கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் |
தமிழ் நாவல் உலகில் எத்தனையோ சரித்திரக் கதைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் அதிகமாக விற்பனையாவது கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' தான். சோழ வம்சம் பற்றிய வரலாற்று நாவலாக எழுதப்பட்டது. அது போல பல்லவர், சேரர், பாண்டியர் மன்னர்களைப் பற்றியும், குறுநில மன்னர்களை பற்றியும் பல நாவல்களும் இருக்கின்றன.
'பொன்னியின் செல்வன்' நாவல் மணிரத்னத்தால் படமாக்கப்பட்டு கடந்த வாரம் வெளியாகி உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருகிறது.
நின்று போன படங்கள்
இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே சில சரித்திரப் படங்கள் அறிவிக்கப்பட்டு நின்று போயின. உதாரணமாக சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா பதானி நடிப்பதாக இருந்த 'சங்கமித்ரா' நான்கு ஆண்டுகளாக ஆரம்பமாகாமல் உள்ளது. தனுஷ் இயக்கி நடிக்க, அவருடன் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க ஒரு சரித்திரப் படம் ஆரம்பமாகி சில நாட்கள் படப்பிடிப்புடன் நின்று போனது. இந்த இரண்டு படங்களும் ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டவை.
உயிர் பெறுமா மருதநாயகம்
இவற்றிற்கெல்லாம் முன்பாக 1997ல் கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் இளையராஜா இசையமைப்பில் மறைந்த பிரிட்டிஷ் ராணி எலிசெபத் சென்னை வந்து ஆரம்பித்து வைத்த 'மருதநாயகம்' படமும் பாதியில் நிற்கிறது. இந்த படம் வந்திருந்தால் இன்றைய கால சரித்திரப் படங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கும்.
ராணா
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்க 2011ல் ஆரம்பமாகி ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நின்று போன படம் 'ராணா'. இப்படத்தின் கதையை மீண்டும் சொல்லச் சொல்லி ரஜினிகாந்த் கேட்டதாக இயக்குனர் ரவிக்குமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தார். பூஜையின் போதே பரபரப்பை ஏற்படுத்திய படம்.
கரிகாலன்
விக்ரம் நடிக்க 'கரிகாலன்' என்ற பெயரில் சோழ மன்னனான ஆதித்த கரிகாலனைப் பற்றிய படம் ஆரம்பமானது. எஸ்.ஐ.கண்ணன் என்ற இயக்குனர் 40 நாட்கள் வரை படமாக்கிய பின் அவர் நீக்கப்பட்டு 'செல்லமே' படத்தை இயக்கிய காந்திகிருஷ்ணா இயக்குனராக நியமிக்கப்பட்டார். பல்வேறு காரணங்களால் அந்தப் படமும் நின்று போனது.
மாரீசன்
'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க 'மாரீசன்' என்றொரு படம் உருவாக உள்ளதாக செய்திகள் வந்தன. அதுவும் செய்தியோடு நின்று போனது. சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்க ஆரம்பமான 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படமும் சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பின்னர் ஷங்கர் - வடிவேலு பிரச்சனையால் கைவிடப்பட்டது.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் வந்த சரித்திரப் படங்கள் என்று சொன்னால் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி, புலி' ஆகிய படங்களைச் சொல்லலாம். 'புலிகேசி' படம் நகைச்சுவையாகவே எடுக்கப்பட்ட படம், பேண்டஸியாக எடுக்கப்பட்ட விஜய் நடித்த 'புலி' படம் வெளியீட்டிற்குப் பின் 'காமெடி' படமாகிவிட்டது. இதுவும் சிம்புதேவன் இயக்கிய படம்தான்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா 42
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'ஏழாம் அறிவு' படத்தில் ஒரு பகுதி சரித்திரப் படமாக அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தது. அந்தக் கூட்டணி அடுத்தே ஒரு சரித்திரப் படத்தை தைரியமாக ஆரம்பித்திருக்கலாம். ஆனால், விட்டுவிட்டார்கள்.
இப்போது சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கி வரும் சூர்யாவின் 42வது படம் சரித்திரப் படமாக உருவாகி வருகிறது. எந்த ஒரு முந்தைய சரித்திரத்தையும் அடிப்படையாக வைக்காமல் புனைவுக் கதையாக உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள்.
அடுத்து வேள்பாரி
அடுத்து ஷங்கர் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வேள்பாரி' சரித்திரக் கதை 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகப் போவதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். 1000 கோடி செலவுகள் எல்லாம் தமிழ் சினிமா தாங்குமா என்பது சந்தேகம்தான். யாரோ சிலர் இப்படி, 500, 1000 என கிளப்பிவிடுகின்றனர்.
கொட்டிக் கிடக்கும் நாவல்கள்
மணிரத்னம் இயக்கத்தில் இப்போது வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோர் முயற்சித்து நடக்காமல் போனது. அதை வெற்றிகரமாக முடித்து வைத்துவிட்டார் மணிரத்னம் என்றுதான் அந்த நாவலின் ரசிகர்களும், திரையுலகினரும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர். அடுத்த ஆண்டு வரும் இரண்டாம் பாகத்திற்கும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
'பொன்னியின் செல்வன்' வெற்றியால் கல்கி எழுதிய மற்ற நாவல்களான “சிவகாமியின் சபதம், சோலைமலை இளவரசி' ஆகிய நாவல்களைப் படமாக்கலாம் என்றும், சாண்டில்யன் எழுதிய 'கடல் புறா, யவன ராணி, ஜல தீபம்' ஆகிய நாவல்களைப் படமாக்கலாம் என்றும் அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
500 கோடி செலவில் பேண்டஸி சரித்திரப் படம் என்பதற்கு 'பாகுபலி'யும், 250 கோடி செலவில் சரித்திர நாவலை சிக்கனமாகப் படமாக்கியதற்கு 'பொன்னியின் செல்வன்' படமும் முன்னுதாரணங்களாக இருக்கின்றன. இவை இரண்டையும் வைத்து அடுத்து எப்படிப்பட்ட சரித்திரப் படங்களை எவ்வளவு செலவில் எடுக்கலாம் என அதன் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முடிவு செய்து கொள்ளலாம்.
தமிழ் சினிமா என்றும் முன்னோடியே
சரித்திரப் படங்களின் தயாரிப்பு தமிழ் சினிமாவில் புதிதல்ல. சினிமா ஆரம்பமான நூறு வருடங்களுக்கு முன்பு சரித்திரக் கதைகள்தான் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு ‛‛சந்திரலேகா, மன்னாதி மன்னன், அவ்வையார், பூம்புகார், நாடோடி மன்னன், சிவகங்கைச் சீமை, மந்திரி குமாரி, அடிமைப் பெண், வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், வஞ்சிக்கோட்டை வாலிபன், ராஜராஜ சோழன், கர்ணன்'' இப்படி படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அதற்குப் பிறகு சமூகக் கதைகளுக்கு மாறினார்கள். இப்போது சயின்ஸ் பிக்ஷன் மூலம் எதிர்காலக் கதைகளையும் கற்பனை செய்து எடுத்து வருகிறார்கள். மற்ற மொழி சினிமாக்களுக்கும் தமிழ் சினிமா முன்னோடியாகவே இருந்து வருகிறது. அந்த விதத்தில் 'பொன்னியின் செல்வன்' எப்படி முன்னோடியாக இருக்கிறது என்பதை இனிதான் அதிகமாகப் பேசுவார்கள். அதற்குக் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.