Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க,vasuvum saravananum onna padichavanga
  • வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
  • ஆர்யா
  • தமன்னா
  • இயக்குனர்: ராஜேஷ்
02 செப், 2015 - 14:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

தினமலர் விமர்சனம்


பாஸ் என்கிற பாஸ்கரன் இயக்குநர் எம்.ராஜேஷ், நாயகர் ஆர்யா, காமெடியன் சந்தானம் உள்ளிட்டவர்கள் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம். ஆங்காங்கே பூரண மதுவிலக்கு வேண்டி, போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும் வேளையில் குடி, குடி, குடி.. என குடிக்கும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்திருக்கும், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம். ஒண்ணா படிச்சவங்களா? ஒண்ணா குடிப்பவங்களா? எனும் சந்தேகத்தை கிளப்பும் வண்ணம் நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் வந்திருக்கிறது.


கதைப்படி, வாசு - சந்தானமும், சரவணன் - ஆர்யாவும் விவரம் தெரியும் வயதிற்கு முன்பிருந்தே நெருங்கிய நண்பர்கள். குடி, கும்மாளம் என ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக வாழ்க்கையை நகர்த்தும் இருவரும் திருமண வயதை நெருங்கியதும் வீட்டில் கல்யாணம் கட்டிக் கொள்ள சொல்லி வற்புறுத்துகின்றனர்.


ஒருவழியாக வாசு - சந்தானத்திற்கு பெற்றோர் பார்த்து வைத்த பானுவுடன் ஒரு சுபயோக சுபதினத்தில் இனிதே திருமணம் நடந்தேறுகிறது. அம்மணி சந்தானத்தின் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததுமே அதிகப்படியாக தன் கணவர் விஷயத்தில் உரிமை எடுத்துக் கொள்ளும் ஆர்யா மீது கடுப்பாகிறார். அதன் வெளிப்பாடாக ஆர்யாவின் ஃப்ரண்ட்ஷிப்பை துண்டித்துக் கொண்டு வந்தால்தான் ஃபர்ஸ்ட் நைட் என கணவருக்கு கண்டிஷனும் போடுகிறார். தங்கள் தீவிர நட்பின் அடையாளமாக தனது மொபைல் விற்பனை கடைக்கு வாசா மொபைல்ஸ் என தனது பெயரில் முதல் இரண்டு எழுத்துக்களையும் நண்பன் சரவணன் - ஆர்யாவின் பெயரது முதல் இரண்டு எழுத்துக்களையும் சூட்டி அழகு பார்த்து நட்பு பாராட்டி வரும் சந்தானம்., ஒரு கட்டத்தில் ஆர்யாவின் நட்பே வேண்டாம் என பொண்டாட்டி யோசனை கேட்டு எவ்வளவோ முயற்சிகள் செய்து அது எல்லாம் தட்டி தட்டி போய் நட்பு தொடருகிறது.


இறுதியாக ஆர்யாவையும் தன் பாணியில் இல்லற வாழ்க்கையில் இழுத்து விட்டால் ஃப்ரண்ட்ஷிப்புக்கும் பிரச்சினை இருக்காது தன் ஃபர்ஸ்ட் நைட்டும் நடந்தேறும் என ஆர்யாவுக்கு பெண் பார்க்க களம் இறங்குகிறார். ஆர்யாவுக்கு பெண் கிடைத்தாரா? சந்தானத்தின் எண்ணம் ஈடேறியதா? முதல் இரவு நடந்ததா? குடி, கும்மாளம் என சுற்றித்திரிந்த இவர்களது ஃப்ரண்ட்ஷிப் மூழ்கிய ஷிப்பானதா? மூழ்காதா ஷிப்பானதா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு எம். ராஜேஷின் இயக்கத்தில், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் தலையை சுற்றி மூக்கைத் தொடும் ரீதியில் காமெடியாக பதில் சொல்ல முயன்று பல் இளித்திருக்கிறது.


ஆர்யா - சரவணனாக இன்னொசென்ட் லுக்கில் செம கலாய், செம கலாய் என்றபடி எதெற்கெடுத்தாலும் விளையாட்டுதனமாக காமெடியாக சந்தானத்துடன் லூட்டி அடிப்பது ஓ.கே., அதற்காக நண்பனின் முதல் இரவில் கட்டில் கால்களை உடைத்து வைத்து அவரது இடுப்பு எலும்பு முறிய காரணம் ஆவதெல்லாம் ரொம்பவே ஓவர். ஆனாலும் நயன்தாரா மாதிரி பொண்ணு கிடைச்சா கல்யாணம் என்றபடி திரியும் ஆர்யா., மேட்ரி மோனியல் அலுவலகத்தில் தமன்னாவை பார்த்ததும் டபுள் ஓ.கே சொல்லி அவர் பின் அலைவதும் டைமிங் சுவாரஸ்யம்.


