Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2019 தமிழ் சினிமா: அசத்தியதும்... ஆட்டம் கண்டதும்...

01 ஜன, 2020 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Tamil-Cinema-2019-:-Full-Round-up

இந்திய சினிமாவில் தமிழ் சினிமா முக்கிய இடம் வகிக்கிறது. சில ஆண்டுகளாக ரூ.2 ஆயிரம் கோடி வரை இங்கு முதலீடு செய்யப்படுகிறது. டிஜிட்டல் புரட்சி, ரிலீஸ் பஞ்சாயத்து, கதை திருட்டு, வசூலில் மோதல், இல்வாழ்வில் இணைந்த நட்சத்திரங்கள், மண்ணை விட்டு மறைந்த பிரபலங்கள் என 2019ல் பல நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றை இப்போது பார்க்கலாம்.

209ல் 10 மட்டுமே வெற்றி
இந்தாண்டு 209 படங்கள் வெளிவந்தன. இவற்றில் 10 தான் வெற்றிக் கோட்டை தாண்டின. இருந்தாலும் அந்த படங்கள் மூலமே ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்தன. மற்ற 199 படங்களில் அதில் பாதியை கூட வசூலிக்கவில்லை என்பது தான் உண்மையான நிலை.டிஜிட்டல் மாற்றம்
ஒவ்வொரு ஆண்டும் ஏதோ வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது சினிமா. அது நிரந்தர வளர்ச்சியா, தற்காலிக வளர்ச்சியா என்பது போகப் போகத்தான் தெரியும். தியேட்டர்களில் சினிமா வெளியாவதில் இருந்து மாறி, நேரடியாக டிஜிட்டல் தளங்களில் வெளியானது. ஆண்டின் துவக்கத்தில் சிகை என்ற படமும், அதற்கடுத்து களவு, இக்லூ என படங்கள் வெளியாகின. இது வளர்ச்சியா என்பது போகப் போக தான் தெரியும்.

தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு
தியேட்டரில் வெளியான ஒரு படம் 30 நாட்களுக்குள் டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அதே சமயம் டிஜிட்டல் தளங்களில் குறுகிய நாட்களில் வெளியிட உரிமை வழங்குவதன் மூலம், கூடுதல் தொகை கிடைப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் காலங்களில் இந்த டிஜிட்டல் தளங்கள் தியேட்டர்களுக்கு எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிய வரும். ஏற்கெனவே கூடுதல் கட்டணங்களால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் டிஜிட்டலில் 30 நாட்களில் படம் வரும் நிலையில் தியேட்டர்களுக்குச் செல்வது மேலும் குறையும்,

சினிமாவுக்கு போட்டியாக வெப்சீரிஸ்
சினிமா, டிவிக்கு போட்டியாக வெப் சீரிஸ் என அழைக்கப்படும் இணைய தொடர்கள் இந்த ஆண்டு அதிகம் தயாராக ஆரம்பித்தன. சினிமாவில் 3 மணி நேரத்தில் கதை ஒரு கதையைச் சொல்ல முடியும். ஆனால், வெப் சீரிஸ்களில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒரு கதையைச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இருந்தாலும் தியேட்டருக்குச் சென்று பெரிய திரையில் படம் பார்க்கும் அனுபவத்தை டிஜிட்டல் தள வெளியீடுகளால் கொடுக்க முடியாது என்பதே உண்மை.வசூலில் டாப்
சினிமா, டிஜிட்டல் மோதல் ஒரு புறமிருக்க, சென்ற ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டில் 209 நேரடித் தமிழ்ப் படங்கள் வரை வெளிவந்துள்ளன.
வருடத்தின் ஆரம்பமே ரஜினிகாந்த், அஜித் மோதல் என ஆரம்பித்தது. ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜித் நடித்த விஸ்வாசம் படங்கள் ஒரே நாளில் வெளியாகி வசூலில் போட்டி போட்டன. இரண்டு படங்களில் எது அதிக வசூலைக் குவித்தது என்பதில் இரண்டு தரப்பினருமே மோதிக் கொண்டனர்.

