Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

6

30 செப்,2013 - 13:41 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » 6

  

தினமலர் விமர்சனம்


‘12பி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களில் நடித்திருந்தும் எதிர்பார்த்த இடத்தை இன்னமும் பிடிக்காமல் இருக்கும் கதாநாயகர் ஷாமுக்கு முன்னணி இளம் ஹீரோக்கள் வரிசையில் இடம்பிடிக்க ஏதுவாக வெளிவந்திருக்கும் படம். ‘முகவரி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களை இயக்கி இருந்தும் தனக்கென சரியான ஓர் இடத்‌தை பிடித்து வைத்துக்கொள்ளாத இயக்குநர் வி.இசட்.துரைக்கு சரியான ஒரு இடத்தை பெற்றுத்தர வெளிவந்துள்ள திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை, எதிர்பார்க்கப்பட்டதற்கும் மேலாக பூர்த்தி செய்யும்படியாக பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் வந்திருக்கிறது ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் என்றால் மிகையல்ல!
இந்திய அளவில் ‘நெட்வொர்க்’ அமைத்து குழந்தை கடத்தும் கும்பலை பற்றிய கதைதான் ‘6 மெழுகுவர்த்திகள்’ மொத்த படமும்! குழந்தைகள் எதற்காகவெல்லாம் கடத்தப்படுகின்றன... எங்கெல்லாம் விற்கப்படுகின்றன... எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படுகின்றன என்னும் விஷயங்களை இதுவரை இந்திய மொழிப்படங்களில் இவ்வளவு விலாவாரியாக யாரும் சொல்லியிருப்பார்களா? தெரியவில்லை! அந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குநர் வி.இசட்.துரைக்கு இந்திய அளவில் சிறந்த இயக்குநர் என்னும் தேசிய விருதினை கொடுக்கலாம்!
‘6 மெழுகுவர்த்திகள்’ கதைப்படி, தங்கள் ஒற்றை ஆண் குழந்தையின் 6வது பிறந்த தினத்தின்போது கேக் எல்லாம் வெட்டிமுடித்தும் முடிக்காமலும் ஹாயாக ‌குழந்‌தையுடன் மெரீனா பீச்சுக்கு போகிறது ஷாம்-பூனம் கவுரின் அழகிய சிறு குடும்பம்! அங்கு சின்னதாக ஒரு கவன பிசகலில் இருவரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேட, எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை! இவர்களின் கதறலை பார்த்துவிட்டு ஓடிவரும் சுற்றமும் நட்பும் கூறும் ஆலோசனையின்படி போலீசுக்கு போகின்றனர். முதலில் போக்கு காட்டும் போலீசும் பிறகு சமூக விரோதிகளை சட்டத்திற்கு தெரியாமல் அடையாளம் காட்டி அவர்கள் கேட்பதை கொடுத்து குழந்தையை மீட்டுக்கொள்ளும்படி ‘எஸ்’ ஆகிறது! அப்புறம்? அப்புறமென்ன? குழந்‌தையைத் தேடி ஷாம், ஆந்திரா நகரி, வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என அவர்கள் கைகாட்டும் இடங்களுக்கு எல்லாம் போய் பல இடங்களில் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சில இடங்களில் ஆக்ஷனிலும் இறங்கி, 50 லட்சம் காசையும் கொடுத்து, குழந்தையை மீட்டாரா, இல்‌லை மீட்டெடுக்க முடியாது மாண்டாரா?! என்பது திக்திக்திக் க்ளைமாக்ஸ்!
ஷாம், ராம் என்னும் அப்பா கேரக்டரில் நடிக்கவில்‌லை. வாழ்ந்திருக்கிறார். அவரும் பூனம் கவுரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேடும் காட்சிகளில் ஏதோ படம் பார்க்கும் நாம், நமது குழந்தை செல்வத்தை தொலைத்துவிட்டு தேடுவது போன்றதொரு பிரமை, பயம், திகில் நம்முள் புகுந்துகொண்டு நம்மையும் ராம் என்னும்‌ ஷாமாகவே மாற்றி குழந்தையை தேடவைக்கும் கதை ஓட்டமும் காட்சி பதிவுகளும் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தின் பெரிய ப்ளஸ்! ஷாம் தைரியமாக இருங்கள். இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருதுகளும் விழாக்களும் ஏராளம் காத்திருக்கிறது!
நாயகி பூனம் கவுர் லிஸியாக வாழ முற்பட்டிருக்கிறார். மற்றபடி ஷாம்-பூனம் ஜோடியின் நண்பர் குடும்பம் தவிர யாரென்றே தெரியாமல் போலீசுக்கு போகச்சொல்லி உதவ வரும் நபரில் தொடங்கி, போலீஸ் இன்ஸ், கான்ஸ்டபிள், கார் டிரைவர், போபால் மலையாளி வில்லன்‌, கொத்தா பொட்டுவைத்த தாதா வரை எல்லோரும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ குழந்தை கடத்தலில் சம்பந்தப்பட்ட கொடூரமானவர்கள். க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு உதவும் அந்த ‘பாயை’ தவிர மற்ற அனைவரும் மிக மோசமானவர்கள். ஒவ்வொரு படத்திலும் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்களை காட்டும் நம் சினிமாக்காரர்களுக்கு சவுக்கடி தரும் விதமாக அந்த இஸ்லாமிய பெரியவரை நல்லவராக காட்டி குழந்தை கடத்துபவர்களும் தீவிரவாதிகள்தான்... என தங்கள் மதத்தினருக்கு ஆறுதலை தர முயன்றிருக்கிறார்கள் இயக்குநர்  வி.இசட்.துரை, நாயகர் ஷாம், தயாரிப்பாளர் மீடியா இன்ஃபினிட்டிவ் நிஜாம் உள்ளிட்டவர்கள்! இவர்களின் முயற்சிக்கு ஸ்ரீகாந்த் தேவாவின் மிரட்டல் இசையும், கிருஷ்ணசாமியின் பிரமாண்ட ஒளிப்பதிவும் பக்க(கா)பலமாக இருந்து 6 மெழுகுவர்த்திகளை ஒளிரவைத்திருக்கின்றன.!
ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!


