Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

ஆரஞ்சு மிட்டாய்

ஆரஞ்சு மிட்டாய்,Orange mittai
27 ஆக, 2015 - 08:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆரஞ்சு மிட்டாய்

தினமலர் விமர்சனம்


நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக தயாரித்திருப்பதோடு, கதையின் நாயகராக (நன்றாக வாசிக்கவும்... கதாநாயகராக அல்ல, கதையின் நாயகராக...) நடித்தும் வௌிவந்திருக்கும் படம் தான் ஆரஞ்சுமிட்டாய்.


கைலாசம் எனும் வயதான இதய நோயாளி விஜய்சேதுபதி. திடீரென ஒருநாள் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட 108 ஆம்புலன்ஸை வர வைக்கிறார். அவ்வாறு வரும் அவசர சிகிச்சை ஊர்தியில், அவசரநிலை மருத்துவ உதவியாளராக வரும் சத்யா எனும் ரமேஷ் திலக்கிற்கு காதலில் பிரச்னை. அந்த பிரச்னையினூடே இதயநோயாளி கைலாசம் - விஜய் சேதுபதியை தூக்கி செல்ல வருகிறார் ரமேஷ் திலக். உடன் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுமுகமாக ஆறுபாலாவும் வருகிறார். வயதானாலும் கட்டுடலுடன் கம்பீரமாக இருக்கும் விஜய்சேதுபதியை பார்த்ததும் இருவருக்கும் ஷாக். ஒரு நோயாளி மாதிரி இல்லாமல், ஆம்புலன்ஸ் டிரைவருடனும், அவசரநிலை மருத்துவ உதவியாளருடனும் வழிநெடுக லொள்ளு - லோலாயி செய்தபடி வருகிறார் விஜய் சேதுபதி.


இந்நிலையில், ஆம்புலன்ஸின் டயர் பஞ்சராகிறது. ஒருபக்கம் ரமேஷ் திலக்கின் காதலியின் செல்போன் இம்சை வேறு, மற்றொருபக்கம் இதயநோயாளியை விரைந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யாததற்கு மேலதிகாரியின் குடைச்சல் வேறு... இதில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சத்யாவிற்கு உதவமுன் வரும் விஜய்சேதுபதி, எதிர்பாராத தருணத்தில் திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு சரிகிறார். கைலாசம் - விஜய்சேதுபதி விரைந்து மருந்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு பிழைத்தாரா..?, சத்யா - ரமேஷ் திலக்கின் காதல் கல்யாணத்தில் முடிந்ததா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்க முயன்று, வித்தியாசத்தில் புளிப்பு மிட்டாயாக, இனிப்பு மிட்டாயாக ஜெயித்திருக்கும் ஆரஞ்சுமிட்டாய், விறுவிறுப்பில் கசப்பு மிட்டாயாக கடுப்பேற்றுகிறது.


விஜய் சேதுபதி, கைலாசம் எனும் வயது முதிர்ந்த இருதய நோயாளியாக ரொம்பவே மெனக்கட்டு நடித்திருக்கிறார். மேக்-அப்பில் தெரியும் வயது முதிர்வு, நடை, உடை, பாவனைகளில் சற்றே காணாமல் போய் இருப்பது பலவீனம். வயதான இதய நோயாளியான விஜய் சேதுபதி, கடமை என கருதாமல் தன் இல்லாத அப்பா ஞாபகத்தில் வாஞ்ஜயுடன் உதவிக்கு வரும் இளைஞரின் இதயத்தை தொடர்ந்து நோகடிப்பதும், ஓடும் ஆட்டோவை நிறுத்தி, அதிலிருந்தி இறங்கி அந்தக்கால பாட்டுக்கு நடுரோட்டில் அந்தபாடல் முடிந்தும் வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு குத்தாட்டம் போடுவது எல்லாம் ரொம்பவே எரிச்சலை கிளப்புகிறது.


சத்யாவாக ரமேஷ் திலக், காதலுடனும், காதலியுடனும், காதலியின் அப்பாவுடனும் கல்யாணத்திற்காக போராடுவதிலும், வயதான இருதய நோயாளியை காப்பாற்ற போராடுவதிலும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்.


ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுமுகமாக வரும் ஆறுபாலா, காமெடி கம் டிராஜெடிகளிலும் கவனம் ஈர்க்கின்றார்.


கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதியின் மகனாக வரும் கருணாகரனுக்கும், அப்பா சேதுபதிக்கும் இடையில் அப்படி என்ன தான் பஞ்சாயத்து.? என கேட்கும் தூண்டும் விதத்திலேயே கருணாகரனின் நடிப்பு ஏனோ தானோ என இருக்கிறது.


சத்யாவின் காதலி காவ்யாவாக வரும் அஷ்ரிதாவும் நடிப்பிலும் மிளிர்ந்திருக்கிறார். வினோத் சாகர், சிரிப்பு மணிவண்ன், விஷாலினி, தமிழ்ச்செல்வி உள்ளிட்டவர்களும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.


ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சில இடங்களில் வருடலாகவும், சில இடங்களில் நெருடலாகவும் இருப்பது ஆரஞ்சுமிட்டாயின் மற்றுமொரு பலவீனம். விஜய் சேதுபதி - பிஜூ விஸ்வநாத் இவர்களது எழுத்தில் ஆரஞ்சுமிட்டாய் ஆரோக்கியமான புளிப்புமிட்டாயாக இருந்தாலும், பிஜூ விஸ்வநாத்தின் ஔிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்டவைகளில் விருதை மட்டுமே நோக்கமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஆங்காங்கே இருதய நோயாளி விஜய்சேதுபதி ஆரஞ்சுமிட்டாய் எடுத்து சுவைக்கும் காட்சிகள் சினிமாட்டிக் -டிராமாட்டிக்காக இருக்கிறது. அதையும் தாண்டி அப்பா-மகன் உறவு எனும் குறும்பட கான்சப்ட்டை ஒரு பெரும் படமாக, திரைப்படமாக எடுத்திருக்கும், இழுவையாக இயக்கியிருக்கும் இடத்தில், ஆரஞ்சுமிட்டாய் சற்றே கசப்பு மருந்தாக கசக்கிறது!


மொத்தத்தில், ஆரஞ்சுமிட்டாய் - ஆரோக்கியமான புளிப்பும் அல்ல, இனிப்பும் அல்ல!


குமுதம் சினி விமர்சனம்


தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலாவைவிட்டு வெகுதூரம் சென்று, அப்பா-மகன் உறவைப் பற்றிப்பேசும் வித்தியாசமான முயற்சி ஆரஞ்சு மி்ட்டாய்.

கிராமத்தில் தனியாக வாழும் 60 வயது விஜய் சேதுபதி. தனிமை தந்த விரக்தியால் தனக்கு நெஞ்சுவலி என்று 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸின் முதலுதவி நிபுணரும் டிரைவரும் அவரிடம் சிக்கித் தவிக்கும் தவிப்புதான் படம். பரிசோதனையில் அவருக்கு இருதயநோய் இருப்பது தெரியவர, அவரின் சேட்டைகளைத் தாண்டி, அவரிடம் பரிவு கொள்ள வைப்பது படத்திற்கு ப்ளஸ்.

எகத்தாளம், தெனாவட்டு, சிறுபிள்ளைத்தனமான ஆசை என்று அறுபது வயது முதியோரை கண்முன் நிறுத்துகிறார் விஜய் சேதுபதி. தன் மகன் ஒரு ஜெர்னலிஸ்ட் என்று மிரட்டுவதும், டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகளிடம்கூட திமிராகப் பேசுவதும், நோயாளியாக இருந்துகொண்டு குத்துப்பாட்டு ஆட்டம் போடுவது என்று விஜய் சேதுபதி ஸ்கோர் செய்கிறார்.

ஆம்புலன்ஸில் முதலுதவி நிபுணராக வரும் ரமேஷ் திலக், நோயாளியிடம் படும்பாடு, அப்பா சென்டிமென்ட், தன்மானத்துடனான காதல் என்று விஜய்சேதுபதிக்கு இணையான நடிப்பைக் காட்டுகிறார். டிரைவராக வரும் ஆறுமுகம்பாலா படும் எரிச்சலே அவரின் நடிப்பை காட்டிவிடுகிறது. காதலியாக வரும் அஸ்ரிதா, விஜய் சேதுபதியின் மகனாக வரும் கருணாகரன் ஆகியோர் கச்சிதம்.

