2.5

விமர்சனம்

Advertisement

கெளதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஜோடி நடிக்க, ஆர்.கண்ணன் இயக்கத்தில், மசாலா பிக்ஸ் & எம்.கே.ஆர்.பி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், கிரியேட்டீவ் எண்டர்டெயின்மென்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி.தனஞ்ஜெயன் வெளியீடு செய்ய, "டூப்ளிகேட் பிராண்டட் பொருள் தயாரித்து கள்ளத்தனமாக மார்கெட்டில் விற்கும் இருவர், பல கோடி பிராடு பண்ணும் அமைச்சரை காட்டிக் கொடுத்து காலி செய்யும் "லாஜிக் இல்லா மேஜிக் கருவோடு உருவாகி வந்திருக்கும் படமே "இவன் தந்திரன்".

கதைப்படி, என்ஜினியரிங் படிப்பை முழுதாக முடிக்காமல் எஸ் ஆகி, ரிச்சி ஸ்ட்ரீட்டில், கடை போட்டு, பெரிய பிராண்டட் நிறுவனங்களின் செல்போன்கள், லேப்டாப்கள்.... உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்களின் ஒரிஜினல் மாதிரியே டூப்ளிகேட் தயார் செய்து விற்பனை செய்யும் உத்தமர்கள் கெளதம் கார்த்திக்கும், ஆர்.ஜே.பாலாஜியும்.

இந்த உத்தமர்கள் இருவரும் சென்ட்ரல் மினிஸ்டர் ஒருவரது வீட்டு பாதுகாப்புக்கு சர்க்யூட் காமிராக்கள் பிட் பண்ண போய், அந்த சர்க்யூட்கேமிரா ஆனில் இருக்கிறதா? ஆப்பில் இருக்கிறதா? என்பது தெரியாமலேயே எல்லாம் தெரிந்தது போல் அதை முடுக்கும் போது அமைச்சரைப் பற்றியும், அவர் இன்ஜினியரிங் கல்லூரிகள், மாணவர்கள் விஷயத்தில்.... சுயலாபமாக நடந்து கொள்ளும் விதம் பற்றியும், அவதூறாக பேசி அந்த காமிரா வாயிலாகவே வலிய வம்பில் மாட்டிக் கொண்டு, அந்த காமிரா பிட்டிங்கிற்குரிய தங்கள் கூலி, இருபத்து மூவாயிரம் பணத்தை வாங்க முடியாமல் அலைகழிக்கப்படுவதால் ஆத்திரம் அடைகின்றனர் .

அதன் விளைவு அந்த அமைச்சர், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளின் விஷயத்தில் மாணவர்களுக்கு எதிராக பல நூறு கோடி பணத்திற்காக பண்ணும் அயோக்கியதனத்தை ரகசியமாக படம் பிடித்து, சமூக வலைதளங்களில் சரியாக லீக் செய்து, அவரது அமைச்சர் பதவிக்கே உலை வைப்பதோடு, அது நாள் வரை அவர் ஹாட் கேஷாக சம்பாதித்து வைத்திருந்த ஐநூறு கோடி பணத்தையும், பழைய நோட்டு மாற்றும் விவகாரத்தில் போலீஸிடம் சிக்க வைத்து திருப்திபட்டு கொள்கின்றனர். இறுதிவரை இவர்கள் இத்தனை செய்தும் அமைச்சர் மற்றும் அவரது சகாக்களின் கைகள் பூப்பறித்துக் கொண்டிப்பது தான் "இவன் தந்திரன்" படத்தின் ஹைலைட் காமெடி கதை மொத்தமும்!

இது கூடவே, நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன்னிடம் வாங்கிய டூப்ளிகேட் பிராண்டட் லேப்டாப்பை மாற்றித்தர மனம் இல்லாத கெளதம் கார்த்திக், திடீரென அவர் மீது காதலில் விழும் காமெடியும், அவருக்கு இங்கு நோ சொல்லி பெங்களூரூ இண்டர்வியூ போன பின்பு இண்டர்வியூ அதிகாரிகள் முன் கெளதம் பேசிய காதல் டயலாக்குகளை பேசி உணர்ச்சிவசப்பட்டு யெஸ் சொல்லி ஊர் திரும்பி நாயகி, நாயகர் மீது காதல் வயப்படும் காமெடிகளையும் ரசிகனின் காதில் பூச்சுற்றும் அளவிற்கு கலந்து கட்டி காமெடி.... இல்லை, இல்லை... கதை பண்ணியிருக்கின்றனர், பாவம்.

கதாநாயகராக பொறியியல் படிப்பை பாதியில் விட்ட ரிவர்ஸ் இன்ஜினியர் (அப்புறம் எப்படி இன்ஜினியர்?) சக்தியாக, கெளதம் கார்த்திக், "வேலை செய்த காசை வாங்கமல் விட மாட்டேன்... "எனும் கொள்கையுடைய போராளியாக ஆர்.ஜே.பாலாஜிக்கு முன் பெரிதாக எடுபடாது அடக்கி வாசித்திருக்கிறார். அல்லது அடங்கி போயிருக்கிறார். பாவம். ஆனாலும் கெளதம், ஷ்ரத்தாவுடனான காதல் காட்சிகளில் மட்டும் மனிதர் சபாஷ் வாங்கி விடுகிறார்.

கதாநாயகி ஆஷா சுப்ரமணியமாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், கவர்ந்திழுக்கும் கண்களும், வசீகர உடல் வாகுமாக பெரும் ஆறுதல். ஆனாலும், கதாநாயகனின் காதலை இங்கு ஏற்றுக் கொள்ளாமல் அமெரிக்கா போகும் கனவோடு பெங்களூர் நேர்முகத் தேர்விற்குப் போய் விட்டு அங்கு அதிகாரிகள் முன் காதல் வசனம் பேசி திரும்புவது ஏற்று கொள்ளும்படியாக இல்லை.