------------------------------------

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஐ டி ல ஒர்க் பண்ற ஹீரோ, தன் மனைவி , மகனோட பீச்சுக்குப்போறாரு. அன்னைக்குத்தான் பையனோட 6 வது பர்த்டே .( டைட்டில் க்கு காரணம் ) அந்த கூட்டத்துல பையன் எப்படியோ மிஸ் ஆகிடறான். அம்மா , அப்பா 2 பேரும் பதறி பீச் பூரா தேடறாங்க , பையன் கிடைக்கலை . போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் தர்றாங்க.
குழந்தைகளைக் கடத்தறதையே தொழிலா வெச்சிருக்கும் கும்பல் நெட் ஒர்க் பற்றி தெரிஞ்சு தேடுதல் வேட்டை நடக்குது . ஹீரோ எப்படியோ பையனைக்கடத்தின ஆளைக்கண்டு பிடிச்சுடறார். ஆனா அவன் ஒரு கோடி பணம் கேட்கறான். பேரம் பேசி 50 லட்சம் ரூபாவுக்கு ஓக்கே சொல்ல வைக்கறார்.
ஆனா பணம் கொடுத்த பின்னும் தகராறு நடந்ததுல அந்த குரூப் எஸ் ஆகிடுது. எப்படி ஹீரோ பையனைக் கண்டுபிடிக்கறாரு என்பதுதான் ஆக்‌ஷன், பரபர காட்சிகள் கொண்ட திரைக்கதை .
இயக்குநர் சாதாரண ஆள் இல்லை . அஜித் -ன் வித்தியாசமான படமான முகவரி , பரத் -ன் ஆக்‌ஷன் த்ரில்லர் நேபாளி ஆகிய படங்களின் இயக்குநர் . பாடல்களும் எழுதி இருக்கார் . அவர் தான் படத்தின் முதல் ஹீரோ . எடுத்துக்கொண்ட கதையை விட்டு விலகாம எந்த விதமான கமர்ஷியல் காம்ப்ரமைஸ்ம் பண்ணிக்காம அழுத்தமான திரைக்கதை கொடுத்திருக்கார். மேக்கிங் ஸ்டைலும் ஓக்கே.
ஷாம் தான் ஹீரோ . இவருக்கு இது சொந்தப்படம் . தூங்காம பல நாட்கள் விழிச்சிருக்காரு என்பதைக்காட்ட கண்ணுக்கு கீழே கட்டி வந்த கெட்டப் , ஆள் இளைக்கும் காட்சி விக்ரம் மாதிரி சிரத்தையா பண்ணி இருக்கார் . வெல்டன் ஷாம் .
பூனம் கவுர் தான் நாயகி . இவருக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் வந்த வரை நல்ல நடிப்பு . உனக்கு எத்தனை குழந்தை வேணும் ? நான் பெத்து தர்றேன் , நம்ம பையன் கிடைக்காட்டி பரவால்லை , நீயாவது திரும்பி வா என கதறும் டெலிபோன் காட்சியில் அவர் நடிப்பு அருமை .
படத்துக்கு வசனம் ஜெயமோகன். குறிப்பிட்டு சொல்லும்படி 6 இடங்களில் தான் வசனம் பிரமாதம் .பட டைட்டிலை நினைவுல வெச்சுக்கிட்டார் போல. ஆனால் தேவை இல்லாமல் வழ வழா கொழா கொழா வசனம் ஏதும் இல்லை , எல்லாம் நறுக்குத்தெறித்தாற் போல . குட் ஒர்க்.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


