Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சிங்கம் 2

சிங்கம் 2,Singam 2
24 ஜூலை, 2013 - 15:31 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சிங்கம் 2

   

தினமலர் விமர்சனம்


நாயகர் சூர்யா, நாயகி அனுஷ்கா, இயக்குனர் ஹரி உள்ளிட்ட "சிங்கம்" பட வெற்றிக் கூட்டணி, அந்த வெற்றியின் தொடர்ச்சியாக இணைந்திருக்கும் படம் மட்டுமல்ல, சிங்கத்தின் பாகம் இரண்டாகவும் வெளிவந்திருக்கும் படம் தான் "சிங்கம்-II".

"சிங்கம்-I"-ன் க்ளைமாக்ஸில் வில்லன் பிரகாஷ்ராஜை ஆந்திராவில் வைத்து அழித்தொழித்ததும் இனி போலீஸ் உத்தியோகமே வேணாம், காதலி அனுஷ்காவை கல்யாணம் கட்டிக்கொண்டு சொந்தமான பலசரக்கு கடையில் பொட்டலம்‌ போட்டு பொழைச்சுக்குறேன் என்று காதலியுடன் காரில் ஏறி பறக்கும் சூர்யாவை வழி மறித்து அமைச்சர் ராமநாதன், தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் ஆயுத கடத்தல் நடப்பதாக தகவல், அதை ஆப்த ரெக்கார்டு போலீஸாக இருந்து கண்காணித்து உரிய நேரத்தில் சார்ஜ் எடுத்து கொண்டு அந்த கும்பலை கூண்டோடு கைலாசம் அனுப்பும்படி அறிவுறுத்தப்படுவார். அதன்படி சூர்யாவும் தன் வருங்கால மனைவி அனுஷ்காவிற்கே தெரியாமல் போலீஸ் பொழப்பு நடத்த உறுதி பூணுவார் அல்லவா?! அதன் தொடர்ச்சி சிங்கம் பகுதி-2 படமாகி உள்ளது.

அதாகப்பட்டது, போலீஸ் உத்தியோகம் போனதால் சூர்யா - அனுஷ்காவின் திருமணமும் தள்ளிபோகிறது. தன் அப்பாவிடமும் தான் போலீஸ்தான் என்ற உண்மையை சூர்யா சொல்லாமல், அடித்தாலும் (வடிவேலு பாணியில்...) அடித்து கேட்டாலும் சொல்லாமல், தூத்துக்குடி தனியார் பள்ளி ஒன்றில் என்.சி.சி மாஸ்டராக செம பில்டப் கொடுக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் பெரிய இடத்துப் பெண் ஹன்சிகா, சூர்யாவை ஒன் சைடாக காதலிக்கிறார். ஹன்சிகாவின் காதலை புறக்கணிக்கும் சூர்யாவோ தூத்துக்குடி கடற்கரையை தீவிரமாக கண்காணிக்கிறார். அங்கு ஆயுத கடத்தல் இல்லை... சர்வதேச அளவில் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது! விடுவாரா சூர்யா சரியான நேரத்தில் சார்ஜ் எடுத்துக் கொண்டு வில்லன்களை வெளுத்து கட்டுகிறார். மயிரிழையில் தப்பிக்கும் சர்வதேச போதை கடத்தல் தாதா டேனியையும் சவுத் ஆப்ரிக்கா போய் சட்டையை பிடித்து இழுத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார். இடை‌யி‌டையே அனுஷ்காவுடன் டூயட் பாடுகிறார். ஹன்சிகாவின் கனவில் வருகிறார்... இது தான் சிங்கம்-2வின் கமர்ஷியல், கலர்புல் கதை மொத்தமும்!!

சூர்யா - துரை சிங்கமாக ஆக்ஷ்ன், லவ், சென்டிமென்ட், காமெடி கலாட்டா என வழக்கம் போலவே சகல ஏரியாக்களிலும் சகட்டு மேனிக்கு புகுந்து விளையாடி இருக்கிறார். என்.சி.சி. மாஸ்டராகவும், போலீஸ் டிஎஸ்பியாகவும் அவர் காட்டும் மிடுக்குகளுக்கு அடிக்கலாம் ஒரு ராயல் சல்யூட்! அதுவும் ஆபரேஷன் டி எனும் பெயரில் டேனியைத் தேடி ஆப்ரிக்கா போய், அந்த ஊர் காவலர்களுடன் சேர்ந்து அவர் பண்ணும் அதிரடியில் என்னதான் கமர்ஷியல் சினிமா என்றாலும் தியேட்டரே உறைந்து ‌போகிறது... நிஜம் என நம்பி! வாவ் ஹாட்ஸ் ஆப் சூர்யா!