சந்தானம் - வாசுவாக வழக்கம் போலவே காமெடியுடன் கருத்தும் சொல்கிறேன் பேர்வழி... என கடித்திருப்பதுடன் ஒருபடி மேலேபோய் என்ன மாதிரி உன்னால டைமிங்கா பேசமுடியுமா? உன்னால முடியுமா?... எனக் கேட்டு சவால்விட்டு உறுதி கூறுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் கவுண்டமணி சாரை ஈ அடிச்சான் காப்பி அடித்து வருபவருக்கு இவ்வளவு வீராப்பு கூடாதுப்பா! மச்சான் தலைவனுக்காக மொட்டையே போடுறவன் தொண்டன், அந்த தொண்டனையே மொட்டை போடுறவன்தான் தலைவன் என்று தத்துவ-வித்துவமெல்லாம் பேசும் சந்தானம் படம் முழுக்க ஆர்யாவையும் சேர்த்துக் கொண்டு குடி குடி.. என குடிப்பதை மருத்துவர் ஐயா மாதிரி தலைவர்கள் தான் தட்டி கொட்டி சுட்டிக் காட்டி கேட்க வேண்டும். கண்டிப்பாக கேட்க வேண்டும்!


தமன்னா வழக்கம் போலவே அழகுபதுமையாக சற்று பூசினார் போன்ற உடல்வாகுடன் வந்து ஆட்டம், பாட்டம் என அசத்திப்போகிறார். அம்மணியும் ஒருக்காட்சியில் ஆர்யாவின் கையிலில் இருக்கும் பீர் பாட்டிலை பிடுங்கி குடித்துவிட்டு உளறுவது வேறு, இன்றைய சூழலில் தீவிர மது எதிர்ப்பாளர்களை நிச்சயம் கடுப்பேற்றும்!!


பானு., குடும்பபாங்கில் குத்துவிளக்காக ஜொலித்திருக்கிறார். வித்யூலேகாராமன், வெ.ஆ.மூர்த்தி, ரேணுகா, பட்டிமன்றம் ராஜா, பிருந்தாதாஸ், சாமிநாதன், சித்தார்த் விபின் உள்ளிட்டவர்களில் வெ.ஆ. மூர்த்தி வீணடிக்கப்பட்டிருக்கிறார்.


கெஸ்ட்ரோலில் கிளைமாக்ஸி்ல் போலீஸாக வரும் விஷாலும், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி அகிலா - ஷகிலாவிற்காக ஏங்கி தவிப்பது அபத்தமாக இருக்கிறது! எந்தகாலத்தில் இருக்கீங்க ராஜேஷ்!


டி.இமானின் இசை, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயின்டுகள்., ராஜேஷ். எம்.மின் இயக்கத்தில் இருக்கும் அவரது முந்தைய படங்களின் சாயல் உள்ளிட்ட மைனஸ் பாயிண்ட்டுகளை மறக்கடிக்க செய்து, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை தூக்கி நிறுத்த முயன்றிருக்கின்றன! ஆனாலும் வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்களாக துவண்டு விழுகின்றனர் பாவம்! ஆகவே வி.எஸ்.ஓ.பி வேலைக்கு ஆகலை!! சாரி!!!









கல்கி திரை விமர்சனம்


"வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க தலைப்பை ஆங்கிலத்தில் எழுதி முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் மது வகை ஒன்றின் பெயர் வருமாறு அமைத்திருக்கிறார்கள். தமிழ்ப் பெயர் என்றும் சொல்லிக் கொள்ளலாம்; சரக்கையும் முதன்மைப்படுத்தலாம் என்று திட்டம் போட்டுப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆரம்பக் காட்சியிலேயே தள்ளாட்டத்துடன் கதாநாயகர்கள் வருகிறார்கள். அவ்வளவு ஏன்? டைட்டில் கார்டே மதுக்குப்பிக்குள்தான் காட்டப்படுகிறது!

நண்பரை ஒதுக்கச் சொல்லும் காதலிகள் மற்றும் மனைவிகளை எத்தனை படங்களில்தான் சித்தரிப்பார்களோ! தலைவனுக்காக மொட்டை அடிப்பவன் தொண்டன்; அந்தத் தொண்டனையே மொட்டை அடிப்பவன் தலைவன் என்று நேரடியாகச் சில வசனங்கள் குத்துகின்றன. "எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம்... புருஷன் ஓடிப்போனாலும் உண்ணாவிரதம் என்று மறைமுக இலக்கியக் குத்துக்களும் படத்தில் உண்டு.

இமானின் இசையில், "லக்கா மாட்டிக்கிச்சு பாடல் பரவாயில்லை. குறிப்பிட்ட சமூகத்தைக் கிண்டல் செய்யும் போக்கு தொடர்வது திரையுலகின் அவலமே! சந்தானத்தின் நகைச்சுவை மற்றவர்களைப் புண்படுத்துவதிலேயே வெளிப்படும் என்ற விதி இதிலும் பின்பற்றப்படுகிறது. நகைச்சுவையின் பல பரிமாணங்களையும் அவர் உணர்ந்து நடித்தால் பல உயரங்களை அவரால் எட்ட முடியும்.

ஆர்யாவின் 25வது படம் இது. காட்சிக்குக் காட்சி வரும் அவர் ஒரேவிதமான உரையாடல், உடல்மொழி போன்றவற்றை வெளிப்படுத்துகிறார். மொத்தத்தில் ச.வா.ஒண்ணாப் படிச்சாங்களோ இல்லையோ ஒண்ணாக் குடிச்சாங்க... குடிச்சாங்க.... குடிச்சுக்கிட்டே இருக்காங்க



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in