Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல்,Ethirneechal
14 மே, 2013 - 17:36 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எதிர்நீச்சல்

  

தினமலர் விமர்சனம்


வொண்டர் பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பேனரில் நடிகர் தனுஷ் சொந்தமாக தயாரித்திருக்கும் படம்தான் "எதிர் நீச்சல்". வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் வெளியிட, தனுஷ் - நயன்தாரா ஜோடி ஒற்றை காதல் தோல்வி பாடலுக்கு ஆட, சிவகார்த்திகேயன் - ப்ரியா ஆனந்த் ஜோடி நாயகன் நாயகியாக நடித்து வெளிவந்திருக்கும் படம் "எதிர் நீச்சல்". வழக்கமான தமிழ் சினிமாவின் காதல், காமெடி, ஆக்ஷ்ன், சென்டிமெண்ட் எல்லாம் தாண்டி, நம் நாட்டில் பணம் படைத்தவர்களுக்கு விளையாட்டுத்துறையும் விலை போகும் விபரீதத்தையும் எடுத்துரைத்திருக்கும் வித்தியாசமும், விறுவிறுப்புமான திரைப்படம் என்பது புதுமை!

கதைப்படி, குஞ்சிதபாதம் அலைஸ் குஞ்சி எனும் தனது இயற்பெயரால் பெரிதும் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகும் ஹீரோ சிவகார்த்திகேயன், தன் பெயரை நேமாலாஜி, நியூமராலாஜி எல்லாம் பார்த்து அரசு கெஜட்டில் ஹரீஸ் என்று மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறார். இது அவரது காதலி ப்ரியா ஆனந்துக்கு பெரிய பெயர் ‌மோசடியாக தெரியவரும் சூழலில், ஒரு மனிதனுக்கு பெயர் ஒரு பிரச்னை அல்ல, சாதனைதான் ஒருவனுக்கான சரித்திரம் சொல்லும் நல் அடையாளம் தரும் என்பதை உணரும் சிவகார்த்தி, தன்னிடம் உறைந்து கிடக்கும் ஓட்டப்பந்தய திறமைக்கு உயிர் கொடுக்கிறார்.

அந்த சமயம் சென்னையில் நடக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள திட்டமிடும் அவர் தனக்கு கோச்சாக வரும் "அட்டக்கத்தி" நந்திதா, ஒரு காலத்தில் ஓட்டப்பந்தய சாம்பியனாக இருந்தவர் என்பதையும், பண பலமும், படை பலமும், ஒலிம்பிக்கில் ஓட வேண்டிய அவரை ஓடவிடாமல் முடக்கி போட்டுவிட்டது... என்பதையும் அறிந்து, நந்திதாவிற்காகவும் தனது நாமகரண (அதாங்க பெயர்...) மோசடி குறித்த சந்தேகத்தை காதலியின் மனதில் இருந்து துடைப்பதற்காகவும், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்க திட்டமிடுகிறார். நந்திதாவை தங்கள் பண பலத்தால் ஆரம்பத்தில் கழித்து கட்டிய காஸ்ட்லீ கோச், இந்த முறை சிவகார்த்திகேயனுக்கு எதிராகவும் ஒரு ஓட்டப்பந்தய வீரருடன் களம் இறங்குகிறார். இறுதியில் ஜெயித்தது ஹீரோவா? வில்லனா..?, ப்ரியா ஆனந்த் - சிவகார்த்தியின் காதல் நிறைவேறியதா?!, நந்திதாவின் களங்கம் களையப்பட்டதா..?! என்பது உள்ளிட் ஏகப்பட்ட வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது "எதிர்நீச்சல்" படத்தின் மீதிக்கதை!

குஞ்சிதபாதம் அலைஸ் குஞ்சு அலைஸ் ஹரீஸ் ஆக சிவகார்த்திகேயன் வழக்கம் போலவே அலட்டிக் கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக இப்படத்தில் மாரத்தானில் ஜெயிப்பது மாதிரியே, தனது கேரக்டரின் ஆக்டிங்கிலும் ஜொலித்திருக்கிறார். முன்பாதியில் குஞ்சு எனும் தன் பெயராலும், பின்பாதியில் தனது ப்ரியாவுடனான ஊடல், கூடலாலும் ரசிகர்களை வாவ் சொல்ல வைக்கிறார். அத்தலட்டிக் வீரராக மாரத்தான் பயிற்சியில் மாரடைக்க ஓடும்போது அதை காணும் நமக்கே மயக்கம் வர வைத்து விடுகிறார் மனிதர்!

