பிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி மன்னன் ஜோடியானது எப்படி தெரியுமா? - பிறந்த நாள் ஸ்பெஷல்
07 ஜன, 2020 - 12:15 IST
அபிநய சரஸ்வதி என்று கன்னட மக்களாலும், கன்னடத்து பைங்கிளி என்று தமிழக மக்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிற சரோஜா தேவிக்கு இன்று பிறந்த நாள். அவரை பற்றிய ஒரு பிளாஷ் பேக்.
தமிழில் அவர் அறிமுகமான படம் மணாளனே மங்கையின் பாக்கியம் என்றாலும் அவருக்கு நட்சதிர அந்தஸ்தை உருவாக்கி தந்த படம் ‛நாடோடி மன்னன். இந்தப் படத்துக்கு அவர் எப்படி வந்தார் என்பதை அவரது வார்த்தைகளிலேயே படிக்கலாம்.
கன்னட கச்சதேவயானி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அப்போது கோடி சூரியபிரகாசத்துடன் ஒருவர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லோரும் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர். ஆனால், அவர் யார் என்று எனக்கு தெரியாது. எனவே நான் பேசாமல் உட்கார்ந்து இருந்தேன். அவர் படப்பிடிப்பு தளத்தினை சுற்றிப் பார்த்துவிட்டு இயக்குனரிடம் சென்றார். என்னைக்காட்டி, "யார் அந்த பெண்" என்று கேட்டார்.
அதற்கு இயக்குனர் "அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகி. புதுமுகம். பெங்களூரை சேர்ந்தவர். பெயர் சரோஜாதேவி" என்று தெரிவித்தார். வந்தவர் பேசாமல் சென்றுவிட்டார். அவர் போகும்போதும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்து பணிவுடன் வழியனுப்பினார்கள். அவர் சென்றபிறகு "வந்தது யார்" என்று நான் இயக்குனரிடம் கேட்டேன். "அவர்தான் எம்.ஜி.ஆர்" என்று அவர் தெரிவித்தார்.
அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். "அவ்வளவு பெரிய மனிதர் வந்து இருக்கிறார். எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே" என்று நான் வருந்தினேன். எம்.ஜி.ஆர். நடிக்க ஒப்பந்தமாகியிருந்த திருடாதே என்ற படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். என்னை தேர்வு செய்தாலும், ஒரு புதுமுகத்தை எப்படி நமது படத்தில் போடுவது என்று தயாரிப்பாளருக்கு பயம். அதனால் அந்தப் படத்தில் நடிக்கவில்லை.
நான் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக அவருடைய சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக என்னை அவர் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்த படம் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்கிறார் சரோஜாதேவி.
சினிமாவில் சரோஜா தேவியின் வளர்ச்சிகர்நாடகா மாநிலம், பெங்களுருவில் 1938ம் ஆண்டு ஜன., 7ம் தேதி பிறந்தவர் பி.சரோஜா தேவி. இவரது இயற்பெயர் ராதாதேவி. 1950 மற்றும் 60களில் முதன்மைக் கதாநாயகியாக வலம் வந்தவர். 1955 ஆம் ஆண்டு, நடிகரும், தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதரின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான "மகாகவி காளிதாசா" என்ற கன்னட திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் "தங்கமலை ரகசியம்", "திருமணம்" ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்திருந்தாலும், 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய "நாடோடி மன்னன்" திரைப்படத்தில் எம் ஜி ஆருக்கு ஜோடியாக இவர் நடித்த கதாபாத்திரமே இவர் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க காரணமாயிருந்தது என்றால் அது மிகையன்று.
இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த "கல்யாணப் பரிசு", இயக்குநர் ஏ பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த "பாகப்பிரிவினை" ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தமிழில் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. 1957 ஆம் ஆண்டு என்டிராமாராவ் நடிப்பில் வெளிவந்த "பாண்டுரங்க மகாத்மியம்" என்ற படம் தான் இவர் தெலுங்கில் அறிமுகமாக வழிவகுத்தது. 1960களில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பணிபுரியும் அளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். "நாடோடி மன்னன்" தொடங்கி "அரசகட்டளை" வரை எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை இவருக்குண்டு.
1959ஆம் ஆண்டு "பைகாம்" என்ற திரைப்படத்தின் வாயிலாக ஹிந்தியிலும் தடம் பதித்தார். "சசுரால்", "ஒபேரா ஹவுஸ்", "பியார் கியா தோ டர்னா கியா", பேட்டி பேட்டே" ஆகியவை ஹிந்தியில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களாகும். திரைப்படங்களில் இவருடைய உடையலங்காரம், சிகையலங்காரம் மற்றும் இவர் அணிந்து வரும் ஆபரணங்கள் அன்றைய பெண்களை வெகுவாக ஈர்த்திருந்தது.
1967-ல் ஸ்ரீஹர்ஷா என்பவரை மணம் புரிந்தார். திருமணத்திற்குப் பின் எம்ஜிஆரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. இவர் எம்ஜிஆரோடு இணைந்து நடித்த கடைசி திரைப்படம் 1967-ல் வெளிவந்த "அரசகட்டளை" ஆகும். இருந்தாலும் திருமணத்திற்குப் பின்பும் நடிப்பைத் தொடர்ந்தார். "என் தம்பி", "அஞ்சல் பெட்டி 520", "தேனும் பாலும்", "அருணோதயம்", "அன்பளிப்பு" ஆகிய திரைப்படங்களில் சிவாஜி கணேசனுடனும், "பணமா பாசமா" "தாமரை நெஞ்சம்", "மாலதி", "கண்மலர்" போன்ற திரைப்படங்களில் ஜெமினி கணேசனுடனும் நடித்ததோடு, அன்றைய இளம் நாயகர்களான ரவிச்சந்திரனோடு "ஓடும் நதி" என்ற திரைப்படத்திலும், முத்துராமனுடன் "பத்து மாத பந்தம்" என்ற படத்திலும் நடித்திருந்தது குறிப்பிட தக்கது. தமிழில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த கடைசி திரைப்படமும் இதுவே.
கால்நூற்றாண்டுக்கு மேல் தமிழ் திரையுலகில் முதன்மை நாயகியாக கோலோச்சியிருந்த நடிகை சரோஜா தேவி அடுத்த தலைமுறை நாயகர்களான விஜயகாந்த், அர்ஜுன் ஆகியோருடனும் அதற்கும் அடுத்த தலை முறை நாயகர்களான விஜய், சூர்யா ஆகியோருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். இயக்குநர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து 2009-ல் வெளிவந்த "ஆதவன்" திரைப்படமே இவர் நடித்து வெளிவந்த கடைசி தமிழ் திரைப்படமாகும்.