Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பரதேசி

பரதேசி,Paradesi
28 மார், 2013 - 17:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பரதேசி

   

தினமலர் விமர்சனம்


இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை எனப் பாராட்டும் அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப்புகள் வாயிலாகவும், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப் பிரமாதமாக வெளிவந்திருக்கிறது பாலாவின், "பரதேசி" என்றால் மிகையல்ல!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு முந்தைய காலகட்டத்து கதை! அதுவும், இன்று நாம் சுறுசுறுப்பாக இருக்க சுள் ளென்ற சுவையுடன் அருந்தும் தேனீர்பானமும், தேயிலை தோட்டங்களும் பிறந்‌த கதையை சொல்லும் பெருங்கதைதான் "பரதேசி படம் மொத்தமும்!

சென்னை புறநகரப் பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க நண்டு, சிண்டுகளோடு குடும்பம் குடும்பமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் தேயிலை தோட்டங்களுக்கு கூட்டி வரப்பட்ட கிராம மக்களை, கூண்டோடு கொத்தடிமைகளாக்கி ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டிய கங்காணிகளின் கதை! ஆங்கிலே‌யர்களின் காலணி ஆதிக்கத்து கதற வைக்கும் கண்ணீர் கதைகளில் இதுவும் ஒன்று! அகப்பட்ட அடிமை இந்துக்களிடம், கிறிஸ்துவை பரப்பிய ஆங்கிலேய அடிவருடிகளின் கதை..., இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பரதேசியின் கதையையும், களத்தையும். ஆனால் இதுமாதிரியானதொரு அடிமைகளின் கதையில் ஓர் அழகிய காதலையும், அவர்களின் பிரிவையும் கலந்து கட்டி பரதேசியை கலர்புல்லாகவும், காண்போர் மனதை கரைக்கும் படியாகவும் செய்திருக்கும் பாலாவின் சாமர்த்தியத்திற்கு அவரே நிகர்.

ஒட்டுப்பொறுக்கி, குசுப்பொறுக்கி என ஏகப்பட்ட பட்டப்பெயர்களுடன் வெள்ளந்தி கிராமத்து இளைஞன் ராசாவாக அதர்வா முரளி. சட்டி கிராப்பும், சாக்கு துணி சட்டையும், அழுக்கு பஞ்சகட்ச வேஷ்டியும் சகிதமாக ஊரில் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் தண்டோரா போட்டு வயிற்றை கழுவும் அந்தக்கால இளைஞனாக அறிமுகமாகும் அதர்வா, நாலுகாசு சம்பாதித்து, நல்ல பெயர் எடுக்க, ஆதரித்த அம்மா வழி பாட்டியையும், காதலித்த அங்கம்மா வேதிகாவையும் அம்போ என விட்டுவிட்டு, கங்காணியின் பேச்சை நம்பி ஊர் மொத்தத்தையும் கூட்டிக்கொண்டு வேலை தேடி போகும் காட்சிகளில் நம் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறார் என்றால், அதன்பின் வரும் அடிமைத்தன காட்சிகளில் அனைவரது கண்களிலுமே நீரை வரவழைத்து விடுகிறார். நடிப்பில் அவரது அப்பா முரளியை மிஞ்சியிருக்கிறார் மனிதர். இதையெல்லாம் பார்க்க இன்று நடிகர் முரளி இல்லையே என்ற ஆதங்கம் நம்முள்ளும் எழுகிறது. "ஹேட்ஸ் ஆப் அதர்வா. அதர்வாவுக்கு பல விருது நிச்சயம்! அதர்வாவுக்கு மட்டுமல்ல, இப்படத்தின் லைட்பாய்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளில் தொடங்கி இயக்குனர் பாலா வரை அனைவருக்கும் தேசிய விருது உள்ளிட்ட ‌அனைத்து விருதுகளையும் தரலாம்!

கிராமத்து அங்கம்மாவாக வேதிகா, அதர்வாவை ஆரம்பம் முதலே வம்புக்கு இழுப்பதும், ஒருகட்டத்தில் அன்பால் அடிப்பதும், இரண்டுங்கெட்டானான அதர்வாவின் கருவை தன் வயிற்றில் சுமந்து, தனது வீட்டாரால் ஒதுக்கிவைக்கப்படுவதும், பின் க்ளைமாக்ஸில் அதர்வாவுக்கு பிறந்த பிள்ளையுடன் அவர் வாழும் அடிமை வாழ்க்கைக்கே வந்து சேர்வதுமாக நம் கண்களை ஈரப்படுத்திவிடுகிறார்.