ப்ரியா ஆனந்த், ஸ்கூல் டீச்சர், சமூக சேவகர், எல்.ஐ.சி. ஏஜெண்ட் என ஏகப்பட்ட முகங்காட்டி படம் முழுக்க தன் க்ளாமர் முகத்தையும் காட்டியிருப்பது எதிர்நீச்சலுக்கு பெரிய ப்ளஸ். "அட்டகத்தி" நந்திதா, அத்லடிக் வீராங்கணையாக ஓ.கே. அவருள் புதைந்து கிடக்கும் சோகம் டபுள் ஓ.கே. சதீஷ், ஜெயப்பிரகாஷ், மதன்பால், ரவிபிரகாஷ், சுரேகாவாணி, சூசாகுமார் உள்ளிட்டவர்களுடன் தனுஷ் - நயன்தாராவும் ஒத்தபாட்டுக்கு வந்து செம குத்து போட்டிருப்பது எதிர்நீச்சலுக்கு ஏகப்பட்ட சக்திடானிக் வழங்கியுள்ளது எனலாம்!

அனிருத்தின் இசையில் கவிஞர் வாலி, நடிகர் தனுஷ், எதிர்நீச்சல் இயக்குனர் ஆர்.எஸ்.துரை என ஆளுக்கு 2 பாடல்கள், ஆக மொத்தம் 6 பாடல்கள் எழுதியுள்ளனர். ஆனால் எதுவும் "3" பட பாடல் மாதிரி முணுமுணுக்கும் ர(ரா)கமில்லை என்றாலும், ஓ.கே. எனும் அளவில் இருப்பது ஆறுதல்! ஆர்.வேல்ராஜின் ஒளி்ப்பதிவு சூப்பர்ப்!

சிவகார்த்திகேயனின் பெயர் குழப்பம் சொல்லும் அந்த கல்யாண வீட்டு கலாட்டா நாடகமாக தெரிவது உள்ளிட்ட ஒரு சில குறைகளை, சிவகார்த்தி - நந்திதா இடையே காதல் கத்திரிக்காய் என காட்டாமல் கண்ணியம் காத்திருக்கும் இடங்கள் நிறை செய்திருப்பதால், புதியவர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரின் எழுத்து இயக்கத்தில் "எதிர்நீச்சல்" எதிர்பாரத வசூல், தியேட்டரில் விசில் என்று களை கட்டியிருக்கிறது!

ஆட்டிசம் குழந்தைகள், மாரத்தான் ஓட்டம்... என சமீபத்திய "ஹரிதாஸ்" படத்தை ஞாபகப்படுத்தினாலும் ‌"எதிர்நீச்சல்" வேறு கரு, வேறு கதை, வேறு களம் என்பதும் ஹைலைட்!

மொத்தத்தில், "எதிர் நீச்சல்" - "விசில் கூச்சல்" - "வசூல் பாய்ச்சல்!!"



-------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்



ஜாலியாக மட்டும் இருந்தால் போதாது; ஜோலியோடும் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் படம்.

சிவகார்த்திகேயன் முழு ஹீரோவாக நடித்து கவனத்தைக் கவர்கிறார். நண்பனுடன் கூடிக் கும்மாளமடிக்கும் வழக்கமான நக்கல்களுடன் கொஞ்சம் நடிக்கவும் தெரியும் என்பதை காட்டியிருக்கிறார். க்ளைமாக்ஸில் கொஞ்சம் வியர்வை சிந்தியிருக்கலாம்!

குஞ்சிதபாதம் என்ற தன் பெயரை எல்லோரும் சுருக்கமாகக் “குஞ்சு’ என்று கூப்பிடுவதால் நொந்து போன சிவகார்த்திகேயன். தன் பெயரை மாற்றப்படுகின்ற அவஸ்தையும், ப்ரியா ஆனத்துடன் ஏற்படும் மெல்லிய காதலையும் சொல்லும் முதல் பாதி முழுக்க காமெடி கலாட்டா.

