Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கிடாரி

கிடாரி,kidari
12 செப், 2016 - 17:40 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கிடாரி

கம்பெனி புரடக்ஷன்ஸ் பேனரில் எம்.சசிக்குமார் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு படைப்பு... புதியவர் பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கிறார். வெற்றிவேல் படத்தை அடுத்து, சசிக்குமார் ஜோடியாக நிகிலா விமல் மீண்டும் நடிக்க வெளிவந்திருக்கிறது "கிடாரி".


கதைப்படி, தமிழகத்தின் விருதுநகர் - சாத்தூர் ஏரியாவையே தன் கைக்குள் வைத்துக் கொண்டு சின்னதாய் சில தொழில்களும், பெரிதாய் பலதரப்பட்ட கட்டப்பஞ்சாயத்தும் செய்து வரும் கொம்பையா பாண்டியன் - வேல ராமமூர்த்தியிடம் செஞ்சோற்று கடனுக்காக காவலனாக, வளர்ப்பு மகனாக உடன் இருக்கிறார் கிடாரி - சசிக்குமார். ஒரு கட்டத்தில் தான் சோற்றுகே வழியில்லாமல் அனாதையானதற்கு கொம்பையா தான் காரணம் என அறியும் கிடாரி, கொம்பு சீவி விட்ட காளையாக கிளம்புகிறாரா? முள் மேல் பட்ட சேலையாக பிரச்சினையை கையாளுகிறாரா..? என்பது தான் கிடாரி படத்தின் அடிநாத கதை.


இக்கதையுடன், கொஞ்சமே கொஞ்சம் சசிக்குமார் - நிகிலா விமலின் காதலையும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாத விசுவாசத்தையும், அதை ஒட்டிய ஆக்ஷனையும், கலந்து கட்டி, கிடாரியை, ஒரு மாதிரி தேவர் மகன், விருமாண்டி பாணியில் மண் மணம் கமழ சிறப்பாய் தர முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கின்றனர்... இப்படக் குழுவினர், அதற்காக அவர்களை பாராட்டலாம்.


கதாநாயகர் கிடாரியாக சசிக்குமார், உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணக் கூடாது என தன் அப்பா மாதிரியான வேல ராமமூர்த்தியை எதிர்ப்பவர்களையெல்லாம் அடித்து ஆக்ஷன் காட்சிகளில், துவம்சம் செய்வதிலாகட்டும், அப்பா மாதிரியான அவர் தன் அப்பா, நெப்போலியனையும் அவரது நம்பிக்கையையும் நயவஞ்சகமாக தீர்த்து கட்டியவர்... என்பது தெரிந்து துடிப்பதிலாகட்டும் சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். அதிலும், லவ் எபிசோட்களில் நிகிலா விமலுடன் செம மூடு கிளப்புகிறார். படபட பைக்கில் படம் முழுக்க பந்தாவாக பவனி வரும் அவரது லந்து, ட்ரை ஏரியாவான கரிசல் மண் கள இக்கதைப்படத்தை, மேலும் போரடிக்காமல் பார்த்து கொள்வது மகிழ்ச்சி.


கதாநாயகி நிகிலா விமல், வெற்றிவேல் படத்தை அடுத்து சசிக்குமாருடன் ஜோடி சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் இது என்பதாலோ, என்னவோ எக்கச்சக்கமாய் நெருக்கம், கிறக்கம் காட்டியிருக்கிறார். அது அதிக இரத்த வாடை வீசும் இந்தஆக்ஷன் படத்தை போரடிக்காமல் பார்த்துக் கொள்கிறது. சபாஷ்!


கிட்டதட்ட வில்லானிக் ஹீரோ எனுமளவிற்கு எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, அந்த கரிசல் மண்ணுக்கே உரிய வீர ராமமூர்த்தியாகவும் ஆரம்ப நாட்களில் துரோகமூர்த்தியாகவும் படம் முழுக்க வியாபித்திருக்கிறார். கெஸ்ட் ரோலில் ப்ளாஷ்பேக்கில் வரும் நெப்போலியனை நம்ப வைத்து, அவரது அரசியல் ஆசான் காளையுடன் சேர்த்து வைத்து இருவரையும் தீர்த்து கட்டி ராஜ்ஜியத்தை பிடிக்குமிடம் நயவஞ்சகம் என்றாலும், பிரமாதமான ரசனை.


தன் பிள்ளையை இழந்ததற்கு காராணமான கொம்பையாவையும், கிடாரியையும் பழிவாங்க பலவகையிலும் களம் இறங்கும் சுஜா வாருன்னியில் தொடங்கி, வேல மூர்த்தியின் சம்பந்தியாக வரும் ஜோக்கர் மூ.ராமசாமி, அம்மா வசுமித்ரா, சுபாமோகன், கே.என்.காளை, தெனாலி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன், ப்ளாஷ்பேக்கில் கெஸ்ட் ரோலில் வரும் மாஜிநாயகர் நெப்போலியன் வரை... ஒவ்வொரு பாத்திரமும் தங்கள் பாத்திரத்தின் கணமறிந்து பளிச்சிட்டுள்ளது படத்திற்கு மேலும் மேலும் பெரும் வலு சேர்க்கிறது!


திலீப் சுப்பாராயனின் சண்டை பயிற்சி கதைக்கேற்ற மிரட்டல். எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் விருதுநகர் - சாத்தூர் பகுதிகளிலேயே நாமும் அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு ஆயுள் முழுக்க வாழ்ந்து வந்த திருப்தி ஏற்படுகிறதென்பது இப்படத்திற்கு பெரும் பலம்.


