Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

தில்லுக்கு துட்டு

தில்லுக்கு துட்டு,thilluku thuttu
  • தில்லுக்கு துட்டு
  • சந்தானம்
  • நடிகை:சனாயா
  • இயக்குனர்: ராம்பாலா
27 ஜூலை, 2016 - 14:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தில்லுக்கு துட்டு

இதற்கு முன் கண்ணா லட்டு திண்ண ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் கதாநாயகராக, பிறரது படங்களில் காமெடி நடிகராக நடித்து கொண்டே நடித்தது போன்று இல்லாமல்... இனி, முழுக்க முழுக்க கதாநாயகராக மட்டும் தான் நடிப்பது, என சந்தானம் முடிவு செய்த பின் நடித்து வெளிவந்திருக்கும் திகில், ஆக்ஷன் காமெடி படம் தான் "தில்லுக்கு துட்டு".


தீவிர முருக பக்தரான சந்தானம், சீனியர் டூப் நடிகர் ஆனந்தராஜின் ஒற்றை வாரிசு. அப்பாவின் செல்லத்திலும், சேட்டிடம் ட்யூ போட்டு லோடு ஆட்டோ வாங்கி அதை ஒட்டும் மாமா கருணாசின் மவுசிலும், தாம் மிடில் கிளாஸுக்கும் கீழே என்பதை மறந்து, இளம் கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப ஏட்டிக்கு போட்டி, எகனைக்கு மொகனை பேசியபடி ஊர் சுற்றி வருபவர் சந்தானம். இவர், சின்ன வயதில் ஸ்கூல் படிக்கும் காலத்தில், தனக்காக செய்த புரட்சிக்காக பாரின் போய் படித்து விட்டுத் திரும்பிய சேட்டு பொண்ணு சனாயா, அவரை தேடிப்பிடித்து விழுந்து, விழுந்து காதலிக்கிறார். சந்தானமும் அப்படியே காதலிக்க, இந்த விஷயம் சேட்டுக்கு தெரிய வருகிறது. சந்தான்தின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து அவரை சேட்டு பையனாக கருதும் சேட்டு, பெற்றோரோடு சந்தானத்தை பெண் பார்க்க வரச் சொல்கிறார். சந்தானமும் அவ்வாறே, செய்ய, அவரது குடும்பத்தை பார்த்ததும் கொதித்தெழும் சேட்டு, அவர்களது காதலுக்கு நோ சொல்லி அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். அதை கலைத்து விடுகிறார் சந்தானம். இதில் கடுப்பாகும் சேட்டு, தன் செல்ல மகளின் மனம் கோணாமல் கூலிக்கு கொலை செய்யும் மொட்டை ராஜேந்திரன் குரூப்புடன் கைகோர்த்து சந்தானத்தை தீர்த்து கட்ட திட்டம் தீட்டுகிறார்.


அதன்படி, சந்தானம் - சனாயாவின் திருமணத்திற்கு ஒ.கே சொல்லும் சேட்டு, திருமணத்தை இங்கு சிட்டியில் வைத்துக் கொண்டால், தன் குடும்ப கவுரவத்திற்கு பங்கம் வரும். அதனால், சிவன் கொண்டைமலை காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் இரு குடும்பங்களும் மட்டும் பங்கு கொண்டு திருமணத்தை ரகசியமாக நடத்தி முடிப்பது... என ஆசை வார்த்தைக் கூறி தன் குடும்பத்துடன், சந்தானம் மற்றும் அவரது குடும்பத்தை மட்டும் அழைத்துப் போய், மொட்டை ராஜேந்திரன் ஆட்களை பேயாக உலவ விட்டு பயமுறுத்தியே சந்தானம் குடும்பத்தை தீர்த்து கட்டுவது தான் சேட்டின் திட்டம். அதன்படி, ஒரு சுபயோக சுபதினத்தில் இரு குடும்பங்களும் சிவன் கொண்டைமலை பங்களாவிற்கு கிளம்புகின்றனர். மெய்யாலுமே பல ஆண்டுகளாக பேய்கள் வசிக்கும் அந்த பங்களா, இரு குடும்பத்தையும் என்ன பாடு படுத்துகிறது? என்பதையும் ராஜேந்திரனின் டூப் பேய்களிடமிருந்தும் நிஜப் பேய்களிடமிருந்தும் சந்தானம் தப்பித்தாரா?, நாயகி சனாயாவின் கரம் பிடித்தாரா..? என்பதை திக், திக், திகிலுடனும், பக், பக் காமெடியுடனும் தொய்வே இல்லாது சூப்பராக சொல்கிறது தில்லுக்கு திட்டு படத்தின் திகட்டாத மீதிக் கதை!


