Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை,Jackson Durai
12 ஜூலை, 2016 - 15:40 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜாக்சன் துரை

தினமலர் விமர்சனம்


"நாய்கள் ஜாக்கிரதை படத்தில் ஒரு நாயையும், கொஞ்சம் நல்ல கதையையும் நம்பி, ஜெயித்த நடிகர் சிபிராஜ், பேய்களை நம்பி ஜெயிக்க முயற்சித்திருக்கும் படம் தான் "ஜாக்சன் துரை". கூடவே இப்படத்தில், அவரது அப்பா நடிகரும் மகனுக்காக பேயாட்டம் ஆடியிருப்பது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது!


பரபரப்பாக பேசப்பட்ட பர்மா படத்திற்கு பிறகு தரணிதரன் எழுதி, இயக்கியிருக்கும் இத் திகில் திரைப்படத்தை ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ்.சரவணன் தயாரித்திருக்கிறார். அருண் புருஷோத்தமன், ரகுநந்தன், செல்வம் உள்ளிட்டோரின் இணை தயாரிப்பில் திகில் படமாக வந்திருந்தாலும், காமெடிக்கும் பஞ்சமில்லாது பிரிட்டீஷ் இந்தியா காலத்து மனிதர்களான, ஜாக்சன் பங்களா பேய்கள், பிளாஷ் பேக்கில் அடித்துக்கடித்துக்கொள்வதும், நிகழ்காலத்தில் மனிதர்களை பயமுறுத்துவதும், காமெடி, சென்டிமென்ட், திகில் விரும்பும் ஜனரஞ்சக ரசிகர்களை புதுவித அனுபவத்தில் தள்ளுகிறது... என்றால் மிகையல்ல!


பணிபுரியும் ஏரியாவில் வெட்டி பந்தா போலீஸ் எஸ்.ஐ., சத்யாவாக வலம் வரும் நாயகர் சிபிராஜை வலிய வம்பில் மாட்டி விடுகின்றனர் உயர் அதிகாரிகள். அதாகப்பட்டது, தன் ஏரியா மக்களின் தொடர் கோரிக்கை மனுவை ஏற்று அமைச்சர் ஒருவர் ஆப் தி ரெக்கார்டாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு அளித்த புகாரின்படி, சேலம் அருகே உள்ள அயன்புரம் கிராமத்தில் ஒரு பெரிய பங்களாவில் அட்டகாசம் செய்யும் பேயைப்பாடாய் படுத்தி, பந்தாடுவதற்கு சிபி ராஜை அனுப்பி வைக்கிறார்கள். அங்கு, உடனடியாக போகும் சிபி, ஊர் தலைவர் சிவானந்தம் எனும் சண்முக சுந்தரத்தின் மகள் விஜி - பிந்து மாதவியை கண்டவுடன் காதல் கொள்கிறார். அவருக்கு போட்டியாக, அதே ஊரில் வசிக்கும் பிந்துவின் முறைமாமன் வீரா எனும் கருணாகரனும் தனக்கும் பிந்து மீது காதல் இருப்பதாக அழிச்சாட்டியம் பண்ண, பிந்து யாருக்கு? என முடிவு செய்ய முடியாது, நொந்து போகும் பிந்து மாதவியின் அப்பா சண்முகசுந்தரம், தன் பரம்பரைவழக்கப்படி, இருவரும் பிரிட்டீஷ் இந்தியா காலத்து பேய் பங்களாவில் ஒரு வாரம் தங்கி இருவரில் ஒருவர், உயிரோடு திரும்பினால் அவருக்கு தன் பெண்ணை தருவதாக கூறுகிறார்.


பேயாவது, பிசாசாவது.. அதெல்லாம் ஒன்றுமில்லை எல்லாம் எங்கப்பா அங்கிருக்கும் புதையலுக்காக கிளப்பி விட்ட கட்டு கதை என உண்மையை மறைத்து சிபிராஜை உசுப்பி விட, அதை நம்பி சிபியும் பேய் பங்களாவிற்கு கிளம்புகிறார். கருணாவும், கைவசம் ஒரு வாரத்திற்கு தேவையான சரக்கு பாட்டில்கள் இருக்கும் அசட்டு தைரியத்தில் அவர் கூடவே கிளம்புகிறார். இருவரில் யார்?, பேய் பங்களாவில் இருந்து ஊர் திரும்பியது?, யார் பிந்து மாதவியின் கரம் பற்றியது.?, ஜாக்சன் துரை பேயின் பின்னணி என்ன?, ஓரு பேய் மட்டும் தான் அந்த பங்களாவிற்குள் குடியிருந்ததா?... என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டீஷ் இந்தியா பிளாஷ்பேக்கிற்கெல்லாம் போய் வெள்ளைக்கார துரை மார்களை எல்லாம் எதிர்க்கும் துரையாக நிஜத்தில் சிபியின் அப்பாவான சத்யராஜையும் சுதந்திர போராட்ட காலத்தில் மனிதராகவும், பின்பேயாகவும் காட்டி பின் பாதி படத்தை சற்றே இழுத்து, கொஞ்சமே கொஞ்சம் ரசிகனின் பொறுமையை சோதித்தாலும், ரசனையாக விடை சொல்கிறது ஜாக்சன் துரைபடத்தின் மீதிக் கதை.


பில் - டப் எஸ்.ஐ சத்யாவாக சிபிராஜ், டபடபா... புல்லட்டும், ஜைஜான்டிக் உருவமும், போலீஸ் கம்பீரமுமாக மூன்று மாதம் மெடிக்கல் லீவு போட்டுட்டு கல்யாணத்துக்காக பெண் தேடும் ஓவர்பந்தா பேர்வழியாக, பிந்து மாதவி பேய் வேடம் போட்டு பயமுறுத்தியதும் மிரண்டு, சுருண்டு அரண்டு விழும் போலீஸாக வந்தாலும் செம கெத்துக்காட்டியிருக்கிறார். கொசு மருந்து சுமோக் ஏரியா பில் - டப்புடன் உயர் அதிகாரி மகாநதி சங்கர் முன் ஆஜராகி, வம்படியாக பேய் இருக்கும் ஏரியாவுக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை என அதை விரட்டப் போய் மாட்டிக் கொண்டு முழிப்பது உள்ளிட்ட இடங்களில் செம நடிப்பு காட்டி ரசிகனை வசப்படுத்துகிறார். வாவ்!.


பிளாஷ்பேக்கில் பேயாக வரும் தனது டாடி சத்யராஜைப் பார்த்து சிபி, இவரை எங்கோபாத்த மாதிரி இருக்கே.. என டயலாக் அடிப்பதில் தொடங்கி, பிந்து மாதவியை கண்டவுடன் காதலிப்பது, யோகி பாபு, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் சரிக்கு சமமாக அடிக்கும் லூட்டியிலாகட்டும், பேய் பங்களாவிற்குள் ஒரு வார காலம், சுதந்திரத்திற்கு முடியாது பிரிட்டீஷ் மற்றும் இந்திய பேய்களுடன் பித்தலாட்டமாடுவது என புகுந்து விளையாடிருக்கிறார். பேஷ், பேஷ்!


பிளாஷ்பேக்கில் நிஜமாகவும், இண்டர்வெல்லுக்கு பிந்தைய நிகழ்காலத்தில் பேயாகவும் சுதந்திர தாகமெடுத்த துரையாக சிபியின் அப்பாவும், நடிகருமான சத்யராஜ், தன் பங்குக்கு கொம்புகள் முளைக்காத மொட்டைத் தலையுடன் ஒனிடா டி.வி மாடல் மாதிரி பின்பாதி படம் முழுக்க பயமுறுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரது அட்டகாசம் தாங்காது கதறுவது அந்த வெள்ளைக்கார துரை பேய் மட்டுமல்ல... ரசிகனும் தான்!


கிராமத்து கதாநாயகியாக சிபியின் காதலியாக விஜியாக பிந்து மாதவி, சிபிராஜ் சொல்வது போன்றே நல்லா சிலுக்கு மாதிரி இருக்கா... என்பதற்கேற்ப சின்ன ஸ்லிம் சிலுக்கு மாத்தியே பார்க்கிறார், நடிக்கிறார், வருகிறார், போகிறார், செமயாய் இருக்கிறார்.


பேய்கள் பங்களாவில் சிபிக்கு செம சரக்கு கம்பெனி தரும் வீராவாக வரும் கருணா, பிரிட்டீஷ் துரையின் கையாள் பிரிட்லீ யான சுருளி நான் கடவுள் ராஜேந்திரன், அயன்புரத்தில் சிபியின் உதவியாளர் மணியாக வரும் யோகி பாபு, பிந்து மாதவியின் ஊர் தலைமை அப்பா சிவானந்தமாக சண்முகசுந்தரம், போலீஸ் அதிகாரி மகாநதி சங்கர், மந்திரவாதியாக சூப்பர் குட் சுப்பிரமணி, வெள்ளைக்கார ஜாக்சனாக வரும் சாரி, சுதந்திர தாகத்துடன் வந்து ஜாக்சனின் துப்பாக்கி தோட்டாவுக்கு புறமுதுகு காட்டது நிமிர்ந்து நெஞ்சைக்காட்டி மடியும் நேதாஜி பொற்கொடியாக நேகா மேனன், அந்த வெள்ளைக்கார குட்டிப் பையன் பேய்.. உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பயமுறுத்தியுள்ளனர், பயந்துள்ளனர்.


அதிலும், காமெடி கருணா, "பேய் போகும் டாய்லெட்டில் சிறுநீர் கழித்தால் பேய் தொடராது..." என்பது ஐதீகம், என்பதும் "நாங்கள்ளாம் ஈ.வில் டெத் , மை டியர் லிசா, 13 ம் நம்பர் வீடு உள்ளிட்ட பேய் படங்களையே 15 தடவை பார்த்தவங்கம்மா..." என பேயையே பயமுறுத்த பார்ப்பதும் ரசனை. கருணாவையும் தாண்டி யோகி பாபுவின் யதார்த்த காமெடி நடிப்பில், விழுந்து, விழுந்து சிரிக்கும்படி வரும் வசன காமெடி காட்சிகளில், ஒண்ணுக்கு போறதுக்குன்னே மெட்ராஸ்ல இருந்த வந்திருப்பான் போல..., இங்கிலீஷ் பேய் இங்கிலீஷ் தானே படிக்கும் தெலுங்கு பேப்பரா படிக்கும்? பேய்க்கே பேப்பர் போட்டவன் நானாதான் சார் இருப்பேன்... காலையில தான் பேப்பர் வச்சேன் திரும்பவும் படிக்குமா?, சார், சுடுகாட்டுல ஆராய்ச்சி பண்ணி நீங்க பட்டமா வாங்க போறிங்க, சார் வாங்க சார் போயிடலாம்... என்பது உள்ளிட்ட யோகி பாபுவின் காமெடி "பன்ச்கள் கலக்கல்.


சித்தார்த் விபினின் இசை பேய் சப்தத்தை விட பெரும் இரைச்சல். மேலும், அவரது இசையில் மோட்டார் பைக்கு.... ஏதேதோ.. பாடல்கள் ஒரு மாதிரி தேறுகின்றன. யுவாவின் ஒளிப்பதிவில் பேய் காட்சிகள் பிரமாண்ட திகில் கிளப்புகின்றன. டி.என் கபிலனின் கலை, இயக்கமும், ராம்போ விமலின் சண்டை பயிற்சியும் படத்திற்கு பெரியபளஸ்!


தரணிதரனின் எழுத்து, இயக்கத்தில் மொத்தப் படத்தில் சற்றே பலவீனமா தெரியும் பின்பாதி படத்தில் பிரிட்டீஷ் இந்தியா காலத்து பேய்கள் பற்றிய காட்சிகள் சற்றே இழுவையாக நீண்டு கொண்டே செல்வது, உள்ளிட்ட குறைகள் இருந்தாலும், ஜாக்சன் துரை படத்திற்கு திகில் காமெடி, லவ், சென்டிமென்ட் விரும்பும் ரசிகர்கள் லாஜிக் பார்க்காமல் போனால் பேய்களின் காமெடி கலாட்டா மேஜிக்குகளை பார்த்து பயந்து ரசித்து, நல்லபடியாய் நடுங்சியபடி சிரித்துவிட்டு வரலாம்.


மொத்தத்தில், "ஜாக்சன் துரை - த்ரிலிங் காமெடியில் நிறை!"




------------------------------------------------------


குமுதம் விமர்சனம்


வௌ்ளைக்காரப் பேய்களுக்கும், தமிழ்நாட்டுப் பேய்களுக்கும் நூறாண்டுகளாய் தினம் தினம் ராத்திரி நடக்கும் கொலைவெறித் தாக்குதலை இரண்டு மனிதர்கள் 'முடித்து' வைக்கும் ஜாலியான பேய்க் கதை! இயக்கம் தரணிதான்!

'நாய்கள் ஜாக்கிரதை'யைத் தொடர்ந்து சிபி சத்யராஜ் நடிப்பில் நல்ல முன்னேற்றம் புகைகளின் நடுவே தோன்றும் உதார் காட்சியில் ரசிக்க வைக்கிறார். பயம், வீரம், காதல், சமாளிப்பு என்று எல்லாம் வருகிறது. கூடவே கருணாகரன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் இருப்பதால் காமெடிக்கு கியாரண்டி! பேயெல்லாம் அப்பாவின் செட்டப் என்று பிந்துமாதவி சொல்ல, அதை நம்பி சரக்குப் போட்டு சிபி பேய்களை வெறுப்பேற்றுவது செமை.

உருகத் தயாராக இருக்கும் கோன் ஐஸ்கிரீம் மாதிரி இருக்கிறார் பிந்து மாதவி. ஆரம்பத்தில் அவரும் ஒரு பேய் என்று பயமுறுத்துவது க்யூட்.

நக்கல் இல்லாத சீரியஸ் சத்யராஜ்.

டைட்டில் சாங் ஓகே. ஆர்.ஆரில் பயம் காட்டியிருக்கிறார் சித்தார்த் விபின்.

அந்த பேய் பங்களாவில் ஒரு வாரம் தங்கும் ஐடியாவெல்லாம் சரிதான். ஆனால் அந்தக் காட்சிகள் ரிப்பீட் அடிப்பது ரிவிட்.


ஜாக்சன் துரை - ஜாலியான பேய்கள்!


குமுதம் ரேட்டிங் - ஓகே


-------------------------------------------------------------------


கல்கி விமர்சனம்


ஜாக்சன்துரை என்ற பெயரைப் பார்த்ததும் ஒரே நபரின் பெயர் என்று நினைத்துவிடாதீர்கள். ஜாக்சன் ஒருபேய்; துரை? அவரும்/அதுவும் ஒரு பேய்தான். பெயரில் எப்படி இரு நபர்கள் இருக்கிறார்களோ கதையும் அப்படித்தான்.

இடைவேளைக்கு முன்பு வரை, பேய் வீட்டில்? நாட்கள் இருந்தால் பிந்து மாதவி கிடைப்பார் என்ற லட்சியத்தில் சிபிராஜூம், கருணாவும் பாழடைந்த மாளிகையில் தங்குவது ஒரு ட்ராக். அதன் பிறகு சடாரென்று கதை பீரியட் படமாக மாறி, ஆங்கிலேய ஆட்சி அடகுமுறைக்கு எதிராகக் கொந்தளிக்கிறது. கொஞ்சம் அசந்த நேரத்தில் பீரியட் காலத்து பேய்கள், சிபிராஜ் மற்றும் கருணாவுடன் சேர்ந்து ஜல்லியடிக்கின்றன.

பின்னணி இசையைப் பாராட்டியே தீரவேண்டும். அதேபோலப் பேய் பங்களாவின் காட்சியமைப்புகளும் அட்டகாசம். அரங்கினுள் நுழையும் முன்னரே டிக்கட் கிழிப்பவர், 'சார் பாடல் சீன்லயே கேன்டீன் திறந்திருக்கும்' எனக் கிசுகிசுத்தே உள்ளே அனுமதிக்கிறார். அதாவது ஒவ்வொரு பாட்டு சீனும் ஒரு இடைவேளை!

கொள்கை வேறு; நடிப்பு வேறு; என்பதில் சத்யராஜ் தெளிவாக இருப்பது தெரிகிறது. பின்ன? சாமியாவது பூதமாவது? என்று முழங்குபவர், சருமக் கோளாறு மேக்அப்புடன் பேயாக நடிக்கிறாரே!

பேய் படங்களில் பயம் இருக்க வேண்டும்! அல்லது சிரிப்பாவது இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாவிட்டால் சுவாரசியமாக வேறு ஏதாவது இருந்தாலாவதுபரவாயில்லை. ஒன்றுமேயில்லமல் கடுப்பேற்றுகிறது படம்.

இதைப் பாருங்கள். நூறு வருடங்களுக்கு முன் செத்துப்போன புரட்சிப் பேய் மற்றும் அதன் கூட்டாளிகள், தாங்கள் செத்துப் போனது தெரியாமல், வில்லனைப் பழிவாங்கும் முயற்சியில் தினசரி ஈடுபட்டு, தினசரி மறுபடியும் செத்துக் கொண்டிருக்கின்றன. இதில் சாகடிக்கும் வில்லனும், செத்துப் பேயாய் மாறி இருப்பதுதான் விசேஷம்!

100 x 365 = 36,500 தடவை நடக்கும் இந்த நிகழ்ச்சியை நல்ல வேளையாக அத்தனை தடவைகளும் காட்டாமல் ஏழெட்டுத் தடவையோடு நிறுத்திக் கொள்கிறார்கள், தப்பித்தோம்!

நூறு வருடமாக மக்கள் வரியாகச் செலுத்தும் நெல்/அரிசி கெட்டுப் போகாமல் அப்படியே இருக்குமா என்பதை வேளாண் விஞ்ஞானிகள் தான் விளக்க வேண்டும்.

பேயை ஈட்டியால் குத்தி, தேசக் கொடியைப் பறக்கவிட்டால் புரட்சிப் பேய்கள் சமாதானமாகும் என்ற நீதி சொல்லப்பட்டிருக்கிறது.


ஜாக்சன் துரை - அரைகுறை!


திரையங்கில் கோவை ஜங்கமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பாலகுருநாதனின் கருத்து: பேசாம போயிடுங்க என்று எச்சரித்துவிட்டு வேகமாக நடந்தார்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
ஜாக்சன் துரை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in