Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2026 தமிழக தேர்தல் களம் : இருமுனை போட்டியா... நான்குமுனை போட்டியா... விஜய்க்கு எப்படி... : திரைப்பிரபலங்களின் கருத்து

21 ஏப், 2026 - 12:41 IST
எழுத்தின் அளவு:
2026-Tamil-Nadu-Elections-Two-way-race...-Four-way-race...-Will-Vijay-influence-it...-Opinions-of-film-celebrities
Advertisement

தமிழக சட்டசபை தேர்தல் இந்தமுறை கவனம் பெற்றுள்ளது, ஏனெனில் நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கி தனித்து போட்டியிடுகிறார். விஜயின் அரசியல் வருகையால் தமிழகத்தில் எந்த மாதிரியான மாற்றம் வரப்போகிறது என மாநிலமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் கூட இந்த தேர்தலில் ஓட்டளிக்க விடுமுறை எடுத்து வந்துள்ளனர். நிச்சயம் அவர் கணிசமான ஓட்டு வங்கியை பெறுவார் என கணிப்புகள் கூறுகின்றன. இந்த சட்டசபை தேர்தலை எப்படி பாக்குறீங்க என்று திரை துறையினரிடம் தினமலர் சார்பில் கேட்டோம். அவர்கள் அளித்த பதில்கள் இங்கே...

நடிகர், இயக்குனர் பார்த்திபன்
இந்த சட்டசபை தேர்தலை ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போலவே பார்க்கிறேன். அதுவும் 3 காட்சிகள் மட்டுமல்ல, எல்லாக் காட்சிகளையும் நான் மட்டுமல்ல எல்லா மக்களும் houseful ஆக street full ஆக road full ஆகப் பார்க்கிறார்கள். அப்படி full ஆகப் பார்க்கும் மக்களை FOOL ஆகப் பார்க்கும் அல்லது Fool ஆக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள் இத்திரைப்படத்தை action, comedy, thriller, suspense, horror, fiction இப்படி எல்லாம் கலந்த genre-ல் அவியல் கூட்டணி entertainment ஆகத் தருகிறார்கள். என்னைப் போன்ற நடுநிலைவாதிகள் சுவாரஸ்யமாக ஆனால் கவலையுடன் பார்க்கிறோம்.



மொய் விருந்துப் போல பொய் விருந்து படைக்கப்படுகிறது. அதன் மீது மொய்க்கும் ஈக்களாக மக்கள் மெய்யாகவே ஈர்க்கப்படுகிறார்களா? அல்லது மக்களும் அரசியல்வாதிகளை ஏமாற்றப் பார்க்கிறார்களா? என்பதை பொறுத்திருந்தேப் பார்க்க வேண்டும். நாளைய நாட்டை ஆளப்போவது தலைவர்கள் அல்ல, இன்றைய இளைஞர்களே!!!!! எனவே ……… மக்கள் வெற்றி பெற யாருக்கு ஓட்டளிப்பது? ஆனால், 100% வாக்குப்பதிவு நம் கடமை.

இயக்குனர், வசனகர்த்தா லியாகத் அலிகான்
விஜயகாந்த் உடன் நான் பணியாற்றிய படங்கள், அதில் வரும் வசனங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலம். எந்த கட்சியையும் சாராமல் நடுநிலையோடு என் படங்களின் வசனங்களை பட்டவர்த்தமாக மக்களிடம் எடுத்து சொல்லி உள்ளேன். இப்போது நான் ஒரு கட்சியை சார்ந்தவனாக இருந்தாலும் திரைப்பட கலைஞனாக நான் இந்த கருத்துக்களை சொல்கிறேன்.

அரசியலை பற்றி நன்கு தெரிந்தவர்கள், கட்சி சார்ந்து ஓட்டளிப்பவர்கள், அரசியல், ஆட்சி சார்ந்த விஷயங்களை தெரியாமல் ஓட்டளிப்பவர்கள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி ஓட்டளிக்க போகிறவர்கள்... இவர்கள் தான் இந்த தேர்தலில் யார் ஓட்டளிக்க போகிறார்கள். ஆனால் நாடு எப்படி இருக்கிறது என்றால் நாடு நல்லா இருக்கணும் என நினைக்காமல் நாம நல்லா இருக்கணும் என்று தான் அரசியல்வாதிங்க நினைக்குறாங்க. நாடும் சரி, நாமும் சரி நாசமா போனா பரவாயில்லை கொடுக்குற பணம், பரிசு பொருட்களுக்கு தான் ஓட்டு போடுறாங்க. இப்படி இருப்பவர்கள் உள்ள வரை நாட்டின் நிலைமையும், மக்கள் நிலைமையும் மோசமா தான் இருக்கும்.