அனுஷ்கா, ஹன்சிகா என இரண்டு நாயகியர். இருவரில் அனுஷ்கா அரேபிய குதிரை என்றால், ஹன்சிகா துள்ளி விளையாடும் புள்ளி மான்! ஆனால், இந்த சிங்கத்துக்கு என்னாச்சு...?! புள்ளிமானின் இளங்கறியை ருசிக்காமல், பந்தயக்குதிரை மீதே பால் ஈர்ப்பு கொண்டு பவனி வருகிறது...?! சிங்கம் பகுதி-2 லாவது அனுஷ்காவை கொன்று, ஹன்சிகாவை சூர்யா ஜோடியாக்குவார் இயக்குனர் எனப் பார்த்தால் ஹன்சிகாவை போட்டுத்தள்ளி அனுஷ்காவை திருப்திபடுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹரி!

சந்தானம், நாசர், மன்சூரலிகான், ரகுமான், தலைவாசல் விஜய், ராதாரவி, மனோரமா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். இவர்களுடன் வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனி ஸ்பானியும் பாத்திரமறிந்து மிரட்டியிருக்கிறார். பலே, ‌பலே! பிரியனின் ஓவிய ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத்தின் மிரட்டல் மியூசிக் இரண்டும் படத்திற்கு பெரிய ப்ளஸ்!

ஸ்கூல் பிரேயரில் தேசிய கீதம் பாடும்போது சவுண்டு விடும் ஒரு மாணவனின் அடாவடி அப்பாவையும் அவரது அடியாட்களையும் போட்டு தாக்கும் சூர்யா, அதே பிரேயரில் தமிழ்த்தாய் வாழ்த்து ‌பாடும் போது நடப்பது, திரும்புவது... என திரிவது... உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருப்பினும் ஹரியின் இயக்கத்தில் "சிங்கம் - II", கமர்ஷியல் "தங்கம்"! வசூல் "வைரம்"! ஆகலாம்!!


----------------------------------------------------------------------


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


நாடு பூரா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு போலீஸ் ஆஃபீசர் எந்த மாறு வேஷமும் போடாம ஒரு சாதாரண ஸ்கூல்ல என்சிசி மாஸ்டரா ஒர்க் பண்றார். யாரும் அதை கண்டுக்கலை , சந்தேகப்படலை .ஹீரோவோட மாஸ்டர் பிளான் என்னான்னா ஆயுதக்கடத்தல் கும்பலைக் கண்டுபிடிச்சு அவங்களை அழிக்கறது .பொண்ணு பார்க்கப்போறப்போ பொண்ணோட தங்கச்சியை சைட் அடிக்கறதில்லையா? அந்த மாதிரி அவருக்கு மாட்டுனது போதை மருந்து கடத்தல் கூட்டம். ஹீரோ அந்தக்கூட்டத்தை எப்படி பிடிக்கறார் என்பதே ரெண்டே முக்காஆஆஆல் மணி நேரம் ஓடும் சிங்கம் 2 படத்தோட திரைக்கதை .

சும்மா சொல்லக்கூடாது , சூர்யாவுக்கு போலீஸ் யூனிஃபார்ம் ஒரு கம்பீரத்தைக்கொடுக்குது. காக்க காக்க லெவலுக்கு இல்லைன்னாலும் அவரோட கர்ஜனை , தோரணை எல்லாம் செம. போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்காக நடப்பதும் , பாடி லேங்குவேஜும் சூப்பர். ஆனா வசனம் பேசும்போது மட்டும் பல்லைக்கடிச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு பேசறார். டூயட் காட்சிகளில் விஜய்யை டச் பண்ணப்பார்க்கறார். ஹீரோயின் ஹன்சிகா தான் .பல படங்களில் கொழுக் மொழுக் கொழுக்கட்டை மாதிரி அழகாக வந்தவர் இதில் சாதா செண்பகமா வர்றார். இதுல இவர் ஸ்கூல் ஸ்டூடண்ட்டாம் . லட்சுமிமேணன்க்கு போட்டியா காட்டிக்கறாரோ என்னவோ? இவரோட காதல்ல ஆழம் இல்லாததால எடுபடலை

சைடு ஹீரோயின் அனுஷ்கா. செர்ரிப்பழ உதட்டழகி. நெய்யில் வறுத்த ப்ரெட் அழகுக்கன்ன அழகி. பட்டு சேலை கட்டி மண மேடையில் அவர் அமர்ந்திருக்கும்போதுதான் நிறைய பேருக்கு கல்யாண ஆசையே வருது. ஆளை அசத்தும் அழகு. பாடல் காட்சிகளில் அவர் செய்யும் முக சேஷ்டைகள் அக்மார்க் அனுஷ்கா சேட்டைகள்

வில்லனாக யாரோ ஒரு சிங்கள ஆள். ஆஜானுபாகமான தோற்றம். எள்ளலான நடிப்பு. தேறிடுவார். அது போக கண்ணே கனியமுதே , சங்கமம் பட் ஹீரோ ரகு(மான்) இன்னொரு வில்லன். ஓக்கே தான் நடிப்பு

