Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அதிர்ச்சி தந்த 2018 அரையாண்டு : ஓர் பார்வை

14 ஜூலை, 2018 - 11:07 IST
எழுத்தின் அளவு:
How-is-Tamil-cinema-first-half-in-2018

தமிழ் சினிமா ஒவ்வொரு வருடமும் நல்ல வளர்ச்சியைப் பெற வேண்டும் என சினிமா மீது தீராத காதல் கொண்ட சிலர் உண்மையிலேயே போராடி வருகிறார்கள். ஆனால், அவர்களாலும் கூட தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வளர்ச்சியைக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

ஒரு பக்கம் பைரசி இணையதளம், மறுபக்கம் அதிக டிக்கெட் கட்டணங்கள், அதிக பார்க்கிங் கட்டணம், 5 ரூபாய்க்கு விற்க வேண்டிய பாப்கார்ன் 100 ரூபாய், என சினிமாவை விட சினிமாவை வைத்து சம்பாதிப்பவர்கள்தான் நன்றாக வளர்ந்து கொண்டு போகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200 படங்களுக்கும் மேல் வெளியாகி வருகிறது. அதில் 10 படங்களாவது மாபெரும் வெற்றி, மாபெரும் வசூல் என்று மனதார சொல்ல முடியாத நிலைதான் இருக்கிறது.

பெரிய நடிகர்களின் படங்கள் கூட படுதோல்வியைச் சந்தித்து விடுகின்றன. சில சிறிய படங்கள் எதிர்பாராத வெற்றியைக் கொடுக்கின்றன. கடந்த சில வருடங்களை விட இந்த 2018ம் வருடத்திய முதல் அரையாண்டு சோதனையான காலமாகவும், அதிர்ச்சியை அதிகம் தந்த காலமாகவும்தான் அமைந்தது.

ஜனவரி 2018 முதல் ஜுலை 2018 வரை சுமார் 70 படங்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 படங்கள் வரை குறைவாகவே வெளியாகியுள்ளது. 2017ம் ஆண்டின் அரையாண்டில் சுமார் 100 படங்கள் வெளிவந்துவிட்டது. 2018ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற திரைப்படங்களை வெளியிடாத வேலை நிறுத்தமே, இந்த ஆண்டில் அது குறைந்ததற்குக் காரணமாகிப் போனது.

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படம் வரப் போகிறது. அதன்பின் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரத் தொடங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த விஷயத்தை இடையில் வந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' செய்ததைக் கூட ரஜினிகாந்த்தின் 'காலா' படத்தால் செய்ய முடியவில்லை.

இந்த 2018 அரையாண்டில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று பின்வரும் படங்களைச் சொல்லலாம்.

பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி', விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்', சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்', உதயநிதி நடித்த 'நிமிர்', விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', மிஷ்கின், ராம் நடித்த 'சவரக்கத்தி', ஜீவா, ஜெய் நடித்த 'கலகலப்பு 2', பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்', கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த 'மெர்க்குரி', விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்த 'தியா', விக்ரம்பிரபு நடித்த 'பக்கா', கௌதம் கார்த்திக் நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து', விஷால் நடித்த 'இரும்புத் திரை', அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', அரவிந்த்சாமி நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', விஜய் ஆண்டனி நடித்த 'காளி', ரஜினிகாந்த் நடித்த 'காலா', ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்', சசிகுமார் நடித்த 'அசுரவதம்', அதர்வா நடித்த 'செம போத ஆகாதே' ஆகிய 20 படங்களைச் சொல்லலாம்.