ஒவ்வொரு கட்சியும் ஒரு ஐடி விங் வச்சு இருக்காங்க. அதில் வரும் செய்திகள் உண்மை என்று நம்புகிறார்கள். இது அவர்கள் சார்ந்த கட்சிக்கு சாதகம் என்று அவர்கள் நினைத்தாலும் இதில் பாதிக்கப்பட போறது மக்கள் தான் என்பதை மறந்து விடுகிறார்கள். இப்போது அரசியல் நாகரிகம் குறைந்துவிட்டது. பெரிய பெரிய தலைவர்கள் கூட பொய்யாக, அநாகரிகமாக பேசுகிறார்கள், அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இது எங்க போய் முடியும் என தெரியவில்லை. 2026லேயே இப்படி இருக்கிறது என்றால் 2031ல் எப்படி இருக்க போகிறது என தெரியவில்லை. மக்கள் தான் ரொம்ப பாவம். இது எனது பொதுவான கருத்து. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

சிறுவயது முதல் மக்களோடு மக்களாய் நான் பழகி வருகிறேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களின் எண்ணங்களை நன்கு அறிந்தவன். எனது படங்களில் வரும் வசனங்கள், மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். இப்போதும் அப்படித்தான் நாட்டு நடப்பு, மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என தெரிந்து தான் இந்த கருத்தை தெரிவிக்கிறேன். இந்த பதிவு நல்லா இருந்தது என்றால் கருத்து சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, திட்டாதீர்கள். ஏனென்றால் ஒரு கருத்து சொன்னாலே திட்டி பதிவிடுறாங்க. ஆனால் எல்லாவற்றையும் கடந்து தான் வந்துள்ளேன். தமிழக மக்கள் நலனுக்காக சிந்தித்து செயல்படுங்க என்பது தான் எனது வேண்டுகோள்.

நடிகர் வெற்றி



ஏப்., 23 சட்டசபை தேர்தலை முக்கியமாக பார்க்கிறேன். மக்களாகிய நமது நல்ல எதிர்காலத்திற்கான வாய்ப்பாக பார்க்கிறேன். அனைவரும் தங்களது ஓட்டுரிமையை தவறாமல் செலுத்துங்க. ஒரு நாடு முன்னேறனும் என்றால் நல்ல தலைவர் வேண்டும். அதை மக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். நாட்டுக்காக, மக்களுக்காக சிந்திக்கும் தலைவர்களுக்கு ஓட்டு போடுங்க.

நடிகர் ஜாவா சுந்தரேசன்



இந்த 2026 சட்டசபை தேர்தல் நான்குமுனை போட்டியாக அனல் பறக்கும் பிரசாரத்துடன் நடக்கிறது. வாக்காளர்கள் ஏப்., 23 அன்று ஓடிப்போயோ, நடந்துபோயோ, தவழ்ந்துபோயாவது ஓட்டு போட்டுருங்க. ஏன் எனது ஒரு ஓட்டு போடலன்னா என்னவாகிடப்போது என்று சொல்லாமல் கண்டிப்பாக ஓட்டு போடுங்க. ஏன்னா நாடு இப்படி ஆகிடுச்சு, அப்படி ஆகிடுச்சு என புலம்புவதற்கு கூட தகுதி இல்லாமல் போய்விடும். ஜனநாயக கடமையை சரியாக செய்யுங்க, நல்ல, நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்யுங்க. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும் அந்தக்கட்சி தமிழ்நாட்டிற்கான கட்சியாக செயல்படட்டும். தமிழக மக்களின் வாழ்வு மேம்படட்டும். எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இயக்குனர் பேரரசு



