3

விமர்சனம்

Advertisement

வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் ஆர்.மணிகண்டன் தயாரிப்பில், பி.சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கத்தில், சமுத்திரகனியுடன் விக்ராந்த், சுனைனா, புதுமுகம் அர்த்தனா, சூரி, தம்பி ராமைய்யா, கஞ்சா கருப்பு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், அனில் முரளி, பிச்சைக்காரன் மூர்த்தி சவுந்தரராஜன் ஆகிய இன்னும் பலர் நடிக்க லவ், சென்டிமென்ட் - ஆக்ஷன் டிராமாவாக வந்திருக்கும் திரைப்படம் "தொண்டன்".

ஆம்புலன்ஸ் டிரைவரான சமுத்திரகனி, ஒரு உயிரை காபந்து செய்ய தன் உயிரை துச்சமென மதித்து கடமை உணர்வோடு களம் இறங்கியதால் ஒரு அமைச்சரின் வாரிசுக்கு பெரும் பகை ஆகிறார். அதனால் அவரது உறவும், நட்பும் அந்த அரசியல் புள்ளியால் படும் பாட்டுடன், சமுத்திரகனி அதற்கு, அடாவடித்தனம் இல்லாத அகிம்சை வழியில், தன் சக ஆம்புலன்ஸ் டிரைவர் விக்ராந்த், ஆட்டோ டிரைவர் மூர்த்தி, முதலுதவி சிகிச்சையாளர் கஞ்சா கருப்பு, நல்ல போலீஸ் திலீபன்... ஆகியோர் உதவியுடன் எப்படி தக்க பதிலடி தருகிறார்...? எனும் சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையுடன் சமுத்திரகனி-சுனைனாவின் முதிர் காதல், விக்ராந்த் - அர்த்தனாவின் இளங்காதல், இன்றைய நம் நாட்டு நிலையை கிடைத்த கேப்பில் எல்லாம் கிண்டல் அடிக்கும் நக்கல், நையாண்டிகள்...... ஆகியவற்றுடன் சேர்த்து, கலந்து கட்டி "தொண்டன்" படத்தை கலர்புல்லாக்க, கடுமையாக முயற்சித்திருக்கின்றனர் மொத்த படக் குழுவினரும்.

கதாநாயகர்களில் முதல் நாயகராக சமுத்திரகனி, ஆம்புலன்ஸ் ஓட்டும் பைலட்டாக, டிரைவராக மகாவிஷ்ணு எனும் பாத்திரத்தில், ரொம்பவும் நடித்திருக்கிறார். ஆம்புலன்ஸை சேஸ் செய்யத் துரத்தும் அடியாட்களுக்கு போக்கு காட்டி மருத்துவமனைக்கு பறக்கும் முதல் காட்சியில் தொடங்கி, கூடா நட்பால், தன் தங்கையிடம் வாலாட்டும் நண்பன் விக்ராந்தை நல்வழிப்படுத்தி, தன்மாதிரி ஆம்புலன்ஸ் டிரைவர் ஆக்குவது, எதிரிக்கு எதிரி நண்பன் எனும் வழக்கு சொல்லுக்கு ஏற்ப, தன்னை வளைக்க நினைக்கும் ஜாதி அரசியல்வாதியிடம் தன் மூச்சடக்கிக் கொண்டு, அத்தக்கருப்பன் முதல் புலிக்குழம்காளை வரை சுமார் தொன்னூறு நாட்டு மாட்டு வகைகளை, பட்டியிலிடுவதில் தொடர்ந்து, வில்லனால் பலவற்றை இழந்தும் அவசரப்படாது, தன் புத்தி கூர்மையால் முடக்கி, பழி தீர்த்து இறுதியில் அவர் உயிர் காப்பாது வரை.... ஒரு ஆம்புலன்ஸ் பைலட்டாக, அதிகமாகவே வாழ்ந்திருக்கிறார். சுனைனா-சமுத்திரகனியின் கல்யாண வாழ்க்கை கச்சிதமாக இருக்கிறது. ஆனால், காதல் காட்சிகளில் சமுத்திரகனியும் அந்த காட்சிகளும் சற்றே ஓவர் டோஸ்!