அந்தப் படங்களுக்குப் பின்னர் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்தன எல்கேஜி, தடம், காஞ்சனா 3, நேர்கொண்ட பார்வை, கோமாளி, நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன், பிகில், கைதி” ஆகிய படங்கள். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால் காஞ்சனா 3 வெளிவந்தது ஏப்ரலில். அதற்கடுத்து நேர்கொண்ட பார்வை வெளிவந்தது ஆகஸ்ட்டில். இடையில் உள்ள நான்கு மாதங்களில் வெளிவந்த 60 படங்களும் பெரிய வசூலைப் பெறவில்லை.ந

சுமார் ரகங்கள்
சுமாரான படங்கள் என்ற பட்டியலில், “தில்லுக்கு துட்டு 2, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், நட்பே துணை, மான்ஸ்டர், கடாரம் கொண்டான், ஏ1, காப்பான், ஆதித்ய வர்மா” ஆகிய படங்களை சொல்லலாம். இந்தப் படங்கள் ஏதோ ஒரு ஏரியாவிலோ, தியேட்டரிலோ, அல்லது சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, என மற்ற வகைகளிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு லாபத்தைக் கொடுத்த படங்களாக இருந்தன.

வெற்றி ஹீரோக்கள்
வெற்றி பெற்ற படங்களைப் பார்த்தால் முதல் மூன்று நிலைகளில் ரஜினி, அஜித், விஜய் உள்ளனர். தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ். அருண் விஜய் ஆகியோரின் படங்கள் அடுத்த இடத்தில் உள்ளன. எல்கேஜி மட்டும் தான் ஹீரோ அல்லாத காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வெற்றி பெற்ற படம். மற்றபடி புதுமுகங்கள் நடித்த படங்கள், மற்ற சிறிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

கவனிக்க வைத்த படங்கள்
நல்ல படம் என விமர்சகர்களாலும், இன்னும் கொஞ்சம் ஓடியிருக்கலாம் என கரிசனத்தை வரவழைத்த படங்களில், “பேரன்பு, டூலெட், நெடுநல்வாடை, சூப்பர் டீலக்ஸ், மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப்பூக்கள், கே 13, கேம் ஓவர், ஜீவி, ஹவுஸ் ஓனர், ராட்சசி, தொரட்டி, பக்ரீத், மகாமுனி, ஒத்த செருப்பு சைஸ் 7, கே.டி (எ) கருப்புதுரை, அடுத்த சாட்டை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, காளிதாஸ்,” ஆகிய படங்கள் இடம் பெற்றன. இவற்றில் டூலெட் 2018 ஆண்டு தேசிய விருதைப் பெற்ற படம். இந்த ஆண்டு தான் தியேட்டர்களில் வெளியானது. மேலே சொன்ன பட்டியலில் உள்ள மற்ற படங்கள் இந்த ஆண்டு சில விருதுகளை பெறக் கூடிய தகுதி உள்ளவையாக இருக்கலாம்.

தோல்வி படங்கள்
எதிர்பார்த்து ஏமாந்த படங்களில் சில முன்னணி நடிகர்களின் படங்களும் இருப்பது ஆச்சரியம் தான். என்.ஜி.கே., வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ், ஐரா, மிஸ்டர் லோக்கல், தேவி +2, சிந்துபாத், சாஹோ, ஆக்ஷன், சங்கத்தமிழன், ஹீரோ, தம்பி” ஆகிய படங்களே அவை. இவற்றுடன் நிறைய சின்ன பட்ஜெட் படங்களை சேர்த்துக் கொள்ளலாம். வெளியான 209 படங்களில் அனைத்து தரப்பினருக்கு மகிழ்ச்சியை தந்தது 10 படங்கள் தான். இந்த வெற்றி விகிதம் 5 சதவீதம் தான் என்பது இவ்வளவு கோடி முதலீட்டிற்கு போதுமானதல்ல.

அஜித்திற்கு டபுள் வெற்றி
சமூக வலைத்தள கணக்கு வைத்துள்ள பல தியேட்டர்காரர்கள் வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலில் பெரும்பாலும் பிகில் படத்திற்கு நம்பர் 1. அதற்கடுத்தே அஜித்தின் விஸ்வாசம் படம் இருக்கிறது, நேர்கொண்ட பார்வை படங்கள். இந்த ஆண்டில் இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் அஜித். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் வழக்கம் போல் வசூலில் யார் டாப்ம் என சமூக வலைதளங்களில் சண்டை போட்டனர். அதிலும் பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூலுக்கு திரையுலகில் இருப்பவர்ளே சண்டை போட்டார்கள்.யார் டாப்