இடைவேளைக்குப் பிறகு ஓர் உண்மை சம்பவத்தில் புத்திசாலித்தனமாகக் கற்பனையைப் புகுத்தி கதை பண்ணியிருக்கிறார்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் சிவா, மரபணுச் சோதனை மூலம் ஏமாற்றி பதக்கம் பறிக்கப்பட்ட நந்திதாவின் கோச்சிங் மூலம் மராத்தானில் வெற்றி பெறுவது அடுத்த பாதி.

க்ளைமாக்ஸில் வெற்றி வீரனாகும் சிவகார்த்திகேயன், தன்னுடைய பெற்றோர் வைத்த பெயரான குஞ்சிதபாதம்தான் இனி தன்னுடைய பெயர் என்று கம்பீரமாகச் சொல்வதும் நியாயம் பறிக்கப்பட்ட நந்திதாவுக்கு மீண்டும் வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பதும் முத்திரை. இயக்கம் துரை செந்தில்குமார்.

நந்திதாவின் அலட்சியமும் அவரது அப்பாவின் அப்பாவித்தனமும் அழகு.

ப்ரியா ஆனந்த் நைஸ். பாடல் காட்சிகளில் ஐஸ்!

தனுஷ் நயன்தாரா குத்தாட்டம் செமை ஸ்பீடு! அனிருத் இசையில் பூமி சுத்துதே பாடலும் சூப்பரு.

ஹீரோ, கிடைக்கும் பெண்ணுக்கெல்லாம் ரூட் விடுவதால் அந்த ப்ரியாவின் காதல் மனதில் ஒட்டவில்லை. ஜாலியான மூடிலேயே போன படம் திடீரென சீரியஸாக மாறுவதையும் ரசிக்க முடியவில்லை.

“லவ்வுங்கிறது 6 பேக் மாதிரி. தினமும் மெயிண்டெயின் பண்ணணும். ஃப்ரெண்ட்ஷிப்ங்கறது தொப்பை மாதிரி. எப்பவும் நம்ம கூடவே இருக்கும்’, “காதல்ங்கறது கால் டாக்ஸி மாதிரி. நாம கூப்பிட்டாதான் வரும்’ போன்ற பல பஞ்சுகளை பேஸ்புக், ட்விட்டரிலிருந்து சுட்டிருந்தாலும் செமை.

எதிர்நீச்சல் - முயற்சி வெற்றி தரும்

குமுதம் ரேட்டிங் - ஓகே



----------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்



வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல் - இந்த ஒன் லைன் ஓல்டு தியரியில் கோடம்பாக்க கமர்ஷியலை ஊற்றி நான் சாங், நச்நச் காமெடி, காதல் கலாட்டா... இவற்றோடு இத்துனூண்டு லட்சியம் இவற்றையெல்லாம் சரியாகக் கலந்து நைச்சியமாகப் பிசைய பக்குவமாகக் கிடைத்திருக்கும் செல்லுலாய்டு பண்டம் எதிர்நீச்சல்.

குஞ்சிதபாதம் என்ற பெயரால் சிவகார்த்திகேயன் படம் அவஸ்தையும் அதையே ஹரீஷ் என்று மாற்றிக் கொண்ட பின்பும் நடக்கிற சேட்டைகளும்தான் திரைக்கதை. பெயரில் ஒன்றுமில்லை எல்லாம் செயலில்தான் இருக்கிறது என்று சுபம் போடும் இயக்குனர் செந்தில் தாம் மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனையும் சேர்த்து ஜெயிக்க வைத்திருக்கிறார்.