வேதிகா இப்படி என்றால் இன்னொரு நாயகி தன்ஷிகாவோ மரகதம் கேரக்டரில் அதர்வாவிற்கு முந்தைய செட் அடிமையாக ஒரு ‌பெண் குழந்தையுடன், புரு‌ஷனை தொலைத்துவிட்டு படும்பாடு சொல்லிமாளாது. மற்ற இயக்குனர்களிடமிருந்து வேறுபட்டு பாலா, அதர்வாவிற்கும், தன்ஷிகாவிற்கும் காதலை கண்சிமிட்ட விடாமல் நல்ல நட்புடன் விட்டிருப்பது பலே சொல்ல வைக்கிறது. இதுநாள்வரை பாலா பட நாயகர்கள் அளவு, பாலா பட நாயகிகள் பேர் வாங்கியதில்லை எனும் குறையை போட்டி போட்டுக்கொண்டு போக்குவார்கள் தன்ஷிகாவும், வேதிகாவும் ‌என நம்பலாம்.

கங்காணி - ஜெர்ரி, அவரது மனைவியாக வரும் "அங்காடித்தெரு சிந்து, தங்கராசு, உதய் கார்த்திக், கருத்தக்கன்னி - ரித்விகா, டாக்டர் வேஷம் போடும் குரூஸ்-மோகன், பாட்டி-கச்சம்மாள், டாக்டர் பரிசுத்தம்-சிவசங்கர், ஆங்கிலேய துரை - டிம் உள்ளிட்டவர்களும் பரதேசியில் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

பரதேசி பின்னால் நடக்க இருக்கும் கதையை முன்கூட்டியே சொல்லும் வைரமுத்துவின் வைர வரிகளும், அதற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரின் இனிய இசையும், பாடல்கள் இசை போன்றே பின்னணி இசையும், இது பாலாவின் பரதேசியா, ஜி.வி.பிரகாஷ்குமாரின் பரதேசியா என கேட்க தூண்டுகின்றன. அதேமாதிரி செழியனின் செழுமையான ஒளிப்பதிவும், நாஞ்சில் நாடனின் வசனமும், கிஷோரின் "நச் என்ற படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

ஆக மொத்தத்தில், பாலாவின் எழுத்து-இயக்கத்தில் "பரதேசி" - தமிழ்சினிமா ரசிகர்களுக்கு - "புதுருசி!"


--------------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்



ஒல்லிப்பிச்சான இயக்குநர் பாலாவை அவரது எலும்பு முறியும்படி இறுகக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தந்து “பரதேசி, பரதேசி’ என்று செல்லமாய்த் திட்ட வேண்டும் போல் ஆவல் பிறக்கிறது!

சுதந்திரத்திற்கு முன்னால் தேயிலை எஸ்டேட்டில் தமிழர்கள் படும் அவலம்தான் “பரதேசி’. தேயிலைத் தோட்ட வேலைக்கு பஞ்சத்தில் அடிபட்ட ஊர்களே அடிமையாக்கப்பட்ட உண்மை நிகழ்வை திரையில் யாரும் இப்படி கண்களில் ரத்தம் கசியச் சொன்னதேயில்லை. கொத்துக் கொத்தாய் மனிதர்கள் சாவதும் அதை முதலாளிகள் பெரிதாய் கண்டு கொள்ளாமல் இருப்பதும், பெண்கள் சூறையாடப்படுவதும், கட்டிய கணவன் வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், கொடிய சூழலில் நடக்கும் மதப் பிரசாரமும் ஆகிய உண்மைகள் உறைய வைக்கின்றன. “ரெட் டீ’ என்று ஆங்கிலத்திலும் “எரியும் பனிக்காடு’ என்று தமிழிலும் வந்த புத்தகத்தின் பாதிப்பு திரைப்படம் ஆகியிருக்கிறது.

