Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

கத்தி சண்டை

கத்தி சண்டை,kathisandai
06 ஜன, 2017 - 15:14 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கத்தி சண்டை

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபாலின் தயாரிப்பில் விஷால் - தமன்னா ஜோடியுடன் வடிவேலு , சூரி ஜெகபதி பாபு ... உள்ளிட்டோர் நடிக்க., காமெடிஸ்பெஷல் டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் காமெடிக்கும் பஞ்சமில்லாத சீரியஸ் ஆக்ஷன் சப்ஜெக்ட் தான் "கத்தி சண்டை.


"ஊரை அடித்து உலையில்.போடும், ஒரு எம்.எல்.ஏ வும் , எம்.பியும் ., கூட்டு சேர்ந்து தங்கள் ஊருக்கு வரவேண்டிய சாலை வசதி , குடிநீர் வசதி , பள்ளிக்கூட வசதி , வீட்டு வசதி... எல்லாவற்றையும் செய்யாமல் செய்ததாக அரசாங்கத்திடம் கணக்கு காட்டி ஸ்வாகா செய்த பல நூறு கோடி பணத்தை தனது புத்திசாலிதனத்தால் ., சாமர்த்தியமாக அடித்துப் பிடுங்கி தடைபட்ட வசதிகளை தன் கிராமத்திற்கு செய்து தரும் கதாநாயகனையும் அவனது சாதனைகளையும் , காதலையும் பற்றிய கதை தான் "கத்தி சண்டை " படம் மொத்தமும்.


செயற்கரிய காரியங்கள் பல செய்யும் கதாநாயகராக அர்ஜுன் ராமகிருஷ்ணனாகவே வாழ்ந்திருக்கிறார் விஷால். அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் சரி ., தமன்னாவுடனான காதல் காட்சிகளிலும் சரி ., சூரி_வடிவேலுடனான காமெடி காட்சிகளிலும் சரி.... பிய்த்து பெடலெடுத் திருக்கிறார் விஷால்.


கதாநாயகி திவ்யாவாக -தமன்னா ., எக்கச்சக்கமாய் கலக்கி இருக்கிறார் நடிப்பிலும் சரி கிளாமரிலும் ... வாவ் , என வாய் பிளக்க வைக்கிறார் அம்மனி.


மனோதத்துவ டாக்டர் பூத்திரியாக வடிவேலு, இண்டெர்வெல்லுக்கு பின் தன் அடிப்பொடிகள் ஆர்த்தி, பாவா லட்சுமணன், பாலாஜி... உள்ளிட்டவர்களுடன் வருகிறார். பாவம் சிரிப்பு தான் வடிவேலுவை பார்த்ததும் பழைய மாதிரி ரசிகனுக்கு வரமாட்டேன் என்கிறது.


அதேநேரம் இண்டர்வெல்லுக்கு முன் படத்தை விஷாலின் அதிரடி ஆக்ஷனுக்கு நிகராக தூக்கி பிடிப்பது ரவுடி தேவாவாக வரும் சூரியும் அவரது பெண் டான்ஸர்ஸ் கெட்-அப்புகளும் தான். அலுப்பு தட்டாமல் அதகளம் செய்திருக்கிறார் சூரி!


மற்றபடி, டெபுடி கமிஷ்னர் தமிழ் செல்வனாக வரும் ஜெகபதி பாபு, எம்.பி "கம் " சென்ட்ரல் மினிஸ்டராக-ஜெயபிரகாஷ், எம்.எல்.ஏ.வாக தென்னவன், சம்பத் - தருண் அரோரா, செளந்தர்ராஜன், காலேஜ் புரபசராக சின்னிஜெயந்த், மருத்துவர் - மதன் பாப், நிரோஷா, ஆர்த்தி, சரண் தீப் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ் மூவரின் ஆக்ஷன் காட்சிகள் அதிரடி.

பசும்பொன் ஜோதியின் காமெடி, கருத்து நெடி வசனங்கள் ஆர்.கே.செல்வாவின் படுத்தாத முன்பாதி படத்தொகுப்பு, ரசிகனை படுத்தும் பின்பாதி படத்தொகுப்பு. ரிச்சர்ட் எம்.நாதனின் கதைக்கேற்ற கலர்புல் ஒளிப்பதிவு,


ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் "நான் கொஞ்சம் கருப்பு தான்..", "இதயம், இதயம்...", "எல்லாமே காசு..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம்.


