Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

பாஸ்போர்ட் கிடைத்தால் உலகம் சுற்றுவேன்: நடிகர், ‛போண்டா மணி உற்சாகம்.

12 பிப், 2020 - 18:05 IST
எழுத்தின் அளவு:
Bondamani-interview

அண்ணே... போலீஸ்காரங்க என்ன விரட்டீட்டு வராங்க.. உங்ககிட்ட நான் என்ன சொன்னேணு கேப்பாங்க.. எதையும் சொல்லிடாதீங்க... அடிச்சி கூட கேப்பாங்க, அப்பவும் சொல்லிடாதீங்க... என்ற, காமெடி காட்சியில், வடிவேலுவுக்கு இணையாக நடித்திருப்பார், காமெடி நடிகர், போண்டா மணி. இதுவரை, 240 படங்களில் நடித்துள்ள இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனாலும், வெளிநாடு சென்று, அவர்களிடம் நேரடியாக முகம் காட்ட முடியாத நபராக உள்ளார்.
காரணம், இலங்கை தமிழரான இவருக்கு, இதுவரை பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து, போண்டா மணி நம்மிடம் பேசியதிலிருந்து...


உங்கள் குடும்பம் குறித்து?

என் இயற்பெயர் கேதீஸ்வரன். தந்தையின் ஊர், ராமநாதபுரம், தேவிப்பட்டினம். அவர், இளமை பருவத்தில், வேலைக்காக இலங்கை சென்று, மளிகை கடை நடத்தினார். அங்கு தான், என் அம்மாவை திருமணம் செய்தார். என் பெற்றோருக்கு, 9 பெண், 7 ஆண் பிள்ளைகள். அதில் நானும் ஒருவன்.சினிமாவுக்கு வந்தது எப்படி?

படிக்கும் போது, நாடகம் நடிப்பேன். தமிழகம் சென்று சினிமா வாய்ப்பு தேடு என, நண்பர்கள் ஆசை காட்டினர். 1979ல், சென்னை வர முயன்றேன். ஏர்போர்ட்டில், என்னை ஏமாற்றிய ஏஜன்ட், சிங்கப்பூர் அனுப்பி வைத்தார். அங்கு, எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரிந்து, 1983ல் இலங்கை திரும்பினேன். அங்கு, மோசமான சூழல். அகதி கப்பலில், அப்பா, இரண்டு சகோதரி, மூன்று சகோதரர்களுடன் தமிழகம் வந்து, சிதம்பரம் முகாமில் தங்கினேன்.


சினிமா வாய்ப்பு தேடியது எப்படி?

நடிகர் தேவை என, விளம்பரம் பார்த்து, தேனாம்பேட்டையில் ஒரு அலுவலகம் சென்றேன்.அங்கு, என்னை ஏமாற்றி பணம் பறித்தனர். உடனே, முகாம் திரும்பி, கொத்தனார் வேலை செய்தேன். மீண்டும், போரூர், ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி கட்டும் பணிக்கு வந்தேன். அங்கிருந்து, சினிமா வாய்ப்பு தேடினேன். வாய்ப்பு கிடைக்கவில்லை.இலங்கை போக விரும்பலையா?

போர் தணிந்ததால், 1987ல் எங்களை இலங்கை அனுப்ப, அரசு தயாரானது. திருப்பதி கோவில் சென்று, சிதம்பரம் பேருந்து நிலையம் வந்தபோது, என் மடியில், அப்பா மரணமடைந்தார். நானும், தம்பியும், வவுனியாவில், அப்பாவின் மளிகை கடையை நடத்தினோம். 1990ல் நடந்த போரில், என் கடை சூறையாடப்பட்டது.என் காலில் குண்டு காயம் பட்டது. மீண்டும், அகதியாக தமிழகம் வந்தேன். என் குடும்பம், நாலா திசைகளில் சென்றது. நான் இறந்துவிட்டதாக கருதினர்.பல ஆண்டுகளுக்கு பின் தான், உயிரோடு இருப்பது, அவர்களுக்கு தெரிய வந்தது.


சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி?

சேலம், எடப்பாடி முகாமில் தங்கியபோது, ஷுட்டிங் வந்த பாக்யராஜிடம், வாய்ப்பு கேட்டேன். என் நிலை அறிந்து, பவுனு பவுனு தான் படத்தில், மணமகன் கேரக்டரில் நடிக்க வைத்தார். அந்த கேரக்டரில், நடிக்க வேண்டிய ராஜ்குமார், எனக்காக, விட்டுக் கொடுத்து, எனக்கு குடை பிடிக்கும் கேரக்டரில் நடித்தார்.மீண்டும் சென்னை வந்து, சில படங்கள் நடித்தபடி, இரவு வாட்ச்மேன் வேலை செய்தேன். இயக்குனர் வி.சேகர் படங்கள் தான், சினிமாக்காரர்களிடம் என்னை கொண்டு சேர்த்தது.


கேதீஸ்வரன் எப்படி, போண்டா மணி ஆனார்?

