1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - எஸ்.ஏ.சந்திரசேகரன், ரோகிணி, அம்பிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர்
இயக்கம் - விக்கி
இசை - பாலமுரளி பாலு
தயாரிப்பு - கிரீன் சிக்னல்

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை, வாழ்ந்து சாதித்த மனிதர்களின் கதை, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் கதை ஆகியவற்றைத் திரைப்படங்களாக உருவாக்கும் போது, நாம் பத்திரிகைகளில் படித்த, கேள்விப்பட்ட விஷயங்களை விட வீரியமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அப்படிப்பட்டவற்றை திரைப்படங்களாக உருவாக்கியவர்கள் மீது நமக்கு கோபம் வரும்.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் தாக்கத்தில் உருவானது தான் இந்த 'டிராபிக் ராமசாமி' படத்தின் கதை என ஆரம்பத்திலேயே கார்டு போட்டுவிடுகிறார்கள். சில சம்பவங்களை ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் காட்டிவிட்டு 'மீன் பாடி' வண்டிகளை எதிர்த்து அவர் போராடுவதை மட்டுமே படத்தின் பெரும்பகுதியாகக் காட்டி படத்தில் டிராபிக் ஜாம் ஏற்படுத்தி விட்டார்கள்.

மக்களின் பிரச்சினைகளுக்காக தனி மனிதராக போராட ஆரம்பிக்கிறார் ராமசாமி. ஒரு சந்தர்ப்பத்தில் மீன் பாடி வண்டி மோதி ஒருவர் திடீரென இறந்துவிட அதற்குக் காரணமானவர்களை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த வழக்கின் பின்னணியில் மந்திரி, மேயர், எம்எல்ஏ., என அரசியல் பின்னணி இருக்க அவர்களையும் எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அவர் நீதியை வாங்கிக் கொடுக்க எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

'சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்குத் தண்டனை' என 80களில் தமிழ்நாட்டையே தன் படங்களில் அதிர வைத்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட படமா இந்த 'டிராபிக் ராமசாமி' என ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தில் ஒரு சில காட்சிகள், வசனங்களைத் தவிர மற்றவை அனைத்தும், எந்த ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் மிகச் சாதாரணமாக கடந்து போகின்றன.

எஸ்.ஏ.சந்திரசேகரன் தான் டிராபிக் ராமசாமி. 70 வயது முதியவராக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட பேசியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா காட்சிகளிலும் குரலில் மட்டும்தான் மாற்றம் இருக்கிறதே தவிர முகபாவம் ஒரே மாதிரியாக இருக்கிறது.

சந்திரசேகரன் மகள் போல தெரியும் ரோகிணி அவருக்கு மனைவியாக நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வரும் பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோர் வருவதில் படத்திற்கு எந்தப் பயனும் இல்லை.

திரைப்படம் என்றாலும் ஒரு பெண் நீதிபதியின் கதாபாத்திரத்தை இப்படியா வடிவமைப்பது. நிகழ்கால அரசியல் கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்தும் அரசியல்வாதிகளாக இமான் அண்ணாச்சி, மோகன்ராமன். படத்தில் கடைசியில் ஒரு குத்தாட்டம் வேறு.

எஸ்.ஏ.சந்திரசேகரனும், படத்தின் இயக்குனர் விக்கியும் சமீப கால யதார்த்த தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்ததில்லை போலிருக்கிறது. இன்றைய டிராபிக் ராமசாமியை 80களின் சினிமாவாக காட்டியிருக்கிறார் இயக்குனர் விக்கி. உண்மையில் படத்தை விக்கிதான் இயக்கினாரா அல்லது எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கினாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

டிராபிக் ராமசாமியின் கதையை ரஜினிகாந்த்தை வைத்து படமாக்க ஆசைப்பட்டேன் என கடந்த வாரம் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார். இப்போது படத்தைப் பார்த்தால் என்ன நினைப்பாரோ...?.

தன் பெயரை வைத்து இப்படி ஒரு அமெச்சூர்தனமான படத்தை எடுத்து, தன் பெயரையும் சேர்த்து கெடுத்தற்கு டிராபிக் ராமசாமியே படக்குழுவினர் மீது வழக்கு தொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டிராபிக் ராமசாமி - பாதி ரெட் சிக்னல்

 

டிராபிக் ராமசாமி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டிராபிக் ராமசாமி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