*  எதிர் பாராத நேரத்தில் ஒரு பிச்சைக்காரன் காலில் விழுந்து ஹீரோயின் கதறும் காட்சி பகீர் . குழந்தையைப் பறிகொடுக்கும் பெற்றோர் மனம் எப்படி பரிதவிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம்.
*  குழந்தையைத்தேடி ரோட்டில் இரவில் ஓடும் ஹீரோ தனியாக நிற்கும் ஒரு குழந்தையை அதன் குடிசை வீட்டில் ஒப்படைக்க முயல அங்கே தொழில் நடத்தும் கில்மா லேடி “ எல்லாம் என் குழந்தை தான், தெரியும், நாங்க பார்த்துக்குவொம்’’ என அசால்ட்டாக சொல்லும் காட்சி சமூக அவலத்தை சொல்லும் சுருக் காட்சி.
*  அரிசி வியாபாரி தன் பேரன் மேல் பொய் சத்தியம் செய்வதும் , அதை ஷாம் கண்டு பிடிப்பதும் நல்ல சஸ்பென்ஸ் காட்சி.
*  அரவாணி போல் வந்து எடுபுடி மாதிரி நடப்பவர்தான் உண்மையில் அந்த கூட்டத்துக்கே பாஸ் என்பதும் சரியான திருப்பு முனைக்காட்சி . அவரின் வில்லத்தன நடிப்பு தமிழுக்கு புதுசு.
*  ஹீரோயின் கோதுமை அல்வா மாதிரி இருந்தாலும் , அவர் தாராள மனம் கொண்டவர் என்ற பிளஸ் பாயிண்ட் இருந்தும் ஒரு டூயட் கூட வைக்காமல் திரைக்கதையை க்ரிஸ்ப் ஆக நகர்த்திய இயக்குநரின் சாமார்த்தியம்.
*  தன் மகன் ஆபத்தில் இருக்கான் என்ற உணர்வு இருந்தும் இன்னொரு பொண்ணைக்காப்பாற்ற ஹீரோ துடிப்பது சபாஷ் இயக்கம்.
*  பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அப்பாவும் இந்த மாதிரி கும்பல் ல 4 பேரையாவது வெட்டிப்போட்டாதான் இவனுங்களுக்கு எல்லாம் பயம் வரும் என ஹீரோ பேசும் காட்சியில் அரங்கம் அதிர்ந்தது . பிரமாதமான காட்சி.
*  படத்தில் வரும் அனைத்து வில்லன்கள் நடிப்பும் அருமை , நல்ல தேர்வு , எல்லாரும் பொறுக்கிப்பசங்க போல.

