Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கத்துக்குட்டி

கத்துக்குட்டி,Kathukutti
  • கத்துக்குட்டி
  • நரேன்
இரா.சரவணவன் இயக்கியிருக்கும் விவசாயம் சம்பந்தப்பட்‌ட படம் இது.
23 அக், 2015 - 14:24 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கத்துக்குட்டி

தினமலர் விமர்சனம்


"அஞ்சாதே" நரேன், பரோட்டா சூரி, சிருஷ்டி டாங்கே, ராஜா.... உள்ளிட்ட நட்சத்திரங்களுடன்., விளை நிலங்களில் மீத்தேன் எடுக்கிறேன் என விவசாயிகளின் வயிற்றில் அடிக்கத் திரியும் அரசையும், அரசியல்வாதிகளையும் நக்கல், நையாண்டி தனத்துடன் தில்லாக எதிர்த்திருக்கும் சவுக்கடி படம் தான் கத்துக்குட்டி!


கதைப்படி, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை பகுதி அரசியல் பிரபலத்தின் வாரிசு ச.அறிவழகன் எனும் ஹீரோ நரேன். நண்பர் பரோட்டா சூரியுடன் சேர்ந்து கொண்டு தெருவில் போவோர் வருவோரையெல்லாம் கலாய்த்து கல்லடி, சொல்லடிபடும் நரேனுக்கு, அவரது அப்பாவின் செல்வாக்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவரது அப்பா சார்ந்திருக்கும் கட்சியில் தீடீரென குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக அந்த தொகுதியின் எம்எல்ஏ வேட்பாளராக நிற்க சீட் வழங்கப்படுகிறது.


இப்பட கதைப்படி புவனா எனும் பெயரையுடைய இயற்கை ஆர்வலரான கதாநாயகி சிருஷ்டி டாங்கேவில் தொடங்கி எதிர்படும் எல்லோரையும் கலாய்த்திருக்கும் வெட்டி வம்பிற்கு இழுத்திருக்கும் அறிவழகன் - நரேன், மீத்தேன் திட்டத்திற்காக விளை நிலங்களை அபகரித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கத் துடிக்கும் நயவஞ்சக எதிர் அணி வேட்பாளரை வெற்றி கொண்டு எம்எல்ஏ ஆனாரா..?, விவசாயிகளை காப்பாற்றினாரா?, விளை நிலங்களை போற்றி பாதுகாத்தாரா..? தன் மண்ணையும், தன் மனங்கவர்ந்த நாயகியையும் காப்பாற்றி, கைப்பற்றினாரா...? எனும் வினாக்களுக்கு காதல், காமெடி, நக்கல், நைய்யாண்டி, சென்டிமெண்ட், ஆக்ஷன், அரசியல் அதிரடி... எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து ஜனரஞ்சகமாக விடை சொல்கிறது கத்துக்குட்டி படத்தின் கதை மொத்தமும்!


நரேன், லோக்கல் அரசியல் புள்ளியின் வாரிசாக ஆரம்பத்தில் நண்பர் சூரியுடன் சேர்ந்து கொண்டு அழிச்சாட்டியம் பண்ணுவதிலும் சரி, அதன்பின் வேட்பாளர் ஆனதும் பொறுப்புணர்ந்து, அமைதி காப்பதிலும் சரி அமர்க்களமாக நடித்திருக்கிறார். அதேமாதிரி நாயகி சிருஷ்டியுடனான முதற்கட்ட முறைப்பு, விறைப்பு காட்சிகளிலாகட்டும், அதற்கடுத்தடுத்த ரொமான்ஸ் காட்சிகளிலாகட்டும் அனைத்திலும் அல்லோலகல்லோ படுத்தி இருக்கிறார் மனிதர். கீப் இட் அப் நரேன்!


நாயகி சிருஷ்டி டாங்கேவும், செல்போன் சிக்னலால் குருவிகள் பாதிக்கப்படும் என பதறுவதில் தொடங்கி குருவி இனங்களை பட்டியலிடுவது வரை... ஒவ்வொரு காட்சியிலும் ஒய்யாரம் காட்டி நரேனை மட்டுமல்ல ரசிகர்களையும் உசுப்பி விடுகிறார்.


