Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

3

3,Three
09 ஏப், 2012 - 10:49 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » 3

 

தினமலர் விமர்சனம்



படம் வெளிவருவதற்கு முன்பே உலகம் முழுக்க பாப்புலரான "ஒய் திஸ் கொலவெறி..." பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கும் 2வது தமிழ்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ‌வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "3".

கதைப்படி பள்ளிப்பருவ காதல், பருவ வயதிலும் தொடர்ந்து ‌பெரிதாக, எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருமணத்தில் இணைகிறது தனுஷ் - ஸ்ருதிஹாசன் ஜோடி! பிஸினஸில் பல கோடிகள் நஷ்டமாகும் தனுஷ், "பை போலா டிஸ்ஆர்டர்" எனும் ஒரு வித வாயில் பெயர் நுழையாத மனநோயால் பாதிக்கப்பட்டு, ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதரையம் கடித்த கதையாக, பேயைப்பார்த்து, நாயை அடித்து (கொன்று), நண்பனையும் கடித்து, காதல் மனைவியையும் கொல்லத் துடிக்கிறார். மனநோய் முற்றி தனுஷ், மனைவி ஸ்ருதியை கொன்றாரா...? தன்னை தானே மாய்த்துக் கொண்டாரா...? என்பது தான் "3" படத்தின் திருப்பங்களும்(?) குழப்பங்களும்(!) நிறைந்த மீதிக்கதை!

தனுஷ், ராம் என்ற பாத்திரத்தில் மாணவராகவும், மணாளனா(நாயகி ஸ்ருதியின் மனம் கவர்ந்த)கவும், மனநோயாகளியாகவும் வெவ்வேறு பரிமாணங்களில் வித்தியாசமான கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்! பள்ளி மாணவராக சக மாணவி ஸ்ருதியின் பின்னால் அலைந்து, அவரது அப்பாவிடம் ப்ளார் என அறை வாங்கிய பின்பும், மறுநாளே அவர் வீட்டு வாசலில் போய் துணிச்சலாக நின்று "ஐ லவ் யூ" சொல்லு என அடம் பிடிப்பதில் தொடங்கி... மனநோய் முற்றி நாயகியின் "பெட்"டான நாயைக் கொன்று நாடகமாடி, நண்பனின் ம‌ண்டையை உடைத்து, நாயகியையும் கொல்லத் துணிவது வரை...பிரமாதமாக ராம் பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கும் தனுஷ், தன்னை தானே மாய்த்துக் கொள்வது, என்னதான் வாயில் பெயர் நுழையாத வியாதி என்றாலும் சற்றே ஓவர் ஆக்டிங்காக தெரிவது பலவீனம்.

ஸ்ருதிஹாசன், ஜனனி பாத்திரத்தில் மாணவி, காதலி, மனைவி என வெவ்‌வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமான நடிப்பைக் காட்டி வெளுத்து வாங்கியிருக்கிறார். கமலின் மகளா கொக்கா...? எனும் அளவிற்கு முத்தக்காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருப்பது புரட்சி! க்ளைமாக்ஸில் தனுஷ் தன்னைத் தானே தீர்த்துக் கொண்ட விதம் குறித்து அவரது நண்பர் செந்தில் சொல்ல கேட்டு கதறும், அதிரும் காட்சிகளில் ஸ்ருதியின் நடிப்பு திரையரங்கில் பச்சாயத்தை ஏற்படுத்துவதற்கு பதில் சிரிப்பலைகளை ஏற்படுத்துவது "3" படத்தின் மற்றுமொரு பெரிய பலவீனம்!