முதுமை, தனிமை, அப்பா -மகன் உறவு என்று சில விஷயங்களை அழகாகப் புரியவைக்கிறார் இயக்குநர். சொல்லிய விதத்தில்தான் சுவாரஸ்யம் குறைகிறது. ஒரு டாக்குமெண்ட்ரி படத்தை கொஞ்சம் வேகமாக காட்டியிருந்தால் எப்படி இருக்கும், அப்படித்தான் போகிறது படம்.


ஆரஞ்சு மிட்டாய் - கொஞ்சம் இனிப்பு, நிறைய புளிப்பு.




குமுதம் ரேட்டிங் - ஓகே












கல்கி திரைவிமர்சனம்




ஆரஞ்சு மிட்டாய்


தமிழ்த் திரைப்படங்களின் தேய்ந்துபோன பல மரபுகளைத் துணிச்சலுடன் மீறி இருக்கிறது ஆரஞ்சு மிட்டாய். புவி ஈர்ப்பு விசைக்கெதிரான சண்டைகள், கொச்சையான நடனங்கள், அபத்தமும் விரசமும் நிரம்பிய நகைச்சுவை, பஞ்ச் வசனங்கள், டாஸ்மாக் காட்சிகள் போன்ற எதுவும் இல்லை. அவ்வளவு ஏன்... இடைவேளைக்கு முன்னர் இருந்ததைவிட மீதிப்படத்தின் நீளம் குறைச்சலாக இருந்தே ஆக வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டிருக்கிறது. முதலில் இந்த வகையான சோதனை முயற்சிகளை தைரியமாகச் செய்துபார்த்திருக்கும் படக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்!

பயணம் மேற்கொள்ளும்போது நடக்கும் சம்பவங்களைப் படமாக்கிய ஒரு சில படங்கள் வரிசையில் ஆ.மி. முக்கியமான படம். வயதான வேடத்தில் விஜய் சேதுபதி அற்புதமாக நடித்திருக்கிறார். சொந்த வாழ்வில் புறக்கணிக்கப்படும் சில வயோதிகர்கள், மற்றவர்களை லேசாகப் புண்படுத்தித் தங்கள் ஆற்றாமையை வெளிக்காட்டுவார்கள் என்கிற நுணுக்கமான விஷயத்தைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காலப் பெரிய நடிகர்கள் இந்தப் பாத்திரத்தில் ஏற்றிருந்தால் ஓவர் ஆக்டிங்கில் பின்னிப் பெடல் எடுத்திருப்பார்கள். ஆனால் வி.சேதுபதி மிகை இன்றி நடித்திருப்பது இதமாக இருக்கிறது.

வி.சே., அவசர மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோருடன் ஆம்புலன்ஸும் கதையின் ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறது.

ஒரு சில அரசு மருத்துவர்களின் அலட்சியப் போக்கு, சாமான்யர்கள் பலரும் அன்றாடம் எதிர்கொள்வதுதான். அதையும் மிகையின்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

காதை உறுத்தாத இசை, படத்தோடு ஒட்டிப்போகும் பாடல்கள் படத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

அழகு என்பது கதாநாயகனுக்குத் தேவையில்லை; நடிப்பு மட்டும் போதும் என்ற நம்பிக்கை சரிதான்... ஆனால் அழகில்லாத கதாநாயகியையும் படமாக்கும் துணிச்சல் வருகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வி.சேதுபதியின் ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். இளைஞர் ஒருவர் முதியவராக மாறுவேடம் போட்டதுபோல இருக்கிறது. முகத்தில் முதுமையைக் கூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சில இடங்களில் அவர் பேசும் வசனங்களும் புரிவதில்லை. இவை போன்ற சில குறைகளைத் தேடிப்பிடித்துச் சொல்லலாமே தவிர படம் நிறைவையே தருகிறது.

படம் தன் போக்கில் நகர்கிறது. இதுபோன்ற படங்களை ரசிக்க முதலில் மக்கள் பழக வேண்டும். பெருவாரியாகப் பார்த்துப் பொருளாதார ரீதியிலும் ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்த் திரைப்படங்கள் முன்னேற்றத்தின் அடுத்த படியில் ஏற முடியும்.


ஆரஞ்சு மிட்டாய் இனிக்கிறது.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in