இயக்குநரிடம் சில கேள்விகள்

*  போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க ஹீரோ என்ட்டர் ஆகும்போது வலது கையில் வாட்ச் கட்டி இருப்பவர் அடுத்த ஷாட்டில் ஏட்டய்யா முன் நிற்கும்போது இடது கையில் வாட்ச் கட்டி இருப்பது ( கண்ட்டிநியூட்டி மிஸ்சிக்).
*  சம்பவம் நடந்த 36 மணி நேரத்தில் அதாவது ஒன்றரை நாளில் ஹீரோவுக்கு மழு மழு கன்னம் டூ 20 நாட்கள் தாடி வந்து விடுவது.
*  குழந்தையைப் பறிகொடுத்த பதட்டத்தில் இருக்கும் ஹீரோ,  பின் யாரோ ஒரு வழித்துணை என காரில் நெடும் பயணம் மேற்கொள்வது ஏன் ? வசதி ஆனவர்கள் தானே, டாக்சி வைத்திருக்கலாமே? அவங்க 2 பேருமே 1000 கிமீ மாறி மாறி டிரைவிங் செய்வது ரிஸ்க் ஆச்சே?
*  கடத்திய கும்பல் தலைவன், ‘பையனை காட்ட மாட்டேன், பணத்தை என் அக்கவுண்ட்ல போடு, காட்டறேன். முதல்லியே காட்டுனா நீ தகறாரு செஞ்சு பையனை கூட்டிட்டுப்போயிடுவே’ என்கிறார் , ஓக்கே நேரில் காட்ட வேண்டாம், செல்போன் வீடியோவிலோ, போட்டோவிலோ பையனை காட்டு, அப்போதான் பையன் உன் கிட்டே இருக்கானா என்பதை உறுதி செய்ய முடியும்னு ஹீரோ ஏன் வாதாடலை ?
*  ஹீரோவுக்கும் , கடத்தல் கும்பல் தலைவனுக்கும் தகறாரு. டக்னு ஹீரோ மனைவிக்கு போன் பண்ணி பேசினபடி அந்த அக்கவுண்ட்ல பணம் போட வேண்டாம் அப்டினு ஏன் சொல்லலை? அதே போல் மனைவி பணம் ரெடி பண்ணியதும், ஏங்க பணம் ரெடி போட்டுடலாமா? என ஏன் கணவனிடம் கேட்கலை ? பொதுவா பொண்டாட்டிங்களுக்கு புருஷன் பேச்சை கேட்கும் பழக்கம் இல்லை என்றாலும் பணம் விஷயம் , தொகை அதிகம் என்பதால் கண்டிப்பா கேட்பாங்களே ?
*  எல்லாம் முடிஞ்சு மீண்டும் தேடுதல் பயணத்தில் இருக்கும் ஹீரோ ஏன் மனைவிக்கு தொடர்ந்து கால் பண்ணவே இல்லை ? ஹீரோயின் போன் பண்ணி ஏன் போன் பண்ணலை என கேட்கும்போது கூட எந்த ரீசனும் சொல்லலையே ஏன் ?
*  வீட்டை வித்து இருவர் வேலை செய்யும் ஆபீசில் லோன் வாங்கி 50 லட்சம் ரூபா புரட்டிய பின் அதுவும் பறி போன பின் ஹீரோவுக்கு மீண்டும் செலவுக்கு ஏது அத்தனை பணம் ?
*  குழந்தையை பறிகொடுத்த ஹீரோ பிச்சைக்காரன் போல் மேக்கப்பில் இருக்க ஹீரோயின் 13 ரீலிலும் செம மேக்கப்பில் இருப்பது எப்படி ?
*  க்ளைமாக்சில் பையன் திரும்ப சந்திக்கும் காட்சியில் பின்னணி இசை பிரமாதப்படுத்தி இருக்க வேணாமா? காதலுக்கு மரியாதை படத்தில் இளைய ராஜா ஒரு பி ஜி எம் போட்டிருப்பாரே க்ளைமாக்சில் எல்லாரும் அந்த காதலுக்கு சரி சொல்லும்போது அது போல் ஜீவனுடன் இருக்க வேண்டாமா பின்னணி இசை ?