காமெடி ஸ்பெஷல் டைரக்டர் சுராஜின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் அதிகாலை 3 மணியை இரவு 3 மணி என ஒப்பனிங் சீனிலேயே ஸ்லைடு போடுவது... உள்ளிட்ட ஒரு சில குறைகளையும் பின்பாதி, சற்றே மிகுதியான இழுவையையும் கண்டும், காணாமல் இருந்து விட்டால், "ரமணா", "கத்தி" பட பாணியில் சமூகத்திற்கான நல்ல விஷயம் பேசியிருக்கும் கத்தி சண்டையை பார்க்கலாம்.


ஆக மொத்தத்தில், சுராஜ் - விஷால் கூட்டணியின் "கத்தி சண்டை - காமெடியில், சுராஜின் குரு சு.சியின் சண்டை, கருத்தில் விஜய்யின் கத்தி எனலாம்!"

_______________________________________

குமுதம் சினி விமர்சனம்



காமெடி + ஆக்ஷன் என்று இரு கத்திகளைச் சழற்றி காயமின்றி கரையேறி இருக்கிறார் விஷால். அரசில்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும் மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தை மீண்டும் மக்களிடமே கொண்டு வந்து சேர்க்கும் ராபின்ஹூட் காலத்துக்கதை. அதில் நிறைய காமெடி மசாலாவைத் தடவி, ஆக்ஷன் ஆயிலை ஊற்றி, காதல் கடாயில் வறுத்தெடுத்த இருக்கிறார் மாஸ்டர்... ஐ மீன் டைரக்டர் சராஜ்.

பூர்வ ஜென்மத்து புருடா கதை சொல்லி தமன்னாவை கரெக்ட் பண்ணுவதிலும், அதற்கு சூரியை உதவிக்க அழைத்து அதகளம் செய்வதிலும் கலகலக்க வைக்கிறது விஷால் - சூரி டீம். ஆனால் அந்த முன் ஜென்மத்துக்காக இத்தனை சீன்கள் வெச்சு இந்த ஜென்மத்தை சோதிக்கணுமா டைரக்டர் சாரி. முதல் பாதி மொத்தமும் சூரி காமெடியை நம்பி பயணிக்கிறது.

தமன்னாவின் அண்ணனாக போலீஸ் ஆபீஸர் கெட்டப்பில் கிச் சென்று இருக்கிறார் ஜெகபதிபாபு வில்லன் அண்ட் கேரக்டர் ரோலுக்கு பாபுகாரு சரியான சாய்ஸ். நோட் பண்ணுங்க டைரக்டர்ஸ்.

தமிழ்ப்பட ஹீரோயின்களில் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்களை கிங்சித்தும் மீறாத அழகுடன் வந்து போகிறார் தமன்னா. விஷால் யார் என்றே தெரியாமல் அவரை காதலிக்கிறார் டூயட் பாடுகிறார்.

தியேட்டரில் தம் அடிக்க தடா என்றாலும் கூட பாடல்களின் போது கூட்டாக எழுந்துபோகும் அளவுக்கு போட்டுத் தாக்கி இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஏற்கெனவே கேட்ட ஃபீல்!

செகண்ட் ஹாஃபில் டாக்டர் பூத்ரி கேரக்டரில் என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்றாலும் பாடி லேங்வேஜில் அதே கெத்து. வடிவேலு - சுராஜ் காம்பினேஷனில் இதுவரை வநத படங்களில் எல்லாமே ஹாஸ்யம் அள்ளும். யார் கண்பட்டதோ தெரியவில்லை.