மற்றபடி தனுஷ், ஸ்ருதி மாதிரியே அவர்களது நண்பர்களாக வரும் செந்தில் மற்றும் குமார் எனும் சிவகார்த்திகேயன், டியூசன் மாஸ்டர், தனுஷின் அப்பா பிரபு, அம்மா பானுப்ரியா, ஸ்ருதியின் அம்மாவாக வரும் ரோஹினி, ஸ்ருதியின் தங்கையாக வாய்பேச முடியாத பள்ளி சிறுமியாக வரும் பேபி நட்சத்திரம் உள்ளிட்ட எல்லோரும் நச் என்று நடித்து நம்மை டச் பண்ணி விடுகிறார்கள் பலே பலே! அதிலும் அப்பா நடிகர் ஆகிவிட்ட பிரபு பிரமாதம்! லைப் மேட்டர் பேசணும்பா... என அடிக்கடி அப்பா பிரபுவின் முன் தனுஷ் நிற்பதும், பிரபு முதலில் மகனை சிரிப்பாக்குவதும், பின் தனுஷ் சொல்லும் விஷயத்தை சீரியஸாக அணுவதும் பிரமாதம். தனுஷ் தான் சாவதற்கு முன் அப்படி ஒரு லைப் மேட்டரை பிரபுவிடம் பேசப்போய், அதற்கு ஓ.கே. சொல்லும் பிரபு, இனி அப்படி பேசவரக்கூடாது என தனுஷை எச்சரிப்பதும் சென்டிமெண்ட் டச்!

ஆர்.வேல்ராஜின் குதுகலமான ஒளிப்பதிவு, அறிமுக இசையமைப்பாளர் அனிருத்தின் கொலவெறி இசை( எதிர்பார்த்த அளவுக்கு விஷூவலாக கொலவெறி ஒன்னும் பெரிதாக இல்லை) உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் 3-யை முன்பாதியில் சரியாகவும், பின்பாதியில் சரியும்படியும் இயக்கி இருக்கும் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் மிகவும் துணிச்சல்காரர்தான்! இல்லையென்றால் தன் கணவர் தனுஷை, என்னதான் கதைக்காக என்றாலும் கதாநாயகி ஸ்ருதியுடன் அத்தனை நெருக்கமாக நடிக்க வைத்து, அதை வெறும் காமிரா கண்களோடு மட்டும் பார்த்து ரசித்திருக்க முடியுமா...? அந்த தைரியத்திற்காகவே ஐஸ்வர்யாவை பாராட்டலாம்! மேலும் சின்ன வயது முதல் தான் மிகவும் நெருக்கமாக பார்த்து, பயந்த, தெளிந்த யாரோ ஒருவருடைய கதையில் தன் கண்வர் தனுஷை நடிக்க வைத்து, தன் மனதில் இதுநாள் வரை சிறைபட்டுக்கிடந்த சிக்கலான விஷயங்களை எல்லாம் சீனாக்கி "3" படத்தை செதுக்கி இருக்கறாரோ இயக்குநர்...? எனும் அளவிற்கு அறிமுக படத்திலேயே அத்தனை விஷயங்களையும், அவசரம் அவசரமாக திணித்திருக்கும் ஐஸ்வர்யா அடுத்தடுத்த படங்களில் என்ன செய்யப் போகிறார்...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

படத்தின் முன்பாதி காமெடி தூணாக விளங்கும் சிவகார்த்திகேயன், சிங்கப்பூர் போய்விட்டதாக திடீரென தனுஷூம், செந்திலும் டயலாக்கிலேயே அவர் எஸ்கேப் ஆன சீனை முடிப்பது ஏன்...? மனைவியிடம் தனக்கு மனநோய் என்பதை காட்டிக் கொண்டு ட்ரீட்மெண்ட் எடுத்து கொள்ள விரும்பாத தனுஷ், நிரந்தரமாக தன்னை மாய்த்துக் கொண்டு மனைவியை அம்போ என விடத்துணிவது எதற்கு...? தனுஷ் படம் என்றாலே உடன் இருக்கும் உயிர் நண்பனின் மண்டையை பீர் பாட்டிலால் தனுஷ் பிளந்தே ஆகவேண்டும் என்பதை ஐஸ்வர்யாவின் படத்திலும் காட்சிபடுத்தியிருப்பது எப்படி...? என்பது உள்ளிட்ட இன்னும் பல விவாத வினாக்கள் "3" படத்தை பார்த்ததும் எழுவது, சகஜமென்றாலும், தன் அக்கா ஸ்ருதி அவரது காதலுக்காக அப்பா, அம்மாவிடம் அடிவாங்கும் காட்சியில் வாய்பேச முடியாத தங்கை தயங்கி, தயங்கி போட்டும் விடுப்பா... என ஆச்சர்யப்படுத்தும் வகையில் பேசி அக்காவின் காதலுக்கு பெற்றோரை அரை மனது குறைமனதாக பச்சைகொடி காட்ட வைக்கும் ஒரு காட்சி போதும் அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா ஆர்.தனுஷின் நெறியாள்கை ‌நேர்மைக்கு கட்டியம் கூற! வாவ் கீப் இட் அப் மிஸஸ் தனுஷ்!!

