பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
திருநங்கைகளை கிண்டல் செய்யும் போக்கு மாறி, அவர்களும் இந்த சமூகத்தில் சாதித்து வருகின்றனர். சினிமாவிலும் இவர்கள் ஜெயித்து வருகிறார்கள். அந்தவகையில் தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா நமக்கு அளித்த பேட்டி...
* உங்களை பற்றி சொல்லுங்க?
எனக்கு சொந்த ஊர் சிவகாசி. அப்பா பட்டாசு தொழிற்சாலையிலும் அம்மா தீப்பெட்டி கம்பெனியிலும் வேலை செய்கிறார்கள். நான் வீட்டிற்கு மூத்த பொண்ணு, எனக்கு அடுத்து இரண்டு தம்பிகள். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. 14 வயதில் சென்னைக்கு வந்தேன். விஜயகாந்த் கல்யாண மண்டபத்திலே கொஞ்ச நாள் வேலை பார்ததேன். பின் கோயம்பேடு மார்க்கெட், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால், மருத்துவனை போன்ற இடங்களில் வேலை பார்த்தேன். நான் வேலை பார்த்த ஸ்வீட் கடைக்கு அருகில் டான்ஸ் கிளாஸ் ஒன்று இருந்தது. நடனம் ஆட எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கு கொஞ்சம் பயிற்சி எடுத்தேன். நிறைய மேடைகளில் ஆடியிருக்கிறேன். அந்த சமயத்தில் ரோபோ சங்கர், ஆர்த்தி போன்றவர்கள் மேடை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த காலம்.
* சினிமாவிற்கு எப்படி வந்தீங்க?
நண்பர் ஒருவர் மூலமாக சீரியல் நடிகை ஸ்ரீலேகாவிடம் டச்சப் பாயா சேர்ந்தேன். தினம்150 ரூபாய் சம்பளம். பிறகு மெட்டிஒலி உமா, அவரின் அக்கா வனஜாவிடமும் வேலை பார்த்தேன். சிலம்பாட்ட நாயகி சனாகான் தமிழில் நடித்த படங்களில் அவருக்கு உதவியாளராக நான் தான் இருந்தேன். சின்னத்திரையில் கிட்டத்தட்ட அனேக நடிகைகளிடமும் வேலை பார்த்துவிட்டேன். அங்கிருந்தபடி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை கற்றுக் கொண்டேன்.
* சினிமாவில் என்னென்ன வேலை பார்த்தீங்க?
10 ஆண்டுகள் டச்சப் பெண்ணாக வேலை பார்த்தேன். இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்களிடமும் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன். இவ்வளவு வேலை பார்த்தாலும் மனசுக்குள்ள ஒரு ஓரத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்து கொண்டே இருந்தது.
* முதலில் நடிக்க யார் வாய்ப்பு தந்தார்?
செல்வராகவனின் 'மயக்கம் என்ன' படத்தில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாவுக்கு 40 நாட்கள் நான் தான் உதவியாளராக இருந்தேன். இந்த படத்தில் வேலை பார்த்தற்காக சம்பளம் வாங்க மேலாளர் ஒருவரை பார்க்க போனேன். அவர் வேறு ஒரு இடத்தில் இருந்தார். அப்போது அங்கிருந்த இயக்குனர் ஒருவர் சினிமாவில் நடிப்பீங்களா என கேட்டார். என்னை மாதிரியே இருக்கும் திருநங்கைகளை கேலி செய்யும் எந்த காட்சியிலும் நடிக்க மாட்டேன். நல்ல கதாபாத்திரம் இருந்தால் நடிப்பேன் என்றேன். அப்படி கிடைத்த வாய்ப்பு தான் ஆக்கம் படம். அதில் பூ விற்கும் கதாபாத்திரத்தில் நடித்தேன். பிறகு தாரை தப்பட்டை படத்தில் பாலா வாய்ப்பு தந்தார்.
* தர்மதுரை பட வாய்ப்பு எப்படி?
தர்மதுரை படம் ஆரம்பிக்கும் முன்னர் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு, என் வீட்டிற்குள் எல்லாம் தண்ணீர் வந்துவிட்டது. கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் ஐந்து நாட்கள் வாழ்க்கையை கடினமாக நகர்த்தி சென்றேன். தர்மதுரை படத்தில் ஒருவருக்கு உதவியாளர் வேண்டும் என சொன்னாங்க. முதலில் மறுத்தேன். பின் அந்தபடத்தில் ராதிகா நடிக்கிறார் என்றதும் ஒப்புக் கொண்டேன். சின்ன வயதிலிருந்தே அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
படப்பிடிப்புக்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது கேமராமேன் சுகுமாரும், இயக்குனர் சீனுராமசாமியும் படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் இருக்கு நடிக்கிறாயானு கேட்டாங்க. 15 நாட்கள் படத்தில் டச்சப் வேலையும், அப்படியே சிறு வேடத்திலும் நடித்தேன்.
