இந்தியாவில் நடைபெற்று வரும் கற்பழிப்பு குற்றங்கள் குறித்தும், இதில் பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்தும், அதனால் சாதாரண மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகின்றனர் என்பதை சமூக உணர்வோடு விளக்கும் படமே மிஸ் தனக்புர் ஹாஜிர் ஹோ. தனக்பூர் மாவட்டத்தில் வாழும் மகிழ்ச்சியான மனிதர் சுவலால் (அன்னு கபூர்). வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மிஸ் தனக்பூர் போட்டியில், சுவலாலின் எருமை, பட்டமும் வெல்வதால், கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இதனிடையே, சுவலாலின் வீட்டிற்கு புதுவரவாக இளம்மனைவி மாயா (ரிஷிதா பட்) வருகிறார். மாயாவிற்கு ஏற்கனவே, அர்ஜூன் ( ராகுல் பக்கா) உடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. மாயாவிற்கும், அர்ஜூனிற்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பை, சுவலால் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் மற்றும் தனது எருமையின் உதவிகொண்டு, தவறான கற்பழிப்பு வழக்குகளை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.....
பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறியுள்ள வினோத் காப்ரி, தன் படத்தின் கேரக்டர்களுக்கு தகுந்த நபர்களை தேர்ந்தெடுத்துள்ளதன் மூலமாகவே, முதல் வெற்றியை ருசித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக செதுக்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், சரியான இடத்திலும் அதை பயன்படுத்தியுள்ளார். சொல்லவந்ததை சுருக்கமாக சொல்லி அனைவரும் புரியவைத்துள்ளார். படத்தில் வரும் கிராமத்துவாழ் மனிதர்கள் மற்றும் அவர்களது மேனரிசங்கள் ஆகியவை சிறப்பாக உள்ளன. முன்னணி இயக்குநர்களே சொதப்பும் கோர்ட் நடைமுறை சீன்களை, எவ்வித பிசிறும் இல்லாமல் சிறப்பாக செய்தமைக்காக, இயக்குநருக்கு ஒரு சல்யூட். படத்தில் ரியலிசத்திற்கும் மதிப்பு கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாகவும், நகைச்சுவைத்தனமாகவும் இருக்கும்போதிலும், பின்பாதி சற்று போரடிக்கவே செய்கிறது. வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் படத்திற்கு பெரும்பலம்.
படத்தின் முதன்மை கேரக்டராக வரும் அன்னு கபூர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரிஷிதா பட் இயல்பாக வந்து போகிறார். இளைஞர்களை கவர்ச்சிக்கண்கள், உடலசைவால் சுண்டியிழுக்கவும் ரிஷிதா தவறவில்லை. போலீஸ் அதிகாரியாக ஓம் புரி நடித்துள்ளபோதிலும், அவரது கேரக்டர் நகைச்சுவை ததும்ப உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் பக்கா பாதிக்கப்பட்டவர் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து சீன்களில் ராகுல், கேரக்டராகவே ஜொலித்திருக்கிறார்.
பொழுதுபோக்கு படத்தை விரும்புபவர்கள், நிச்சயமாக இந்த படத்தை பார்க்கலாம்!!!
ரேட்டிங் : 3/5