Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

வில்லாதி வில்லன் வீரப்பன்

வில்லாதி வில்லன் வீரப்பன்,Villathi Villain Veerappan
  • வில்லாதி வில்லன் வீரப்பன்
வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள படம் இது.
06 ஜூலை, 2016 - 17:35 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வில்லாதி வில்லன் வீரப்பன்

இதுவரை தான், இயக்கிய படங்களால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் தடை பல கடந்து சற்று தப்பும், தவறுமாக சித்தரிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் இறுதி நாட்கள் பற்றிய வீரவரலாறு!


கடந்த 12 வருடத்திற்கு முன், சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டு ஊர் போலீஸுக்கும், கூடவே அரசாங்கத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய காட்டு ராஜா வீரப்பன், இரு மாநிலங்களாலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பெஷல் போர்ஸ் போலீஸுக்கு எப்படி, எப்படியெல்லாம் இடையூறு செய்தார்? செய்ய விழைந்தார்..? இறுதியில், சாதுர்யமாக அவரையும், அவர் கூட்டாளிகளையும், எப்படி போலீஸ் போட்டு தள்ளியது..? என்பதை இயக்குனர் ராம்கோபால் வர்மா தனக்கே உரிய பாணியில் இயக்கி வெளிவந்திருக்கும் படம் தான் வில்லாதி வில்லன் வீரப்பன்.


என்ன? வீரப்பனின் கதையில் கொஞ்சம், எக்ஸ்ட்ராபிட்டிங், இல்லாத பொல்லாத பில் - டப்புகளை வீரப்பன் தான் தற்போது உயிரோடு இல்லையே.... எங்கே தன்னை கேட்கப் போகிறார்? எனும் தைரியத்தில், ஏகத்திற்கும் அள்ளிவிட்டிருக்கிறார் ராம்கோபால் வர்மா. குறிப்பாக, பெற்ற குழந்தையையே தான் , போலீஸில் இருந்து தப்பிப்பதற்காக கழுத்தை திருகி கொன்றவர் வீரப்பன்... என்றும், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரால், கொடூரமாக கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரது மனைவியின் வீட்டில், போலீஸ் ஏற்பாட்டின்படி வாடைக்கு குடியேறி அடைக்கலம் புகுந்திருந்தார், அப் போலீஸ் மனைவியை தன் கணவரைக் காட்டிலும் கண்கண்ட தெய்வமாக நம்பினார் என்றும், வீரப்பன் இறுதி நாட்களில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை போற்றி புகழ்ந்ததாகவும், அந்த புகழ்ச்சியினூடே இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்றது, பிரபாகரன் தான்... என வீரப்பனே சொல்வதாகவும், இறுதியில் பிரபாகரனை சந்திக்க ஆம்புலன்சில் தன் கூட்டாளிகளுடன் கிளம்பிய போது தான் அதிரடிப்படையினரால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் தன் இஷ்டத்திற்கு இயக்குனர் ஆர்ஜீவி அளந்துவிட்டிருப்பது தான் சற்று ஜாஸ்தியாகவே கண்ணை கட்டுகிறது.


இயக்குனர் ராம்கோபால் வர்மா, இப்படஆரம்பத்தில் வீரப்பனை மிகக் கொடூர மனிதனாக சித்தரித்திருந்தாலும் அவரின் மனிதாபிமானத்தையும், மக்கள் மீதான நம்பிக்கையையும்., அவரை பிடிக்கும் விஷயத்தில் போலீஸின் போக்கிரி தனங்களையும் சொல்லாமல் இல்லை.


கதையின் நாயகராக அச்சு அசல் வீரப்பனாக, தமிழுக்கு புதுமுகம் சந்தீப் பரத்வாஜ்., பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். ‛‛சிங்கத்தயே சீண்டி பார்க்கறீயா... உன் சாவ பார்த்து சாத்தான் கூட பயந்து ஒடணும்... என ஆரம்பத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷனை சூறையாடி அந்த போலீஸ் அதிகாரியை கொடூரமாக கொலை செய்வதில் தொடங்கி, சி.ஜி எபெக்ட்டில் சீறும் சிறுத்தையை மரக்கழியால் துரத்துவது, காட்டு யானைகளை டுமீல், டுமீல்... என தன் வேட்டை துப்பாக்கியால் போட்டுத் தள்ள தந்தம் எடுப்பது... இறுதியில் முறுக்கு மீசையை சற்றே மழித்துக் கொண்டு தன், கூட்டாளிகளுடன போலீஸின் வஞ்சகம் தெரியாமல் ஆம்புலன்ஸில் ஏறிக் கிளம்பி சரமாரியான துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையாகி உயிரை விடுவது வரை வீரப்பனாகவே வாழ்ந்திருக்கிறார் சந்தீப்.


