யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
எந்த படம் ஜெயிக்கும்; எது தோற்கும் என்ற ரகசியத்தை, சினிமாவில் இன்று வரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. சினிமா ஒரு சூதாட்டம், என்கிறார், நடிகர், பயில்வான் ரங்கநாதன். அவருடன் பேசியதிலிருந்து:
உங்களுக்கு, பயில்வான் என்ற பட்டத்தை எம்.ஜி.ஆர்., கொடுத்தாரா?
ஆமாம். ஆனால், நான் நிஜமான பயில்வான் இல்லை. மல்யுத்தம் அல்லது குத்துச்சண்டை போட்டியில் ஜெயித்தவர்களை தான், பயில்வான் என்பர். நான், பளு துாக்குதல் போட்டியில் ஆர்வமாக இருந்ததால், என் உடல்வாகுவை பார்த்து, எம்.ஜி.ஆர்., என்னை பயில்வான் என அழைப்பார். என்னை, ரங்கநாதன் என்றால் யாருக்கும் தெரியாது. பயில்வான் ரங்கநாதன் என்றால் தான் தெரியும்.
நிரந்தர காமெடி நடிகரானது எப்போது?
ஆரம்பத்தில், உடற்பயிற்சிக்கு ஆகும் செலவை கருத்தில் வைத்து, நடிக்க தெரியாது என கூறியும், என்னை நடிகனாக்கியது, எம்.ஜி.ஆர்., தான். பாக்யராஜ், முந்தானை முடிச்சு படத்தில், என்னை வைத்தியராக நடிக்க வைத்தார். 24 வயதிலேயே, 70 வயது கிழவனாக நடித்தேன். அதன் பின், என்னை நிரந்தர காமெடியனாக ஏற்றுக் கொண்டனர்.
சினிமா விமர்சகராக உங்கள் பணி?
சினிமாவுக்கு வந்து, 40 ஆண்டு ஆகிவிட்டது. அரங்கேற்றம் படத்திற்கு, விமர்சனம் எழுத ஆரம்பித்த என் எழுத்துப் பணியும் தொடர்கிறது. ரயில் தண்டவாளம் போல், நடிப்பும், எழுத்துப்பணியுமாக என் பயணம் சென்று கொண்டிருக்கிறது.
சினிமாவில் இருந்தபடியே, பத்திரிகையாளராக அதை விமர்சிக்கும் போது கண்டனம் வருகிறதா?
உண்மை தான். இதனால், எனக்கு நடிக்க வாய்ப்பு தரவும், சிலர் பயப்படுகின்றனர். சினிமாவில் நடித்து, 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதை, பத்திரிகையாளராக, 1,000 ரூபாய் சம்பாதிப்பேன்; அவ்வளவு தான். நேர்மையான விமர்சகன் என்ற அளவில், எனக்கு நிம்மதி உண்டு. நியாயமான விமர்சனத்தை, தயாரிப்பாளர்கள் எப்போதும் ஏற்பர். சிலர், உள்குத்து வைத்து விமர்சிப்பர்; அந்த பழக்கம் எனக்கு இல்லை.
சினிமாவில் எத்தனை சங்கத்தில் உறுப்பினராக உள்ளீர்கள்?
நான், எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. நான் சுதந்திரமானவன். ஆரம்பத்தில், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். இப்போது, எதிலும் உறுப்பினராக இல்லை.
உங்கள் பார்வையில் இன்றைய சினிமா?
சினிமா என்பது, இப்போது சூதாட்டமாகி விட்டது. இந்த நடிகருக்கு, இவ்வளவு தான் விலை என தெரிந்தும், அதிகமாக கொடுத்து ஏமாறுகின்றனர். ரம்மியில், நான்கு நல்ல கார்டு இருந்தாலும், ஒரு கார்டு சேர்ந்தால் தான், ரம்மி அடிக்க முடியும். நான்கு சுற்று வந்த பின், வேறு ஒருவன் திடீரென ரம்மி அடித்து விடுவான். இது தான் சினிமா. எந்த படம் ஜெயிக்கும்; எது தோற்கும் என்ற ரகசியத்தை, இன்று வரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. சினிமா சங்கங்களுக்கு இடையே, இன்னும் ஒற்றுமை வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கூறுகின்றனர்; அதை ரஜினி, கமல் இருவரில் யார் நிரப்புவர்?
சத்தியமாக யாராலும் நிரப்ப முடியாது. எம்.ஜி.ஆர்., ஒருவர் தான், கொடை வள்ளல் என்ற பெயரோடு, சினிமாவிலும், அரசியலிலும் வெற்றி பெற்றார். அவர் இடத்தை, சினிமாவில் கூட இன்னும் யாரும் நிரப்பவில்லை. அரசியலிலும், அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரை போன்ற தலைமையை யாராலும் தர முடியாது.
உங்கள், பிட்னஸ் ரகசியம்?
தனி மனித ஒழுக்கம் அவசியம். எம்.ஜி.ஆர்., பக்தன் என்பதால், மது அருந்துவது இல்லை. பசிக்கும் போது சாப்பிட வேண்டும். நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என, நினைக்கக் கூட வேண்டாம்; கெட்டது செய்யக்கூடாது என, நினைத்தால் போதும். நம் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.