Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

நான் ராஜாவாகப் போகிறேன்

07 மே,2013 - 17:55 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நான் ராஜாவாகப் போகிறேன்

    

தினமலர் விமர்சனம்


"பாய்ஸ்" நகுல், "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் ஸோலோ ஹீரோ ஆனார்! அதைத்தொடர்ந்து வெளிவந்த "மாசிலாமணி", "கந்தகோட்டை" உள்ளிட்ட படங்களில் சோர்ந்து விழுந்த அவரை, எழுப்பி நிற்க வைக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படம் என்றால் மிகையல்ல!

இமாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லை பகுதியில் தன் தாய் சீதாவுடன், மாமா வாசு விக்ரமின் ஆதரவில் வாழும் ஜீவா எனும் நகுல், சதா சர்வகாலமும் தூங்கி வழியும் கேரக்டர். ஒருநாள் சிறுவர்களுடன் விளையாட்டுத்தனமாக மிலிட்டரி கேம்பிற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பதற்காக சின்ன தண்டனை பெறும் அவரை பார்க்கும் ஜவான் ஒருவர், சென்னையில் தன்னுடன் படித்த ராஜா மாதிரியே ஜீவாவும் இருப்பதாக சொல்லி கிக்பாக்ஸிங் புலியான ராஜாவின் வீடியோவையும் ஜீவாவிற்கு போட்டு காட்டுகிறார். அந்த வீடியோவைப்பார்த்தது முதல் தன் மாதிரியே இருக்கும் ராஜாவை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஜீவாவிற்குள் துளிர்விடுகிறது. அம்மா, மாமா ஆகியோர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ரயிலேறுகிறார் ஜீவா அலைஸ் நகுல்!

அப்புறம் ? அப்புறமென்ன...?! வழியில் போபாலில் ராஜாவை ஒரு தலையாக காதலித்து தோற்ற அவரது தோழி ரீகா எனும் அவனி மோடியையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, ஜீவா எனும் நகுல் தான் ராஜா என்பதும் தெரிய வருகிறது. அவரது காதலி சாந்தினி என்ன ஆனார்? ராஜா - ஜீவாவாகக் காரணம்  யார் யார்...? அவர்‌களை ஜீவா அலைஸ் ராஜா எனும் நகுல் எவ்வாறு பழிதீர்த்தார்? காதலி சாந்தினியை கரம் பிடித்தாரா...? இல்லையா...? என்பது நான் ராஜாவாகப்போகிறேன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

‌ஒரே நகுல், ஜீவா - ராஜா என இருவேறு பரிமாணங்களில் வெகுளி பாத்திரத்திலும், வெகுண்டெழும் பாத்திரத்திலும் கிடைத்த கேப்பில் எல்லாம் நடித்து "நான் ராஜாவாகப்போகிறேன்" படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதிலும் கிக்பாக்ஸிங் நகுல் செம கிளாஸூங்கோ!

சாந்தினி, அவனி மோடி என இரண்டு நாயகியர். இருவரில் சாந்தினி ஹோம்லி, பேமிலி என்றால், அவனி மோடி கிளாமர் ப்ளேவர்... வாவ்., நடிப்பிலும் என்னமாய் மிரட்டுகிறார்கள் அம்மணிகள். சாந்தினி, அவனி மோடி மாதிரியே முஸ்லிம் பெண் தோழியாக வரும் ஜானகியும் நடிப்பில் நம்மை வருகிறார்.

நகுலின் முஸ்லிம் நண்பராக வரும் நிஷாந்த், அடியாள் கூட்ட தலைவராக வரும் "தூங்காநகரம்" இயக்குநர் கெளரவ், சீதா, ஆர்த்தி, கஸ்தூரி, வனிதா விஜயகுமார், செந்தி, ஒருபாடலுக்கு ஆடும் ஸெரீன் கான், நகுலின் அப்பாவாக வரும் மாஜி ஹீரோ சுரேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி, கிரேன், மனோகர், "மூணாறு ரமேஷ் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் காட்டிலும் சிறப்பு தோற்றத்தில் பி.டி.கத்திரிக்காய் உள்ளிட்ட விஞ்ஞானத்தின் விநோதங்களையும், அதன் தீமைகளையும் பேசும் மணிவண்ணனின் சிறப்பு தோற்றமும், அவரது அநியாய மரணம் மற்றும் வில்லாதி வில்லனாக வரும் ஏ.வெங்கடேஷின் கெட்ட-அப்பும் பிரமாதம், பிரமாண்டம்!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, வெற்றிமாறனின் வசனம், ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஜோ‌தி பிரகாஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், புதியவர் பிருத்விராஜ் குமாரின் எழுத்து இயக்கத்திற்கு வலு சேர்த்துள்ளன.