நடிகர்கள்
“சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல்” நடித்து, அதிக படங்களில் நடித்த ஹீரோக்கள் பட்டியலில், ஜி.வி.பிரகாஷ்குமார் முதலிடத்தில் இருக்கிறார்.நடிகைகள்
“விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில்” படங்களில் நடித்து நயன்தாராவும், “90 எம்எல், கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, சீனி, களவாணி 2” படங்களில் நடித்து ஓவியாவும் நடிகைகளில் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.இசையமைப்பாளர்கள்
இசையமைப்பளர்களில் யுவன்ஷங்கர் ராஜா, சாம் சிஎஸ் முதலிடத்தில் உள்ளனர். யுவன் இசையில், “பேரன்பு, கண்ணே கலைமானே, சூப்பர் டீலக்ஸ், என்ஜிகே, சிந்துபாத், கழுகு 2, நேர்கொண்ட பார்வை, ஹீரோ”, சாம் இசையில், “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், கே 13, 100, அயோக்யா, தேவி +2, கொரில்லா, கைதி, ஜடா” வெளிவந்துள்ளன.இயக்குனர்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன், ஆக்ஷன் படங்களை இயக்கிய சுந்தர்.சி, கென்னடி கிளப், சாம்பியன் படங்களை இயக்கிய சுசீந்திரன் முதலிடத்தில் உள்ளனர்.

காமெடி கிங் யோகி பாபு
காமெடி நடிகர் யோகி பாபு இந்தாண்டில் மட்டும் 30 படங்கள் நடித்துள்ளார். இவற்றில் தர்மபிரபு, கூர்கா படங்கள் அவர் ஹீரோவாக நடித்தவை.கவனிக்க வைத்த புதியவர்கள்
எல்கேஜி படத்தை இயக்கிய கே.ஆர்.பிரபு, கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அறிமுகப் படத்திலேயே வெற்றி பெற்ற இயக்குனர்களாக முத்திரை பதித்துள்ளார்கள். தேசிய விருது பெற்ற டூலெட் படத்தின் இயக்குனர் செழியனும் அறிமுக இயக்குனர் தான்.அறிமுக ஹீரோக்களில் விக்ரம் மகன் த்ருவ் மீது எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்து அவர் நடிக்க உள்ள படம் தான் அவருக்கான பயணத்தின் ஆரம்பம். அறிமுகமான ஆண்டிலேயே நான்கு படங்களில் நடித்த ஹீரோயினாக மேகா ஆகாஷ். பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் அவர் நடித்துள்ளார்.

பெண் இயக்குனர்கள்
ஹவுஸ் ஓனர் படத்தின் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், கே.டி (எ) கருப்புதுரை படத்தின் இயக்குனர் மதுமிதா, சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் ஆகியோர் முத்திரை பதித்தனர்.டாப் பாடல்கள்
பேட்ட படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற மரணமாஸ் சூப்பர் ஹிட் பாடலாக இடம் பிடித்தது. யு-டியுப் மற்றும் இதர தளங்களில் 25 கோடி முறை கேட்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே.. பாடல் 19 கோடி முறை கேட்கப்பட்டு இரண்டாவது இடத்தையும், சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான்... பாடல், 13 கோடி முறை கேட்கப்பட்டு மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

இரண்டாம் பாகம் படங்கள்
முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இரண்டாம் பாகப் படங்கள் அதிகம் வந்துள்ளன. “சார்லி சாப்ளின் 2, தில்லுக்கு துட்டு 2, சித்திரம் பேசுதடி 2, உறியடி 2, நீயா 2, தேவி +2, களவாணி 2, வெண்ணிலா கபடி குழு 2, கழுகு 2, அழியாத கோலங்கள் 2” ஆகிய இரண்டாம் பாகப் படங்களும், மூன்றாம் பாகப் படமாக காஞ்சனா 3 படமும் வெளிவந்துள்ளன.

ஆங்கில தலைப்பு படங்கள்
“டூலெட், எல்கேஜி, ஸ்பாட், பூமராங், சூப்பர் டீலக்ஸ், கேங்ஸ் ஆப மெட்ராஸ், ராக்கி த ரிவெஞ்ச், வாட்ச்மேன், மெஹந்தி சர்க்கஸ், மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல், கேம் ஓவர், கொரில்லா, ஜாக்பாட், ரீல், கென்னடி கிளப், சிக்சர், சூப்பர் டூப்பர், பெட்ரோமாக்ஸ், பப்பி, ஆக்ஷன், சாம்பியன், ஹீரோ, வி 1 மர்டர் கேஸ் ஆகிய படங்கள் ஆங்கில தலைப்பில் வெளிவந்தன.