முருக பக்தர் குமாராக சந்தானம், முந்தைய படங்களைக் காட்டிலும் செம ஸ்லிம்மாக ஹீரோவாக கெத்துக்காட்டியிருக்கிறார். டான்ஸ், பைட் என சகலத்திலும் நிறைய ஹோம் ஒர்க் செய்து நிறைய இளம் நடிகர்களுக்கு இந்தப் படத்தின் வாயிலாக சவால் விட்டிருக்கும் இந்த சான்டல நடிகர் தன் பாணி காமெடி பன்ச் களிலும் பஞ்சம் வைக்கவில்லை.


நீ ஈஸியா சொல்லிட்ட, ஆனா, என்னால லவ்வுக்கு லீவு விட முடியல... என காதலியை சந்திக்க வந்து விட்டு சாக்கு போக்கு சொல்வதிலாகட்டும், காதலியிடம் ஸ்ட்ராங்கா, ஒரு சாப்பா குத்திட்டு போ... என முத்தம் கேட்கும் இடத்திலாகட்டும், பல பேரை கொன்ற குதிரைக்காரன் பேயா வருவான்... போயிடுங்க, என பயமுறுத்துபவர்களிடம் நான் தெரியாமத்தான் கேக்குறேன்... அவனால செத்துப் போனவங்க எல்லாம், ஆவியா மாறி அவனை இன்னேரம் பழிவாங்கியிருக்கணுமே... என கலாய்ப்பதிலாகட்டும், மொட்டை ராஜேந்திரனை குளோசப்பில் பார்த்து விட்டு யார்ரா நீ, முட்டைய தேடி வந்த டைனேசர் மாதிரி இருக்க.? என்றும், சந்தானத்தின் சகலை ஆக வரும் டி.எம் .கார்த்திக் கைப் பார்த்து மூஞ்சி தான் புழிஞ்சி போட்ட டவல் மாதிரி இருக்கு... ஆனா மூளை முப்பது கிலோ தேறும் போல... என கிண்டல் அடிப்பதிலாகட்டும், டூப் நடிகரானஅப்பா ஆனந்தராஜை எதுக்கு ஆப்பாட்டிலும் அரைக் கிலோ கோழிக்கறியும் ஆவிங்களுக்கு வச்சிட்டு திரும்பி பார்க்கம் வரணுங்கறே... நீ ஆப் பை அமுக்கறதை நாங்க யாரும் பார்த்துட கூடாதுன்னுதானே? என சதாய்ப் பதிலாகட்டும் மாமா கருணாஸ், பேயை அடிக்க கோணிப்பையும், குச்சிகம்புமாக கிளம்பி, நாங்கள்ளாம் சுபாஷ் சந்திர போஸூக்கே என சொற்பொழிவு ஆற்றுவது பார்த்து கிண்டலடிப்பதிலாகட்டும் சகலத்திலும் சபாஷ் சொல்ல வைக்கிறார் சந்தானம் .


சேட்டு பெண்ணாக வரும் நாயகி சனாயா, செம கிளாமர் சேட்டைக்கார பெண்ணாக, சந்தானத்தை மட்டுமின்றி ரசிகனையும் கவருகிறார்.


சந்தானத்தின் மாமாவாக வரும் கருணாஸ் இதில் காமெடி நடிகராக குறையேதும் வைக்கவில்லை. இவரும் சந்தானத்தின் அப்பாவாக வரும் ஆனந்தராஜூம் குடிக்கு அலையும் கோமகன்களாக படம் முழுக்க கொளுத்துகின்றனர் காமெடி சரவெடியை... கூடவே மொட்டை ராஜேந்திரன் வேறு சீரியஸ் காமெடி அதகளம் செய்திருப்பது படத்திற்க்கு மேலும் வலு சேர்க்கிறது.


