மாயவன்,maayavan

மாயவன் - பட காட்சிகள் ↓

மாயவன் - சினி விழா ↓

Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ரெஷராப், பகவதி பெருமாள்
இயக்கம் - சி.வி.குமார்
இசை - ஜிப்ரான்
தயாரிப்பு - திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்

தமிழ் சினிமாவில், சயின்ஸ் - பிக்ஷ்ன், அதாவது அறிவியல் கலந்த கற்பனைக் கதைகளை அதிகமாகப் பார்க்க முடியாது. அபூர்வமாகத்தான் அது போன்ற படங்கள் வரும். படத்தின் பட்ஜெட், அது மக்களைக் கவருமா கவராதா என்பது போன்ற சந்தேகங்களும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும்.

இதற்கு முன் குறிப்பிடத்தக்க சில படங்களையும், சயின்ஸ் பிக்ஷ்ன் படமான இன்று நேற்று நாளை படத்தையும் தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமார், மாயவன் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியிருக்கிறார். உண்மையிலேயே முதல் படத்திலேயே ஒரு சயின்ஸ் பிக்ஷ்ன் படத்துடன் நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

சென்னை மாநகரில் அடுத்தடுத்து நடக்கும் ஒரே மாதிரியான சில கொலைகள் பற்றி விசாரிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டரான சந்தீப் கிஷன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அது பற்றிய விசாரணையில் இறங்கும் அவர் சில அதிசயமான நிகழ்வுகளைச் சந்திக்கிறார். மற்றவர்களின் மனித வள ஆற்றலை மேம்படுத்த அவர்களை தன் பேச்சாற்றால் மூலம் ஊக்குவிக்கும் விஷயத்தை வியாபாரமாகச் செய்யும் டேனியல் பாலாஜியை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்கிறார். அப்போது டேனியல் பாலாஜிக்குள் வேறு யாரோ ஒருவர் புகுந்து கொண்டு இயக்குவது தெரிய வருகிறது. அந்த மர்மமான விஷயத்தை சந்தீப் கிஷன் கண்டுபிடிக்கிறாரா இல்லையா, என்பதுதான் படத்தின் கதை.

உளவியல் மற்றும் அறிவியல் சார்ந்த கற்பனைக்கு எட்டாத ஒரு கதை. இயக்குனர் சி.வி.குமார் அதைக் கையாண்டிருக்கும் விதம் எந்தக் குழப்பமுமில்லாமல் இருக்கிறது. இதுவரை தயாரிப்பாளராகப் பேசப்பட்டு வந்தவர் மாயவன் படத்தில் அவரை இயக்குனராகவும் பேச வைத்துவிட்டார்.

சந்தீப் கிஷன் இதுவரை தமிழில் நடித்துள்ள சில படங்களை எல்லாம் விட இந்தப் படத்தை முழுவதுமாக அவர் மீது தாங்கிக் கொள்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இன்சிடென்ட்டில் சிக்கிக் கொண்டு அவருக்கும் ரத்தத்தைப் பார்க்கும் போதெல்லாம் வரும் தடுமாற்றத்துடன், மர்மங்களுக்கான விடையைக் கண்டுபிடிக்க முயல்வது மிகவும் இயல்பாக அமைந்திருக்கிறது. போலீஸ் கதாபாத்திரம் என்றாலே சிலர் ஓவர் ஆக்டிங் செய்வார்கள். ஆனால், சந்தீப் கிஷன் கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு அந்த வட்டத்திற்குள் தன்னை அழகாகப் பொருத்திக் கொள்கிறார். அவருக்கு வைத்துள்ள ஒட்டு மீசை மற்றும் உறுத்தலாகத் தெரிகிறது.

மனநல மருத்துவராக லாவண்யா திரிபாதி. படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியே மிகவும் சுவாரசியமாகவும், இயல்பாகவும் அமைந்துள்ளது. சந்தீப் கிஷன் மீது அவருக்கு இருப்பது காதலா அல்லது பரிவா என்பது சந்தேகமாக இருந்தாலும் சந்தீப்பிற்கு இருக்கும் தடுமாற்றத்தை சரிசெய்ய அடிக்கடி சந்திப்பது வித்தியாசமான காதலாக அமைந்திருக்கிறது.

படத்தில் டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், மைம் கோபி, அமரேந்திரன் என சில பல வில்லன்கள். இவர்களில் டேனியல் பாலாஜி தனித்துத் தெரிகிறார். பேச்சாற்றால் மூலம் மற்றவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்து அதை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரம் வந்திருக்குமா என்பது தெரியவில்லை. அவருடைய பார்வையும், பேச்சும் படம் பார்ப்பவர்களையும் இழுத்துக் கொள்கிறது. ஜாக்கி ஷெராப் கிளைமாக்சில் மட்டுமே வருகிறார். இருந்தாலும் அந்தக் கொஞ்ச நேரத்தில் கலக்கி விடுகிறார்.

மனிதர்களின் மூளைகளுக்குள் இருக்கும் நினைவுகள், அவர்களது திறமைகள் என ஏறக்குறைய மூளையையே காப்பி எடுத்து அதை மற்றவர்கள் மூளைக்குள் செலுத்தி சாகாவரம் பெறும் ஆராய்ச்சியாளருக்கே உரிய திமிரை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் அமரேந்திரன். மைம் கோபி, அந்த ஜிம் டிரைனர் இருவரும் கொஞ்சமாக வந்தாலும் வில்லத்தனத்தில் வழக்கம் போல மிரட்டியிருக்கிறார்கள்.

மற்ற கதாபாத்திரங்களும் மனதில் பதியும் ஒரு படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த விதத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், மாயவன் ஆராய்ச்சி என்பது என்ன என்பதை புரிய வைக்கும் ஆராய்ச்சியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க படங்களில் இசையமைத்த பெருமை ஜிப்ரானுக்குக் கிடைத்துள்ளது. படத்தின் முக்கிய கதைப் பகுதியான ஆராய்ச்சிக் கூடத்தை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் கோபி ஆனந்த். கோபி அமர்நாத்தின் வசனமும், நலன் குமாரசாமியின் திரைக்கதை, வசனமும் படத்திற்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கின்றன.

கற்பனையை மீறிய கதைகளை படமாக எடுக்கும் போது அதில் எந்த லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அது படத்தைப் பாதிக்காது. இந்தப் படத்தில் அப்படி எந்தவிதமான பெரிய லாஜிக் மீறல்களும் இல்லை.

வழக்கமான காதல், மசாலாப் படங்களையே பார்த்துப் பழகிப் போன நமக்கு மாயவன் நிச்சயம் ஒரு மாற்றத்தைத் தரும்.

"மாயவன் - மாற்றத்தைத் தருவான்...!"

 

மாயவன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மாயவன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