இவற்றில் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'காலா' படம் மட்டுமே நடிகர்கள் அளவில் பெரிய படம். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள விஜய், அஜித் ஆகியோர் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை. அவை அடுத்த அரையாண்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளிவந்த விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படமும், சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்த வரிசையில் இந்த வருடத்தில் வெளிவந்த 'நிமிர்' படமும் சேர்ந்துள்ளது. அவர் நடித்து வெளிவரும் 'கண்ணே கலைமானே' படமாவது அவருடைய மார்க்கெட்டை நிமிர்த்தியே ஆக வேண்டும்.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடித்தார் என்றே புரியவில்லை. இப்படிப்பட்ட காமெடிப் படங்கள் வெற்றி பெற்றுவிடும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா முதல் முறையாக நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர், அதில் இடம் பெற்ற கெட்ட வார்த்தையால் பேசப்பட்டது. ஆனால், படம் வந்த பிறகு அதிகம் பேசப்படவில்லை. ஜி.வி.பிரகாஷ்குமாரும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக நடிப்பார் என்று அந்தப் படம் புரிய வைத்ததைத் தவிர அந்தப் படத்தில் வேறு சிறப்பு இல்லை.

கடந்த வருடம் பிரபுதேவா நடித்து வெளிவந்த 'தேவி' படத்தின் வெற்றி அவருக்கு தமிழில் மீண்டும் ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்தது. பிரபுதேவா நடித்து இந்த அரையாண்டில் வெளிவந்த 'குலேபகாவலி, மெர்க்குரி' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. அடுத்து, அவர் நடித்துள்ள 'லட்சுமி' படம் வெளிவர உள்ளது. இந்தப் படமாவது 'தேவி' சென்டிமென்ட்டை மீண்டும் கொண்டு வரட்டும்.

விக்ரம் பிரபு இன்னமும் குறிப்பிடத்தக்க வெற்றியை தமிழ் சினிமாவில் அடைய முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறார். 'பக்கா' மாதிரியான படங்களில் எதற்கு நடித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

ஆபாசப் படமாக வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் ஆபாச நடிகர் என்று பெயர் எடுக்கும் அளவிற்கு வந்தார் கௌதம் கார்த்திக். ஆபாச, மோச படமாக இருந்தாலும் வசூலைக் குவித்ததற்காக எல்லாம் இந்தப் படத்தை வெற்றிப் படம் என்று கொண்டாட முடியாது. இனியும், இது மாதிரியான படங்கள் வந்தால் தமிழ் ரசிகர்களே விரட்டியடிக்க வேண்டும்.

இந்த அரையாண்டின் குறிப்பிடத்தக்க படம், குறிப்பிடத்தக்க வெற்றி என்ற பெயரை முதன்முதலில் பெற்ற படம் 'இரும்புத் திரை'. அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோர் நடித்த இந்தப் படம் தமிழில் 50 கோடியையும், தெலுங்கில் 10 கோடிக்கும் மேலும் வசூலித்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த அரையாண்டின் உண்மையான ஒரே வெற்றிப் படம் இதுதான் என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

'பிச்சைக்காரன்' படத்தில் கிடைத்த வரவேற்பு, வசூல் ஆகியவற்றைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளாமல் தவறவிட்டு வருகிறார் விஜய் ஆண்டனி. அது 'காளி' படத்திலும் தொடர்கிறது.

விஜய் ஆண்டனியைப் போன்றே இசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறிய ஜி.வி.பிரகாஷ் நடித்து இந்த ஆண்டில் வந்த 'நாச்சியார்' அவருக்குத் தேடிக் கொடுத்த பெயரை 'செம' படம் பறிக்க வைத்தது. விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் ஒரே ஆலோசனைதான், நல்ல கதையைத் தேர்ந்தெடுங்கள்.

அரையாண்டின் கடைசியில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த 'டிக் டிக் டிக்' படம் எதிர்பாராத வெற்றியைக் கொடுத்துள்ளது. தயாரிப்பாளர் படத்தை வெளியிடும் போதே நான்கு கோடி நஷ்டத்தில் வெளியிட்டார் என்றார்கள். ஆனால், படத்தை வாங்கியவர்கள் நல்ல லாபத்தைப் பார்த்துள்ளார்கள்.

