சத்ரு,Sathru

சத்ரு - பட காட்சிகள் ↓

சத்ரு - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கதிர், சிருஷ்டிடாங்கே, லகுபரன் மற்றும் பலர்
தயாரிப்பு - ஆர்டி இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - நவீன் நஞ்சுண்டன்
இசை - அம்ரிஷ், சூர்யபிரசாத்
வெளியான தேதி - 8 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள 1001வது போலீஸ் கதை. அதே நேர்மையான, அதிரடியான போலீசாக படத்தின் நாயகன். ஆயிரம் முறை இப்படி படங்கள் வந்தாலும் போலீஸ் கதையில் இருக்கும் ஒரு பரபரப்பு இந்தப் படத்திலும் இருக்கிறது.

இயக்குனர் நவீன் நஞ்சுண்டன், அதிக செலவில்லாத ஒரு போலீஸ் கதையை கொஞ்சம் யதார்த்தமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். நாயகனுக்கு படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே போல வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

போலீஸ் விசாரணையைக் கூட பரபரப்பாகக் காட்டாமல் வில்லனும் அவன் நண்பர்களும் குழந்தைக் கடத்தலை எப்படிச் செய்கிறார்கள் என்பதை அப்படி விளக்கி சொல்கிறார். ஏன் சார், படத்தைப் பார்த்து யாராவது அப்படியே செய்ய முயற்சிப்பதற்கா ?. அவ்வளவு டீடெய்லிங் தேவையா ?.

கதிர் ஒரு நேர்மையான சப்இன்ஸ்பெக்டர். அவருடைய உயரதிகாரியான அசிஸ்டென்ட் கமிஷனர் சொன்னால் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஒரு பணக்கார வீட்டுச் சிறுவன் ஒருவனை லகுபரன் தலைமையிலான ஒரு கும்பல் கடத்தி 5 கோடி பணம் கேட்கிறது. அந்தச் சிறுவனைக் காப்பாற்றும் முயற்சில் லகுபரன் கும்பலைச் சேர்ந்த ஒருவனை என்கவுண்டர் செய்து, சிறுவனைக் காப்பாற்றுகிறார். என்கவுண்டர் செய்ததால் சஸ்பென்ட் ஆகிறார் கதிர். தங்கள் கூட்டத்தில் ஒருவனைப் பறி கொடுத்ததால் கதிரையும், அவரது குடும்பத்தையும் பழி வாங்கத் துடிக்கிறார் லகுபரன். பதிலுக்கு லகுபரன் ஆட்களை 24 மணி நேரத்திற்குள் கொல்லச் சொல்கிறார் கதிரின் அப்பா. இந்த ஆடு, புலி ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பிறகு கதிர் மீதான பார்வை மாறிவிட்டது. அந்தப் படத்தின் வெற்றிதான் இந்த 'சத்ரு' படம் வெளிவருவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது. போலீஸ் உடையில் கதிரைப் பார்ப்பதற்கு அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றாலும், போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கம்பீரத்தில் அவருடைய நடிப்பால் கதாபாத்திரத்தைக் காப்பாற்றிவிடுகிறார்.

படத்தில் நாயகி என்ற கதாபாத்திரம் எதற்கென்றே தெரியவில்லை. எண்ணி இரண்டே காட்சிகளில்தான் நாயகன் கதிரும், நாயகி ஸ்ருஷ்டி டாங்கேவும் சந்தித்துக் கொள்கிறார்கள். கதாநாயகி என ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தில் அவரைச் சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் இல்லை என்றால் கூட படத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

வில்லனாக லகுபரன். முடிந்தவரையில் தன்னை ஒரு வில்லனாகக் காட்டிக் கொள்ள கடுமையாகவே முயற்சித்திருக்கிறார். லகுபரனின் கூட்டாளிகளைப் பார்க்கும் போதே அடியாட்கள் போலத்தான் இருக்கிறார்கள். லகுபரனை விட கரடு, முரடாக இருக்கும் அவர்கள் லகுபரனைப் பார்த்து அண்ணா என்று அழைப்பது ஆச்சரியமாக உள்ளது. மற்ற கதாபாத்திரங்களில் நீலிமா ராணிக்குக் கூடுதல் காட்சிகள். சுஜா வருணி, பொன்வண்ணன், மாரிமுத்து ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

படத்தில் பாடல்களை நிரப்பாமல் வைத்த இயக்குனரைப் பாராட்ட வேண்டும். இந்தக் கதைக்கு அவை அவசியமாகவும் தெரியவில்லை. பின்னணி இசையை சூர்யபிரசாத் அமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் அதிகம். அருமையான லைட்டிங்குடன் அந்த எபெக்டை கதையுடன் ஒன்ற வைக்கிறார்.

குழந்தைகளைக் கடத்தும் லகுபரன் குரூப்பைக் கண்டுபிடிக்க கதிர் இறங்கியதும், அந்த விசாரணையை புத்திசாலித்தனமாகக் புதிதாகக் காட்டியிருக்கலாம். ஏற்கெனவே பல படங்களில் பார்த்த பழசான டெக்னிக்கை திரைக்கதையில் கையாண்டிருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் இல்லை.

படம் முடிந்து வெளிவந்த பின் கார்த்தி நடித்து வெளிவந்த 'நான் மகான் அல்ல' படம் ஞாபகத்திற்கு வந்து போகிறது.

சத்ரு - சற்று விவேகம் குறைவு!

 

பட குழுவினர்

சத்ரு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