பாலாவுடையது எப்போதுமே தனி உலகம். தனி மனிதர்கள். இதிலும் அப்படித்தான். பிழைப்பு தேடி கால்நடை போல் ஒன்றரை மாதம் நடந்து தேயிலை எஸ்டேட்டுக்கு வருகிறது ஒரு கூட்டம். அவர்கள் படும் அவஸ்தைகள்தான் கதை. தாலி கட்டாத மனைவியையும் குழந்தையையும் பார்க்க ஊர் திரும்ப முடியாமல் கதாநாயகன் அதர்வா, கால் நரம்பிழந்து கஷ்டப்பட அது தெரியாமல் அவனைத்தேடி தன் குழந்தையுடன் அதே எஸ்டேட்டுக்கே அடிமைத் தொழில் புரிய அடைக்கலம் ஆகும் கதாநாயகியுடன் சோகக் காவியமாய் படமும், நம் கண்களும் நிறைகின்றன.

சாதா நாயகனாக பத்தோடு பதினொன்றாக வலம் வந்த அதர்வாவை உலகத் தரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் பாலா. அரை மண்டையுடன், அழுக்கு ஆடையுடன் அவர் பறையடித்து தகவல் சொல்லும் ஆரம்பக் காட்சியாகட்டும், தன்னை சாப்பிட விடாமல் தகராறு செய்யும் வேதிகாவின் அழும்பு தாங்காமல் ஓரமாய் உட்கார்ந்து விம்மி அழுவதாகட்டும், கால் நரம்புகள் அறுபட்ட நிலையிலும் சாகக் கிடக்கும் ஒரு பெண்ணைத் தோளில் தூக்கிக் கொண்டு விந்தி விந்தி நடந்து காப்பாற்ற முயற்சிப்பதாகட்டும், தன் காதலியும் எஸ்டேட்டில் வந்து சிக்கிவிட்டாளே என்று அரண்டு போய் பெருங்குரலெடுத்து அழுவதாகட்டும்.. முரளியின் ஆத்மா சத்தியமாய் சந்தோஷப்படும்.

முட்டைக் கண்ணி வேதிகா, பளிச்சென்று மின்னுகிறார். அதர்வாவை சோறு கூடத் தின்னவிடாமல் விரட்டி, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி மனதில் பதிகிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் பேராண்மை தன்ஷிகா அற்புதம். சுருக்கமாகச் சொன்னால் அந்த கூன் விழுந்த பாட்டியிலிருந்து ஆரம்பித்து, கவிஞர் விக்ரமாதித்யன், கங்காணி என்று ஏன் அந்தத் தோட்டத்து தேயிலைகூட நன்றாக நடித்திருக்கிறது. அல்லது அடித்து ஸாரி நடித்துக் காட்டி வேலை வாங்கியிருக்கிறார் பாலா.

கருத்த பையனைப் பார்த்து பாடும் “செவத்த பையா’ பாடலும், மக்கள் ஊரையே காலி செய்து கொண்டு போகும்போது வரும் “செங்காடே’ பாடலும் மனதைக் கவ்வுகின்றன. ஜி.வி.பிரகாஷ் ஆர்.ஆர்.ரிலும் மெச்சூரிட்டி காட்டியிருக்கிறார்.

தாடி வளர்ந்தும் தலைமுடி வளராததும், ஒரு எஸ்டேட்டுக்கு காட்டுப் பாதையில் 48 நாட்கள் பயணிப்பதும், அந்த போஸ்ட் கார்ட் விஷயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

டீ எஸ்டேட் என்றாலே பசுமையும் டூயட்டுமாய் பார்த்த நம் கண்களுக்கு அங்கேயுள்ள மனிதர்களின் வலியினைக் கருமை கலந்து காட்டியிருக்கும் செழியனின் கேமராவும், ஆரம்பக் காட்சியிலேயே வறுமை படிந்த அந்த ஊரினை மனத்தில் பதிய வைத்த ஆர்ட் டைரக்டர் பாலசந்திரனின் பங்களிப்பும், கொஞ்சம் கூடத் தொய்வு இல்லாமல் செய்த கிஷோரின் எடிட்டிங்கும் படத்தை மேலும் உயர்த்தி விருதுகளுக்குப் போட்டி போட வைக்கின்றன.

நாஞ்சில் நாடனின் வசனத்தில் மண் மணம் கமழ்கிறது. அந்த “மந்திரி சமாசாரமும்’, “இடுப்பில் தாயத்தும்’ கொஞ்சம் ஓவர்.

படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது யாருடனும் பேசப்பிடிக்காமல், நெஞ்சை ஏதோ பிசைகிறது. அதுதான் பாலாவின் வெற்றி.