2018 அரையாண்டில் வெளிவந்த 70 படங்களில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'இரும்புத் திரை, டிக் டிக் டிக்' ஆகியவை மட்டுமே உண்மையான வசூல் படங்கள் என்பதே திரையுலகத்தில் பேசப்படும் உண்மைத் தகவல். மற்ற படங்களை வெற்றிப் படங்கள் என்று சொல்வதில் பல அர்த்தங்கள் உள்ன.

சுமாரான வெற்றி பெற்ற படங்களில் அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், ஜெய் - ஜீவா நடித்த கலகலப்பு 2, மிஷ்கினின் சவரக்கத்தி, நாச்சியார் போன்ற படங்கள் இடம்பெற்றன.

வழக்கம் போல இந்த அரையாண்டில் எண்ணற்ற புதுமுகங்கள், நடிகர்களாக, நடிகைகளாக, தொழில்நுட்பக் கலைஞர்களாக அறிமுகமாகியுள்ளார்கள். பல படங்கள் வந்த சுவடு கூடத் தெரியாமல் ஓடிப் போயின.

மார்ச், ஏப்ரல் மாதம் திரையுலகினர் எதற்காக ஸ்டிரைக் நடத்தினார்களோ, அதன் பலனை இன்னும் அனுபவிக்கவில்லை என்பதே உண்மை. திரையுலகத்தில் நடக்கும் பல்வேறு அரசியலே தமிழ் சினிமா மேலும் பின் தங்கக் காரணமாக அமைகிறது. அதைச் சரி செய்தால்தான் 2018ன் அடுத்த அரையாண்டாவது ஆகா.... ஆண்டாக அமையும்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
எதிர்பார்த்ததும், எதிர்பாராததும்... - ஜூன் மாதப் படங்கள் ஓர் பார்வைஎதிர்பார்த்ததும், எதிர்பாராததும்... - ... பிளாஷ்பேக்: பாடல் எழுத அதிக சம்பளம் வாங்கிய லோகநாதன் பிளாஷ்பேக்: பாடல் எழுத அதிக சம்பளம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

amarnath - manchester,யுனைடெட் கிங்டம்
16 ஜூலை, 2018 - 01:56 Report Abuse
amarnath ஒரு வருடத்திருக்கு 365 நாட்கள் ஆனால் நம்ம தமிழ் சினிமா மட்டும் தான் மோர் தான் 200 சினிமா ரிலீஸ் பண்ணுறாங்க அவங்களுக்கு எல்லாருக்கும் பணம் எங்க இருந்து வருது எல்லாம் கருப்பு பணம்...அதே போல எவ்ளோ ஆபாசமா படம் வேற எந்த மொழி ளையும் வரு வது கிடையாது... எல்லா producer வீட்லேயும் incometax ரைட் பண்ணின ஓழுங்கா நா படமா வரும் மக்கா
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15 ஜூலை, 2018 - 14:18 Report Abuse
A.George Alphonse In olden days there were only very few producers and directors and the heros were also only few and the cenimas were also good and meaningful and people enjoyed .But nowadays "Thadi Eduththavan Ellam Thandakaran" pole all are directors,producers and heros.Useless and meaningless movies.In coming days the cenima field will be ruined and disappeared permanently once for all.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15 ஜூலை, 2018 - 07:55 Report Abuse
Srinivasan Kannaiya காலியான பெருங்காய டப்பாக்கள் தானாக சும்மா இருந்தால் நல்லது...
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15 ஜூலை, 2018 - 07:54 Report Abuse
Srinivasan Kannaiya பழம் நடிகர்கள் இந்த ஓட்டத்தில் இருந்து விலகி கொண்டால்... படங்களின் எண்ணிக்கையும் குறையும்.,, கையை சுட்டுக்கொண்ட தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் குறையும்
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15 ஜூலை, 2018 - 07:52 Report Abuse
Srinivasan Kannaiya வந்த எழுபது படங்களில் டிக் டிக் டிக் டிக் க்கு டிக் செய்யலாம்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in