காமெடியன் ஆர்.ஜே. பாலாஜி, காண்டம் பற்றியும் கண்டது பற்றியும் பேசி குடும்பத்துடன் வந்திருப்பவர்களை முகம் சுளிக்க வைத்தாலும், ஹீரோவையும் தாண்டி, "ஹேராம் பட ஹீரோயின் உதடு மாதிரி ஆயிடுச்சுடா..." என்பதில் தொடங்கி, "பாகிஸ்தான் பக்கத்துல பத்து கிரவுண்ட் வாங்கிப் போட்டு, நமீதா, சினேகாவை விட்டு இன்ஜினியரிங் காலேஜ் திறந்து, கோடி கோடியாய் பணம் பண்ணும் கல்லூரி முதலாளிகளுக்கு செம ஆப்பு மச்சி...." என பேசுவது வரை மொத்தப் படத்தையும் மூச்சு முட்டத் தூக்கி சுமக்க முயன்றிருக்கிறார்.

மேலும், அமைச்சரின் அடியாள் பரத்ரெட்டி, மத்திய அமைச்சர் தேவராஜா - சூப்பர் சுப்பராயன், அவரது மைத்துனராக வந்து சூப்பர் கையாலேயே சாகும் ஸ்டன்ட்ஸ் சில்வா, அண்ணா யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்டாக, நாயக நண்பர்களின் சீனியராக வரும் கோபி, முருகன் - ஸ்ரீ விக்னேஷ், கல்லூரி கரஸ் - வெங்கட், கூடுதல் பீஸ் கட்ட முடியாது இரயிலின் கூரையில் ஏறி மரணத்தை தழுவும் மாணவனின் அப்பாவாக வரும் யோகி தேவராஜ்... ஆகிய அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர் என்பது படத்திற்கு கொஞ்சம் வலு சேர்த்திருக்கிறது.

செல்வின் படத்தொகுப்பில் பெரிதாக குறையில்லை. பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவில் இரண்டு பாடல் காட்சிகளில் பாண்டிச்சேரியும், இன்னும் சில படக்காட்சிகளில் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டும் பிரமாண்டம் காட்டி, பட்ஜெட்டை வெகுவாக குறைத்திருக்கின்றன.

எஸ்.எஸ்.தமனின் இசையில் "டிகாலிட்டி...", "என்ன மிதக்க விட்ட....", "இவன் தந்திரன்..." உள்ளிட்ட பாடல்களில் குறையொன்றுமில்லை. பின்னணி இசையிலும் பெரிய பழுதில்லை.

ஆர்.கண்ணன் தனது எழுத்து, இயக்கத்தில், "ஒலா, ஊப்பர் ஆட்டோக்கள்... வந்தப்புறம் சவாரி கம்மி ஆச்சுல்ல முன்னாடியே மீட்டர் போட்டிருந்தா நாங்களும் உங்களை சப்போர்ட் பண்ணியிருப்போம்...." என அடாவடி ஆட்டோக் காரர்களுக்கு சூடு வைப்பதில் தொடங்கி, "3-ம் கிளாஸ் தாண்டாத நீ மூட்டை மூட்டையா 2 ஆயிரம் கோடி அடிப்பே, ஆனால் இன்ஜினியரிங் படித்த நாங்க சில ஆயிரத்துக்காக சாகணுமா?" என ஊழல் அரசியல்வாதிகள் வரை சகலருக்கும் எதிராக வைத்திருக்கும் தடாலடி "பன்ச்"கள் சில சீன்கள் ரசனை.

என்றாலும், இன்ஜினியரிங் படிப்பை, ஐ.டி ஜாப்பை சில சீன்களில் ஓட்டுவதும், பின் வக்காலத்து வாங்குவதுமாக ரொம்பவே குழப்பியிருப்பதும், நூறு ரூபாய் நோட்டில் ஜிபிஆர்எஸ் வைத்து, அதை வைத்து, பழசுக்கு புதுசு என நோட்டு மாத்த கிளம்பும் சமயத்தில் ஊழல் அமைச்சரின் அத்தனை பணத்தையும் கைப்பற்றும் ஹம்பக் கதையும் பலவீனம்.

மேலும், நம்ப முடியாத லாஜிக் இல்லாத காட்சிகளும், இன்ஜினியரிங் படிப்பை முடிக்காமலேயே எல்லாம் தெரிந்த ரிவர்ஸ் இன்ஜினியர் கெளதம் கார்த்திக்கும், அவரை விட அதிகம் தெரிந்த ஆர்.ஜே.பாலாஜியும் அமைச்சர் வீட்டில் தங்களது சர்க்யூட் காமிராவை முடக்கும் போது அவரைப் பற்றி அவதூறாக பேசி அந்த காமிரா,வாயிலாகவே வலிய வம்பில் மாட்டிக் கொள்வதும் லாஜிக்காக இடிப்பது மேலும் பலவீனம்.

இதையெல்லாம் பார்க்கும் போது, இயக்குனர் மணிரத்னத்தின் சிஷ்யரான ஆர்.கண்ணனையும், படத்தில் வரும் ரிவர்ஸ் இன்ஜினியர்கள் மாதிரி ஒரு ரிவர்ஸ் டைரக்டர் எனலாம்.

ஆக மொத்தத்தில், "இவன்தந்திரன் - ஏதோ குறைகிறான்!"

 

பட குழுவினர்

இவன் தந்திரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