எல்லாதரப்பினரையும் சற்றே மனச்சிதைவு நோய்க்கு உள்ளாக்கி வரும் இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில், மனநோயாளி சைக்கோ, எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... கேரக்டர்களை ஹீரோவாக்கி அவர்களின் மனம் மேலும் சிதையக் காரணமாகும் இதுபோன்ற கதைகளால் என்ன லாபம் இருக்க முடியும்...?! என இயக்குநரை பார்த்து கேட்கத் தோன்றினாலும், ஐஸ்வர்யா தனுஷ் தான் எடுத்துக் கொண்ட கதைக்கு நூறு சதவிகிதம் உண்மையாக உழைத்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு பிரேமும் சொல்கிறது! அதுவே "3"க்கு கிடைத்த "நம்பர்-1".

ஆக மொத்தத்தில் "த்ரி(3)" - புதிர் "தீ"



-------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்



ஒரு பணக்காரப் பையனும் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணும் பள்ளி நாட்களிலிருந்தே காதலிக்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு பெற்றோரின் எதிர்ப்புடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். சுமூகமாக அவர்களின் வாழ்க்கை நகர்கிறது. திடீரென ஒரு நாள் அந்தப் பையன் கழுத்தறுபட்டு வீட்டில் இறந்து கிடக்கிறான். அவனுக்கு ஏன் இந்த முடிவு என்பதுதான் "3".

வீட்டுக்குச் செல்லப்பிள்ளை என்ற பலமுறை கைகொடுத்த கேரக்டர்தான் தனுஷூக்கு. “லைஃப் மேட்டர்ப்பா’ என்று தனுஷ் அடிக்கடி தன் தந்தையிடம் போய் நிற்கும் காட்சி முதலில் சிரிக்க வைக்கிறது. அப்புறம் அழவைக்கிறது. இரண்டிலும் தனுஷின் அக்மார்க் அசத்தல். “பைபோலார் டிஸ்ஸார்டர்’ என்கிற மனநலக் குறைபாட்டுக்கு ஆளானவராக வரும்போது, நேரெதிரான நடிப்பைக் காட்டி மிரட்டிவிடுகிறார்.

கோபம், தாபம், காதல், துயரம் என்று அத்தனை எக்ஸ்பிரஷன்களும் ஸ்ருதியிடமிருந்து அழகாக வந்துவிழுகின்றன. அழுகாச்சி மட்டும் ஓவர்டோஸ். தனுஷ், ஸ்ருதியின் நெருக்கமான ரொமான்ஸ் இளசுகளுக்கு கிக்கான கிஃப்ட்.

தனுஷின் நண்பன் சிவகார்த்திகேயன் சின்னச் சின்ன கேப்களில்கூட காமெடி சரவெடி கொளுத்திவிட்டு, திடீரென எஸ்கேப் ஆகிவிடுகிறார். தனுஷூக்கு இன்னொரு நண்பனாக வருகிற சுந்தர் கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ. காணாமல் போன நாயின் முடிவு தெரிந்தபிறகும், ஸ்ருதிகாக தனுஷ் அதை சீரியஸாகத் தேட, சுந்தர் பதறும் காட்சி பகீர் ரகம்.

ஸ்ருதியின் வாய் பேச இயலாத தங்கையாக வருகிற அந்தச் சிறுமி யாரோ? ஸ்ருதியின் காதலில் குடும்பமே அதிர்ந்துபோய் நிற்க, திக்கித் திக்கிப் பேசி அனைவரையும் உருக வைத்துவிடும் காட்சிகள் பின்னி பெடலெடுத்திருக்கிறாள்.

தனுஷின் பக்கா ஜெண்டில்மேன் தந்தையாக வருகிற பிரபு, ஸ்ருதியின் அம்மாவாக வரும் ரோகிணி, கோபத்தை ஸ்பெக்ஸுக்குள் அடக்கி வைத்திருப்பது போலவே தெரிகிற ஸ்ருதியின் தந்தை போன்றோர் கவனம் ஈர்க்கிறார்கள். தனுஷின் அம்மாவான பானுப்ரியாவுக்கு நடிக்க வாய்ப்புக் கொடுக்காமல், எந்நேரமும் பூவும் பட்டுப் புடவையும் கொடுத்து திருப்தியடைந்து விட்டார்கள்.