வழக்கமான தமிழ் சினிமா மாதிரியே இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி எனும் பெயரில் படம் பிடித்து காட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒருசில் சின்ன சின்ன போராட்டங்கள் மூலம், இலங்கை தமிழர் விவகாரத்தையும், பி.டி.கத்திரிக்காய், வேலி கருவேல் மரங்களின் விஞ்ஞான விபரீதத்தையும் இந்தப்படம் அளவிற்கு எந்தப்படமும் அழகாக அறிவுறுத்தியதில்லை... எனும் காரணங்களுக்காகவே "நான் ராஜாவாகப்போகிறேன்" சோடை போகவில்லை! நல்விலை போகும் எனலாம்

மொத்தத்தில், "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படத்திற்கு தமிழ் ரசிக மந்திரிகள் ஆதரவு நிச்சயம்! நிதர்சனம் எனலாம்!!-------------------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்ஒரு தாதா டைப் கதையில், நாட்டையே பாழாக்கும் மரபணு விதை. பிளாஸ்டிக் பயன்பாடு என்று சமூகப் பிரச்னையைத் தொட்டதற்காகவே இயக்குநர் பிரித்வி ராஜ்குமாரைப் பாராட்டலாம்.

தன்னைப்போல் உருவம் உள்ள ஒருவனைப் பார்க்கிறார் நகுல். அவனைத் தேடி சென்னைக்கு வர, அங்கே கில்லி ஸ்டைலில் கதாநாயகியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, கடைசியில் என்ன ஆயிற்று என்பதுதான் கதை.

நகுல் இரட்டை வேடம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஆனால் அவர் டபுள் ஆக்ட்டா இல்லையா என்ற சஸ்பென்ஸ் பலே! நகுலுக்கு சண்டை நன்றாக வருகிறது.

சாந்தினி, அவனி என்று இரண்டு நாயகிகள். முதலாமவர் பெரிய கண்ணோடு ஜெனிலியா மாதிரி இருக்கிறார். இரண்டாமவர் சின்ன கண்ணோடு சின்மயி மாதிரி இருக்கிறார்.

வில்லனின் ஆட்கள் ஹீரோ, ஹீரோயினைப் பார்த்ததும் போட்டுத் தள்ளாமல் செல்ஃபோனில் சும்மா ரன்னிங் கமெண்ட்ரி கொடுப்பது எரிச்சல்.

வசனம் வெற்றி மாறனா? சொந்தப் படத்துக்குத்தான் நல்லா எழுதுவார் போலிருக்கிறது!

வேல்ராஜின் கேமரா கண்களுக்கு ஐஸ்கட்டி!

ராஜாவை ஜோக்கர் ஆக்கியிருக்கிறார்கள்.

குமுதம் ரேட்டிங்: ஓகே.
------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்வழக்கமான ஆள் மாறாட்டக் கதையில் நகுல் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் - நான் ராஜாவாகப் போகிறேன். ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் துரோகத்துக்குத் துணை போகும் அண்ணாச்சிக்கு எதிராக களத்தில் குதிக்கும் ஒரு காதல் ஜோடியின் போராட்டங்கள்தான் திரைக்கதை.

ஆக்ஷன் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளும் நகுல், கேரக்டரின் கனம் தாங்காமல் தத்தளிப்பது பரிதாபம். அதுவும் நகுலின் டயலாக் டெலிவரி சுத்த மோசம்.

ஹீரோயின் சாந்தினியின் முகத்தில் இருக்கும் மென்சோகத்துக்குக் காரணம், அவர் கொத்தனாரின் பொண்ணு என்பதும், அவர் ஈழப் பிரச்னை, பி.டி. கத்திரிக்காய் விழிப்புணர்வு பிரசாரம் என ஆர்வம் காட்டும் சட்டக் கல்லூரி மாணவி என்பதும் லாஜிக்.

ஒருதலையாக நகுலை காதலிக்கும் இன்னொரு ஹீரோயின் அவனி மோடி ஆவரேஜ் ரகம்.

