தினமலர் விமர்சனம்
தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம், அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் இந்தியிலும் ரீ-மேக்காகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, கோவாவில் உள்ள பேந்த்லோம், போலீஸ் நிலையத்தில் இருக்கிறார் விஜய் சல்கோங்கர் எனும் அஜய் தேவ்கன். எதற்காக அவர் போலீஸ் நிலையத்தில் இருக்கிறார் என்பதற்கு பிளாஸ்பேக் விரிகிறது. வெறும் நான்காம் கிளாஸ் மட்டுமே படித்த உள்ளூர் கேபிள் முதலாளி விஜய். விஜய் ஒரு சினிமா பிரியரும் கூட. அவருக்கு தனது குடும்பம் தான் உயிர். மனைவி நந்தினி எனும் ஸ்ரேயா, அஞ்சு மற்றும் அனு என்ற இரண்டு மகள்கள். ஒருநாள் ஐஜி., மீரா தேஷ்முக்கின்(தபு) மகன் சமீர் கடத்தப்படுகிறான். அஜய் தான் தன் மகனை கடத்தி ஏதோ செய்து விட்டான் என்று தபு கருதுகிறார். அப்போது முதல் அவர்களுக்குள் மோதல் துவங்குகிறது. சமீர் கடத்தப்பட்டாரா.? அவர் என்ன ஆனார், எதற்காக தபு, அஜய்யை சந்தேகிக்கிறார் என்பதை சஸ்பென்ஸ் கலந்த திகிலோடு விவரிக்கிறது த்ரிஷ்யம் படத்தின் மீதி கதை.
அஜய் தேவ்கன், விஜய் சல்கோங்கராகவே வாழ்ந்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து குடும்ப தலைவனாக தனது குடும்பத்தை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் ஹேட்ஸ் ஆப் சொல்ல வைக்கிறது. பயந்த சுபாவங்களிலும் சரி, உணர்ச்சி பொங்கும் இடங்களிலும் சரி அஜய் நடிப்பு அவ்வளவு பிரமாதம்.
அஜய்க்கு அடுத்தப்படியாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார் ஐஜியாக வரும் தபு. படத்தில் தபுவின் என்ட்ரி தாமதாக வந்தாலும் அதன்பின்னர் படம் முழுக்க அவர் தான் மிளிர்கிறார். போலீஸ் அதிகாரியாக மிடுக்காவும், தன் மகனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பாசத்தில் கதறும் தாயாகவும் சரி, நடிப்பில் மிரட்டியிருக்கிறார் தபு.
இவர்களை போலவே அஜய்யின் மனைவியாக வரும் ஸ்ரேயா, தபுவின் கணவராக வரும் ரஜத் கபூர், அஜய்யின் மகள்களாக வரும் இஷிதா தத்தா, மிரினல் ஜாதவ் ஆகியோரும் பிரமாதம்.
ஃபோர்ஸ் படத்திற்கு பிறகு நிஷிகாந்த் காமத் இயக்கியிருக்கும் படம் இது. மலையாள படத்தின் ரீ-மேக் என்றாலும், அதை இந்தி ரசிகர்களுக்கும் ஏற்றபடி சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லரில் அற்புதமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
அவினாஸ் அருணின் ஒளிப்பதிவு ரம்மியம். ஆரிப் ஷேக்கின் படத்தொகுப்பு பக்கா. சஸ்பென்ஸ் கலந்த கதை என்றாலும் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும் சுவாரஸ்யம் குறையாமல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது.
சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான விஷயங்கள் எல்லாம் கலந்தது தான் இந்த த்ரிஷ்யம். மொத்தத்தில், த்ரிஷ்யம் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
த்ரிஷ்யம் - எதிர்பாராத திருப்பம்!
ரேட்டிங் - 4/5