இந்த 2026க்கான தேர்தல் மக்களுக்கான தேர்தல், நமக்கான தேர்தல், நாளைய தலைமுறைக்கான தேர்தல். இதுவரை அரசியல் ஆளும் கட்சி என்பது ஊழல், லஞ்சம், மணல் கொள்ளை மாதிரி தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். இப்போது அதைவிட ஆபத்து நடந்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறை, கஞ்சா போதை. நாளைய தலைமுறையை நாம் காப்பாற்ற வேண்டும். ஒரு ஆட்சி மாற்றம் என்றால் ஒரு நாட்டுக்கான மாற்றம். நாளைய தலைமுறைக்கான மாற்றம், அது கண்டிப்பாக வேண்டும். மத்திய அரசை எதிரியாக நினைத்து கொண்டு இருந்தால் நல்ல திட்டங்கள் நம் தமிழகத்திற்கு வராமல் போய்விடும். மத்தியில் எந்த அரசு இருந்தாலும் அவர்களுடன் நட்போடு இருக்க வேண்டும். சரியான மாற்றம் வேண்டும். குடும்ப ஆட்சியாக இல்லாமல் மக்களாட்சியாக இருக்க வேண்டும். அதற்கான மாற்றத்தை நாம் விரும்புகிறோம். சரியான மாற்றத்தை உருவாக்குவோம். தகுதியானவர்களுக்கு ஓட்டைப் போட்டு தமிழகத்தை தலை நிமிர செய்வோம்.

இயக்குனர் சீனு ராமசாமி

தமிழக அரசியல் களம் அதன் வரலாற்றிலேயே சந்தித்திராத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தின் விளிம்பில் நிற்பதை எனது தற்போதைய ஆய்வுகள் உணர்த்துகின்றன. அரை நூற்றாண்டு காலமாக இருமுனைப் போட்டி என்ற அரசியலின் வேர்களைத் தகர்த்து, நான்கு பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு வாழ்வா சாவா போராட்டமாக உருவெடுத்துள்ளது. எனது ஆய்வின் அடிப்படையில் இந்தத் தேர்தல் களமானது நான்கு முக்கிய திசைகளில் பயணிக்கிறது. ஆளும் திமுக., "ஆட்சி தொடர்ச்சி" என்கிற ஒற்றை இலக்கை நோக்கி நகர்வதும், அதிருப்தி வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஒரு பெரும் முயற்சியாக அதிமுக - பாஜக கூட்டணி களம் காண்கிறது.



இந்தத் தேர்தலின் மிகப்பெரிய திருப்புமுனையாக நான் பார்ப்பது விஜயின் அரசியல் பிரவேசம். இவர்களுக்கு இணையாக, தொடர்ந்து மாற்று அரசியல் மற்றும் தமிழ் தேசிய முழக்கத்தோடு தனித்துக் களம் காணும் சீமான். ​எனது இறுதி அவதானிப்பின்படி, விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற சாமானிய மனிதனின் அன்றாடப் பிரச்னைகளே இந்த தேர்தலின் பிரதான பேசுபொருளாக உள்ளன.

திராவிட இயக்கத்தின் நீண்டகால பாரம்பரியத்தை விஜய் மற்றும் அண்ணன் சீமான் போன்ற புதிய சக்திகளின் வருகை அசைத்துப் பார்க்குமா அல்லது வாக்கு சிதறல்கள் ஒரு 'தொங்கு சட்டமன்ற' சூழலை உருவாக்குமா என்பதே இப்போதைய மிகப்பெரிய விவாதமாகும். தமிழகத்தின் அடுத்த பத்தாண்டு கால அரசியல் தலையெழுத்தை எழுதப்போகும் இந்தத் தேர்தலின் முடிவுகள் வரும் மே 4 அன்று வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஒட்டுமொத்த இந்தியாவே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் இசக்கி கார்வண்ணன்
இந்த சட்டசபை தேர்தலை தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும். இந்த தேர்தலில் ஸ்டாலின், கனிமொழி அரசியல் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. கடந்த முறை கைகொடுத்த நீட் செங்கல் மற்றும் அதிமுக மீது செலுத்திய அவதூறுகள் எல்லாமே இப்போது இவர்களுக்கு எதிராக திரும்பி நிற்கிறது.



இதைவிட பெரிய அடியாக விஜய் இருக்க போகிறார். திமுக காட்டிய பிஜேபி என்கிற பூச்சாண்டி பயத்தால் கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்கள் இதுவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழுமையாக தங்களது வாக்கு வங்கியை திமுக ஆதரித்தனர். ஆனால் இப்போது ஒரு சிறுபான்மை மதத்தை சார்ந்தவரே அவர்களுக்கு தலைவனாக (விஜய்) கிடைத்துவிட்டதாக நம்புகின்றனர்.