அதிரடிப்படை அதிகாரியாக சச்சின் ஜெ.ஜோசி, "நம்ம கிட்ட நிறைய போர்ஸ் இருக்கு, அதற்காக ஒரு எறும்ப பிடிக்க பெரிய படையை இறக்குறதில் என்ன சார் இருக்கு? வெறும் செருப்பு போட்டு கிட்டு 15 - 20 பேருடன் சுத்திகிட்டு பழங்காலத்து ரைபில் பிஸ்டலுடன் நம்மாளுங்க நிறைய பேரை வீரப்பன் போட்டு தள்ளியிருக்கான் அதற்கு நிறைய போலீஸ் போர்ஸைக் காட்டிலும் புத்திசாலித்தனம் தான் வேண்டும் என உயர் அதிகாரியிடம் வாதம் பண்ணுவதில் தொடங்கி, இந்திரா காந்தியை ஒரு டெரரிஸ்ட்டா கொன்றான் அவரது பாதுகாப்பு படை வீரர் தானே சுட்டுக் கொன்றான்.... என தன் சகாவுக்கு தம் படை வீரர்கள் மீதும் சந்தேகம் இருப்பதை நியாயப்படுத்துவது வரை சக்கை போடு போட்டிருக்கிறார்.


வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக வரும் உஷா ஜாதவ், வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவியாக வரும் லிசாரே உள்ளிட்ட இருவரும் நன்றாக நடித்திருந்தாலும் அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் நாடகத்தன்மையுடனே நகர்வது குறை. அதிலும் , கிராமத்து பெண்ணான முத்துலட்சுமிக்கு., புருஷனை கொன்ற வீரப்பனை பழி வாங்க காத்திருக்கும் லிசாரே, கேரம் விளையாட கற்று தருவதெல்லாம், இப்படத்திற்கும் , கதைக்கும் தேவையே இல்லாத ஒவரான காட்சிகள்.


"இப்ப , மீடியா கிட்ட என்ன சொல்றது .... வீரப்பனை பிடிக்க போட்ட பிளான் எங்களை விட அவனுக்கு நல்லாத் தெரியும்ன்னு ... சொல்லவா..." என கொதிக்கும் உயரதிகாரியின் நடிப்பில் தொடங்கி, மதானி, குமார், உள்ளிட்டோரின் ஆக்ஷன், ரியாக்ஷன்களும் கச்சிதம்.


ஜீத் கங்குலியின் மிரட்டல் இசையும், ஜான்ஸ்டீவர்ட் - யதுரியின் பின்னியெடுக்கும் பின்னணி இசையும், அனிகித்கந்த கேலின் பிரமாண்ட ஒளிப்பதிவும், ஆலன் அமீனின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், சற்றே நீளம் என்றாலும் அன்வர் அலியின் கோர்வையான படத்தொகுப்பும் இப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.


ஆனாலும், "ரஜினி, காஞ்சி சாமி, பெரிய மினிஸ்டர் எல்லாத்தையும் கடத்தணும்... "என வீரப்பன் பேசுவது மாதிரியான தப்பும் தவறுமான டயலாக்குகள்.... கடுப்பேற்றினாலும், வீரப்பனின் மனைவி முத்துலட்சமி, "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா விதவை வாழ்க்கைதான்..." எனப் பேசுவது., ஒரு ராட்சஷனை அழிக்க அவனை விட பெரிய ராட்சஷனாக உருவெடுக்கணும்... என க்ளைமாக்ஸில் அதிரடிப்படை அதிகாரி சச்சின் ஜோசி பன்ச் பேசுவது... உள்ளிட்டவை சினிமா டிக்காகத் தெரிந்தாலும்., ரசனையாக இருக்கிறது .


படம் முழுக்க வளைய வரும் சில, பல பொய்கள், வலிய திணிக்கப்பட்ட காட்சிகள், போலீஸ் பெருமைகள்... என இருந்தாலும், அப்படி, இப்படி, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், பெரும்பாலும் இருபக்கமும் பேலன்ஸ் ஆகவே, இயக்குனர் ராம்கோபால் வர்மாவால் கையாளப்பட்டிருக்கும் வில்லாதி வில்லன் வீரப்பன் இன்னமும், கதாநாயகனாகவே தெரிகிறான்! ரசிகர்களையும் கவருகிறானா? பார்க்கலாம்?!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in