Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட் »

தோழா

தோழா,Thozha
08 ஏப், 2016 - 10:23 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தோழா

தினமலர் விமர்சனம்


நாகார்ஜூனா, கார்த்தி, அனுஷ்கா, தமன்னா, ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சமீபமாக மறைந்த கல்பனா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் நடிக்க பிவிபி சினிமாஸ் பிரமாண்டத் தயாரிப்பில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி.பி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் (தெலுங்கில் ஊப்பிரி), ஒரே நாளில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் தோழா.


தோழா படத்தின் கதைப்படி, ஐந்தாண்டுகளாக, கை கால் விழுந்த நிலையில் வீல் சேரில் வாழ்க்கை நடத்தும் பெரும் தொழில் அதிபர் விக்ரம் ஆதித்யாவாக நாகார்ஜூனா. மாஜி கார் ரேஸரான அவரது கனவுகளை நினைவாக்கும் கேரக்டருக்காக அவரிடம் வந்து வேலைக்கு சேருகிறார் சீனு - கார்த்தி.


நாகார்ஜூனாவின் பர்ஸ்னல் செகரட்டரி கீர்த்தி - தமன்னா மீது அந்த கேர் டேக்கர் வேலைக்கு இண்டர்வியூவுக்கு வந்த நாள் முதல் கார்த்திக்கு காதல். அந்த காதலுடன் நாகர்ஜூனாவிடம் யதார்த்தமான நல் தோழமை காட்டும் கார்த்தி, நாகார்ஜுனாவின் வாழ்க்கையிலும், தமன்னாவின் வாழ்க்கையிலும் எவ்வாறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொண்டு வந்து அதன் வாயிலாக தன் வாழ்க்கையிலும் எவ்வாறு ஏற்றமும், மாற்றமும் காண்கிறார்.? என்பது தான் தோழா படத்தின் கரு, கதை, களம்... எல்லாம்.


வீல்சேரில் வாழும் தொழில் அதிபராக மாஜி கார் ரேஸர் விக்ரம் ஆதித்யாவாக நாகார்ஜுனா கச்சிதம். "பயம் இருக்கும் இடத்தில் தான் காதல் இருக்கும்..." என்பதில் தொடங்கி, மனுஷன் போற இடத்துக்கெல்லாம் மனசு போகாதுங்கறது நிச்சயம் என நாகர்ஜூனா பேசும் டயலாக் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட பொன்மொழிகள்., பாரிஸில் தெரியாத பொண்ணுக்கு தன் உடல் நிலை முடியாத சூழலிலும், மலர் கொத்து அனுப்பி, "ஆர்வத்த தூண்டி டேட்டிங் அழைத்து போவது... அண்ணா என்று அழைத்த கார்த்தியின் குடும்பத்திற்கு இக்கட்டான சூழ்நிலையில் எல்லாம் இருந்த இடத்தில் இருந்தபடியே உதவுவது எல்லாவற்றையும் கச்சிதமாக செய்திருக்கிறார் நாகார்ஜூனா. வாவ்!


சீனுவாக கார்த்திகளேபரம்! சீனு நீ வர வேண்டாம் நீ அதிகமா பேசுவ... என நாகார்ஜூனா சொல்ல, அதுக்காக நீங்க பேசம வந்துடாதீங்க.... என்று கார்த்தி சொல்லும் சீன் நச்- டச்! நாகார்ஜூனாவை சார் என கூப்பிடுவது, தனக்குபிடிக்கல என கார்த்தி சொல்லி அதற்கு காரணமாக, ஸ்கூல் பிடிக்காது போனதே... சார் களால தான் அதனால் அண்ணான்னு கூப்பிடுவா..? என பர்மிஷன் கேட்டு அதன்படியே கூப்பிடும் இடத்தில் மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறார் கார்த்தி!


அண்ணா, பஸ்ட் டைம்னா நான், இவ்ளோ பணம் சம்பாதித்தது.. நான், சம்பாதித்ததே இது தான் முதல் தடவை... என மார்டன் ஆர்ட் வரைந்து அதை நாகார்ஜூனா மூலம் விற்று உருகும் இடத்தில் அள்ளுகிறார். ஆண்டவன் பேட் பாய் என கார்த்தி., பிரகாஷ் ராஜிடம் பகலிலேயே பாரின் சரக்கு சாப்பிட்டு உளறுவது... 5 வருஷமா நடக்கும் நாகார்ஜுனாவின் சர்ப்பரைஸ் பார்ட்டியில பிரேயர்ல சைலன்ஸ் ஒ.கே பார்ட்டியில என்ன? என பிரகாஷ்ராஜை கலாய்ப்பது., தமன்னாவை கண்டது முதல் காதல் கொள்வது.. ஆனால், அந்த காதலை சொல்லத் தெரியாமல் பம்முவது...