முதல்பாதி முழுக்க சிவகார்த்திகேயனின் காதல் சேட்டைகளும் அவரது நண்பன் சதிஷீன் பஞ்ச் டயலாக்கும் படத்தைப் படு ஜாலியாக நகர்த்துகின்றன. அலட்டல் இல்லாமல் இயல்பான நடிப்பில் சிவகார்த்திகேயன் சூப்பர்ப். காதலுக்கு ஏங்குவதும், லட்சியத்துக்காக சில வலிகளைத் தாங்குவதுமென நடிப்பில் படுபக்குவம். தனுஷூக்கு ஈடுகொடுத்து டான்ஸில்கூடக் கலக்கும் சிவாவுக்கு தமிழ் சினிமா ஹீரோவுக்கான லட்சணம் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அழகாக இருக்கிறார் ஹீரோயின் ப்ரியா ஆனந்த். கதையில் அவரின் பங்கு தக்கூனூண்டுக்கும் தக்கூனூண்டு. சொல்ல வேறொன்றுமில்லை. பாடல்களிலும் காதல் காட்சிகளிலம் இதம் பதம்.

எல்லா காட்சிகளிலும் உர்ரென்று இருக்கும் நந்திதாவுக்கு ஓட்டப்பந்தய வீராங்கனை கேரக்டர் ஒட்டவில்லை. அதுவும் ஆணா... பெண்ணா பிரச்னையில் பாதிக்கப்பட்ட அவரது கேரக்டரில் வேகம் வேண்டாமா? அது மிஸ்ஸிங்.

அவர் சிவகார்த்திகேயனுக்குப் பயிற்சியாளராகித் தரும் டிப்ஸ்களும் ஒரு மாண்டேஜ் சாங்கோடு முடிவது சினிமாத்தனம்.

இயக்குனருக்கு இணையாக உழைத்திருக்கும் மியூஸிக் டைரக்டர் அநிருத். மெலடி, குத்துப்பாட்டு, பின்னணி இசை எல்லாவற்றிலும் இளமை இனிமை. சீனின் மூடுக்கேற்ப மாறி மாறி ஒளிர்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. எப்போதும் இறுதியில் ஹீரோ ஜெயிப்பார் என்கிற சினிமா நியதிப்படி சிவகார்த்திகேயன் ஜெயிப்பதும், அட்டக்கத்தி படத்தில் காதலில் தோற்ற ரஞ்சித்தை நந்திதாவோடு சேர்த்து வைப்பதும் கலகலப்பான க்ளைமாக்ஸ் எனில், மராத்தானில் ஜெயிக்கும் சிவகார்த்திகேயன், குஞ்சிதபாதம் பெயரில் ஓட்டப் பந்தய அகாடமி ஆரம்பிப்பது நல்ல முடிவு.

எதிர்நீச்சல் - எல்லாருக்கும் பிடிக்கும்!



வாசகர் கருத்து (28)

Arumugam - Paris,பிரான்ஸ்
21 ஜூன், 2013 - 05:46 Report Abuse
Arumugam கழுதைக்கு தெரியமா கர்ப்பூர வாசனை என்பதுபோல் இந்த படத்தில் கர்னாடக கச்சேரியை கேவலமாக, சங்கீத ஞானம் இல்லாத இவர்கள், கிண்டல் பண்ணுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த காட்சியின் பின்னணி இசையும் கன்றாவியாக இருக்கிறது.
Rate this:
prabhu - pattukkottai,இந்தியா
16 ஜூன், 2013 - 08:19 Report Abuse
prabhu சிவகார்த்திகேயன் நான் விரும்பிய நடிகர்.
Rate this:
Sambar - Delhi,ஆப்கானிஸ்தான்
09 ஜூன், 2013 - 19:50 Report Abuse
Sambar சிவா இப்படியே மொக்கை படம் பண்ணுனா தேர மாட்ட ராசா
Rate this:
priya - salem,இந்தியா
07 ஜூன், 2013 - 13:05 Report Abuse
priya சிவா cute ah இருகாங்க. இப்ப தான் தமிழ் ஹீரோ இமேஜ் வர ஸ்டார்ட் ஆகுது. ஆல் தி பெஸ்ட் சிவா :-)
Rate this:
m.sekar - MADURAI,இந்தியா
22 மே, 2013 - 16:32 Report Abuse
m.sekar சார் ஏன் ? டிவி நடிகர் எல்லாம் நடித்து காண்பித்து நம்ல போட்டு கொலையா கொல்லுராக
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

எதிர்நீச்சல் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in