நல்ல ஆரோக்கியமான அரசியல் 75 ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கும். காரணம் இந்த தேர்தலுக்கு பின் திமுக என்கிற கட்சி பின்னோக்கி சென்றுவிடும்.ஏன் பல துண்டுகளாக உடையும். அதில் பெரும்பாலானவர்கள் விஜய் பக்கம் சொல்லலாம் பணத்தில் செழித்து வாழும் கட்சி முன்னோடிகள் பலர் பாஜக பக்கம் போகலாம். அதன்பிறகு நல்ல ஆரோக்கியமான அரசியல் தமிழ்நாட்டில் நடக்கும், இதுதான் என் பார்வை. இது வரலாற்று சிறப்பு மிகுந்த தேர்தல் உண்மையான மாற்றம் நிகழ்த்த போகும் தேர்தல்.

ரெடின் கிங்ஸ்லி



ஒவ்வொரு சட்டசபை தேர்தலும் நம் வாழ்க்கையை ஒட்டியே இருக்கும். நமது வாழ்வாதாரத்திற்கு முன்னேற்றம் வேண்டும் என்றால் நன்றாக யோசித்து, சிந்தித்து ஓட்டு போடணும், ஆனால் கண்டிப்பாக ஓட்டு போடணும், வாக்களிப்போம்.

இயக்குனர், நடிகர் மூர்த்தி



யார் நம்மை ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல் மட்டுமல்ல இது. எந்த தத்துவம், எந்த சித்தாந்தம் நம்மை ஆள வேண்டும் என்பதற்கான தேர்தலாக இந்த சட்டசபை தேர்தலை பார்க்கிறேன்.

தயாரிப்பாளர் சிவி குமார்



இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. இந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் தன்னை ஒரு தலைவராக நிலை நிறுத்திக் கொண்டார். தமிழக அரசியலில் விஜயின் அரசியல் என்ட்ரி நிச்சயம் ஒரு சுனாமி தான். ஆனால் அவரது கட்சியினர் பூத் லெவலில் என்ன செய்றாங்க என்பது தெரியவில்லை. ஏனென்றால் மற்ற கட்சியினரின் கூட்டணி பலமாக உள்ளது. விஜய் யாருடைய கூட்டணியை பிரிக்க போகிறார் என தெரியவில்லை. 96ல் இருந்து ஓட்டு போடுகிறேன். ஒவ்வொரு முறையும் யார் ஜெயிப்பார்கள் என முன்பே தெரியும். ஆனால் இந்த முறை கணிக்க முடியவில்லை.

நடிகர், இயக்குனர் ரவி மரியா



எல்லா சமூக ஊடகங்களிலும் இந்த தேர்தல் நான்கு முனைப் போட்டி என்று சொல்கிறார்கள். ஆனால் களத்தில் திமுக., அதிமுக., இடையே தான் போட்டி. இந்தமுறை தணிச்சையாக 234 தொகுதிகளிலும் அதிமுக., கூட்டணிக்கு ஓட்டு போடணும் என மக்கள் நினைக்குறாங்க. 5 ஆண்டுகளில் திமுக., ஆட்சியில் நடந்த துன்பங்கள், துயரங்களை பார்த்து அதிலிருந்து மீண்டு வந்தால் போதும் என நினைக்குறாங்க. சமூக ஊடக பார்வைக்கும், நேரில் நான் களத்தில் பார்க்கும் பார்வைக்கும் 100 சதவீதம் வித்யாசம் உள்ளது. இந்தமுறை அதிமுக., தான் ஆட்சி அமைக்கும் என மக்களே கை விரல்களை உயர்த்தி காட்டுறாங்க.

இசையமைப்பாளர் தினா



இந்த தேர்தலில் கடுமையான போட்டி இருக்கு. மக்களுக்கு என்ன தேவையிருக்கு, குறிப்பாக ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களுக்கும், ஏழை மக்களும் டாக்டர் மாதிரியான படிப்பை சுலபமாக குறைந்த செலவில் படிப்பதற்கு வழிவகை செய்யும் அரசாங்கம் அமைய வேண்டும். ஏதோ வந்தோம், ஆட்சி அமைத்தோம், போறாம் என்றில்லாமல் ஏழைகளை கை தூக்கி விடும் அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே என் ஆசை.

தயாரிப்பாளர் பிடி செல்வகுமார்



தமிழகத்தில் கன்னியாகுமரி முக்கியமான தொகுதி, சுற்றுலாத்தலம். நான் ஒரு இயற்கை ஆர்வலர். இங்கு அதிமுக.,வின் தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறேன். தமிழகத்தில் தேர்தல் களமும் இதுமாதிரி தான் இருக்கும். கூப்பன்கள் கொடுத்து எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என திமுக., நினைக்கிறது. துரை முருகன் போன்ற வயதானவர்களுக்கு சீட் கொடுத்து என் போன்றவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் இது ஒரு தவறான அரசியல் முன்னுதாரணம். கடவுள் சீக்கிரத்தில் ஒரு நல்ல வழியை காட்டுவார்.