* பிற மொழிகளில் நடித்துள்ளீர்களா?
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். மலையாளத்தில் கோதா என்ற படத்திற்காக மொத்தமாக 70 நாள் கால்ஷீட் கொடுத்ததால் அங்கு போய்விட்டேன். தர்மதுரை படம் வெளியான சமயம். படம் எப்படி வந்துள்ளது என்பது கூட எனக்கு தெரியாது. நான் அப்போது சாதாரண போன் தான் வைத்திருந்தேன். பிறகு பழநியில் இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்தது. அங்கு என்னை பார்த்த ஒரு பெண், நீங்க தர்மதுரை படத்தில் நடிச்சீங்களா என்றார். நானும் ஆமாம் என்றேன். படம் சூப்பராக வந்துள்ளது என அந்த பெண் கூறியதும், சீனுராமசாமிக்கும், விஜய் சேதுபதிக்கும் முதலில் போன் பண்ணி நன்றி சொன்னேன். அடுத்தநாள் படப்பிடிப்புக்கு சென்றபோது என்னுடன் நிறைய பேர் செல்பி எடுத்துக்கிட்டாங்க. அப்போது பெருமையாக இருந்தது. அடுத்து அப்பாவுக்கு போன் செய்து பணம் போட்டுள்ளேன் என அவரிடம் கூறினேன். பெற்றோர்களை பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது. தர்மதுரை படத்தை அவர்களும் பார்தது நன்றாக நடித்து இருக்கிறாய் என்று சொன்னார்கள். நீ என் மகள் என பெற்றோர் சொன்னதும் தான் புடவை கட்ட ஆரம்பித்தேன். ஏனென்றால் அவர்கள் என்னை மகளாக ஏற்றுக் கொண்டால் தான் புடவை கட்டுவேன் என கூறியிருந்தேன். சமீபமாகத் தான் என்னை நான் மாற்றிக் கொண்டேன். சில தினங்களுக்கு முன் நான் எடுத்த மணப்பெண் அலங்காரத்தில் இருந்த போட்டோவை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
* தர்பார் படத்தில் நடித்தது பற்றி?
சர்கார் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த கல்யாணி நட்ராஜிற்கு உதவியாளராக வேலை பார்தேன். அப்போது முருகதாஸிடம் உங்க படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்றேன். இந்தப்படத்தில் முடியாதது, அடுத்த படத்திற்கு சொல்றேன் என்றார். அப்படி தான் எனக்கு தர்பாரில் வாய்ப்பு கிடைத்தது.
* குறும்படம் அனுபவம்?
இதுவரை நான்கு குறும்படங்களில் நடிச்சிருக்கேன். 400 குறும்படங்களில் நடித்த மாதிரி பாராட்டுகள் கிடைத்தது. முதன்முதலில் அவள் நங்கை என்ற குறும்படத்தில் நடித்தேன். நடிகர் மாதவன் டுவிட்டரில் வெளியிட்டார். நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கு கிடைத்த சிறு அங்கீகாரமாக பார்த்தேன்.
* அடுத்த படங்கள் பற்றி?
புஷ்கர் காயத்ரி இயக்கும் ஒரு படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரோகித் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். இதுதவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்க உள்ளேன்.
* உங்களை போன்ற திருநங்கைகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
எங்க மக்கள் இப்போது திறமைசாலி ஆகிவிட்டார்கள். அவர்கள் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரவர் என்னவாக வேண்டும் என நினைக்கிறார்களோ அதில் தெளிவாக இருங்க. சுயமாக காலில் நின்று அவர்கள் ஜெயிக்க வேண்டும். நாம என்ன நினைக்கிறோமோ அதை நோக்கி சரியான பாதையில் போனாலே போதும் ஒரு நாள் நாமும் ஜெயிப்போம். இப்போது திருநங்கைகள் போலீஸாக, கலெக்டராக, டாக்டராக, அரசியல்வாதியாக... இன்னும் பல துறைகளிலும சாதித்து வருகிறார்கள். எனக்கு சினிமாவில் வரணும்னு தான் சின்ன வயசிலிருந்து ஆசை, நான் தேர்ந்தெடுத்த பாதையில் கரெக்டா போகனும்னு, நினைக்கிறேன். சினிமாவில் கூட என் போன்றவர்களை பாட்டு பாடி, கைதட்ட வச்சு கிண்டல் செய்யும் காட்சிகளை தவிர்த்து வருகிறார்கள். எங்களையும் மக்கள் மதிக்கிறார்கள், நல்ல அங்கீகாரமும் இந்த சமூகத்தில் கிடைத்துள்ளது.
