3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விக்ராந்த், வசுந்தரா
தயாரிப்பு - எம் 10 புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஜெகதீசன் சுபு
இசை - இமான்
வெளியான தேதி - 23 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆடு, மாடு, யானை, பாம்பு, குரங்கு என பல மிருகங்களை வைத்து பல படங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் படங்களை ரசித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

ஆனால், ஒட்டகத்தை வைத்து தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் வரவில்லை. இப்படி கூட ஒரு கதையை யோசிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ஜெகதீசன் சுபு.

தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக ஒரு முஸ்லிம் பெரியவரிடம் கடன் வாங்கச் செல்கிறார் விக்ராந்த். அந்த வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ஒரு ஒட்டகத்தை குட்டியுடன் அழைத்து வந்திருக்கிறார்கள். குட்டியை எதற்கு அழைத்து வந்தார் என அந்த முஸ்லிம் பெரியவர் சண்டை போட, அந்தக் குட்டியை தான் வளர்ப்பதாகச் சொல்லி தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் விக்ராந்த். அது வளர்ந்த பிறகு உடல்நிலை கொஞ்சம் பாதிப்படைகிறது. அதைப் பார்க்கும் கால்நடை மருத்துவர், ஒட்டகம் அது வளர வேண்டிய சூழலில் அதனிடத்தில் வளர்வதுதான் சரி என்கிறார். அதனால், ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கே கொண்டு சென்று விட்டுவர முடிவெடுக்கிறார் விக்ராந்த். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நாயகனாக இருந்தாலும் விக்ராந்தை யாரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலே இருந்தார்கள். இந்த 'பக்ரீத்' படம் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து அப்படியே ஒரு கிராமத்து விவசாயியாகவே மாறியிருக்கிறார். ஒட்டகத்தின் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியும் நம்மை நெகிழ வைக்கும். இந்தப் படத்திற்குப் பிறகாவது அவர் மீது பல இயக்குனர்களின் பார்வை பட்டால் சிறப்பு.

விக்ராந்த் மனைவியாக வசுந்தரா. கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அச்சு அசலாக அப்படியே மாறியிருக்கிறார். கணவர் மீதும், மகள் மீதும் பாசமுள்ள ஒரு பெண். கிராமத்துப் பெண்கள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பார்கள் என்பதை இந்தப் படம் புரிய வைக்கும்.

லாரி டிரைவராக நடித்திருக்கும் ரோகித் பத்தாக் படம் முழுவதும் ஹிந்தி பேசினாலும் அவரது நடிப்பு நம்மைக் கவர்கிறது. அவருடைய க்ளீனராக நடித்திருப்பவரும் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார். விக்ராந்த், வசுந்தரா மகளாக நடித்திருக்கும் பேபி ஸ்ருத்திகாவும் மழலைப் பேச்சுடன் நம்மைக் கவர்கிறார்.

இமான் இசையைமப்பில் 'ஆலங்குருவிகளா...' பாடல் அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் உணர்வுகளை இன்னும் அதிகப்படுத்துகிறார். இயக்குனர் ஜெகதீசன் சுபு தான் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சென்னை அருகில் உள்ள கிராமம், பின் கதை ராஜஸ்தானை நோக்கி நகரும் வழியில் உள்ள லொக்கேஷன்கள் என இடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியுள்ளார்.

வித்தியாசமான கதை என்பதே படத்தில் நம்மை அதிகம் ஈர்க்கும் விஷயம். இடைவேளைக்குப் பின் பயணக் காட்சிகளே அதிகமாக இருப்பதால் திரைக்கதை ஓட்டம் கொஞ்சம் தடைபடுகிறது. அதில் ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் வைத்துள்ளார் இயக்குனர். மேலும் சில சிக்கல்களைச் சேர்த்து அதை விடுவித்திருந்தால் சுவாரசியம் இன்னும் அதிகம் இருந்திருக்கும்.

அன்புக்கும் பாசத்திற்கும் அடிமைப்பட்டவன் மனிதன் மட்டுமல்ல, மிருகமும்தான் என்பதை உணர்வுபூர்வமாய் கொடுத்து ரசிக்க வைத்ததற்கு பாராட்டுக்கள். புதிய அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் படத்தை தாராளமாய் பார்க்கலாம்.

பக்ரீத் - பாசம்

 

பக்ரீத் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பக்ரீத்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