1.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கே.வி.கதிர்வேலு
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - சசிகுமார், நிக்கி கல்ரானி
வெளியான தேதி - 26 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

தீபாவளி அன்றுதான் ஓடிடி தளத்தில் சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் என்ற ஒரு அரதப் பழசான கதை கொண்ட படத்தைப் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அதுவே மனதை விட்டு இன்னும் நீங்காத நிலையில் இந்த வாரம் ராஜவம்சம் என்ற மற்றுமொரு அரதப் பழசான கதை, காட்சிகள் கொண்ட படத்தைப் பார்க்க வேண்டியதாயிற்று.

இம்மாதிரியான படத்தைக் கொடுக்கும் இயக்குனர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்கிறார்களா இல்லையா என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. நிறைய படங்களைப் பார்த்தாலே மக்கள் மனநிலை என்னவென்பதைப் புரிந்து கொள்ளலாம். அப்படி புரிந்து கொள்ளாமல் தன்னை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களையும் கஷ்டப்படுத்தி ரசிகர்களையும் கஷ்டப்படுத்தி, இதெல்லாம் தேவையா என யோசிக்க வைக்கிறார்கள்.

சொல்ல வரும் கருத்து என்னமோ நல்ல கருத்துதான். தனிக் குடித்தனம் வேண்டாம், கூட்டுக் குடும்பமாக உறவுகளோடு வாழுங்கள் என்கிறது படம். அதை நச்சென்று சொல்லத் தெரியாமல், என்னமோ ஆரம்பித்து, எங்கெங்கோ சென்று, எதையெதையோ காண்பித்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் கதிர்வேலு.

44 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் கடைசி மகன் சசிகுமார். சென்னையில் ஐ.டி.கம்பெனி ஒன்றில் டீம் லீடராக இருக்கிறார். அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமண நிச்சயம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண் அவள் விரும்பிய மாமாவுடன் செல்ல சசிகுமார் உதவி செய்கிறார். தனது நிச்சயத்தை நிறுத்த உடன் வேலை பார்க்கும் நிக்கி கல்ரானியை தனது காதலி என பொய் சொல்லி குடும்பத்தார் முன் நிறுத்துகிறார். சந்தர்ப்ப சூழ்நிலை இருவரையும் திருமணம் செய்து கொள்ள வைத்துவிடுகிறது. அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இதுதான் படத்தின் மொத்த கதையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால், கூடவே சசிகுமார் வேலை பார்க்கும் கம்பெனியை காலி செய்ய மூன்று கார்ப்பரேட் முதலாளிகள் சதி வேலை செய்ய, அதை சசிகுமார் எப்படி முறியடிக்கிறார் என்பதும் இன்னொரு டிராக்கில் வருகிறது. இது தவிர காமெடி என்ற பெயரில் யோகிபாபு ஒரு தனி டிராக்... இப்படி பல விதங்களில் திரைக்கதை அல்லாடுகிறது.

சுப்பிரமணியபுரம் தந்த சசிகுமாரா இப்படியான படங்களில் எல்லாம் நடிப்பது என யோசிக்க வைக்கிறார். அடுத்தடுத்து எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் என இப்படியான படங்களில் நடிப்பதன் தேவை அவருக்கு வருமான ரீதியில் தேவைப்படுகிறது போலிருக்கிறது. அடுத்து இன்னும் சில படங்களை வெளியீட்டிற்கு வைத்திருக்கிறார் அவை எப்படி இருக்கப் போகிறதோ. பழைய சசிகுமாராக சீக்கிரம் திரும்பி வாருங்கள், அவ்வளவுதான் சொல்ல முடியும்.

நிக்கி கல்ரானி கதாபாத்திரத்தில் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த டிவிஸ்ட்டிற்குப் பிறகுதான் நிக்கிக்கு நடிக்கக் கொஞ்சம் வாய்ப்பு. அவரை வைத்தும் உறவுகளின் சிறப்பைச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் கார்ப்பரேட் வில்லன்களாக மூவர். அவர்களைப் பார்த்து ஒரு பதட்டம் கூட வரவில்லை. பல முறை நடித்த கதாபாத்திரத்தில் 2595வது முறையாக ராதாரவி நடித்திருக்கிறார். ஒரே குடும்பத்தில் அத்தனை நடிகர்கள், நடிகைகள். ஆளுக்கு ஒரு வரி வசனம் என பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். யோகிபாபு எப்போதும் மாட்டுக் கொட்டகையிலேயே இருக்கிறார். பாவம், நம்மை சிரிக்க வைப்பதாக நினைத்து அவரும் நடிக்கிறார். தம்பி ராமையாவின் கூச்சலான நடிப்பு, ஆண் கோவை சரளா போல உள்ளது. வழக்கம் போல தான் பேசுவது எல்லாமே ஜோக் என நினைத்துப் பேசுகிறார் சதீஷ்.

சாம் சிஎஸ் இசை என டைட்டிலில் போடுகிறார்கள். அவர்தான் இசையமைத்திருப்பாரோ என்பது சந்தேகமாக உள்ளது. த்ரில்லர் படங்களுக்கு மட்டும்தான் இசைக்கத் தெரியும் போலிருக்கிறது.

44 பேரை ஒரு குடும்பமாக படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்த இயக்குனர் 4 பேருடன் அமர்ந்து நன்றாக விவாதித்து கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கலாம்.

ராஜவம்சம் - பெயர் வைத்தால் மட்டும் போதுமா ?

 

ராஜவம்சம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ராஜவம்சம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