ஆஹா: பாலா, பாலா, பாலா

ஹிஹி: இரண்டு மணி நேரப் படம், மூன்று மணி நேரம் ஓடுவது போல் ஓர் உணர்வு

குமுதம் ரேட்டிங்: சூப்பர்




------------------------------------------------------


கல்கி சினிவிமர்சனம்



நாம் குடிக்கும் கதகதப்பான காலை நேரத் தேநீர் உருவாக எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு, அவர்களின் ரத்தமும் வியர்வையும் தேயிலைத் தோட்டத்துக்கு எப்படி உரமாகிறது என்பதைச் சொல்லும் கதை “பரதேசி’.

பஞ்சம் பிழைக்க 1939ல் சாலூரிலிருந்து நாற்பத்தெட்டு நாட்கள் கால்கடுக்க பச்சை மலைக்கு வேலை தேடி நடக்கிறது ஒரு சமூகம். அதில் கதை நாயகன் (அதர்வா) ஒட்டுப் பொறுக்கியும் ஒருவன். போகிற போதே சிலர் செத்து வீழ்கிறார்கள். தேயிலைத் தோட்டத்தில் பனி, அட்டைக்கடி, உணவு பற்றாக்குறை, பாலியல் கொடுமை, தப்பிக் நினைத்தால் கால் நரம்பு துண்டிப்பு, இவற்றோடு கொள்ளை நோயும் சேர்ந்து கொள்ள கொத்து கொத்தாய் மடிகிறார்கள் மக்கள். தன்னுடைய அங்கம்மாவை (வேதிகா) பார்க்கவே முடியாத சூழலில் “நியாயமாரே’ என்று அழுகிறார் அதர்வா. குழந்தையோடு கொத்தடிமையாய் வேதிகாவும் வந்து சேர “ஓ’வென வானம் பிளக்கும்படி “இந்த நரக்குழியில் நீயுமா வந்திட்ட?’ என்று கதறுகிறான் - கதை முடிகிறது.

இந்தப்படம் டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் தழுவல், தாக்கம் என்று சொல்லப்பட்டாலும் அது இல்லை. அதைவிட கால குளறுபடி, தெளிவாக நிலம் குறித்தான தகவல் இன்மை, கருத்து மோசடிகளை இந்தப் படத்தில் வரிசையாக அடுக்கலாம்.

1. சாதிக்கொடுமையையும் கூலி கொடுக்காத சுரண்டலையும் அதனால் ஏற்பட்ட வறுமையையும் ஒரே ஒரு காட்சியில் போகிற போக்கில் காட்டுகிறார். ஆனால் அதுதான் அன்று பிரதானமாய் இருந்தது. அதனால்தான் விளிம்பு நிலை மக்கள் மட்டும் புலம் பெயர்கிறார்கள். பிறசாதியினர் புலம் பெயரவில்லை. இதைக் காட்ட தவறிவிட்டார்.

2. கிறிஸ்துவர்களால்தான் அம்மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கிடைத்தது என்பதே உண்மை. ஆனால் கிறிஸ்துவ டாக்டரை கோமாளியாக, ரொட்டித் துண்டுகளை வீசியெறிபவராகப் பதிவு செய்வது என்ன நியாயம்?

3. மரணத்தைக் கொண்டாடும் சமூகமாக இருக்கலாம், அதற்காக நல்ல சாப்பாட்டுக்காக பெரியப்பா (விக்கிரமாதித்யன்) பிணத்தைக் கோணியில் மூடி வைத்துவிட்டு சந்தோஷமாக சாப்பிடும் மக்களைக் காட்டும் பாலாவின் மீது பார்வையை எப்படிப் புரிந்து கொள்வது?

இதையெல்லாம் மீறி...

* பெற்றோர்களால் கைவிடப்பட்ட தன் மகனின் (வேதிகா) காதலியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து காப்பாற்றும் கச்சம்பாள். * திருமணத்துக்கு முன்பாக கர்ப்பமானதால் மகளை அடித்துத் துவைக்கும் வேதிகாவின் அம்மா.

* கால் நரம்பு துண்டிக்கப்பட்ட ஒட்டுப் பொறுக்கியை (அதர்வா) அணைத்து அலறும் தன்ஷிகாவின் மானுட அழுகை என பண்பாட்டைப் பறைசாற்றும் சில நல்ல அம்சங்களும் ஆறுதலாயிருக்கின்றன.