படம் செம ஸ்பீடாக போகும்போது மீண்டும் ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்குவது போல் சந்தானம் காமெடி . களை கட்டுகிறது தியேட்டர். கல்லா கட்டுகிறது கவுண்ட்டர் .ஆனா இதுல சந்தானம் போர்ஷன் மட்டும் 2 வருஷம் முன்னாடி எடுத்திருப்பாங்க போல. சந்தானம் ஆள் ரொம்ப இளைச்சிருக்கார், பிரிண்ட்டும் பழசு மாதிரி இருக்கு

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.பொதுவாக தமிழில் பாகம் 2 எடுபடாது. உதா - நாளைய மனிதன் ஹிட், அதிசய மனிதன் பிளாப் , பில்லா சூப்பர் ஹிட், பில்லா 2 சுமார் ஹிட் , அமைதிப்படை மெகா ஹிட் , நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அட்டர் பிளாப். இந்த செண்ட்டிமெண்ட்டை உடைத்த காஞ்சனா ( முனி 2 ) வரிசையில் சிங்கம்2 வும் சேர்ந்தது , அதுக்கு பக்க பலமாக விறு விறுப்பான திரைக்கதை அமைத்தது

2. பட்டப்பகலில் கஸ்டம்ஸ் ஆபீசரை கொலை செய்து விட்டு அவசர அவசரமாக தடயத்தை வில்லன்கள் மறைக்கும் காட்சி

3. சந்தானம் ஒவ்வொரு முறையும் தான் மாட்டிக்கொள்ளும்போது எதிராளியின் காலில் விழுந்து பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே என கெஞ்சுவது தியேட்டரில் செம சிரிப்பு . ஒரு சாதாரண காமெடியைக்கூட ஒரு நல்ல காமெடியன் நல்ல காமெடி ஆக்க முடியும் என்பதற்கு உதாரணம் . ஒருத்தர் வேட்டையை உருவதும் , ஒரு ரவுடி டீச்சர் சேலை பாவாடையை இழுப்பதும் கொல் சிரிப்பு.
 
4. ஆபரேஷன் டி என்பது இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டாதது . அதாவது எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போட்டுத்தள்ளுவது , கிட்டத்தட்ட என்கவுண்ட்டர் மாதிரி . இதுல நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு ( துப்பாக்கில இப்படி ஒரு சீன் வரும் )
 
5. டூயட் காட்சிகளில் அனுஷ்காவை துள்ளிக்குதிக்க வைத்து ஆடியன்சை துள்ளிக்குதியாட்டம் போட வைத்தது . மற்ற காட்சிகளில் அழகுப்பதுமையாய் , சேலையில் வரும் சோலையாய் தென்படும் அனுஷ் டூயட்டில் மட்டும் இறங்கி ஆடி இருக்கார் , கிறங்க வைக்கும் அழகு இந்தப்படத்துக்கு சாமார்த்தியமாய் சென்சாரிடம் யு சர்ட்டிஃபிகேட் ”வாங்கியதுக்கு”: ஸ்பெஷல் பாராட்டு.
 
6 விஸ்வரூபம் கமலை நையாண்டி செய்யும் யாரென்று தெரிகிறதா சந்தானத்தின் ஃபைட் சீன் அதகளம் . தியேட்டரில் அப்ளாஸ் மழை ( வீட்டில் டி விடியில் பார்த்தால் இந்த சுவராஸ்யம் மிஸ் ஆகும் ) அதே போல் அவரது ஓப்பனிங்க் காட்சியில் எந்திரன் ரஜினையையும் விட்டு வைக்கலை

7 கண்ணுக்குள்ளே கண்ணை வெச்சு பாட்டு ஹிட் ஆகும் . அந்தப்பாட்டுக்கு டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் ஓக்கே ரகம்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஜஸ்ட் 15 வயசு ஆன ( !!!!????) பத்தாங்கிளாஸ் படிக்கும் பிகரான ஹன்சிகா போலீஸ் ஆஃபீசரான 37 வயசு சூர்யாவை காதலிப்பது எல்லாம் ஓக்கே , அவர் தன் காதலை சூர்யாவிடம் சொல்லும்போது அவர் அப்பவே “ ஏம்மா , நான் ஆல் ரெடி ஒரு ஃபிகரை உஷார் பண்ணிட்டென்” அப்டினு சொன்னா அப்பவே மேட்டர் ஓவர் , அதை கடைசி வரை சொல்லாம இதெல்லாம் சரிப்பட்டு வராது அப்டினு ஏன் பம்மறார்? சைடுல இதையும் ஓட்டிக்கலாம்னு நினைச்சுட்டாரா?

2. ஹன்சிகா காண்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கார். எக்சாம் கொஸ்டீன் பேப்பரை திருடும்போது வெறும் 5 கிராம் ஏ 4 பேப்பர் அவர் நெத்தில பட்டு லென்ஸ் விழுமா ? அப்படி விழுந்தா உடனே அவருக்கு அது தெரியாதா? ஏன் மாட்டிக்கறார்?

3. அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் ஹன்சிகா கண்ணாடி போட்டுட்டு வர்றார் . அவரை மாதிரி கண்ணாடி போட்ட ஃபிகருங்க 4 பேர் இருக்கும் போது ஹீரோ கரெக்டா எப்படி ஹன்சிகாவை சந்தேகப்பட்டு உண்மையை கண்டு பிடிக்கறார்?