ஜெயில்ல இருந்து வந்த அண்ணன் இருக்கான், ரோட்ல சுத்துற தம்பி இருக்கான்... அப்படின்னு சொன்னா அவங்க அப்பா ஒத்துக்க மாட்டாரு... என தங்கை தங்கை காதலன் குடும்பம் பற்றிச்சொல்லும் இடத்தில் கண்களாலேயே உருகி நடிப்பது, எல்லவற்றையும் காட்டிலும் நாகார்ஜூனாவுடனான தோழமையில் தோள் கொடுத்து நடித் திருப்பது எல்லாம் இப்படத்திற்கு பெரும் பலம்.


கொஞ்ச நேரமே பிளாஷ்பேக்கில் வந்து நாகார்ஜூனாவுடன் கொஞ்சிப் பேசிப் போகும் அனுஷ்கா , அழகு!


கார்த்தி காதலை வெட்கப்பட்டு, வெட்கப்பட்டு சொல்வதற்கு முன் காதலை சொல்லும் தமன்னாவும் அவரது நடிப்பும், அழகோ அழகு கொள்ளை அழகு!


கெஸ்ட் ரோல்லில் நாகார்ஜூனாவின் மற்றொரு பேராக வரும் ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், ப்ளாக் பாண்டி, ஜெயசுதா, மறைந்த கல்பனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் சிறப்பாக நடித்திருக்கிது.


அதிலும், பிரகாஷ்ராஜ், கார்த்தியின் மார்டன் ஆர்ட் பெயிண்டிங்கை அவரிடமே, பெருமையாக விளக்குவது, ஒரு இடத்தில் டேய் போதும்டா ரொம்ப ஓவரா நடிக்காத.... என கார்த்திய பார்த்து சொல்வது... கவனிக்கத்தக்க ரசனை காட்சிகள்!


பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில், இந்தியாவும் பாரிஸும் பளபளவென மிளிர்வது வாவ் சொல்ல வைக்கிறது.


கோபி சுந்தர் இசையில், டோரு நம்பரு ஓண்ணு .... குத்துப்பாடலம் , புதிதா புவியெல்லாமே புதிதா ... , தோழா என்னுயிர் தோழா .. உள்ளிட்ட மொத்தப் பாடல்களும் ... நச் - டச் ரசனையாக தாளம் போட வைக்கிறது!


ஆனால், பாரீஸ் ரூட்டில் நாகார்ஜூனா ஐடியாபடி ., கார்த்திகார் ரேஸிங் செய்வது ஓவராக தெரிவதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!


அதே மாதிரி, தன் உடல் நிலை முடியாததால் அனுஷின் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது... என அனுஷ்காவையும், அவரது காதலையும் பாரீஸிலேயே தவிர்க்கும் நாகர்ஜூனா, க்ளைமாக்ஸில் ஸ்ரேயாவை ஏற்றுக் கொள்வது லாஜிக்காக இடிக்கிறது.


ஸ்ரேயாவின் ப்யூச்சர் அதே உடல்நிலையில் இன்னமும் இருக்கும் நாகாவால் பாதிக்கப்படாதா..? எனும் ரசிகனின் கேள்விக்கு இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும்.


மொத்தத்தில் இது மாதிரி ஒரு சில சிறுகுறைகளை கண்டு கொள்ளாது தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வம்சி.பி.யின் இயக்த்தில், உடம்பு முடியாத ஒருவரின் காதலும், அவருக்கு, தன் சூழலால் உதவபோகும் ஒருவரின் காதலும்.... அவர்களின் அளப்பரிய நட்பும் தான் தோழா படத்தின் கரு எனும் அளவில் பெரிதாக குறைகள் இன்றி பெரிய தோழமையுடன் தோழா ஜொலித்திருக்கிறது... ஜெயித்திருக்கிறது!


ஆகக்கூடி, தோழா - அழகா!"


------------------------------------------------------------




குமுதம் விமர்சனம்




உணர்வுகளை உரசிப்பார்த்து புரிந்து கொள்ள வைக்கும் படம். 'தி இன்டச்சபிள்ஸ்' என்ற பிரெஞ்சுப் பட ரீமேக் என்றாலும் தமிழுக்கு ஏத்தபடி நேர்மையாகத் தந்திருக்கிறார் இயக்குநர் வம்சி.