இந்தக் கதை வெள்ளைக்காரன் மீது கோபத்தை உண்டாக்காமல் தமிழனை தமிழன் உறிஞ்சிய கதையாக, தமிழ் இனத்தின் ஒரு சமூகத்தைப் புலம்பெயரவைத்து வாழ்வு பறித்த மேட்டுக்குடி கங்காணி தமிழர்களின் முகமூடி உரித்துக்காட்டிய கதையாக, இன்றைய தமிழர்கள் வெட்கி மானசீகமாய் மன்னிப்பு கோர வைக்கும் கதையாக உணர வைத்ததற்காக பாலாவைப் பாராட்டலாம்.

இளையராஜானின் முக்கியத்துவத்தை உணர வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். நாஞ்சில் நாடனின் வசனமும் சி.எஸ்.பாலசந்திரனின் கலையும் கிஷோரின் படத்தொகுப்பும் பரதேசியை, பார் புகழும் தேசியாக்கி இருக்கிறது.

தங்க மகுடமாக உருமாற வேண்டிய படைப்பு கருத்தியல் அலட்சியத்தால், வெள்ளிக் குடமாகத் தேங்கிவிட்டது. இதை மறந்துவிட்டால்... புதிய கதை, புதிய கதையாடல், மரத்துப்போன வெகுஜன ஃபார்முலா ஒதுக்கல், உலகத்தரத்திலான காட்சி, அசத்தலான நடிகர்களை உருவாக்கித்தந்தது, தீர்வு சொல்லாமல் குற்ற உணர்வை, விவாதித்ததை ரசிகனுக்குள் ஏற்படுத்தியது போன்ற அம்சங்களால் இந்தப் படம் தமிழ் சினிமாவில் சாதனைக் கல்வெட்டுதான் என்று சொல்ல வேண்டும்.



வாசகர் கருத்து (78)

balaji - amphanihy,மாடகஸ்கர்
19 ஏப், 2013 - 02:46 Report Abuse
balaji நான் இந்த படத்தை பார்த்து ரொம்ப அலுதுட்டேங்க, என்ன சொல்றதுன்னே தெரியல, ஏன்ன என்னால மறக்க முடியல எந்த ஒரு சீனையும், ஹட்ஸ்_ஆப் mr .பாலா. ரொம்ப நாள் கழிச்சு என்னையும் அழுக வச்சிருச்சு இந்த படம்
Rate this:
kumar - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஏப், 2013 - 16:35 Report Abuse
kumar ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய படம் "பரதேசி". மனிதனை மனிதன் வதைக்கும் அவலம். என் அப்பாவி தமிழ் இனம், சில நயவஞ்சகர்களால் கொடுமைப்படுத்தப்படுகிற காட்சிகளால் நெஞ்சம் கனக்கிறது. ஒரு உண்மை கதைஐ தத்ருபமாஹா படமாக்கி இருக்கும் பாலா மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இதுபோன்ற தரமான படங்களுக்கு தமிழ் மக்களும் தமிழக அரசும் ஆதரவளித்து வெற்றிப் படமாக்க வேண்டியது அவசியம்.
Rate this:
m.sekar - MADURAI,இந்தியா
08 ஏப், 2013 - 21:49 Report Abuse
m.sekar இது நாள் வரையில் தமிழ் சினிமாவில் இது போன்ற படம் வந்தது இல்லை.இனிமேல் வரபோவதில்லை.உலக தரத்தில் உன்னத சினிமா பாலாவின் பரதேசி.படத்தின் முடிவு [கிளைமாக்ஸ் ] நெஞ்சை உலுக்கியது
Rate this:
m.sekar - MADURAI,இந்தியா
06 ஏப், 2013 - 17:42 Report Abuse
m.sekar உலக தரத்தில் உன்னத சினிமா பாலாவின் பரதேசி. என் நெஞ்சை உலுக்கி விட்டது.
Rate this:
sridhar - trichy,இந்தியா
31 மார், 2013 - 11:31 Report Abuse
sridhar பாலா நீதாண்டா மனுஷன்... இதுதான் உன் சிறந்த படம்.. கமல் தனுஷ் உங்க படத்தில நடிச்சா நல்லா இருக்கும்.... அது எங்களுக்கு சூப்பர் அனுபவம்...
Rate this:
மேலும் 73 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in