எடிட்டர் மோகன். குதிரைகள் கட்டும் இடத்திற்கு இந்த பெயராம். அன்றைய காலத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இல்லை. கோடம்பாகத்திற்கு பாலம் எதுவும் இல்லை. இதனால் பெரும்பாலும் குதிரைகளை போக்குவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர்.
நடிகை கே.ஆர்.விஜயா அறிமுகமான கற்பகம் படத்தின் வெற்றியில் கிடைத்த பணத்தை கொண்டு வடபழனி பகுதியில் பெரிய இடத்தை வாங்கி கற்பகம் என்ற பெயரிலேயே ஸ்டுடியோ நடத்தி வந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சாரதா ஸ்டுடியோவை தெலுங்குக்காரர் ஒருவர் நிறுவி உள்ளார். பின்னர் அது மெஜஸ்டிக் ஸ்டுடியோவாக மாறியது. இதை கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் சிலகாலம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இங்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பல நடிகர்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. அன்றைய காலக்கட்டத்திலும் சினிமாவில் நடிக்க வைக்க ஏஜென்ட் இருந்ததாகவும், நடிக்க விரும்புவர்களை ரூ.2 அழைத்து சென்றதாகவும் கூறுகிறார் திரைநீதி செல்வம்.
1962களுக்கு முன்பு சென்னை, தேனாம்பேட்டை மற்றும் தி.நகரில் சில சினிமா கம்பெனிகள் இயங்கி வந்தன. கண்ணாம்பாவிடமிருந்து எம்ஜிஆர் ஒரு வீட்டை வாங்கி ஷூட்டிங் ஸ்பார்ட்டாக மாற்றினார். அது பனகல் பார்க் அருகே உள்ளது. அதையடுத்து கீழ்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோ இயங்கி வந்துள்ளது. அங்கும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்போது உள்ள வடபழனி கமலா தியேட்டர் எதிரே உள்ள இடம் பெரிய பள்ளத்தாக்கு நிறைந்ததாம். அன்றைய காலக்கட்டத்தில் அம்புலிமாமா புத்தகத்தை 14 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். அங்கே சேரும் குப்பைகளையும், இந்த பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது சேரும் குப்பை, கூளங்களையும் இங்குள்ள பள்ளத்தாக்கில் தான் கொட்டுவார்களாம். அதுவே மலை போன்று குவிந்து கிடக்குமாம்.
பெரும்பாலும் சென்னை வடபழனி, கோடம்பாக்கத்தை சுற்றியே பல ஸ்டுடியோக்கள் இயங்கின. மோகன் ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோ கோல்டன் ஸ்டுடியோ, விக்ரம் ஸ்டுடியோ என பலவும் இந்த பகுதிகளில் பரபரப்பாக இயங்கின. கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாக்காரர்கள் கோல்டன் ஸ்டுடியோவில் தான் பெரிதும் விரும்பி வேலை பார்த்துள்ளனர்.
இதனால் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் குடும்பத்தினரும் இங்கு தான் வசித்து, பின்னாளில் அவரவர் மாநிலங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இப்போதும் பல தெலுங்கு நடிகர்களுக்கு சென்னையில் இந்த பகுதியில் சொத்துக்கள் உள்ளன.
பிரசாத் ஸ்டுடியோ அருணாச்சலம் ரோடு அருகே தெலுங்கு நடிகர் சோபன்பாபு 1962களில் ஒரு பெரிய கட்டடத்தை வாங்கினார். பின் அங்கு சுபாஷினி என்ற தியேட்டரை கட்டினார்.
இதே அருணாச்சலம் ரோட்டில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பல இடங்களை வாங்கி இருந்தார். தற்போது அவை எல்லாம் பிளாட்டுகளாக மாறி, அவர் பெயரில் சாலையே உள்ளது.
வடபழனி, சாலிகிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் விஜயகாந்த், செந்தில், வடிவேல், விஜய் ஆண்டனி, மீனா, ரம்பா, அர்ஜுன் போன்ற பல திரையுலக பிரபலங்களின் வீடுகள் உள்ளன. நடிகர் விஜய்யின் இரு கல்யாண மண்டபமும் இந்த பகுதியில் தான் உள்ளது.
இத்தனை படப்பிடிப்புகள், ஸ்டுடியோக்கள் நிறைந்த வடபழனி, சாலிகிராமம் மற்றும் அதை சுற்றிய பகுதி இப்போது மால்கள், தியேட்டர்கள், கல்யாண மண்டபங்கள், ஒட்டல்களாக மாறிவிட்டன. மேற்சொன்ன பல ஸ்டுடியோக்களில் ஒன்றிரண்டு மட்டும் தான் இப்போதும் செயல்பாட்டில் உள்ளது. மற்றவை கட்டடங்களாக மட்டும் காட்சியளிக்கின்றன.
இதுபோன்று பார்த்ததே இல்லை
அருணாச்சலம் ரோட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் சேகர் என்பவர் கூறுகையில், தமிழ்நாட்டில் பல வித சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் கொரோனா போன்று ஒரு சம்பவம் நிகழவில்லை. எங்கள் வாழ்நாளில் இந்த சாலையை காலி இடமாக பார்க்கிறோம். எத்தனையோ அரசு சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்கள், சண்டை சச்சரவுகளை கடந்துள்ளது. பல சினிமா கம்பெனிகளின் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்துள்ளது. அதனால் 24 மணிநேரமும் இந்த சாலையில் மக்கள் கூட்டமும், வாகனங்களும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு நாளும் இப்படி வாகனங்கள், ஆட்கள் நடமாட்டம் இன்றி பார்த்தது கிடையாது. ஏதோ கிராமத்தில் வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது. ஊரடங்கு முடிந்து மீண்டும் பரபரப்பான சாலையை பார்க்க காத்திருக்கிறோம் என்றார்.