2

விமர்சனம்

Advertisement

மூட நம்பிக்கைகளுக்கு எதிராக முழுக்க குரல் கொடுத்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக், எழுதி இயக்கி இருக்கும் முதல் படம், முழுநீள பேய் படம் தான் "சங்கிலி புங்கிலி கதவைத் தொற".

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் "ஏ பார் ஆப்பிள்" ஆகிய பட நிறுவனங்கள் தயாரிப்பில், ஜீவா - ஸ்ரீதிவ்யா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், தன் தாய்மாமா ராதாரவியை படம் முழுக்க பேயாக உலவ விட்டு, சொந்தங்கள் ராதிகா சரத்குமார், வாசு விக்ரம் உள்ளிட்டவர்களையும் நடிக்க வைத்து, தன் பேர்பாதி சொந்தங்களை அரவனணத்திருக்கிறார். ரசிகர்களை எந்த அளவிற்கு இந்தப் படத்தின் வாயிலாக அவர், ஈர்த்திருகிறார் ? என்பதை இங்கு பார்ப்போம் .

கதைப்படி, சின்ன வயதில் இருந்தே ஹவுஸ் ஓனர் எனப்படும் வீட்டு உரிமையாளர்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார் ஹீரோ ஜீவா. ஒரு நாள், ஒரு அடை மழை நாளில் திடீரென இறந்த தன் தந்தையின் உடம்பைக் கூட உறவுகள் வரும் வரை... அவர் குடியிருக்கும் வாடகை வீட்டில் வைத்திருக்க முடியாத அவல நிலைக்க தள்ளப்படும் ஜீவா, தன் தாயின் சொல்லிற்கிணங்கி சொந்த வீட்டு ஆசையில், குறைந்த விலையில் பெரிய பங்களாவை பேசி முடிக்கிறார். அந்த வீட்டை குறைந்த விலையில் பேசி முடிப்பதற்காக, அந்த வீட்டில் பேய் இருப்பதாக கதை கட்டி விட்டு கம்மி காசில் அந்த பெரிய வீட்டை பேசி முடிக்கிறார். சும்மானாச்சுக்கும் பேய் இருக்கிறது... என ஜீவாவால் பப்ளிசிட்டி பண்ணப்பட்டு, தனதாக்கப்பட்ட அந்த வீட்டில் மெய்யாலுமே பேய் இருந்தால்...? என்ன நடக்கும்...?, இது தான் "சங்கிலி புங்கிலி கதவைத் தொற" படத்தின் கரு, கதை, களம் காட்சிப்படுத்தல் எல்லாம்!

வாசுவாக ஜீவா வழக்கம் போலவே ஜாலியான பாத்திரத்தில் சபாஷ் சொல்லும் அளவிற்கு பக்காவாக நடித்திருக்கிறார். பேயைப் பார்த்து அவர் பயந்து நடுங்கும் இடங்கள் மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

ஸ்வேதாவாக ஸ்ரீதிவ்யா செம கச்சிதம். அம்மணி சற்று இடைவெளிக்குப்பின் இந்தப்படத்தில் ஹோம்லி குல்கந்தாக கவனம் ஈர்க்கிறார்.

படம் முழுக்க நாயகருக்கு நிகராக, இல்லை இல்லை, நாயகரின் சீன்களையும் தாண்டி அதிக சீன்களில் நடித்து காமெடி சூரணமாக சூரி., காமெடியில் கலக்கியிருக்கிறார் கலக்கி .

சங்கிலி ஆண்டவராகவும், அவரது ஆன்மாவாகவும் ராதாரவி ரசிகர்களை ரொம்பவே பயமுறுத்துவது ஒவர் டோஸ் ஆகத் தெரிகிறது.

வாசு-ஜீவாவின் அம்மாவாக பார்வதியாக ராதிகா சரத், பேய் ஓட்டும் ஈ.பி ராஜேஸ்வரியாக கோவை சரளா, ஸ்ரீதிவ்யாவின் அலும்பு அப்பா ஜம்புலிங்கம் -தம்பி இராமைய்யா, கவுன்சிலர் குமாராக "நான் கடவுள்" ராஜேந்திரன், மளிகை - மயில்சாமி, ஜீவாவின் மாமா பொன்னுசாமியாக இளவரசு, ஸ்ரீயின் அம்மாவன ரோஜாவாக தேவதர்ஷினி உள்ளிட்ட எல்லோரும் தேவைக்கு அதிகமாகவே பயந்து நடித்து பயமுறுத்தியிருக்கின்றனர் பாவம். இவர்களுடன் கெஸ்ட் ரோலில் பெஸ்ட்டாக வரும் ஜெய் ஆறுதல்.

டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பில் பின்பாதி பெரிய இழுவை.... என்பது பலவீனம்.

சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவில் பெரும் பகுதி, படப்பகுதி இருட்டிலேயே படமாகியிருந்தாலும் பெரிய அளவில் பளிச்சிட்டிருக்கிறதென்பது சிறப்பு.

விஷால் சந்திரசேகரின் இசையில் "கட்டத்துரைக்கு இங்க கட்டம் சரியில்லடா....." , "யாரு மனசுல யாரு இருக்காருன்னு யாருக்குத் தெரியும்..? ", "சங்கிலி புங்கிலி கதவைத் தொற..." உள்ளிட்ட பாடல்கள் ஓ.கே. ஆனால், பின்னணி இசை இது மாதிரி படங்களுக்கு இன்னும் பேசப்படும் படி இருந்திருக்க வேண்டும்.

ஐக்கின் எழுத்து, இயக்கத்தில் க்ளைமாக்ஸில் வீட்டு வாசக்காலில், மந்தரித்த கயிறு கட்டினால் வீட்டில் துஷ்ட சக்திகள் அண்டாது என கோவை சரளா கொடுத்த தாயத்தை வீட்டில் கட்டி விட்டு, தன் மொத்த குடும்பத்துடன் வீட்டிற்குள் செல்லும் ஜீவா, அதன் பின்னும், ராதாரவி பேயை எதிர்பார்த்து பயந்து நடுங்குவதும், அந்த வீட்டை தம்பி ராமைய்யா, இடிக்க கடப்பாறையுடன் கிளம்பியதும், அந்த மந்திர தந்திர சக்தியை எல்லாம் தாண்டி, ராதாரவியின் ஆன்மா பேய், அனைவரையும் அலறடிப்பதும் சங்கிலி புங்கிலி லாஜிக் குறைகள். இது மாதிரி படம் முழுக்க பரவி, விரவிக் கிடக்கும் லாஜிக் மிஸ்டேக்குகளும், வாஷிங்மிஷின் டபுள்மீனிங் காமெடிகளும் "சங்கிலி புங்கிலி கதவைத் தொற" படத்தை சங்கடமாக பார்க்க வைக்கின்றன. அதேநேரம் பிற பேய் படங்களில் இருந்து சற்றே வித்தியாசமான காமெடி பேய் படமாக இந்தப்படம் பெருவாரியான ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் நம்பலாம்!

ஆக மொத்தத்தில், "சங்கிலி புங்கிலி கதவைத் தொற - திரையரங்குகளின் கதவுகள் திறந்திருக்கும் அளவிற்கு ரசிகர்களின் கூட்டம் நிரம்பியிருக்குமா? என்பது அந்த சங்கிலி ஆண்டவருக்கே வெளிச்சம்!"

 

பட குழுவினர்

சங்கிலி புங்கிலி கதவ தொற

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