Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

உட்டோபியாயிலே ராஜாவு (மலையாளம்)

உட்டோபியாயிலே ராஜாவு (மலையாளம்),utopiayile rajavu
  • உட்டோபியாயிலே ராஜாவு (மலையாளம்)
  • மம்முட்டி
  • ஜுவல் மேரி
  • இயக்குனர்: கமல்
01 செப், 2015 - 11:55 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » உட்டோபியாயிலே ராஜாவு (மலையாளம்)

கருத்த பட்ஷிகள், அழகிய ராவணன் என இன்றளவும் பேசப்படுகின்ற சூப்பர்ஹிட் படங்களை தந்த இயக்குனர் கமல்-மம்முட்டியின் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம் இது. கதை, திரைக்கதை எழுதியுள்ளார் ஆர்.எஸ்.ரபீக்.


கிராமம் ஒன்றின் பஞ்சாயத்து தலைவராக இருந்த மம்முட்டியின் தந்தை ஜாய் மேத்யூ, மம்முட்டி சிறுவனாக இருக்கும்போதே காலமாகிவிடுகிறார். அவரது சில சொத்துகளை அபகரித்து, பஞ்சாயத்து தலைவர் பதவியையும் பிடிக்கிறார் அவரது மாமன் சுனில் சுங்கரா. பத்தாம் வகுப்பு பெயிலான மம்முட்டி, தனது சிறுவயதிலேயே பழகிய ஜுவல்மேரியை திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால் சமூக சேவகியான ஜுவல்மேரி அதற்கு பல கண்டிஷன்களை போடுகிறார், குறிப்பாக மம்முட்டி பத்தாம் வகுப்பாவது பாஸ் ஆனால் தான் கல்யாணத்திற்கு சம்மதம் என்கிறார். இது ஒருபக்கம் இருக்க, இறந்த தனது தந்தையின் நினைவாக தனது ஊரிலேயே அவருக்கு சிலை வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மம்முட்டி.. ஆனால் அதற்கு அவரது மாமா சுனில் சுங்கரா முட்டுக்கட்டை போடுகிறார்.

இதனால் நண்பர்களின் ஆலோசனைப்படி திருவனந்தபுரம் சென்று தலைமை செயலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முயல்கிறார் மம்முட்டி. கல்லூரி மாணவன் ஒருவன் ராகிங் கொடுமையால் இறந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அதே இடத்தில் ஜுவல்மேரி தலைமையில் பெண்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஒருகட்டத்தில் சிலை வைப்பதை விட சமூகத்திற்கு செய்யவேண்டிய முக்கியமான கடமைகள் இருக்கின்றன என்பதை உணரும் மம்முட்டி, ஜுவல்மேரிக்கு ஆதரவாக களமிறங்கி இறந்த மாணவனின் நீதிவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என குரல் கொடுக்கிறார். இதில் போலீஸாரின் அடக்குமுறைக்கு ஆளானாலும், மாணவர்களை ஒன்று திரட்டி குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்துகிறார். இதனால் ஜுவல்மேரியின் மனதை கவர்ந்தாரா, இறுதியில் தனது தந்தைக்கு சிலை வைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.


கதாநாயகனாகவும் நடிக்கவேண்டும், ஆனால் டூயட் எல்லாம் பாடி ரசிகர்களை சோதிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மம்முட்டி அதற்கேற்றமாதிரி பொருத்தமான கதையைத்தான் தேர்ந்தெடுத்து உள்ளார். அதனால் அவரது வயது நமக்கு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை. தவிர இன்னும் அவர் கிராமத்து இளைஞர் மாதிரிதானே இருக்கிறார். தனது தந்தைக்கு சிலை வைப்பதற்காக பணத்தை செலவழித்து பப்ளிசிட்டி தேடும் காட்சிகள், ஜுவல்மேரியின் முன்னாள் பல சமயங்களில் அசடு வழியும் காட்சிகள் இதையெல்லாம் தாண்டி, அசிங்கமான வார்த்தையில் திட்டிய பெண் போலீசிற்கு ஒரு அறை விடுகிறார் பாருங்கள்.. அங்கே அள்ளுது கிளாப்ஸ்.


அறிமுக கதாநாயகியான ஜுவல்மேரி ஆஹா ஓஹோ அழகி என சொல்லமுடியாவிட்டாலும், கதாபாத்திரத்திற்கு பொருந்தும் பாந்தமான கிராமத்து அழகில் மிளிரவே செய்கிறார். போலீஸாரிடம் பிரம்படி வாங்கும்போது நிஜமாகவே நம்மை பரிதாபப்பட வைக்கிறார்.


ஜாய் மேத்யூவும், டினி டாமும் சிலைக்கூடத்தில் சிலைகளாக இருந்து உருவம் பெற்று படத்தின் கதையை கூறுவதாக அமைத்திருப்பது நல்ல உத்தி.. பஞ்சாயத்து தலைவராக சுனில் சுங்கரா அடிக்கும் கேலிக்கூத்துக்கள் ஓரளவு ரசிக்கவைக்கின்றன. அவுசப்பச்சன் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய 'உப்பினு போன வழியெது' பாடல் நம்மையறியாமல் தாளம் போடவைக்கிறது.


மிகப்பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமல், சிலை வைப்பதற்காக மம்முட்டி எடுக்கும் காமெடி நடவடிக்கைகளை மட்டுமே வைத்து தனது இஷ்டப்படி படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குனர் கமல், படத்தின் கடைசி இருபது நிமிடத்தில்தான், ரசிகர்களுக்காக படம் எடுக்கிறோம் என்பதை உணர்ந்தவர் போல பரபரப்பு காட்டியிருக்கிறார். அந்த பரபரப்பு மொத்த படத்திலும் இல்லாதது தான் மிகப்பெரிய குறை..


மம்முட்டியிடம் இவ்வளவு சாதாரணமான ஒரு கதையை சொல்லிக்கூட கால்ஷீட் வாங்கமுடியுமா என்கிற ஆச்சர்யம் தான் படம் முடியும்போது நமக்கு ஏற்படுகிறது.




வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in