ஜிஞ்சர் எனும் பாத்திரத்தில் வரும் பரோட்டா சூரி வெண்ணிலா கபடிக் குழுவிற்கு அப்புறம் இப்படத்தில் தான் 100% கரெக்ட்டாக காமெடி செய் திருக்கிறார் எனலாம்.


நரேனின் அப்பா சந்தானமாக வரும் ஜெயராஜ் (இவர், இயக்குனர் பாரதிராஜாவின் சகோதரர்...), ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் ஞானவேல், மீத்தேனை எதிர்த்து உயிர் துறக்கும் சிருஷ்டியின் அப்பா ராஜா, ரெங்கு பாட்டி, சந்தியா, சரவணன் , சித்தன் மோகன், துளசி, மாறன் ,தேவிப்ரியா அற்பு தன் விஜய், கசாலி.. உள்ளிட்ட ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட பாத்திரங்க ளாகவே பளிச்சிட்டுள்ளனர், பலே., பலே!


ராஜா சேதுபதியின் பக்கா படத்தொகுப்பு, சந்தோஷ் ஸ்ரீராமின் பளிச் ஒளிப்பதிவு, அருள்தேவின் இசை... உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இரா.சரவணனின் எழுத்து, இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்து விளை நிலங்களை பாழ் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக எக்குதப்பான குரல் கொடுத்திருக்கிறது மிரட்டலாக! வாரே வாவ்!!


ஆக மொத்தத்தில், கத்துக்குட்டி அறிவியலாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிறைய கற்றுக் கொடுத்துள்ள சுட்டி என்றால் மிகையல்ல!!


-------------------------------------------------------------------




கல்கி சினி விமர்சனம்


விளைநிலங்களுக்கு ஏற்பட்கூடிய தீமையைப் படம் பிடிக்கும் சினிமா என்றாலும், அதைச் சொல்வதற்கு எடுத்துக் கொண்ட முறைகள் அச்சு அசலாக வணிகப்பட மசாலாக்களாகவே அமைந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மீத்தேன் வாயு எடுக்கப்பட்டால் விளைநிலங்களுக்கு ஆகும் கேடுகள், ஈரல்குலை நடுங்கும் அளவுக்கு கிராஃபிக்ஸில் சொல்லப்பட்டிருக்கின்றன.


சதாசர்வ காலமும் குடித்துக் கூத்தடிக்கும் கதாநாயகனுக்கு விவசாய நிலங்களின்மேல் மட்டும் அதீத அக்கறை இருப்பதாக காட்டப்படுவது நெருடலாக இருக்கிறது. கிரிக்கெட் ஆட்டத்தின்போது விரசமான வசனத்தையும் அருவருப்பான காட்சியமைப்பையும் தவிர்த்திருக்கலாம்.


அரசியல் கட்டுரைகள் பலவும் எழுதியவராதலால் இயக்குநரின் வசனங்களில் அரசியல் பார்வை நன்கு பளிச்சிடுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களில் இஷ்டத்துக்கு அள்ளிவிடும் பிரபலங்களுக்கு செம குத்துவிடும் காட்சிகள் புன்னகையை வரவழைக்கின்றன. கிராமத்தின் மரம் மட்டைகளை மட்டுமல்ல; புழு, பூச்சிகளையும் கலைநேர்த்தியோடு கேமிரா படமாக்கியிருக்கிறது. உடல்மொழிகள் அற்றதாகவும் வசனங்களின் பலத்தால் சூரியின் பாத்திரம் பல இடங்களில் சிரிப்பலையை அரங்கில் ஏற்படுத்துகிறது.


காவல் நிலையத்தில் இருக்கும் வாகனங்களில் ஓட்டடை படிந்துகிடப்பது போன்ற காட்சிகளைப் போகிற போக்கில் அனாயாசமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். சிற்சில குறைகள் இருந்தாலும் படத்தின் மையக் கரு உன்னதுமானது. அதனால் தாராளமாகப் பார்க்கலாம்.


கத்துக்குட்டி - செல்லக்குட்டி



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in