எண் தலைப்பு படங்கள்
தலைப்பில் எண்களுடன், “தாதா 87, 90 எம்எல், கே 13, 100, 7, ஐஆர் 8, ஒத்த செருப்பு சைஸ் 7, 100 % காதல், 50 ரூவா, 50/50” படங்கள் வெளிவந்தன.

50 நாட்களை கடந்த படங்கள்
ஜெயம் ரவி நடித்த கோமாளி 100 நாட்களைக் கடந்த ஒரேபடம் என்ற பெருமையைப் பெற்றது. “பேட்ட, விஸ்வாசம், எல்கேஜி, காஞ்சனா 3, தடம், டூலெட், நேர்கொண்ட பார்வை, அசுரன், பிகில், கைதி” படங்கள் 50 நாட்களைத் தாண்டின.

நோ கமல் - இளையராஜா
2019ல் கமல்ஹாசன் நடிப்பிலும், இளையராஜா இசையிலும் ஒரு படம் கூட வரவில்லை.

கெட்டிமேளம் கொட்டியவர்கள்
ஆர்யா - சாயிஷா, சஞ்சீவ் - ஆலியா மானஸா, சாந்தினி - நந்தா ஆகிய ஜோடிகளுடன் காமெடி நடிகர் சதீஷ், காமெடி நடிகை மதுமிதா, நடிகைகள் ரிச்சா கங்கா கங்கோபாத்யாய, காயத்ரி போன்றவர்களும் திருமண பந்தத்தில் இணைந்தனர். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன், இயக்குனர் விஜய் - மருத்துவர் ஐஸ்வர்யா மறுமணம் செய்தனர்.உதிர்ந்த பிரபலங்கள்
இயக்குனர்கள் மகேந்திரன், கொல்லுபுடி மாருதி ராவ், கோடி ராமகிருஷ்ணா, நடிகர்கள் கிரேஸி மோகன், ராஜசேகர், பாலாசிங், டைபிஸ்ட் கோபு, காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயச்சந்திரன், தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி, பழம்பெரும் நடிகைகள் கீதாஞ்சலி, விஜயநிர்மலா ஆகியோர் மறைந்தனர்.கதை திருட்டு பஞ்சாயத்து
2019ல் சில கதைத் திருட்டு பிரச்னைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. பிகில், ஹீரோ படங்களுக்கு அந்த சிக்கல் வந்தது.

அதிக வெளியீட்டு சிக்கல்கள்
பெரிய நடிகர்களின் படங்களும் வெளியீட்டுச் சிக்கலில் சிக்கி தாமதமாக வெளியாகின. விஷால் நடித்த அயோக்யா, விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத், சங்கத்தமிழன், அதர்வா நடித்த 100, உள்ளிட்டவை அந்த படங்கள்.

2010 முதல் 2019 வரை 10 பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ் சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்துள்ளது. டிஜிட்டல் தளங்களுக்கான பயன்பாடு அதிகரித்துள்ளது. இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள், யு-டியூப் ஆகியவை சினிமாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சினிமா மீதான மக்களின் ரசனையும், ஆர்வமும் அதிகமாகி வருவதை இது காட்டுகிறது.மாற்றம் தேவை
கடந்த பத்தாண்டுகளில் சில விஷயங்கள் மாற்ற முடியாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பைரசி, டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்களின் அதிக விலை பற்றி பலரும் பேசிவிட்டு, பின் அமைதியாகிவிடுகிறார்கள். இவற்றில் கட்டுப்பாடு கொண்டு வந்தால், படத்தின் பட்ஜெட் செலவுகளைக் குறைத்தால், தரமான படங்கள் வந்தால் தியேட்டர்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாகும். இவற்றை மாற்றாத வரை 200 படங்கள் வந்தாலும் 10 படங்கள்தான் வசூல் என்ற நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

பிறக்க உள்ள 2020 ஆண்டு புதிய வளர்ச்சியுடன் நல்ல படங்கள் மூலம் தமிழ் சினிமா உலகம் வளரட்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் கெட்டி மேளம் கொட்டியவர்கள்2019ல் கெட்டி மேளம் கொட்டியவர்கள் 2019 - டாப் 10 டிரைலர்கள் எவை ? 2019 - டாப் 10 டிரைலர்கள் எவை ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in