அறிமுக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு ஆகியவை 3ஐ தாங்கிப் பிடிக்கின்றன. இந்தியாவே எதிர்பார்த்த “கொலைவெறி?’ பாடல் தர்மசங்கடமான சூழலில் வந்து நிற்க, விசில் அடிக்கவா கேண்டீன் போகவா என்று ஆடியன்ஸுக்கு குழப்பம்.

பள்ளிப் பருவத்திலேயே காதலுக்கு அஸ்திவாரம் போடும் கதைகளை நம்மவர்கள் விடவே மாட்டார்களா? மிட்நைட் பார்ட்டியின் தள்ளுமுள்ளுக்கு நடுவே ஸ்ருதிக்கு தனுஷ் தாலி கட்டுவது, திருமணத்துக்குப் பிறகு இருவரும் கையில் மதுக் கோப்பைகளோடு ரொமான்ஸ் பண்ணுவது உள்ளிட்ட “புதுமை’கள் கதைக்குத் தேவைப்பட்டதாகத் தெரியவில்லை.

இரண்டாம் பாதியில் தனுஷ் காட்டும் சைக்கோ முகத்துக்கு முதல் பாதியிலேயே க்ளூ கொடுத்திருந்தால் ஸ்கிரிப்ட் இன்னும் ஈர்த்திருக்கும். பைபோலார் டிஸ்ஸார்டர் குறைபாடு குறித்த விழிப்புணர்வைக் காட்டிலும் பயமுறுத்தலே படத்தில் மிஞ்சி நிற்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஹீரோ மரணம் என்ற அதிர்ச்சியோடு கதையைத் தொடங்கி, அதிலிருந்து துளியும் பின்வாங்காமல் தான் நினைத்ததைச் சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும்.

3 - முதல் இடத்துக்கு பக்கத்தில்

குமுதம் ரேட்டிங்: ஓகே



வாசகர் கருத்து (166)

lakshmi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31 மே, 2012 - 16:32 Report Abuse
 lakshmi நாட் good
Rate this:
ஸ்ரீநிவாஸ் - chennai ,இந்தியா
24 மே, 2012 - 16:46 Report Abuse
 ஸ்ரீநிவாஸ் நாட்டில் நல்ல மனிதர்களே இல்லையா. இவர்கள் குடும்பத்தினர் மட்டும் ஏன் இப்படி படம் எடுக்கிறார்களோ. இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
Rate this:
எ டு z - nellai,இந்தியா
21 மே, 2012 - 15:48 Report Abuse
 எ டு z dandanaka பிலிம் 3
Rate this:
radhakrishnan - trichy,இந்தியா
18 மே, 2012 - 17:45 Report Abuse
 radhakrishnan படமா இது. முடியல
Rate this:
து.வேல்முருகன் - gudiyatam,இந்தியா
13 மே, 2012 - 10:23 Report Abuse
 து.வேல்முருகன் என்னை பொறுத்த வரை ஒரு அழகான படம் தான் .வேறு ஒரு நடிகர் நடித்து இருந்தாலும் படம் நன்றாக இருந்திருக்கும் .கதைக்காக படம் ஓடியிருக்கும் ,ஆனால் தனுஷ் அளவுக்கு நடிப்பை சிறப்பாக வெளி படுத்தி இருக்க மாட்டார்கள் ,வெளிபடுத்தவும் முடியாது.நகைச்சுவை ,காதல்,அன்பு,கோபம் என்று அனைத்திலுமே நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.இவைகள் எல்லாமே தனுஷுக்கு கடவுள் கொடுத்த வரங்கள் தான். இப்போது வரும் படங்களில் இடை இடையே ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.அதை தவிர்த்தால் படம் எல்லோருக்குமே நன்றாக புரியும்.ஸ்ருதியும் நன்றக நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார்.பெண்களுக்கும் இந்த படம் பிடித்துள்ளது.ஏனென்றால் இந்த படத்தை பார்த்த ஏன் தோழியிடம் கேட்டேன் .அவளும் நன்றாக இருக்கிறது என்று தான் சொன்னால் .ஆகவே 3 படம் என் மனதில் எப்போதும் முதல் இடம்தான்.
Rate this:
மேலும் 161 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

3 தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in