4. ஹன்சிகா போலீஸ்க்கு போன் பண்ணி ஸ்கூல்ல கலவரம் நடக்குதுன்னு சொல்றார். போலீஸ் வருது. அவர் தான் யார்னு யார் கிட்டேயும் சொல்லலை , போலீஸ் கிட்டேயும் சொல்லலை , எப்படி சந்தானம் , ஹீரோ 2 பேரும் ஹன்சிகா தான் ஃபோன் பண்ணினார்னு கண்டு பிடிக்கறாங்க?

5. போலீஸ் ஆஃபீசரான ஒருவர் டியூட்டிக்காக தற்காலிகமா வேலையை ரிசைன் பண்ணின மாதிரி நடிக்கறார் ஓக்கே , அதை தன் சொந்த அப்பா கிட்டேயே யாராவது சொல்லாம இருப்பாங்களா? சொந்த பொண்டாட்டி கிட்டே கூட அதை சொல்ல மாட்டேன்னு ஹீரோ பஞ்ச் பேசுவது ஓக்கே , பொண்டாட்டிங்கன்னா ஓட்டை வாய்ங்களாத்தான் இருக்கும் , ஆனா அப்பா கிட்டே ஏன் சொல்லலை? அதை சாக்கா வெச்சு வரும் செண்ட்டிமெண்ட் காட்சிகள் உஷ் அப்பா ...

6. சாதாரண ஏ சி யான ( அசிஸ்டெண்ட் கமிஷனர் ) ஹீரோ உள்ளே வரும்போது உள் துறை அமைச்சரே எந்திரிச்சு நின்னு மரியாதை தர்றாரே அவர் ரொம்ப சாதாரண துணை நடிகரோ?

7. வில்லன்க லாட்ஜ்ல ரூமை வெளிப்பக்கம் பூட்டிக்கிட்டு உள்ளே சீட்டாடிட்டு இருக்காங்க . செல் ஃபோனை வைப்ரேஷன் ஆர் சைலண்ட்ல மோடுல போடாம அப்படியா பெப்பரெப்பேன்னு ஹீரோ கிட்டே மாட்டிக்குவாங்க ?

8. காலியா இருக்கும் குஷன் சேர்ல வில்லன் ஈட்டியால லாங்க்ல இருந்து வீசறார் . அது சக்னு போய் செண்ட்டர்ல குத்தி நிக்குது . நீங்க வேணா செக் பண்ணிப்பாருங்க . காலியா இருக்கும் சேர் மேல 10 அடி தூரம் தள்ளி நின்னு ஈட்டி எறிஞ்சா அந்த சேர் கீழே விழும் . ஆனா அப்படி குத்தி நிக்காது. யாராவது சேரைப்பிடிச்சுக்கிட்டு நின்னாத்தான் அப்படி குத்தும் ( இதை செக் பண்றேன் பேர்வழின்னு எங்க வீட்ல இருந்த ஒரே ஒரு குஷன் சேர் கோவிந்தா )

9. பொண்ணு சம்மந்தம் பேசும் இடத்தில் அனுஷ்கா & கோ ஏற்பாட்டின்படி அங்கே நடப்பதை அறிய செல்போனில் வீடியோ எடுத்து லைவ் ஷோ பார்க்கறாங்க . அந்த லேடி அப்படி பப்ளிக்கா ஃபோனை கைல பிடிச்சுட்டு நிக்குது. யாருமே அதை கவனிக்கலையா? ஹீரோ போலீஸ் ஆஃபீசர் வேற , அவருக்குமா தெரியலை ?

10. ஆபரேஷன் டி கேன்சல் ஆகிடுச்சு , உள்துறை அமைச்சர் அந்த லெட்டர் உங்களுக்கு நாளை தான் கைல கிடைக்கும். அதுக்குள்ளே நைட்டே மேட்டரை முடிச்சுடுங்கனு சொல்றார். இந்த மாதிரி அதி முக்கிய அரசாங்க ஆணைகள் தந்தி மூலமாகவோ , ஃபோன் கால் மூலமாவோ பிறப்பிக்கப்படும் , எழுத்துப்பூர்வமான ஆணைகள் சும்மா ரெக்கார்டிங்க் பர்ப்பஸ்க்கு வேணும்னா வாங்கி வெச்சுக்கலாம். சி எம் ஃபோன் ல ஆபரேஷன் டி கேன்சல் பண்ணியாச்சா? என ஏன் கேட்கலை?
 
11. படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற சாதா அடியாள் தான் மெயின் வில்லன் என்பதை ஆல்ரெடி குருதிப்புனல் , புலன் விசாரனை உட்பட பல படங்கள்ல பார்த்தாச்சே பாஸ்.
 