இயக்குனர் ஜெய்சுந்தரிடம், நான் முதல் முறையாக, கவுண்டமணியுடன் நடிக்க போகிறேன்; சினிமாவுக்காக ஒரு வித்தியாசமான பெயர் கூறுங்கள் என்றேன். அவர், தினமும் என்ன சாப்பிடுவாய் என கேட்டார். காலையில் இரண்டு போண்டா, ஒரு டீ குடித்து, வாய்ப்பு தேடுவேன் என்றேன். சேமியா மணி, தேங்காய் சீனிவாசன், பசி நாராயணன், இடிச்சபுளி செல்வராஜ், பகோடா காதர் போன்ற நடிகர்கள், சாப்பாட்டு பெயரை வைத்து வெற்றி பெற்றுள்ளனர் என பேசியவர், கவுண்டமணி பெயரில் உள்ள பின்பாதியை சேர்த்து, எனக்கு, போண்டா மணி என, பெயர் வைத்தார்.சென்னையில் எங்கு தங்கி இருந்தீர்கள்?

சென்னையில், தங்க இடம் இருந்தாலே, கனவுகளை நனவாக்க முடியும். முதலில், கண்ணகி சிலை அருகே, குடிசையில் தங்கினேன். இனியன் சம்பத், நடிகர் மன்சூர் அலிகான் போன்றவர்கள், பல ஆண்டுகள், இலவசமாக தங்க இடம் கொடுத்தனர்.


உங்களை, மக்கள் அடையாளம் கண்டது எப்போது?

சுந்தரா டிராவல்ஸ் படத்தில், மணமகன் கேரக்டர் தான், மக்கள் மத்தியில் என்னை பேச வைத்தது. தொடர்ந்து, வடிவேல் படங்களில் நடித்தேன். நான் நடித்த பல காமெடி காட்சிகளை, டிவியில் பார்த்து, இப்போதும், மக்கள் கவலை மறந்து சிரிக்கின்றனர்.அதுவே, எனக்கு கிடைத்த பெரிய வெற்றி.


உங்கள் திருமணம் குறித்து?

எனக்கு பெண் தர, பலர் தயங்கினர். நடிகர் சிங்கமுத்து உதவியால், 2003ல் திருமணம் நடந்தது. மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இலங்கை தமிழராக இருந்தபோதும், இக்கட்டான நிலையில், பல நல்லுள்ளங்கள், எனக்கு உதவி செய்துள்ளனர்.


உங்களை போலீஸ் பிடித்து சென்றதே...

இலங்கை போரின் போது, முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை, போலீஸ் தேடியது. தி.நகர் போலீசார், என்னை கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்தனர். நான் நடித்த படம் குறித்து கூறியும், போலீசார் என்னை விடவில்லை.நடிகர் ராதாரவி தான், காவல் நிலையம் வந்து, என்னை மீட்டுச் சென்றார். நடிகர் சங்க அடையாள அட்டையும் வழங்கினார்.உங்களுக்கு பாஸ்போர்ட் இல்லையா?

இலங்கை தமிழராக இருப்பதால், அரசு பாஸ்போர்ட் வழங்கவில்லை. சிறப்பு சலுகை வழங்க, அரசிடம் மன்றாடியும் கிடைக்கவில்லை. மனைவியின் ஆவணங்கள் வழியாக, எனக்கு ரேஷன், வாக்காளர், ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் உள்ள தமிழர்கள், என்னை அழைக்கின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜித் என, பல நடிகர்களுடன் நடித்துள்ளேன். 240 படங்கள் நடித்தும், வெளிநாடு செல்ல முடியவில்லை என்ற வருத்தம், இப்போதும் உள்ளது.


வேறு என்ன செய்கிறீர்கள்?

வடிவேல் தொடர்ந்து நடித்திருந்தால், நானும் பெரிய அளவில் வளர்ந்திருப்பேன். நடிகர் குமரிமுத்து, சினிமாவை மட்டும் நம்பி இருக்காதே; சினிமா சார்ந்த நிகழ்ச்சி நடத்து என்றார். அவர் யோசனையில், சாய் கலைக்கூடம் என்ற நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். அதுதான் எனக்கு சோறு போடுது.


தற்போது நடித்து வரும் படங்கள்?

ஐந்து ஆண்டுக்கு பின், தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்தேன். சில படங்கள் நடித்து வருகிறேன். மீண்டும், ஒரு வலம் வருவேன். பாஸ்போர்ட் வாங்கும் முயற்சி நடக்கிறது. கிடைத்தால், உலகம் முழுவதும் சுற்றி, என் நகைச்சுவையை கொண்டு செல்வேன்!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டிஜிட்டல் மார்க்கெட்டில் தமிழ் சினிமா உயர்கிறது - ஜீவாடிஜிட்டல் மார்க்கெட்டில் தமிழ் ... முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள் - காஜல் அகர்வால் முடிந்தவரை மற்றவர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

anon -  ( Posted via: Dinamalar Android App )
14 பிப், 2020 - 07:08 Report Abuse
anon என்னது 16 புள்ளைங்களா? உன் அப்பா மளிகை கடல போய் வெல செஞ்ச மாதிரி தெியவில்லை.
Rate this:
13 பிப், 2020 - 11:17 Report Abuse
மங்காத்தா வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in