Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

லென்ஸ்

லென்ஸ்,Lens
  • லென்ஸ்
  • இயக்குனர்: ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
13 மே, 2017 - 15:16 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » லென்ஸ்

புதியவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில், மினிஸ்டுடியோ தயாரிப்பில், ஆனந்த்சாமி, அஸ்வதிலால், மிஷாகோஷல், ராஜா கிருஷ்ணன்... ஆகிய புதுமுகங்கள் பங்கேற்க, எஸ்ஆர்.கதிரின் ஓளிப்பதிவு, ஜிவி.பிரகாஷ் குமாரின் இசை.... என பிரபலங்கள் பணியாற்ற, இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட., தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய கதைக் களத்தில் வந்திருக்கும் படம் தான் "லென்ஸ்".

கை நிறைய சம்பாதிக்கும் சபலக் கேஸான சாப்ட்வேர் இளைஞர் அரவிந்த் எனும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். அழகான மனைவி இருந்தும் தன் சபல புத்தியால் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது, அடுத்தவரின் அந்தரங்க வீடியோக்களை அதில் பதிவேற்றுவது, இளம் பெண்களுடன் ஸ்கைப் - சாட்டிங்கில் செக்ஸியாக பேசி அவர்களை வசியப்படுத்துவது... என சதாசர்வகாலுமும்., அதே வேலையாக இருக்கிறார்.

ஜூலி என்ற பெண்ணுடன் அப்படி ஸ்கைப் - சாட்டிங்கில் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் அரவிந்த், சல்மான்கான் முகமூடியுடன் அவருடன் சாட்டிங்கிலேயே சல்லாபிக்கிறார். அந்தப் பக்கம் ஜூலியும் அப்படி ஒரு முகமூடியுடன் இவருடன் சாட்டிங்கில் செம ஈடுபாடு காட்டுகிறார். ஒரு கட்டத்தில், இருவரும் தாங்கள் அணிந்திருக்கும் அந்த மாஸ்கை கழட்டி விட்டு நேரடியாக சாட்டிங் செய்ய முடிவு செய்கிறார்கள். அந்த முடிவுக்கு பின் தன் முகமூடி கழட்டும் அரவிந்துக்கு, ஜூலியால் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெரும் அதிர்ச்சி என்ன? ஜூலி, ஜுலியே தானா? அல்லது ஜுலி எனும் பெண் வேடத்தில் உள்ள ஆணா? அப்படி, ஆண் என்றால் அது யார்? அவர், அரவிந்திடம் பெண் வேடம் போட்டு அப்படி எதை சாதிக்க நினைக்கிறார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்காளுக்கு எதிர்பாராத வகையில், மெய்யாலுமே வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும்... விடை சொல்கிறது "லென்ஸ்" படத்தின் திக், திக், திக்.... திகிலோ... எனும் மீதிக் கதையும் களமும்.

சபலம், அதன் காரணமாக பயம்... அதைத் தொடர்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் என லேப்-டாப் முன் லப்-டப் என ஹார்ட் பீட் எகிற ஸ்கைப் - சாட்டிங்கில் அடுத்தடுத்து அசம்பாவிதங்களை சந்திக்கும் அரவிந்தாக இப்பட இயக்குனர் நாயகர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனன் செம கச்சிதம். வலைதளங்களை தன் வசப்படுத்தி, பலரது அந்தரங்களை அம்பலத்திற்கு கொண்டு வரும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், கடைசியல் வலைதளத்தாலேயே பாதிக்கப்பட்டு கதறும் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை வழங்கி ரசிக்க வைத்திருக்கிறார். வாவ்.

அரவிந்த் எனும் ஜெயப்பிரகாஷின் சபல புத்தியால் தன் அழகிய குடும்பத்தையும், தனது ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் தொலைத்த யோகனாக அறிமுகம் ஆனந்த்சாமி தனது தத்ரூபமான சைக்கோத்தன நடிப்பால் ரசிகர்களை இருக்கையோடு கட்டிப்போடுகிறார். அவரது இயல்பான நடிப்பும், ஒரு பாவமும் அறியாத மனைவியை இழந்த அவரது ஆக்ரோஷமும் இயல்பாய் இருக்கிறது.... என்பது படத்திற்கு பெரும் பலம்.