12. ஹன்சிகா - அனுஷ்கா சக்களத்தி சண்டை ரொம்ப கேவலமா இருக்கு. அந்த சீனுக்கு வசனம் எழுதுனவர் போரிங்க் பைப்ல தண்ணி பிடிக்கும் பொம்ப்ளைங்க ரேஞ்சுக்கு இறங்கி .. உஷ் அப்ப

13 . ஒரு சர்வதேச கடத்தல்காரனை லாக்கப்ல போட்ட ஹீரோ வெளில கிளம்பும்போது யாராவது வில்லனை மீட்க வரலாம்னு சந்தேகப்பட்டு லாக்கப் சாவியை எடுத்துட்டுப்போறார். செம காமெடி . சாவியை எடுத்துட்டா அந்த ரூமை யாராலும் திறக்க முடியாதா? ஹய்யோ அய்ய


மனம் கவர்ந்த வசனங்கள்


1. நான் எல்லாம் டேஞ்சரை டெபாசிட் பண்ணிட்டு அபாயத்தை வம்புக்கு இழுக்கறவன் - சந்தானம்.

2. சூர்யா பஞ்ச் - நீ என் வீட்டுக்கு வந்தே. நான் தாங்கிட்டேன். நான் உன் வீட்டுக்கு வந்தா நீ தாங்க மாட்டே.

3. தூரத்துல இருக்கற ஆளை 10 செகண்ட்ஸ்ல போட்டுட்டேன்.பக்கத்துல இருக்கற உன்னைப்போட எவ்வளவ் நேரம் ஆகும் ? - நோ டபுள் மீனிங். ஹீரோ டூ வில்லன்.
 
4. வில்லனின் கேவலமான பஞ்ச் - நான் கெளுத்தி மீன் இல்ல. வலைல விழுந்தாலும் உலைல விழ மாட்டேன.

5. தகுதி இல்லாதவன் தமிழ் வாத்தியார். புத்தி இல்லாதவன் புவியியல் வாத்தியார். அறிவே இல்லாதவன் அறிவியல் வாத்தியார் - சந்தானம

6. சந்தானம் - உனக்கு நான் பேர் வாங்கித்தர்றேன். நீ எனக்கு பீர் வாங்கித்தந்துடு.எப்டி டீலிங்?

7. சந்தானம் - அய்யய்யோ.பிரச்சனையை பேரம் பேசி வாங்கிட்டேன் போ

8. பேசாம அவங்க கிட்டே பாவ மன்னிப்பு கேட்டு. சந்தானம் - பாவ மன்னிப்பு, பாசமலர் எல்லாம் கேட்க அவங்க என்ன டிவிடி கடை ஓனரா?

09. சின்ன வயசுல பிகர் வர்றதும், வயசானா பின்பு சுகர் வர்றதும் வாழ்க்கைல சகஜம் - சந்தானம

10. சந்தானம் - ஸாரி மேடம். உங்களுக்கு மேரேஜ் ஆகி 3 புருசனுங்க இருக்கற மேட்டரே எனக்கு இப்போ தான் தெரியும்.

11. சந்தானம் - என்னய்யா? போலீஸ்னா எல்லாரும் வயித்தில சோத்தை கட்டிட்டே அலைவாங்ளோ? - தொப்ப.

12. ஒருத்தரை நமக்குப்பிடிச்சுப்போச்சுன்னா அவங்க மேல நமக்கு இனம் புரியாத ஒரு அன்பு வரும். அது காதல் இல்லை. இன்பேக்சுவேசன்.

13. சந்தானம் = சார். பாயே மூடு, பீச்சே மூடுனு சொல்றீங்ளே. பாயை மூடிடலாம். பீச்சை (BEACH) எப்டி மூடுவீக?

14. நீங்க அம்மா, அப்பா பேச்சை கேட்பீங்களா அவங்க பேச்சைக்கேட்காம? அவங்க எனக்கு தெய்வம் சார் ( சிவகுமாரை இம்ப்ரெஸ் பண்ண வைக்கப்பட்ட வசனம் போலம்)

15. என்னது? நாய் மோப்பம் பிடிக்குமா?பின்னே, உன்னை மாதிரி பீடி பிடிக்கும்னு நினைச்சியா?

16. ஏன் என்னைப்பார்த்து நாய் குரைக்குது?நாயாவது உன்னைப்பார்க்குதேன்னு சந்தோஷப்பட

17. ஆமா, நீ வேட்டி கட்டி இருக்கியே? ஜட்டி போட்டிருக்கியா? பார்த்துடா, நாய் கவ்விட்டுப்போய்டப்போகுது.

18. ப்ளூ கிராஸ் என்னைப்பிடிச்சுட்டுப்போனாலும் பரவாயில்லை , 3 நாயையும் கல்லால அடிக்காம விட மாட்டேன2 நாய் தானே இங்கே இருக்கு ?அந்த 3 வது நாய் நீ தாண்ட.

19. மிஸ்! எங்கே போய் இருந்தீங்க?சொல்ல மாட்டேன் நீ சொல்லலைன்னா 8 மணி நியூஸ்ல சொல்வாங்களா? அட சொல்லம்மா.

20. செல் ஃபோன் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க , கம்யூனிகேஷனை கட் பண்ணாலே நாட்ல பாதிக்கலவரம் குறைஞ்சுடும்.