விபத்தில் சிக்கி கழுத்துக்குக் கீழே எந்த அசைவும் இல்லாத கோடி கோடி கோடீஸ்வர நாராகர்ஜூனாவை கவனித்துக் கொள்ளும் கேர்டேக்கராக பங்களாவுக்குள் நுழைகிறார் கார்த்தி. அவருக்கு இவரும் இவருக்கு அவரும் எவ்வளவு முக்கியமானவர்களாக அன்பானவர்களாக மாறுகிறார்கள் என்பதுதான் கதை. அதை சொன்ன விதத்தில்தான் மிரள வைக்கிறார் இயக்குநர்.


அம்மா, தம்பி, தங்கச்சி என்ற மிடில்கிளாஸ் இளைஞர் கார்த்தி. சின்னச் சின்ன திருட்டு, ஜெயில் என்று வெறுப்பேற்றியவர் நாகார்ஜூனாவின் வீட்டுக்குள் நுழைந்ததும் கதை வேகம் பிடிக்கிறது. சக்கர நார்காலியிலேயே கிடக்கும் நாகார்ஜூனாவுக்கு கார்த்தியின் யதார்த்தமான அப்ரோச் பிடித்துப்போக, அவர் காட்டும் இன்னொசன்ஸ் திரைக்குள்ளிருக்கும் நாகார்ஜூனாவை மட்டுமல்ல, வெளியே இருக்கும் ரசிகர்களையும் சிரிக்க வைக்கிறது. அந்த ஜாலி உதார் உடல்மொழி கார்த்திக்கு கச்சிதம்.


சக்கர நாற்காலியிலேயே படம் முழுவதும் வந்தாலும், ஒரு புன்னகையில், ஒரு பார்வையில், ஒரு கண்ணசைவிலேயே எல்லாத்தையும் பேசி சபாஷ் வாங்குகிறார் நாகார்ஜூனா.

நாகார்ஜூனாவின் அழகான செகரட்டரி தமன்னா. ரசகுல்லா தமன்னாவை கார்த்தி துரத்தத் துரத்த அவர் விழும் நேரத்திற்காக மனசு அடித்துக் கொள்கிறது. அள்ளுது அழகு.

பிரகாஷ்ராஜ் என்ட்ரி ஆனதும் முடமான பணக்காரர், சொத்து, அபகரிப்பு, என்று தடம் மாறப் போகிறதோ என்று மனம் நினைக்கும்போது அதை தவிர்த்திருப்பது டாப். கொஞ்சமே வந்தாலும் பிரகாஷ்ராஜ் பிரமாதம்.


படத்தில் ஸ்ரேயா, அனுஷ்கா, ஜெயப்ரதா, விவேக் இருக்காக. ஆனால் நாட்அவுட் ஆகாம - படத்திற்கு ப்ளஸாக.. இருக்காக.


சென்னை ஈ.சி.ஆரைத் தாண்டி படம் போகாதா எனறு ஏங்கும்போதே, பிரான்ஸூக்கு இலவசமாக சுற்றிக் காட்டி தெறிக்க விடுகிறார் ஒளிப்பதிவாளர். இசை தேவைக்கேற்ப அழகாக வருடிவிட்டுப் போகிறது. படத்தின் பெரிய ப்ளஸ் ராஜூமுருகன், முருகேஷ் பாபு வசனங்கள்தான்.


எல்லாம் சரி, ஊனமான தன்னால், காதலி அனுஷ்காவின் வாழ்க்கை பாழாயிடக்கூடாது என்பதற்காக, அவரிடமிருந்து தள்ளிப்போகும் நாகார்ஜூனாவை கிளைமாக்ஸில் ஸ்ரேயாவை ஏற்றுக் கொள்ள வைப்பது என்ன லாஜிக் அப்ப ஸ்ரேயா வாழ்க்கை? குறைகள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவும் நட்புதான் வாழ்க்கை என்று சொல்லியவிதம் ஏ கிளாஸ்!


தோழா - கவிதை


குமுதம் ரேட்டிங் - ஓக


--------------------------------------------------------------




கல்கி சினி விமர்சனம்




மாற்றுத் திறனாளி என்றாலே அவரது குறையை மையப்படுத்தி, கண்ணீர் சிந்த வைக்கும் 'ஸ்ரீவள்ள' காலத்து சென்டிமென்டைக் கைவிட்டிருக்கிறது 'தோழா'. அவருக்கு ஒரு காதலியோ, டேட்டிங்கோ கூட வைக்கமாட்டார்கள். இடிந்துபோய் தன் குறையையே பெரிதாகப் பேசிக் கொண்டு இருப்பார். வருந்துவார். பழைய காதலியைக் கண்டுபிடித்தால், அவர் இவருக்காகவே காலம் மழுக்க காத்திருந்துபேஜார் பண்ணுவார். இதுபோன்ற வழக்கமான தமிழ் சினிமா தேய்வழக்கு(க்ளிஷே)களை ஒதுக்கிவைத்ததில் அசத்தியிருக்கிறது 'தோழா'.. பிரெஞ்சு படம் ஒன்றில் தமிழ் வடிவம் என்றாலும் தமிழக்கு ஏற்ப நேர்த்தியாகத் திருத்தி அமைந்திருப்பது, மனத்துள் பதிய உதவுகிறது.


நாகார்ஜூனா சக்கர நாற்காலிக்காரர். உதவிக்கு ஆள் தேவை; பச்சாதாபப் படவோ இரக்கப்படவோ தேவையில்லை. ஒரு சக மனிதராக நினைத்து இயல்பாகப் பழகி, பணி செய்ய ஆள் தேடுகிறார் நாகார்ஜூனா. கார்த்தி சரியான சாய்ஸ். இருவருக்குள்ளும் இழையோடும் அன்னியோன்யமும் பக்குவமும்தான் படம் நெடுக. உணர்வுப் பிணைப்புக்குக் குந்தகம் செய்யும் படாபடா வில்லன், பிரச்னை, டமால் டுமீல், டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை என்று எந்தத் தொந்தரவும் மசாலாவும் இல்லாமல், பூப்போல் மலர்கிறது தோழா.


வசனங்கள் கூர்மை என்றால், காட்சிகள் கச்சிதம். புறா ஒன்று கிளையில் சிக்கிப் பறக்கத் தவிக்கும் காட்சி நாகார்ஜூனாவின் கையறுநிலைக்கு ஒப்பீடு. மற்றொரு காட்சியில், நாகார்ஜூனா மன மகிழ்ச்சியை வெளிப்படுத்த, புறா சிறகை விரித்து உயர உயரப் பறப்பது நெகிழ்ச்சிக் கவிதை. விவோக இருந்தாலும் நகைச்சுவைக்குத் தனி டிராக் கிடையாது; பிரகாஷ்ராஜ் இருந்தாலும் வில்லத்தனம் கிடையாது; தமன்னா இருந்தாலும் கவர்ச்சி கிடையாது. எல்லோரும் நல்லவர்களே.


படத்தின் ஹைலைட்டே கேமராதான். பாரீஸின் அழகை அள்ளுவதிலும், கார் ரேஸின் வேகத்தைப் பதிவு செய்வதிலும், உணர்வுகளுக்கு ஏற்ப லைட்டிங் அமைப்பதிலும் பி.எஸ். வினோத் கேமரா வித்தியாசம். பாடல்கள் மனத்தில் தங்கவில்லை.


நாகார்ஜூனா என்றால் இன்னும் அவரது உதயம் பட மிடுக்குதான் ஞாபகம் வரும். அங்கிருந்து அவர் ரொம்ப தூரம் நடிப்பில் முன்னேறியுள்ளது தோழாவின் வெற்றி. படம் முழுவதும் வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு, கை கால்களை அசைக்காமல், முகபாவனைகளைக் கொண்டே தோழாவைத் தோளில் சுமந்திருக்கிறார். கார்த்தியின் இயல்பான துடுக்கத்தனம், துருதுரு படத்துக்குப் புத்துணர்ச்சி. அழகு பதுமை தமன்னா, ஸ்கிரீனில் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் நடந்து கொண்டே இருப்பது நமக்கு கால் வலிக்கிறது! ஜெயசுதா, அமரிக்கையான அம்மா.


என்னதான் தமிழ்ப் படம் என்றாலும், தெலுங்கு வாசனை ரொம்பவே தூக்கல், கார் ரேஸிங்கை, மைதானத்தில் செய்வது வேறு. ஆனால், அதை நெடுஞ்சாலைகளில் செய்வதும், சாகசமாகச் சித்தரிப்பதும் பார்க்கும் இளைஞர்கள் திசை திருப்புவது உறுதி.


படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. காட்சிக்குத் தேவைப்படும் உரிய கால அவகாசத்தைக் கொடுத்து, பார்வையாளர்கள் மனத்தில் உணர்வுகளைப் பதிய வைப்பது முக்கியம். உரிய இடங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி, பார்வையாளர்களின் கண்களைக் கசிய வைக்கவும் வேண்டும். தமிழர்கள் இயக்குநர் வம்சியைக் கொண்டாடுவது நிச்சயம்.




தோழா - உணர்வு மழை



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in