மிகவும் சொற்ப காட்சிகளிலேயே வந்தாலும் யோகனின் அழகு இளம் மனைவியாக வரும் அஷ்வதிலாலும், அரவிந்தின் மனைவியாக வரும் மிஷாகோஷாலும் காட்சிக்கு தேவையானதை சிறப்பாக செய்து தங்களது பாத்திரத்திற்கும், படத்திற்கும் சிறப்பு சேர்த்திருக்கின்றனர். அதிலும், யோகனின் வாய் பேச முடியாத இளம் மனைவியாக வரும் அஸ்வதிலால், தினந்தினம் ஆயிரக்கணக்கான பேர் என்னை கண்களாலேயே கற்பழிக்கின்றனர்" என்றும், "நாளை இந்த வீடியோவை என் குழந்தையும் பார்க்கும் தானே..." என்றும் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்., எழுதிக் காட்டி விட்டு இறப்பது கல் நெஞ்சுக்காரர்களையும் கரைக்கும் நடிப்பு மிக்க இடங்கள்.... எனலாம்.

போலீஸ் அம்பேத், ஆர்.கே எனும் ராஜா கிருஷ்ணன் உள்ளிட்ட படத்தில் வரும் இன்னும் சிலரும் சிறப்பு.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் அநேக காட்சிகள் இரண்டு அறைகளுக்குள்ளேயே.... இரண்டு லேப்-டாப்கள் இரண்டொரு மனிதர்கள்... சில செல்போன்கள் பங்கேற்க பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை மிகத் துல்லியமாக, புதுமையான கோணத்தில் படம் பிடிக்கப்பட்டிருப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அவற்றை விறுவிறுப்பு குன்றாமல் காட்சிப்படுத்தி இருப்பது மேலும், சிறப்பு!

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை, இந்தப்படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது.

இப்பட நாயகரும், இயக்குநருமான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் "தத்துவம் தான் மனசுக்கு ஆறுதல கொடுக்கும்...", "சரியான ஆளுங்க கிட்ட சரியான கேள்வி கேட்க ஒரு திறமை வேண்டும்....", "நீ தான சொன்ன கோழைங்க தான் சூசைட் பண்ணிப் பாங்கன்னு.... அப்போ நிஜம் இல்லாத விஷயத்துக்கு ஏன் பயப்படுற..?", "மத்தவங்க முன்னாடி மனுஷன் எப்பவுமே நல்லவனா நடிப்பான்.." என்பது உள்ளிட்ட உண்மை பேசும் வசனங்களுக்காகவும், சற்றும் லாஜிக் மிஸ்டேக் இல்லாமல் ஒரு த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் படம் கிடைத்திருப்பதற்காகவும் அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

வலைதளங்களால் குறிப்பாக வாட்ஸ் - அப், ஸ்கைப் உள்ளிட்ட சாட்டிங் சமூக வலைதளங்களால் சில குடும்பங்கள் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் அந்த குடும்பத்தினர் படும் துயரங்கள், உயிரிழப்புகள்.... என பல கோணங்களில் பல வித ஆய்வுகள் செய்து இப்படத்தை, பக்காவாக இயக்கி இருக்கிறார் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். மேலும், இன்றைய காலகட்டத்தில், சமூகவலைதளங்களின் போக்கும், பயன்பாடும் வெவ்வேறு கட்டத்தை எட்டியிருக்கிறது. அதனால் ஏற்படும், பயனும், பாதிப்பும் நாளுக்கு நாள் பயமுறுத்தி வருகிறது நாம் தூங்கும் நம் வீட்டு படுக்கை அறையில் தொடங்கி, நாம் தங்கும் ஹோட்டல் விடுதிகள் வரை... பொதுமக்கள் அனுதினமும் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் அவர்களது, அந்தரங்க பாதுகாப்புக்கு விரோதமாக ரகசிய கேமாரக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து இணையதளங்களில் வெளியிடுவதன் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களால், அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப் படத்தில் மிகவும் தத்ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். சபாஷ்!

ஆகமொத்தத்தில், இன்றைய இணையதள சுதந்திரத்தின் ஆபத்தை, அழகாக எடுத்துரைக்கும் விதத்தில், சொற்ப கேரக்டர்கள், இரண்டே இரண்டு அறைகளில் நடக்கும் ஸ்கைப் - சாட்டிங் உரையாடல்கள்... ஆகியவற்றையே பெரும்பாலான சீன்களாக்கி., இன்றைய சமூகத்திற்கு நல்ல விஷயத்தையும் போரடிக்காமல் போதிக்க முயன்றிருக்கும் வித்தியாசமான "லென்ஸ்-க்கு - எக்கச்சக்கமான பேன்ஸ் நிச்சயம்!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in