மனம் கவர்ந்த வசனங்கள்

*  பிச்சைக்காரனுக்கு பிச்சை கிடைக்கும் நாள் எல்லாம் விசேஷ நாள் தான்
*  எனக்கு காசு ஏதும் வேண்டாம், மேலே இருக்கறவன் கீழே இருப்பவனுக்கு ஒரு ரூபாயை சுண்டி பிச்சையா போடுவீங்களே அந்த மாதிரி கீழே இருப்பவன் மேலே இருப்பவனுக்கு பிச்சை போட்டதா இந்த உதவியை நினைச்சுக்கறேன்.
*  இங்கே கிருஷ்ணராவ் இருக்காரா?
ஆந்திராவில் பாதிப்பேரு கிருஷ்ணராவ் தான் , உனக்கு எந்த கிருஷ்ணராவ் வேணும் ?
*  கடப்பாரை எடுத்து என்னை ஏத்தி இருந்தாக்கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன், ஆனா கடப்பாரைலயே என்னை இறக்கிட்டயே
*  என்னைப்பார்த்தா உனக்கு என்ன தோணுது ?
நீ மாமாப்பையன் தானே? ( தியேட்டரில் அப்ளாஸ் )
*  நீ என்ன சொன்னாலும் நான் கேட்கறேன்
நான் சொல்றதைக்கேட்க சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யும் 1000 பேர் எனக்கு இருக்காங்க
சி பி கமெண்ட் - 6 மெழுகுவர்த்திகள் - குழந்தைகடத்தல் பற்றிய அழுத்தமான பதிவு. ஷாம்க்கு பிரேக் கொடுக்கும் படம். ஆனால் கமர்ஷியலாய் பெரிய அளவில் ஹிட் ஆவது டவுட். போட்ட முதலீட்டை எடுத்துவிடும். ஏ சென்ட்டரில் மட்டும் நல்லா ஓடும்.
படம் பெண்களும் பார்க்கலாம்.

-------------------------------------------

குமுதம் விமர்சனம்


அச்சு பிச்சு அசட்டு காமெடிகள் தமிழ்த் திரையுலகை நிரப்பி வரும் அபாய கட்டத்தில், அழுத்தமான கதையுடன் தலை நிமிர்ந்து வந்திருக்கிறது 6 மெழுகுவர்த்திகள்.
ஆறாவது பிறந்த நாள் அன்று சிறுவன் கடற்கரையில் காணாமல் போக, அவனைக் கண்டுபிடிக்கும் தந்தையின் பாசப்போராட்டமே படம்.
முதல் முறையாக ‘நடித்திருக்கிறார்’ ஷாம். அன்பு, பாசம், கோபம், இரக்கம் என்று எல்லாம் தனக்கு வரும் என்பதை நிரூபித்திருக்கிறார். இத்தனை நாளாய் இவ்வளவு திறமையை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? அதுவும் ஏதோ ஒரு குழந்தையின் உடலைப் பார்த்துவிட்டு, அது தன் மகனாக இருக்குமோ என்று நடுங்கிப் பதறி விலகித் தெறிக்கும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.
நாயகி பூனம் கவுர் தானும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். அதுவும் காணாமல் போன மகனைப்பற்றிய விஷயம் ஒரு பிச்சைக்காரனுக்குத் தெரியும் என்ற நிலையில், அவனது அழுக்குப் பிடித்த காலைத் தொட்டுக் கதறும் காட்சி ஒரு முத்திரை. மகனையும் காணவில்லை, தேடிப்போன கணவனின் நிலை‌யும் தெரியவில்லை என்ற கட்டத்தில் தொலைபேசும் கணவனிடம் ‘நீயாவது வாடா. நான் உனக்கு எத்தனை புள்‌ளை வேணும்னாலும் பெத்துத் தரேன்’, என்று விசும்பும் இடமும் நெகிழ்ச்சி.
அந்தச் சிறுவன் பளிச்.
இந்தியா முழுக்க கடத்தப்படும் குழந்தைகளின் அவலத்தை சினிமாத்தனம் இல்லாமல் நிஜம் போலவே காட்சிப்படுத்தியதற்காகவே இயக்குநர் வி.இஸட்.துரையைக் கட்டியணைத்துப் பாராட்டலாம்.
குழந்தை காணாமல் அதுவும் பல மாநிலக் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் இடத்தில் சுவரில் அந்தந்த மாநில மொழியில் குழந்தைகள் தங்கள் தவிப்பைக் கிறுக்கியிருப்பது கண்கள் தளும்பும் கவிதை.
குழந்தை காணாமல் போனது முதல் ‌போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற இவர்கள் வீட்டிலேயே தங்கும் அந்த வழுக்கைத் தலை ஆசாமி யாருங்க? தயாரிப்பாளரோட மச்சானுங்களா? சிரிக்கிறாய்ங்க பாஸ்!
மலையாள மொழி பேசி, திருநங்கை போல் நடிக்கும் அந்த மனிதர் சும்மா வெத்துவேட்டு என்று நினைத்தால் அவர்தான் பயங்கரமான வில்லன் என்று தெரியவரும் காட்சி திடுக்.
அது சரி, படத்தில் வரும் வில்லன்கள் எல்லாம் அடி வாங்கி்ச் சாவதற்கு முன் பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார்களே, அது ஏன் சார்? முடில!
தன் மகனைக் காப்பாற்றப் போகும் முயற்சியில் ஏதோ ஒரு சிறுமியைக் காப்பாற்றும் ஹீரோயிஸமும், அதைத் தொடர்ந்து தான் தவறு செய்துவிட்டதாய் அழும் யதார்த்தமும் நன்று.