நடிகர் சவுந்தர்ராஜா



ஒரு மாற்றத்திற்கான தேர்தலாக நான் பார்க்கிறேன். ரொம்ப வருஷமா இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்தார்கள். இன்னைக்கு ஒரு நேர்மையான ஆட்சியாளர்கள், தலைவர்கள் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதை தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் தரும். பண பலம், இலவசங்களை தாண்டி நிச்சயம் தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தலாக இந்தாண்டு இருக்கும். அதிக ஓட்டுப்பதிவு நடக்கும். எந்த சூழ்ச்சியும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். நல்லதே நினைப்போம், நல்லதை விதைப்போம், நல்லதே நடக்கும்.

நடிகை கஸ்தூரி
பல ஆண்டுகளாக நான் அரசியல் விமர்சகராக இருந்தாலும் இப்போது தமிழக பா.ஜ.,வின் நட்சத்திர பேச்சாளராக பிரசாரம் செய்கிறேன். தமிழகத்தில் இந்தமுறை கடுமையான போட்டி நிலவுகிறது. முடிவுகள் என்ன என்பது யாராலும் கணிக்க முடியாது. அதிலும் ஆளும் கட்சி சார்பில் குறிப்பாக செந்தில் பாலாஜி தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை பணப்பட்டுவாடா நடப்பதாக பேசுகின்றனர். பணத்தால் மக்களை வாங்கிவிடலாம் என்ற ஆளுங்கட்சியின் மனப்பான்மையை பார்க்கிறேன். அதேசமயம் மக்களும் மாற்றம் வேண்டும் என நினைப்பதை பார்க்க முடிகிறது.



நான்குமுனைப் போட்டி என்று சொன்னாலும் விஜயின் பேக்டர் என்னவென்று தெரியவில்லை. அதிமுக., திமுக., இடையே தான் பலத்த போட்டி நிலவுகிறது. சமூகவலைதளங்களில் வரும் டிரெண்டிங் விஷயங்கள் மக்கள் இடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. களத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் தான் வரவேற்பு உள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையரை மசோதாவை தோற்கடித்ததால் அதுபற்றி ஸ்டாலினின் பொய் பிரசாரங்களை, திமுக., காங்கிரஸ் கூட்டணியின் துரோகத்தை நான் தனிப்பட்ட முறையில் எடுத்துரைத்து வருகிறேன். பெண்கள் விரோத, தமிழக விரோத திமுக.,வை ஏப்., 23ல் தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள் என நம்புகிறேன்.

நடிகர், இயக்குநர் கே.பாக்யராஜ்
கலியுகம் நடக்குதுன்னு சொல்றதை நாம கேட்டு இருப்போம், ஆனால் இப்போது அதை உணர்கிறேன். இந்த தேர்தலில் நடக்க கூடாதது எல்லாம் நடக்குது. கடவுள் எல்லா இடத்துக்கும் வர மாட்டாரு. தாய் வடிவில் தான் எல்லா இடத்திலும் இருப்பாங்க சொல்லுவாங்க. அப்படி சிறப்பு வாய்ந்த பெண் இனத்துக்கே கஷ்டமான சில விஷயங்கள் பார்க்கிறேன். சில செயல்கள் தலைகுனிவை தருவது போல நடந்திருக்கு. அரசியல்வாதிகள் இப்படி நடந்து கொள்வது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. முன்னாடி எல்லாம் தேர்தல் வரும்போது இவங்க ஜெயிப்பாங்க, அவங்க ஜெயிப்பாங்கனு ஓரளவு கணிக்க முடியும். இந்தமுறை அப்படி கணிக்க முடியவில்லை.