கத்தி சண்டை - காமெடிப் போர்


குமுதம் ரேட்டிங் - ஓகே

_____________________________


கல்கி சினி விமர்சனம்


சண்டைக் காட்சிகளில் கத்தியபடியே, பொறிபறக்க சண்டைப் போடுவதால் படத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

விஷாலின் நடிப்பில் நாளுக்கு நாள் நல்ல மெருகேறி வருவது தெரிகிறது. குறிப்பாக நடனக் காட்சிகளில் பின்னுகிறார். ஆரம்பத்தில் அப்பாவி; அதைத் தொடர்ந்து அதிரடி ஆட்டம் என்ற பழைய ஃபார்முலாவைக் கொஞ்சம் ஒதுக்குங்கோ விஷால்!

தந்தத்திலே வார்த்தெடுத்ததுபோல தகதகக்கிறார் தமன்னா. ஆனால் நடிப்பதற்குதான் அதிகம் வாய்ப்பில்லை. போலி ரௌடியாக காமெடியன்கள் வலம்வரும் பழைய நெடி இதில் கொஞ்சம் தூக்கல்.

சூரியின் கெட்டப்புகள் சிரிப்பு ஹார்மோனைத் தூண்டிவிடுகின்றன. இடைவேளை வரை சிரிப்பும், கூத்துமாகப் படம் நகர்கிறது.

இடைவேளைக்கு முன்னர் சூரியும், பினனர் வடிவேலுவும் வருகிறார்கள். இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் ஏதும் இல்லை. இதில் ஏதேனும் உள் குத்து உண்டோ?

காரில் ஒளிந்திருக்கும் வடிவேலு காட்சியில் பிச்சைக்காரனின் கோபத்துக்கு ஆளாகும் இடம் செம்ம! 'ஐ அம் பேக்' என்ற வசனத்தோடு களமாட வரும் வடிவேலுவிடம் இன்னும் எதிர்பார்த்திருந்தோம்.

பாடல்கள் நான் கொஞ்சம் கறுப்புதான் நிச்சயம் சூப்பர் ஹிட்டடிக்கும்.

சீரியஸ் வில்லனகளிலே படு தத்தியானவர்கள் இந்தப் படத்தில் வந்திருப்பவர்களே என உறுதியாகச் சொல்லலாம். விஷாலுக்கு மெமரி லாஸ் என்று நம்பி சிகிச்சையும் தருகிறார்களே!

வீரசிவாஜி படம் போலவே ஆரம்ப காட்சிகளில் கொடூர வில்லன், மெமரி லாஸ், மக்கள் சேவை ஆகியன இதிலும் உண்டு.

சில காட்சிகள் சமீபத்தில் நடந்த ரெய்டுகளோடு சிங்க் ஆகியிருப்பது ஆச்சர்யம்! கண்டெய்னர் லாரிகளில் கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவது, அதிகாரிகளின் தேடுதல் வேட்டை எனத் தமிழகத்துக்கு நிஜவாழ்வில் பழகிப்போயிருக்கும் காட்சிகள் முக்கிய இடம்பிடிக்கி்னறன.

'பதவி கேட்டா உதைக்கலாம்; உதவி கேட்டா உதைக்கிறானே?' ஒரு ரௌடி தன் சொந்தக் காசை செலவு பண்ணியா தொழில் செய்ய முடியும்? பேன்ற வசனங்கள் ஜோர்.

பாடல் காட்சிகளில் கடற்கரை மணலில் பழங்கால ரயில் எஞ்சின் நிற்பது போன்ற செட்கள் புதுமை, ரிச்சர்டு எம். நாதனின் ஒளிப்பதிவு துல்லியம்.

கார் மற்றும் பைக் சேசிங் காட்சிகள் பிரயாசைப்பட்டு எடுத்திருக்கிறார்கள். பாராட்டுகள்! மக்கள் பணத்தை சுரண்டும் அரசியல்வாதிகளுக்கு இந்தப் படம் ஒரு சவுக்கடி.

விஷால் நல்லவரா கெட்டவரா என்று மாறி மாறித் தெளிவாகக் குழப்பியிருப்பதில் திரைக்கதையின் நல்ல செய் நேர்த்தி புலனாகிறது.

கத்தி: இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.


திரையரங்கில் ரசிகர் தேனி எம். விமல்குமார் கருத்து: காமெடிக் காட்சிகள் நல்லா இருக்குது. இடைவேளைக்குப் பின்னால் கொஞ்சம் இழுவை படம் பார்க்கலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in