மற்றொரு நாயகராக, ஆரம்பத்தில் வெட்டி ஆபிஸராகவும் பின் தானும் ஒரு ஆம்புலன்ஸ் பைலட்டாகவும், சமுத்திரகனியின் தங்கை பின் சுற்றி அவர் வெறுப்பை சம்பாதித்த விக்னேஷாக விக்ராந்த், கனியின் கனிவான பேச்சால் அவர் மாதிரியே ஆம்புலன்ஸ் பைலட்டாகி கனியின் தங்கை அர்த்தனாவின் காதலை பெறும் கேரக்டரில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியர் இருவரில் கனியின் நாயகியாகவும் முதல் நாயகியாகவும் சுனைனா, டீச்சர் பகழமுகி எனும் பாத்திரப் பெயரில் இருட்டில் உடம்பு முழுக்க சுற்றிய வெள்ளை துணியுடன் ஓடி ஆடி நாயகரை பேய் வேடத்தில் பயமுறுத்தி அவரது, காதலை பெறுவதும் பின் அவர் மனைவியாவதும் வலிய திணிக்கப்பட்ட காட்சிகளாக தெரிந்தாலும் சுனைனாவின் நடிப்பு கச்சிதம்.

விக்ராந்தை ஆரம்பத்தில் வெறுத்து பின் காதலித்திடும் மகிஷாசுர மர்த்தினியாக, கதையில் கனியின் தங்கையாக, இரண்டாம் நாயகியாக, இளம் நாயகியாக புதுமுகம் அர்த்தனா, கல்லூரியில் காதலிக்க மறுத்து செருப்பால் அடித்த தோழியை கட்டையால் அடிக்கும் சவுந்தர் ராஜனை அந்த கட்டையை பிடுங்கி அடித்து புரட்சி பெண்ணாகி மிரட்சி கொள்ள வைக்கிறார்.

காமெடியில் பெரிய அமைச்சர் வீட்டு மருமகனாக 15 பவுனுக்கு அலையும் இலைக்கடை ராமராக பாவம் சூரி, சில சீன்களே வந்தாலும் சிரிப்பாய்ய் சிரிக்க வைக்கிறார். மிடுக்கான வருமான வரித்துறை அதிகாரியாக தம்பி ராமைய்யாவும் சிரிப்பு காட்டுகிறார்!

கனியின் ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை தரும் சேவியராக கஞ்சா கருப்பும் காமெடிக்கு நான் கேரன்டி, என நம்பிக்கை தந்திருக்கிறார்.

சமுத்திர கனியின் தந்தையாக வேல ராமமூர்த்தி, பேக்கரி பாண்டியனாக இருந்து மந்திரி பாண்டியனாராகும் பேராசிரியர் ஞானசம்பந்தம், அவரது மூத்த மகன் மந்திரி நாராயணனாக அட்டகாசம் செய்யும் நமோ நாராயணன், காதலியை கல்லூரியிலேயே வைத்து கட்டையால் அடித்து கொல்ல துணிந்து காணாமல் போகும் மினிஸ்டரின் இரண்டாவது மகன் சவுந்தரராஜன், நமோ நாராயணனுக்கு அடிவருடி போலீஸாக இருந்து அதிரடி போலீஸ் ஆக மாறும் முரட்டுத்தன அனில் முரளி, சமுத்திரகனியின் சகாவாக ஆட்டோ டிரைவராக., வெள்ளை சட்டை வேஷ்டியை எல்லாம் பீரோவுல வச்சு பூட்டிட்டு வேறு வேலை பாருங்க ஜாதி அரசியல்வாதியின் உதவியாளரை உசுப்பி விடும் பிச்சைக்காரன் மூர்த்தி, சமுத்திரகனிக்கு உதவும் நல்ல போலீஸ் ரஹ்மானாக திலீபன், மரக்கடை பாபுவாக பாபூஸ், உண்மை டி.வி.சேனல் நிருபராக படவா கோபி, மந்திரி ஞானசம்பந்தத்தின் நகை கடையாக ஜொலிக்கும் மனைவி நித்யா, சுனைனாவின் அப்பா சிக்கல் சண்முகமாக, அதனால இரண்டு கிலோ அரிசி கிடைக்குமா? என எல்லாவற்றுக்கும் கேட்டு கட்டையப் போடும் ஈரோடு கோபால், கனியின் பவுர்புல் லாயராக - பாலசந்தர் மோகன், சிறுவன் உருவில் சுனைனாவின் தம்பியாக வரும் நாசத்... உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும், ஓவர் ஆளாய் நன்றாகவே நடத்திருக்கின்றனர்.

ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பில், சுனைனாவின் போங்கு என்ட்ரீ, இழுவை காட்சிகளும் பின்பாதி நீள நீள காட்சிகளும் அவரது கத்திரியால் இன்னும் சற்றே வெட்டி வீசபட்டிருக்கலாம்.

என்.கே .ஏகாம்பரம் - ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவு "தொண்டனு"க்கு மிகச் சரியாக தொண்டாற்றியிருக்கின்ற ஒவியப்பதிவு.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், "போய் வரவா...", "எட்டு ஊரும் கேட்க கேட்க மேளம்...." உள்ளிட்ட பாடல்கள் ஓஹோ ஆஹா இல்லை என்றாலும் ஓ.கே, ஓ.கே எனும் அளவில் இருப்பது ஆறுதல். இப்படக் கதைக்கேற்ற பின்னணி இசையையும் பாராட்டலாம்.

பி.சமுத்திர கனியின் எழுத்து, இயக்கத்தில், "தொண்டன்" எனும் டைட்டிலும், வீரியமான வசனங்களும் படத்திற்கு பெரும் பலம். என்றால், அதேநேரம் சமூகத்திற்கு தேவையான சீரியஸ் சப்ஜெக்ட்டில் சமுத்திரகனி - சுனைனாவின் ஆரம்ப காதல் இழுவை இரவுக் காட்சிகளும், சற்றே ஜாஸ்தியான பிரச்சார நெடியும் கொஞ்சம் பலவீனம்! மேலும், கஞ்சாவும், சமுத்திரகனியும் சிங்கம், சிங்கம் என்று ஒருவரை அழைத்துக் கொள்வதும், காந்தி காலனியில் திருட வந்த அந்த திருடன் சீறும் சிங்கங்களால், கடைசி வரை பிடிக்கப்படாமல் போவதும் உள்ளிட்ட நாடகத்தன்மை காட்சிகள் சில இடங்களில் படத்தின் ஜெட் வேகத்திற்கு தடை கற்கலாக இருப்பது, நெருடலாக இருக்கிறது. இது மாதிரி ஒருசில குறைகள், இழுவை காட்சிகள்... படத்தில் ஆங்காங்கே தென்பட்டாலும், "வன்முறைங்கறது எதற்கும் தீர்வு கிடையாது, எப்பொழுதும் மன்னிப்பது தான் ஒரே தீர்வு.." என்பது உள்ளிட்ட வசனங்களுக்காகவும், ஏகப்பட்ட கருத்து செறிவுமிக்க காட்சிகளுக்காகவும் "தொண்டனை" பலரும் ரசித்துப் பார்க்கலாம்!

ஆக மொத்தத்தில், "தொண்டன் - வந்திருக்கிறது... அதிகபட்ச சமூக அக்கறையுடன்!"

 

பட குழுவினர்

தொண்டன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