* இப்ப அப்பா அம்மா கூட தொடர்பில் இருக்கீங்களா
அவங்களை நினைச்சு ரொம்ப கஷ்டப்படுறேன். எங்கம்மா தீப்பெட்டி தொழிற்சாலையில் நாள் முழுக்க வேலை பார்த்தாலும் ஒரு நாளைக்கு ரூ.20 தான் சம்பாதிக்க முடியும். எங்களை வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நாங்க இருந்த ஊரில் எங்க அப்பா அம்மாகிட்ட யாரும் பேச மாட்டாங்க. என்னை காரணம் காட்டி, கிண்டல் செய்ததால் அந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டோம். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. யார் யாரெல்லாம் என்னையும், எங்கள் குடும்பத்தையும் வெறுத்தார்களோ இப்போது அவர்களே வந்து இப்போது என் அப்பா-அம்மாவிடம் பேசிவிட்டு செல்வதோடு பாராட்டவும் செய்கிறார்களாம். அதுவே பெரிய சந்தோஷமாக இருக்கு. எனக்கு, அவங்க இப்ப தான் நிம்மதியாக இருக்காங்க .
* உங்க கனவு நோக்கம்?
நிறைய வாய்ப்புகள் எனக்கு வரும். அவர்களிடம் நான் சொல்லும் ஒரே விஷயம் என்னையோ, என் இன மக்களையோ கை தட்டியோ, கண்டல் அடித்தோ, பாட்டு பாட காட்சிகள் வைக்க கூடாது என்று சொல்வேன். ஒரு குணச்சித்திர நடிகையாக, அம்மாவா, அக்காவா, தங்கையா ஏதோ ஒரு நல்ல கேரக்டரில் கடைசி வரைக்கும் இந்த சினிமாவில் இருக்க ஆசைப்படுறேன். சினிமாவை இன்னொரு அம்மாவாக பார்க்கிறேன். குறிப்பாக சென்னையை. இங்குள்ள ஆண்களை பார்த்தால் ஆரம்பத்தில் கோபம் வரும். இப்போது அவர்கள் இன்றி நான் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது. நிறைய ஆண்கள் எனக்கு உதவி செய்துள்ளார்கள். உதவி இயக்குனர்கள், நடிகர்கள், கேமராமேன் இப்படி எல்லா துறையில் இருந்தும் ஆண்கள் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு எந்த ஆண் நடிகர்களும் டச் அப் பாய் வேலை கொடுக்கல. மறைந்த நடிகர் பாலாசிங் மட்டும் தான் என்கிட்ட வேலை பார் என்று சொல்லி கடைசி வரை என்னை நன்றாக ஒரு மகள் போல பார்த்துக் கொண்டார். அதனால் காலம் முழுக்க ஆண்களை நான் தெய்வமாக பார்க்கிறேன்.
* சினிமாவில் நீங்க சம்பாதித்தது?
இப்பதான் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. வாழ்க்கையை இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன், கண்டிப்பாக நிறைய ஆசைகள் இருக்கு. சினிமாவில் கெட்ட பேர் எடுக்காம நேர்மையாக நல்ல வழியில் நிறைய சம்பாதிக்கணும் ஆசைப்படுறேன். சினிமாவை தெய்வமாக பார்க்கிறேன். அதை ஒருபோதும் களங்கப்படுத்தமாட்டேன். சினிமாவுக்கு உண்மையா இருந்தா மட்டும் தான் சினிமா நம்மளை வாழ வைக்கும், இல்லையென்றால் அழித்துவிடும். சென்னை முழுக்க கொரோனா நோய் தொற்று இருக்கு, ஊருக்கு வந்துவிடு என அம்மா போன் செய்தாங்க. நான் மறுத்துவிட்டேன். இந்த ஊருக்கு வரும்போது அனாதையாக வந்தேன். என்னை அரவணைத்தது ஒரு இடத்தில் அமர வைத்திருப்பது இந்த ஊர் தான். அதனால் நான் இறந்தாலும் இந்த ஊரிலேயே புதைக்கட்டும், ஊருக்கு போக மாட்டேன்.