6 மெழுகுவர்த்திகள் - மனம் உருகுகிறது!
குமுதம் ரேட்டிங் - நன்று


---------------------------------------

கல்கி விமர்சனம்


ஆசையாய் வளர்த்த மகன் காணாமல் போய்விட்டால் பெற்றோர் படும் அவஸ்தை என்ன? காணாமல் போகும் குழந்தைகள் ‌சந்திக்கும் கொடுமைகள் என்ன? நம்மைச்சுற்றி கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவு கொடூரங்கள் நடக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது ‘6 மெழுகுவர்த்திகள்’.
சாப்ட்வேர் இன்ஜினியராக வரும் ஷாம் நல்ல அப்பாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஷாம் குழந்தையைக் காணவில்லை என காவல்நிலையம் போக அங்கு அவர்கள் காட்டும் அலட்சியம் இன்றைய சமூக அவலத்தைப் பிரதிபலிக்கிறது.
கெளதம் பிறந்தது முதல் 6 வயதுவரை அடிக்கும் லூட்டி, அவன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து ‘அம்மா வளர்ந்திடுச்சு’ என்று சொல்லும் காட்சி, கூடவே இடம்பெறும் பாடலும் படத்தின் அழகான பதிவுகள். எழுத்தாளர் ஜெயமோகனின் வசனம் படத்துக்கு பக்கபலம்.
ஆந்திர நகரில் மாட்டிறைச்சிக் கடையில் உள்ளே நுழையும்போது அந்த நாற்றத்தோடு ஒரு பயங்கரம் நிலவப்போகிறது என்பதையும் கிருஷ்ணசாமியின் கேமரா காட்சி உணர்த்திச் செல்வது பிரமாதம்.
மகனைத் தவறவிட்ட நாயகன் ஷாம் ஆந்திரம், மும்பை, போபால், கொல்கத்தா என சுற்றித்திரிய, நாயகி பூனம் கெளர் தம் வசனங்களில் அனுதாபத்தை ‌அள்ளிக் கொடுக்கிறார். இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா குத்துப் பாட்டுக்கு மட்டுமல்ல; நல்ல கதை அம்சப் படத்துக்கும் ஜீவனுள்ள இசையைத் தர முடியும் என நிரூபித்துள்ளார்.
படத்தில் குழந்தை கடத்தல் விஷயம் மட்டுமே போதுமா? நல்ல தரமான படம்தான். ஆனால் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க சுவாரஸ்யம் முக்கியமாச்சே! படத்தில் ‘மகாநதி’ படச் சாயலும் டாகுமென்டரி படச்சாயலும் இருப்பது தவிர்க்க முடியவில்லையே.
6 மெழுகுவர்த்திகள் - சூரிய பிரகாசம்.

வாசகர் கருத்து ()

தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in