முழங்கால் வரை தூக்கிக் கட்டிய வேட்டி, முழங்கை வரை இறக்கிவிட்ட சட்டை... என இயக்குனர் ஏ. வெங்கடேஷின் கேரக்டரில் வில்லத்தனம் இல்லை. மாறாக கிக்லிபிக்லி காமெடி விளையாட்டு.

ஹிமாச்சலப்பிரதேசத்துக்கும் சென்னைக்கும் போடப்படும் ஃப்ளாஷ்பேக் முடிச்சில் ஈர்ப்பு அதிகம்.

கதை சென்னைக்கு நகரும்போது வில்லன்களின் துரத்தல், ஃபைட், கொலை... என நசநசப்பில் மாட்டிக்கொண்டு நொண்டுகிறது. தவிர, ஏகப்பட்ட ஃப்ளாஷ்பேக். எதுக்கு எது என்பதில் சற்றே குழப்பம்தான்.

பி.டி.விதைகள், ஈழ விவகாரம்... என எரியும் பிரச்னைகளைக் கையிலெடுத்திருப்பதும், அதனை இயக்குனர் மணிவண்ணன் மூலம் பேசியிருப்பதும் பாராட்ட வேண்டிய விஷயங்கள். அவர் தரும் பி.டி. பயங்கர புள்ளிவிவரங்கள் திக்திக்.

வெற்றிமாறனின் வசனத்தில் புதுமை இல்லை; ஏகப்பட்ட ரிப்பீட்டு, ஜீ.வி. பிரகாஷ் குமாரின் இசையில் கலாய்ப்போம் பாடல் மட்டும் கலகல ரகம்.

வேல்ராஜின் ஒளிப்பதிவில் ஹிமாச்சலப் பிரதேசம் மட்டும் பளிச்சுன்னு தெரிகிறது. மற்ற காட்சிகளில் ஈர்ப்பு இல்லை. ஜோதி பிரகாஷின் எடிட்டிங்கும் அப்படியே.

சீதா, நகுலை மருத்துவமனையில் இருந்து கடத்தி வரும் காட்சி, ராம்ஜெத்மலானி வருகிறார் என்பது நகுல் பொய் சொல்லி நடிப்பது... லாஜிக் ஓட்டைகள் நிறைய.

எடுத்துக்கொண்ட கனமான கதைக்கு ஏற்ப திரைக்கதையை இழுத்துப் பிடித்த, தேவையானவற்றை நறுக்கி விட்டிருந்தால் கதை நறுக்சுறுக்குன்னு இருந்திருக்கும்.

கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடும் காரை எங்கு நிறுத்துவது என்று தடுமாறும் டிரைவரைப் போல தடுமாறி இருக்கிறார் இயக்குனர் பிரிதிவி ராஜ்குமார்.

வாசகர் கருத்து

navasathishkumar - MADURAI,இந்தியா
14 மே,2013 - 14:25
navasathishkumar இந்த படம் வித்தியசயமாக இருந்தது , நகுள் நடிப்பு perfect ,,,உடம்பை காட்டாமல் நடிகன் நடிக்கலாம் நாமளும் நம்பலாம் அந்த operation தழும்பை ஓட்டைகள் சில ராஜாவின் பலம் குறையவில்லை ..
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
06 மே,2013 - 20:04
ரெட்டைவால் ரெங்குடு படம் நல்ல தான் இருக்கு.. ஆனா நகுல் அக்டிங் சகிக்கலை.. பாவம் அவரு என்ன செஞ்சாலும் படத்தோட ஒட்ட மாட்டேன்குது.. வேற யாராவது நடிச்சிருந்த நல்ல இருந்திருக்கும்..
vinudharan - tirupur,இந்தியா
02 மே,2013 - 22:02
vinudharan இந்த படம் எதிர்பார்த்த விட ரொம்ப நல்ல இருந்திச்சு . நல்ல மெசேஜ்yaயும் சொல்லிருக்காங்க.என்டேர்டைநிங் அகவும் இருக்கு.இந்த மாதிரி படத்தை நல்ல டைம் la விளம்பரபடுத்தி ரிலீஸ் பனிருகலாம்
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29 ஏப்,2013 - 13:01
kumaresan.m " நான் ராஜாவாகப் போகிறேன் என்று சொல்லி விட்டு கூஜாவாகமல் இருந்தால் மிக்க நன்று "
Advertisement

மேலும் விமர்சனம்

டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in