21. இனிமே என் பொண்ணு காய்கறி வாங்கக்கூட சைரன் வெச்ச கார்ல தான் போவா

22. இவங்களை சமாளிக்க க்ளீன் போலீஸ் பத்தாது , கிரிமினல் போலீஸ் வேணும் ( நாட்டுல 75 % அப்டித்தானுங்க்ணா)

23 விருந்தாளியையே இப்படி வெளுக்கறாங்களே இந்தம்மா இவங்க புருசனை எப்படி வெளுப்பாங்க.

24. காதல்னா என்ன? நெஞ்சுல வெச்சு நினைப்புல வாழனும்.

25. அத்து மீறி மனசுல நுழைய நினைச்சா அது காதல் ஆகிடாது.

26. தொகுதிப்பிரச்சனைக்காக என்னைக்காவது பி எம் கிட்டே பேசி இருப்பீங்களா? எம் பி சார். ஒரு பொறுக்கிக்காக இப்படி போன் போட்டு பேசறீங்க?

27. அமலாபால் நடிச்ச படம் மைனா, ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் சைனா, என்னை விட்டுடு நைனா - சந்தானம்.


படம் பார்க்கும்போது டுவிட்டரில் போட்ட டுவீட்ஸ்

1. அய்யய்யோ அனுஷ்கா அழுகுதே. இப்போவே பஸ் ஏறி அனுஷ்காவுக்கு ஆறுதல் சொல்லனும்.

2. அழகு ரதி அனுஷ்கா. முன்னால பப்ளிமாஷ் பப்ஸ் ஹன்சிகா எடுபடல

3. ஹீரோ சார் ஹரி சார் அது ஏன் சார் வசனம் பேசும்போது பல்லைக்கடிச்சுக்கிட்டே பேசறார் சார்?

4. சிவப்புக்கலர் ஜாக்கெட் ,மஞ்சள் கலர் பட்டு சேலை அனுஷ்கா திருவாரூர் தேர் தேவதை.

5. 50 கிமீ வேகத்துல போகும் பஸ்ஸை ஹீரோ ஓடியே துரத்தி ஏறிட்டாரு. சிங்கம் சிங்கம் துரை துரை சிங்கம் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்டட டொய்டங்.

6. ஹீரோவோட அப்பா மேரேஜ்க்கு ஓக்கே சொல்றது 6 வது ரீல்ல. அதை ஹீரோயின் தன் அப்பா கிட்டேதகவல் சொல்றது 12 வது ரீல்ல -  6 மனமே 6.

7. அனுஷ்காவுக்கு உதடு் மட்டும் இவ்ளோவ் சின்னதா இருக்கே?

8. டூயட் சீனில் அனுஷ்காவின் முக சேஷ்டைகள் கலக்கல் - அனுஷ் பழம்

9. ஸார், ஹன்சிகா சார், பாத்ரூம்ல குளிக்குது ஸார், சொந்த வீட்ல பாத்ரூம்ல தாழ் போட்டுட்டு குளிக்கும்போது எதுக்கு டர்க்கி டவல்? எப்டி நம்ம லாஜிக் கொஸ்டீன்?

10. சந்தானம் - அனுஷ்கா டூயட் கலக்கல்- சூர்யா பாவம்.

11. ஹன்சிகா டென்த் படிக்கற ஸ்டூடண்ட்டாம். அய்யோ ராம

12. ஒத்தை ஆள் 10 பேரை அடிச்சா என்ன அர்த்தம்? சி பி = 10 பேரும் சொத்தைப்பசங்கனு அர்த்தம் பாஸ்

13. 120 கிமீ வேகத்துல 4 ஜீப் ஹீரோவை துரத்துது. பிடிக்க முடியல. செம ஓட்டம். கின்னஸ் ரெக்கார்டு.

14. சாமி விக்ரமை மறைமுகமாத்தாக்கறாரு சூர்யா.என்ன தகராறோ?

15. ஓப்பனிங் சீன் அஞ்சலிக்கு குத்தாட்டம்.

சி பி கமெண்ட் -
ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன். காலை 7 மணி ஷோ , என்னை மாதிரியே வெட்டியா ஊர்ல பல பேர் இருக்காங்க போல , பல்லு கூட துலக்காம வந்துட்டாங்க சிங்கம் 2 - மாமூல் ஆக்சன் ஹரி பிரான்ட் மசாலா - தலைவா வரும் வரை தாங்கும். படம் ஸ்பீடாத்தான் போகுது , ஆனா காது வலிக்குது.


----------------------------------------------------

குமுதம் விமர்சனம்


ஹரியின் படம் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்ற நிஜம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. லாஜிக்கையெல்லாம் பார்க்காமல் போய் உட்கார்ந்தால் வேகம் வேகம் என்று நாலு கால் பாய்‌ச்சலில் பாய்கிறது சிங்கம்.

முதல் பாகத்தில் பிரகாஷ்ராஜ் என்ற தனி மனிதரைப் பந்தாடிய சிங்கம், இப்போது சர்வதேச போதைப்பொருள் கும்பலையே தனித்துநின்று டோட்டலாக துவம்சம் செய்து கர்ஜிக்கிறது.

காக்கிச் சட்டைக்கு கம்பீரம் தருகிறார் சூர்யா. தன்னுடைய இருக்கையின்மீது ஈட்டி குத்தியிருப்பதை ஓரக்கண்ணால் பார்ப்பதாகட்டும்‌, எல்லாவற்றிற்கும் காரணம்‌ மேலதிகாரிகள்தான் என்று தெரிந்ததும் பச்சையாய் அவர்களைத் திட்டுவதாகட்டும், ஹன்சிகாவின் காதலைக் கண்டு அட்வைஸ் செய்வதாகட்டும் பாவணையாலும், ஆவேசத்தாலும், அன்பாலும் சிவகுமாரின் மகன் புடம்போட்ட தங்கமாய் செமை நேர்த்தி.

அனுஷ்காவுக்கு என்ன ஆச்சு? சமயங்களில் ஆன்ட்டி மாதிரி தோன்றுகிறார். சோர்வாக வேறு இருக்கிறார். உடனடியாய் ஒரு டாக்டரைப் பார்க்கவும்!

ஸ்கூல் பெண் வேஷம் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் ஹன்சிகா பளிச்.. விவேக், சந்தானம் என்று இரட்டைக் குழல் காமெடித் துப்பாக்கிகள்! ‘பரலோகத்தில் இருக்கும்’ என்று சொல்லி சந்தானம் காலில் விழும்போதெல்லாம் யார் வேட்டி அவிழுமோ என்று பக்கென்று இருக்கிறது! ‘சின்ன வயசுல பிகர் வரதும், வயசானா சுகர் வரதும் சகஜம்’ என்ற பேஸ் புக் பஞ்ச்கள் கலகல!

முதல் பாகத்தை கம்பேர் பண்ணினால் பாடல்கள் சுமார். சிங்கம் மாதிரி கையை ஊன்றி தலையை ஆட்டி சூர்யா ஆடும் டான்ஸ் அழகு. முதல் பாக ட்யூன்கள் அங்கங்கே தலைகாட்டும்போது ஜிலீர் என்று இருக்கிறது.

ஒரே ஒரு குத்தாட்டத்துக்கு அஞ்சலி அக்ரமம்!

அந்த ஆப்பிரிக்க வில்லன் பற்றி ஏகத்துக்கு பில்டப் செய்திருக்கிறார்களே என்று பார்த்தால் நம்ம பொன்னம்பலத்துக்கு சித்தப்பா பையன் மாதிரிதான் இருக்கிறார்!

அந்தக் கப்பலின் ஒய்யாரக் காட்சி, டர்பன் நகரத்து சேஸிங் என்று ப்ரியனின் கேமரா தணியாகக் கதை சொல்கிறது.

சிங்கம்-2 முதல் பாகத்தை விட கூலிங் கம்மி. ஆனால் ஹாட் அதிகம்!

குமுதம் ரேட்டிங் - ஓகே


-------------------------------------------------



கல்கி விமர்சனம்


ஏற்கனவே ஜனரஞ்சக வெற்றியடைந்த கதையின் இரண்டாம்பாகம் எப்படியாவது சொதப்பிவிடும். ஆனால், ‘சிங்கம்-2’ அப்படியல்ல. ஜனரஞ்சக வெற்றி என்பது இயக்குனர் ஹரிக்குக் கைவந்த கலை. சூர்யா, ஹரி, தேவிஸ்ரீபிரசாத் கூட்டணியில் வேகம், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. அனுஷ்கா, ஹன்சிகா... ஆகியோரின் சிலுசிலு காதல் காட்சிகள் சாமான்ய ரசிகனையும் படத்தோடு ஒன்ற வைத்துவிடுகின்றன.

தூத்துக்குடியில் நடக்கும் ஆயுதக்கடத்தலை குறிவைத்து களத்தில் குதிக்கும் சூர்யாவுக்கு, தென்னாப்பிரி்க்கா வரை நடக்கும் போதை மருந்துக் கடத்தல் தெரியவருகிறது. விடுவாரா ஹீரோ சூர்யா? கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எல்லோரையும் கண்டம் பண்ணுகிறார். இதைத் திரைக்கதையில் சுடச்சுடச் சுவாரஸ்யப்படுத்தியதால் வெற்றிக்கனி விழுந்திருக்கிறது இயக்குனர் ஹரியின் மடியில்.

நாடி நரம்புகள் புடைக்க பஞ்ச் டயலாக் பேசும் சூர்யாவுக்கு படத்துக்குப் படம் கம்பீரம் கூடினாலும் இவ்வளவு சத்தமா எதுக்கு டயலாக் பேசணும்? அவர் என்.சி.சி. மாஸ்டராகக் காட்டும் மிடுக்கும், காக்கிச்சட்டை போட்டபிறகு வெடிக்கும் துடிப்பும் சூர்யாவின் உழைப்புகள். அதிநீளமான சண்டைக்காட்சிகளை சலிக்காமல் பார்க்கும் ரசிகனை அதிகம் வசீகரிப்பது சூர்யாவின் பெர்பார்மன்ஸ்தான். க்ளைமாக்ஸில் வில்லன் டேனியோடு மோதும்போது த்ரில் தீ பற்றுகிறது மனசுக்குள்.