செளரவ் சுக்லா, சிங்கமுத்து, மயில்சாமி, டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோரும் வெடிச்சிரிப்புக்கு கியாரண்டி


எஸ்.எஸ்.தமனின் இசையில் சிவன் மகன்டா..... , காணமல் போன காதல்...., தில்லுக்கு துட்டு... உள்ளிட்ட பாடல்கள் ரசனை, அதிலும் சிவன் மகன் டா ஒப்பனிங் சாங் சந்தானத்திற்கு ரஜினி படத்திற்கு இணையான பில்டப் பை தருகிறதென்றால் மிகையல்ல. கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் மிரட்டல். ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கத்தில் அந்த பேய் பங்களாவும், அதற்கு தீ பக்குமார் பாடியின் மிரட்டும் ஒளிப்பதிவும் செமயாய் இருக்கிறது. கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு பலே, பலே தொகுப்பு.


ராம் பாலாவின் கதை, இயக்கத்தில் காமெடி பேய்களும் கதறும் நட்சத்திரங்களும் செம மிரட்டல். மொத்தத்தில், சந்தானத்தின் "தில்லுக்கு துட்டு - நிச்சயம் ஹிட்டு!"


----------------------------------------------------------------




குமுதம் சினி விமர்சனம்





சந்தானம் கதாநாயகனாக நடித்த பேய்ப் படம்!


கதை என்ன?

தன் மகளைக் காதலிக்கும் ஏழை சந்தானத்தை மருமகனாக ஏற்றுக் கொள்ளாமல், போட்டுத் தள்ள பணக்கார சேட் திட்டம் போடுகிறார். அதற்காக ஏற்பாடு செய்யப்படும் பங்களாவில் பேய் வேஷத்தில் போய் சந்தானத்தைக் கொல்ல மொட்டை ராஜேந்திரன் க்ரூப் முயல, அந்த பங்களாவில் நிஜமாகவே பேய்கள் இருக்க, என்ன ஆச்சு? என்பதுதான் தில்லுக்கு துட்டு! இயக்கம் லொள்ளு சபா ராம்பாலா.


பக்கா ஹீரோ பிராண்டாக மாறியிருக்கிறார் சந்தானம். சண்டைக் காட்சிகள், காதல் சீன்ஸ் எல்லாம் அஃதே. அவர் என்ன சொன்னாலும் ஹஹா!


கதாநாயகி சனாயா ஜிவ்வென்று இருக்கிறார். தன் வீட்டுக்குத் திருட வந்த சந்தானத்தை, ஆசையாய் வரவேற்று, பியர் கொடுத்து பின் போலீஸில் மாட்டிவிடுவது க்யூட்! சனாயாவின் அப்பாவாக வரும் சௌரவ் சுக்லா, பக்கா!


மொட்டை ராஜேந்திரன் கலகலக்க வைக்கிறார். வில்லன் புகழ் ஆனந்தராஜூக்கு காமெடியும் நன்றாக வருகிறது.


'பேயால நிறையப் பேர் செத்தாங்கன்னா, அவங்க எல்லாம் ஆவியா வந்து பேயைப் பழி வாங்க மாட்டாங்களா?' யோசிக்க வைத்த டயலாக்!


தீபக்குமாரின் ஒளிப்பதிவு பளிச்.


'சிவன் மகன் டா' பாடல் ஓகே டா!


நிஜப் பேய்களும், செட்டப் பேய்களும் சந்தானத்தைக் கொல்லத் துரத்தும் அந்த க்ளைமாக்ஸ் சேஸிங் சுந்தர்.சி பட பரபர..!


சமீப காலமாய் பேய்ப்படங்களாக வந்து.. போதும்டா சாமி என்று கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது.


தில்லுக்கு துட்டு - பேய் கலாட்டா!


குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
தில்லுக்கு துட்டு தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in