தேர்தலுக்கு முன்பை விட தேர்தலுக்கு பிறகு கலாட்டா அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் ஜனநாயகன் படம் இணையதளத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எவ்வளவு பேரின் உழைப்பு அது. ஒரேநாளில் போச்சு. தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கமா இருக்குற ஒருத்தன் தான் இந்த விஷயத்தை பண்ணியிருக்க முடியும். பணம் தருகிறேன் என்று பேரம் பேசி இருக்கணும் இல்ல யாருடைய மிரட்டலுக்காக ஒரு கைக்கூலிக்காரன் தான் இந்த வேலையை செஞ்ச மாதிரி எனக்கு தோணுது. சென்சார் போர்டுக்கு எவ்ளோ கஷ்டம், எடிட்டர்கள் உட்பட இது ஒரு பெரிய அசிங்கம் தான். இதை காவல்துறை ஈஸியா கண்டு பிடிச்சு விடலாம் எதுக்கு தேர்தல் வரைக்கும் இதை இழுத்துட்டு போறாங்கனு தெரியல.

இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி



இந்த தேர்தல் ஒருவித பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கு, எதிலும் கிளாரிட்டி இல்லை. யார் ஜெயிப்பார்கள் என கணித்து சொல்ல முடியல. தேர்தல் முடிவுக்கு பிறகு தான் நமக்கு ஒரு ஐடியா கிடைக்கும். இந்த தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்கும்னு, பார்ப்போம். எல்லாரும் போல நானும் வெயிட் பண்றேன்.

நடிகர் யோகி பாபு



என்னை பொறுத்தமட்டில் அரசியல் சாதாரணமானது இல்லை. மண்டேலா படத்திலேயே நான் நடிச்சிருக்கேன். ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியத்துவம் ஆனது என்று எனக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். இந்த தேர்தல் கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். யார் ஜெயிச்சு வந்தாலும் கண்டிப்பாக மக்களுக்கு நல்லது பண்ணுவாங்கன்னு நானும் நம்புறேன். நம்ம உரிமை, நம்ம ஓட்டு. கண்டிப்பாக எல்லாரும் அவங்களுடைய ஓட்டை தவறாமல் செலுத்தணும் என்பது என் கோரிக்கை.

நடிகர் ஒய்ஜி மகேந்திரன்



தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கி இருக்க கூடாது, கலங்கிவிடும். புது வெள்ளம் வரணும். இதுதான் பொதுவான நீதி. தேர்தலை பொருத்தமட்டில் இது தான் எனது கருத்து. இந்த முறையும் அது தான்.

நடிகர், இயக்குனர் கவிதா பாரதி



வெறும் கொள்கை, மக்கள் நலத்திட்டம் மட்டும் தேர்தலில் வெற்றியை தராது என்கிற அவலம் கடந்த தேர்தல்களை விட இந்த முறை அதிகம் உள்ளது. அதாவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற சூழல் ஆரோக்கியமானது அல்ல. குறிப்பிட்ட ஒரு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 25 ஆயிரம் தருவதாக வரும் செய்திகளை பார்க்கும்போது இதை எப்படி எதிர்கொள்வது. அப்படியென்றால் இனி பணம் இல்லாத வேட்பாளர்கள், கட்சிகள் ஆட்சிக்கு வரவே முடியாதா. பணம் கொடுத்து தான் வெல்ல முடியும் என்றால் அங்கே ஜனநாயகம் தோற்றுவிட்டது என்று தான் அர்த்தம். இது மக்களுக்கு நல்லதல்ல. இதை அச்சுறுத்தும் செயலாக பார்க்கிறேன்.

நடிகை மாளவிகா



இதுபோன்ற தேர்தல்கள் பொதுமக்களின் மனநிலையையும் முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கின்றன. வளர்ச்சி, ஆளுமை மற்றும் நலன் போன்ற விஷயங்கள் வாக்காளர்களின் முடிவுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பார்ப்பது எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். மக்கள் ஆணை நேர்மறையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு முக்கியமான தேர்தல். வாக்காளர் வருகையும், பொதுமக்களின் மனநிலையும் அதன் முடிவை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நினைக்கிறேன். இனிவரும் காலங்களில் ஒரு நேர்மறையான திசையை எதிர்நோக்குகிறேன்.

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்



5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும். ஆனால் இப்போது ஒரு மாற்றம் வேண்டி மக்கள் விரும்பும் தேர்தலாக உள்ளது. ஒரு பெரிய மவுன புரட்சியாக இந்த தேர்தலை நான் பார்க்கிறேன்.

இயக்குனர், நடிகர் சரவண சுப்பையா



தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வந்தாலும் இந்த தேர்தல் பல தரப்பு மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. எனக்கு மீண்டும் உதிக்கும் உதயசூரியன் என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மார்ச் 2026 : 21 படங்களில் ஒரே ஒரு படம்தான் வெற்றி…மார்ச் 2026 : 21 படங்களில் ஒரே ஒரு ... ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap