பஜ்ரங்கி பைஜான் படத்தின் வெற்றிக்கு பிறகு சல்மான் நடித்துள்ள படம், 16 ஆண்டுகள் கழித்து இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா - சல்மான் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள குடும்ப சென்ட்டிமென்ட் படம் தான் ''பிரேம் ரத்தன் தான் பயோ''. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
ராம்லீலா நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்ந்து வருபவர் பிரேம் எனும் சல்மான் கான். இவருக்கு மைதிலி எனும் சோனம் கபூர் மீது கண்டதும் காதல். அந்த காதல் வெளிப்பாடாக தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை மைதிலி நடத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து உதவுகிறார். இதுஒருபுறம் இருக்க இளவரசனாக வாழ்ந்து வரும் விஜய் எனும் இன்னொரு சல்மானும் படத்தில் இருக்கிறார். அவருக்கு நிரஞ்சன்-நீல் நிதின் முகேஷ், சிராக் எனும் அர்மான் கோலி எனும் வளர்ப்பு சகோதரர்களும், சந்திரா எனும் ஸ்வரா பாஸ்கர், மற்றும் ராதிகா எனும் ஆஷிகா பாதியா என்ற சகோதரிகளும் உள்ளனர். ஆனால் இவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழல் நிலவுகிறது. இந்தச்சூழலில், பிரேம் சல்மான் இந்த குடும்பத்தில் நுழைகிறார். மகிழ்ச்சியற்ற, ஒற்றுமையின்றி காணப்படும் இந்த குடும்பத்தில், ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் வர வழைக்க பிரேம் முயலுகிறார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா..? என்பதற்கு வித்தியாசமாக விடையளிக்கிறது பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் மீதிக்கதை!
சல்மான் கான், பிரேம், விஜய் என இரண்டு வேடத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் எந்த குறையும் இல்லை.
சோனம் கபூர் படத்தில் அவ்வளவு அழகாக தோன்றியிருக்கிறார், ஆனால் நடிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.
நீல் நிதின் முகேஷ், அர்மான் கோலி, அனுபம் கெர், சுவாரா பாஸ்கர் ஆகியோரது நடிப்பு ஓகே., என்ற அளவிலேயே இருக்கிறது.
சூரஜ் பார்ஜத்யா நல்ல திறமையான இயக்குநர் தான், ஆனால் இந்தப்படத்தில் அவரது திறமையை காட்ட தவறிவிட்டார். காரணம் படத்தில் வலுவான கதையில்லை. மேலும் படத்தின் பாடல்கள், நீளமான வசனங்கள் படத்தின் நீளமும் ரசிகர்களை சலிப்படைய செய்கிறது. இந்தப்படத்தை பார்த்தபிறகு சூரஜ், இயக்கத்தில் கோட்டை விட்டுள்ளார் என்பது தெளிவாக புரியும்.
''பிரேம் ரத்தன் தான் பயோ'' படம் நல்ல குடும்ப படம் தான், ஆனால் புதிதாக ஒன்றும் இல்லை, ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆகையால் தீபாவளிக்கு வாங்கிய போனஸ் சம்பளத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம். அதேசமயம் நீங்கள் சல்மான் கான் ரசிகர்கள் என்றால் படத்தை பார்ப்பது உங்கள் ரிஸ்க்.
மொத்தத்தில், ''பிரேம் ரத்தன் தான் பயோ'' - புதிதாய் ஒன்றுமில்லை!