3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர்
இயக்கம் - கார்த்திக் தங்கவேல்
இசை - சாம் சிஎஸ்
தயாரிப்பு - ஹோம் மூவி மேக்கர்ஸ்
வெளியான தேதி - 21 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு சில அறிமுக இயக்குனர்கள் புதிய நம்பிக்கையை விதைக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த வருடக் கடைசியில் இப்படத்தின் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் 'அடங்க மறு' என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

'ஒபே த ஆர்டர்' அதாவது, 'உத்தரவுக்கு கீழ்படியுங்கள்' என்பதற்கு எதிர் வாக்கியமாக 'அடங்க மறு' என்று எடுத்துக் கொள்ளலாம். காவல் துறை அல்லது எந்த ஒரு துறையாக இருந்தாலும் மேலதிகாரிகள் அவர்கள் சொல்வதைத்தான் அவர்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் கேட்க வேண்டும் என பெரிதும் எதிர்பார்ப்பார்கள். அப்படி 'ஒபே த ஆர்டர்' என்று தன் மேலதிகாரிகள் உத்தரவு போட்டாலும் அதை கேட்க மறுத்து 'அடங்க மறு' என வீறு கொண்டு எழும் ஒரு சப் இன்ஸ்பெக்டரின் கதைதான் இந்தப் படம்.

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ போலீஸ் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஒரு போலீஸ் படம் வரும் போது அப்படி என்ன வித்தியாசமாக சொல்லியிருக்கப் போகிறார்கள் என எண்ணுவோம். அவர்களில் ஒரு சிலர் நாம் எண்ணுவது தவறு என்று சொல்லுமளவிற்கு மாறுபட்ட படத்தைக் கொடுப்பார்கள். இந்தப் படத்தை அப்படித்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தங்கவேல்.

அன்பான பெற்றோர், அண்ணன் அண்ணி, அண்ணன் குழந்தைகள் என இருக்கும் ஜெயம் ரவி புதிதாக க்ரைம் ப்ராஞ்ச் சப் இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்கிறார். போலீஸ் வேலை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள வரை 'ஒபே த ஆர்டர்' எனச் சொல்லி அவரை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் மேலதிகாரிகள். ஒரு பெண்ணின் கற்பழிப்புக் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஜெயம் ரவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. குற்றவாளிகளை அவர் நெருங்கும் சமயம் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இருந்தாலும் மேலதிகாரிகளின் உத்தரவை மீறி அந்தக் குற்றவாளிகளை கைது செய்கிறார். அடுத்த 15 நிமிடத்தில் அவர்கள் விடுதலையாகிறார்கள். செல்வாக்கும், அதிகாரமும் படைத்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அவர்கள். எந்த ஆதராமும் இல்லை என அவர்கள் மேலதிகாரிகளால் விடுவிக்கப்படுகிறார்கள். அன்றிரவே ஜெயம் ரவியின் குடும்பத்தில் ஒரு குழந்தையைத் தவிர அனைவரும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தன் குடும்பத்தைப் பறி கொடுத்த ஜெயம் ரவி, கொலைக்குக் காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்கள் சமீப காலமாக ஜெயம் ரவிக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆகிறது. 'தனி ஒருவன், போகன்' ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தப் படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குடும்பப்பாங்கான, சென்டிமென்ட் பின்னணி கொண்ட கதைகள் ஜெயம் ரவிக்கு நன்றாகவே கைகொடுக்கும். அது இந்தப் படத்திலும் நடந்திருக்கிறது. தன் வேலையை நேசித்து, நியாயமாக நடக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு மேலதிகாரிகளே வில்லன்களாக இருக்கிறார்கள். தன் கடமையுணர்ச்சியால் குடும்பத்தையே பறி கொடுக்கிறார். அதன்பின் போலீஸ் புத்தியுடன் அவர் தன் குடும்பத்தைப் பறி கொடுத்தவர்களை வேட்டையாடுவதை இந்தக் காலத்திற்கேற்றபடி புதுப் புது காட்சிகளுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஜெயம் ரவிக்கு இந்தப் படமும் அவருடைய வெற்றிப் படங்களின் பட்டியலில் ஒரு வெற்றிகரமான ஸ்டாராக தோளில் சேர்த்து வைக்கும்.

ஜெயம் ரவியின் காதலியாக ராஷி கண்ணா. ஒரே ஒரு பாடல், சில காட்சிகள் என ராஷி கண்ணாவின் காதலை முடித்து வைக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப்பின் ஒரே ஒரு காட்சியில்தான் வந்து போகிறார்.

படத்தில் வில்லன் என்று தனியாக யாரையும் சொல்ல முடியாது. ஜெயம் ரவிக்கு இன்ஸ்பெக்டராக இருக்கும் மைம் கோபி, இணை ஆய்வாளராக இருக்கும் சம்பத் ஆகியோர்தான் ரவியின் பதவிக்கும், கடமையுணர்ச்சிக்கும் வில்லன்களாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு அடுத்து நான்கு இளைஞர்களும், அவர்களது பணக்கார, அதிகாரம் மிக்க அப்பாக்களும்தான் வில்லன்கள். ஆக, மொத்தமாக இந்தப் படத்தில் பத்து வில்லன்கள். பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்த, தன் குடும்பத்தைக் கொன்ற அந்த நால்வரையும் தனித் தனியாக அவர்களது அப்பாக்கள் மூலமே ஜெயம் ரவி எப்படி கொல்கிறார் என்பதுதான் படத்தின் ஹைலைட். அதை முற்றிலும் டெக்னிக்கல் விஷயங்களாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

சாம் சிஎஸ் இசையில் பின்னணி இசைக்கு நல்ல வாய்ப்பு. தனக்கு பின்னணி இசையும் சிறப்பாக அமைக்க வரும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சாம். ஒளிப்பதிவும், சண்டைப் பயிற்சியும் படத்திற்கு விறுவிறுப்பைச் சேர்த்துள்ளன. விஜியின் வசனங்கள் குறிப்பிட வேண்டியவை. ஆங்காங்கே நிகழ்கால அரசியலையும், அதிகார பணக்கார வர்க்கத்தின் ஆணவத்தையும் வசனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

வித்தியாசமாகக் கதையை யோசித்த இயக்குனர் வழக்கமான சினிமாத்தனமான காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். ஐந்து பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டாலும் நாயகன் ஜெயம் ரவி மீது ஒரு குண்டு கூட படாமல் தப்பிக்கிறார். நான்கு இளைஞர்களையும் மிகச் சுலபமாகக் கடத்துகிறார் ஜெயம் ரவி. அதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் அறிமுகம், நாயகன் குடும்பம் அறிமுகம், நாயகி அறிமுகம், அடுத்து படத்தின் கதையில் என்ன திருப்பம் என கதையை பரபரப்பாக்க நகர்த்திக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். நாயகன் போலீஸ் என்பதாலும், அவருக்கு அன்பான குடும்பம் என்று காட்டுவதாலும், அவர்கள் அடுத்த காட்சிகளில் இருக்க மாட்டார்கள் என நினைத்தால் அப்படியே நடக்கிறது. டுவிஸ்ட்டுகளை இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவாரசியத்துடன் யோசித்து சேர்த்திருக்கலாம்.

தேவையற்ற காட்சிகள், தேவையற்ற பாடல்கள் என படத்தில் தொய்வான விஷயங்கள் எதுவும் இல்லாதது ஆறுதல். ஆக்ஷன் படமாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும்படியான சென்டிமென்ட் படம்.

அடங்க மறு - சீற்றம்!

 

அடங்கமறு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அடங்கமறு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விமர்சனம் ↓