ரெமோ டிசோசா இயக்கத்தில், டைகர் ஷெரப், ஜாக்குலின் நடிப்பில் வெளியாகியிருக்கும் சூப்பர் ஹீரோ படம் தான் ‛பிளையிங் ஜாட்'. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, அமன் எனும் டைகர் ஷெரப், பள்ளி ஒன்றில் தற்காப்பு கலை ஆசிரியராக இருக்கிறார். இவருடன் அவரது அம்மா தில்லான் எனும் அமிர்தா சிங்கும், நண்பர் ரோகித் எனும் கெளரவ் பாண்டேவும் இருக்கிறார்கள். மகன் அமன், தன் கணவரை போல் தைரியமாக இல்லாமல் இருப்பதை கண்டு வேதனைப்படுகிறார் தில்லான். இந்தச்சூழலில் அமனின் சொந்த இடத்தை கைப்பற்ற வில்லனான தொழிலதிபர் மல்கோத்ரா எனும் கேகே மேனன் முயற்சிக்கிறார். தில்லோன், இடத்தை தர மறுக்கவே சூப்பர் வில்லனான ராகா எனும் நாதன் ஜோன்ஸ் மூலமாக தில்லான், அமன் ஆகியோரை கொலை செய்ய திட்டமிடுகிறார் மல்கோத்ரா. இப்படிப்பட்ட சூழலில் அமன், திடீரென சூப்பர் ஹீரோவாகி தன் அம்மாவையும், சொந்த இடத்தையும் வில்லன்களிடமிருந்து எப்படி மீட்டார் என்பது படத்தின் பிளையிங் ஜாட் படத்தின் மீதிக்கதை. அத்துடன் கீர்த்தி எனும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் உடன் காதலையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
பாகி படத்தின் வெற்றிக்கு பிறகு டைகர் ஷெரப்பில் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் இது. அதிலும் சூப்பர் ஹீரோ படம் என்று போய் பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. டைகர் ஷெரப், முடிந்தளவிற்கு தன் ரோலை சிறப்பாக செய்ய முயற்சித்து அதில் பாதி வெற்றி பெற்றிருக்கிறார்.
ஜாக்குலின் பெர்ணான்டஸ் அழகாக வந்து போகிறார். அவ்வளவுதான். மற்றபடி படத்தில் அவருக்கான ரோல் பெரிதாக இல்லை.
டைகரின் அம்மாவாக வரும் அமிர்தா சிங், ஓவர் ஆக்டிங்கில் ஓவர் டாஸ் தெரிகிறார். கெளரவ் பாண்டே, கேகே மேனன் நாதன் ஜோன்ஸ் போன்றவர்கள் எல்லாம் ஓகே என்ற அளவில் தான் நடித்துள்ளனர்.
நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் ரெமோ டிசோசா இயக்கத்தில் வெளிவந்துள்ள நான்காவது படம் இதுவாகும். ஆனால் இயக்கத்தில் இம்முறை சோபிக்க தவறிவிட்டார் ரெமோ. கதை நல்ல கதை தான், ஆனால் அதை ரசிகர்களுக்கு ஏற்றபடி திரைக்கதையாக கொடுக்க தவறிவிட்டார். படத்தின் முதல்பாதி ஓகே., ஆனால் பின்பாதி ரசிகனை சலிப்படைய செய்கிறது. அதிலும் சூப்பர் ஹீரோ படம் என்று கூறிவிட்டு குழந்தைகளுக்கான படமாக தந்தது ஏமாற்றம்.
‛‛பீட் பே பூட்டி...'' போன்ற பாடல்கள் ஈர்க்கின்றன. ஆனால் பின்னணி இசை சத்தம் தான் அதிகமாக உள்ளது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஓகே.,
சூப்பர் ஹீரோ படம் என்று கூறிவிட்டு, கடைசியில் குழந்தைகள் மட்டுமே பார்க்கும் விதமாக ‛பிளையிங் ஜாட்' படம் எடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம்.