அனுஷ்காவும்‌ ஹன்சிகாவும்... சூடாக நகரும் கதையில் குளிர்ச்சியாக கமர்ஷியல் பிரேக். அளவுக்கு மீறிய வளர்ச்சியோடு இருக்கும் ஹன்சிகாவை ஸ்டூடண்டாக ஏற்றுக்கொள்ள பாழாய்ப்போன மனசு மறுக்கிறது. சூர்யாவோடு டூயட் நடனம் ஆடும் அனுஷ்கா அசத்தல்.

முதல் பாகத்தைப்போல இதிலும் விவேக்கின் காமெடி உவ்‌வே ரகம். போதாததற்கு எப்போதும் டபுள் மீனிங் பேசும் சந்தானமும் சேர்ந்துகொள்வதால் கலகலன்னு சிரிக்க முடியாமல் கசகசன்னு நெளிய வேண்டி இருக்கிறது.

தென்னாப்பிரிக்க வில்லன் டேனி சபானி நன்கு முறுக்கேறி உருக்கு இரும்பு போல வசீகரிக்கிறார்.

ப்ரியனின் ஒளிப்பதிவில் திரைக்கதைக்கு ஏற்ற வேகமும் விவேகமும், உப்பளச் சண்டைக் காட்சிகளின் ஏரியல் ஷாட்ஸ் வாரே வாவ்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் முதல் பாகத்துச் சாயல்.

க்ளைமாக்ஸ் எப்போது வரும்... படம் எப்போது முடியும்... என எதிர்பார்க்க வைக்கும் நீளம்... கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம்.

முதல் பாகத்தில் சூர்யா அனுஷ்காவின் காதல், இரண்டில் நிச்சயதார்த்தம் வரை வந்திருக்கிறது. அப்போ மூன்றாம் பாகம் இருக்கா? அப்போவாவது படத்துல பஞ்ச் டயலாக்கைக் குறைச்சு படத்தை மென்மையாக நகர்‌த்தணும் இயக்குனர் ஹரி.


லாஜிக் பற்றி கவலைப்படாமல் படம் பார்த்து சிரித்து ரசி்த்துவிட்டு வருபவர்களுக்கு சிங்கம்-2 ஏற்ற படமே!

சிங்கம் 2 - சியர்ஸ்!



வாசகர் கருத்து (51)

KARTHIK - Sirkazhi,இந்தியா
30 ஆக, 2013 - 00:01 Report Abuse
KARTHIK சினிமாவ சினிமாவா(பொழுது போக்கு) மட்டும் பாருங்கள் நேயர்களே ஏன் அடிச்சிக்குறீங்க ???
Rate this:
Anand Vaasan Madhavan - Chennai,இந்தியா
23 ஆக, 2013 - 17:18 Report Abuse
Anand Vaasan Madhavan காக்கிச் சட்டைல கமல ஒத்துகிட்ட அதே ரசிகர்கள் ஏன் சூர்யா வை கிண்டல் செய்யுறாங்க ?
Rate this:
sasi - chennai,இந்தியா
12 ஆக, 2013 - 20:00 Report Abuse
sasi surya pls dont act like this. try different character. your brother totally waste. i think next you. sivakumar is best. dont spoil your father name. already your brother did it. anjali its over to you. pls pls dont act. we cant to see you. reduce your weight.
Rate this:
Pulikutty - Mumbai,இந்தியா
24 ஜூலை, 2013 - 14:26 Report Abuse
Pulikutty கிளைமாக்ஸ்-ல சூர்யா, அனுஷ்காவ கல்யாணம் பண்ணலை. ஒருவேளை சிங்கம் 3 எடுக்கிற ஐடியா இருக்குமோ ???
Rate this:
moorthi ihtroom - tirupur,இந்தியா
29 ஜூலை, 2013 - 11:36Report Abuse
moorthi ihtroomஇந்த படம் எடுத்து முடிஞ்சவுடன் சூர்யாவுக்கு வாயில மாவுகட்டு போட்டு இருப்பாங்க ,ஏனென்றல் அப்படி பேசு பேசுன்னு வாய் வலிக்க பேசிருக்குது பயபுள்ள....
Rate this:
Raja - Chennai,இந்தியா
24 ஜூலை, 2013 - 13:05 Report Abuse
Raja சூர்யா ஒரு நல்ல அக்டர். இனி இது போன்ற ஸ்டோரி அண்ட் டைரக்டர் இடம் தள்ளி இருப்பது நல்லது.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
01 ஆக, 2013 - 18:14Report Abuse
சு கனகராஜ் படம் நல்லாத்தானே இருக்கு...
Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

சிங்கம் 2 தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in