தர்புகா சிவாவின் இசையில் வண்டியிலே நெல்லு வரும்... பாடலும் பின்னணி இசையும் பிரமாதமாய் இருக்கிறது.


பிரசாத் முருகேசனின் இயக்கத்தில் மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை.... உள்ளிட்ட ஒரு சில சிறு சிறு குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கிடாரி மற்றும் கொம்பையா பாண்டியனின் விரோதிகளை ரசிகனுக்கு ஒவ்வொரு இருவராக அறிமுகம் செய்து காட்டும் விதம் புதுசாக இருப்பது பெரும் பலம். மேலும், விருதுநகர் - சாத்தூர் ஏரியா மண்ணின் பெருமை பேசும் விதமாக அம்மண்ணைச் சார்ந்த வீரம், துரோகம், குரோதம் மற்றும் காதலைச் சொல்லி வெளிவந்திருக்கும் ‛‛கிடாரி க்கு ஆக்ஷன் அபிமானிகள் அபரிமிதமான வரவேற்புத் தரலாம்! பிற ரசிகர்கள்.?!"


மொத்தத்தில், "கிடாரி" - சற்றே இரத்த வாடை தூக்கலான அதே நேரம் கொஞ்சம் ஸ்லோவான "ஆக்ஷன் சவாரி!"




-------------------------------------------------------


கல்கி விமர்சனம்




பல படங்களில் கதைக்கு இடையில் சண்டைக் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தில் - உல்டாவாக - சண்டைக் காட்சிகளுக்கிடையில் துக்குளியூண்டு படம் இருக்கிறது. கிடாரி என்ற பெயர்க் காரணத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம். கதாநாயகப் பாத்திரத்தின் பெயர்தான் அது.

ரத்தம் சொட்டச் சொட்ட ஆரம்பிக்கும் படம் கடைசிவரையில் ரத்தத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது.

கதாநாயகி நிகிலா, சும்மா சொல்லக் கூடாது. ஓரளவு நடிக்கவும் செய்கிறார். மூக்கு முழியுமாக லட்சணமாக இருக்கிறார். ஆனால் அவர் சசிகுமாரைக் கிள்ளும் காட்சிதான் அவலட்சணம். சென்சார் தூங்கிய காட்சிகளில் அதுவும் ஒன்று.

மறைமுகமாக சாதி உணர்வை ஊட்டும் இது போன்ற படங்கள், இளைய தலைமுறைக்குத் தவறான பாடங்களைப் புகட்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

பாத்திரத் தேர்வுகள் கனகச்சிதம். குறிப்பாக கொம்பையா வேடம் ஏற்ற வேல. ராமமூர்த்தி பாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறார். உள்ளூரில் சலம்பல் செய்யும் வயசாளி ஆகட்டும். ஓ.ஏ.கே. சுந்தர் ஆகட்டும் பிரமாதமான தேர்வு!

பழிவாங்க நூதனமான வழியைத் தேர்ந்தெடுக்கும் தம்பதி என்ன ஆனார்கள் என்று சொல்லாமலே விட்டிருக்கிறார்கள்.

தர்புகா சிவா இசையமைத்திருக்கும் பாடல்களில் இரைச்சல் அதிகம் இல்லை. அர்த்தமும் புரிகிறது. குடைவேல மரங்களும், வறண்டபூமியும்,ஒற்றைத் தார்ச்சாலையும் கதைச் சூழலின் பீதியை அதிகரிப்பது நிஜம்.

சின்னத் தம்பி பாடலை மாற்றிப் பாடச் சொல்லி வில்லனைப் பாடாயப்படுத்துகிறார் சசிகுமார். அவதிப்படுவது வில்லன் மட்டும் இல்லை. நாமும்தான்.

TCH3270, TCM9009 என்றெல்லாம் வாகனங்களின் பதிவு எண்ணை வைத்திருப்பது ஒன்றி் மூலம் கதை நடக்கும் காலகட்டத்தை லேசாக உணர வைக்க முயன்றிருக்கிறார்கள். சரி, ஆனால் கதை மாந்தர்களின் உடையிலோ, வேறு சுற்றடிச் சான்றுகள் மூலமோ அதைக் காட்சிப்படுத்தத் தவறிவிட்டார்கள்.

கொம்பையா, விரோதம் சம்பாதித்து வைத்திருக்கும் ஒவ்வொருவரின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் முடிவின்றி நிண்டு கொண்டே இருக்கின்றன.

இந்தப் படத்தில் பல மரணங்கள் நிகழுகின்றன. அவையனைத்துமே கொலைகள் என்பது ஒரு பொதுவான அம்சம்!

தியேட்டரை விட்டு வெளியே வரும்போது யாரைப் பார்த்தாலும் கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு நம்மை வெட்ட வருவதைப் போலவே தோன்றுகிறது. சசிகுமார் சார்! வன்முறை ஃபார்முலாவை மாற்றினால் நல்லது!






கிடாரி: ரத்தக் காட்டேரி




திரையரங்கில் ரசிகர் நீலாங்கரை எம்.ஏ. சேகர் கருத்து: தமிழகத்தின் சில பகுதிகளில் புரையோடிப் போயிருக்கும் சாதி உணர்வை, இயன்றவரை மறைமுகமாகக் கிளறியிருக்கிறார்கள். குற்றவாளிகளுடன் காவல் துறை கைகோத்திருப்பதை அம்பலப்படுத்துகிறது படம். வன்முறை அதிகம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in