Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

காவல்

காவல்,Kaaval
  • காவல்
  • விமல்
  • புன்னகைப்பூ கீதா
  • இயக்குனர்: ஆர். நாகேந்திரன்
06 ஜூலை, 2015 - 15:39 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காவல்

தினமலர் விமர்சனம்


காவல் எனும் டைட்டிலையும், கதாநாயகர் விமல் என்பதையும் கண்டு பயந்து கொண்டே போனால், நல்லவேளை, மிடுக்கான, நேர்மையான காவல் அதிகாரியாக சமுத்திரகனி! கதாநாயகரே என்றாலும், விமல், லஞ்சலாவண்ய போலீஸ் ஏட்டு எம்.எஸ். பாஸ்கரின் வாரிசு... எனும் அளவில் ஆரம்பகட்டத்திலேயே ஆறுதல் அளித்துவிடுகிறார்... அறிமுக இயக்குநர் நாகேந்திரன்! அதற்காக அவருக்கு ஒரு சபாஷ்!


கதைப்படி, ஹீரோ விமலும், அவரது காமெடி அஸ்வின் உள்ளிட்ட நண்பர்களும், அவர்களது லஞ்ச லாவண்ய போலீஸ் அப்பாக்கள் முறையே எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களின் வாரிசுகள். போலீஸ் குடியிருப்பில் வசித்து கொண்டு அப்பாக்களின் லஞ்ச பணத்தில் வெட்டி பந்தா பண்ணும் நண்பர்களில், விமலுக்கு நாயகி புன்னகைப்பூ கீதா (படத்தின் தயாரிப்பாளரும் அம்மணியே தான்...) மீது கண்டவுடன் காதல்! தன் தோழிகளுடன் ஈவெண்ட் மேனேஜ்மென்ட் தொழில்புரியும் கீதாவிற்கு உதவுவதற்காக சென்னையையே கலக்கி வரும் மீனவ குப்பத்து தாதா கருணாவுடன் நெருக்கமாகிறார் விமல்!


கருணாவை கட்டம் கட்டி தூக்க, அந்த ஏரியாவுக்கு மாற்றலாகி வந்து வலை விரித்து காத்திருக்கும் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் சமுத்திரகனி, விமல், கருணாவின் நட்பை வைத்தே, கருணாவை தீர்த்துக்கட்ட களம் இறங்குகிறார். இறுதிவெற்றி யாருக்கு.? கருணாவின் கதை முடிந்ததா.? விமல் - கீதாவின் காதல் ஜெயித்ததா.? எனும் கதையை வித்தியாசமும், விறுவிறுப்புமான திருப்பங்களுடன் சொல்ல முயற்சித்திருப்பதே காவல் படத்தின் கரு, கதை, களம், காட்சிபடுத்தல் எல்லாம்! அந்த வித்தியாசமும், விறுவிறுப்பும் ஏற்கனவே பல படங்களில் பார்த்து பழகிய திகிலும் திருப்பங்களுமாக தெரிவது தான் காவல் படத்தின் பெரியபலவீனம்!


மற்றபடி காவல்துறையையே காட்டி கொடுக்கும் காவலரின் பையனாக, புன்னகைப்பூ கீதாவின் காதலராக, இறுதியில் கருணாவை சமுத்திரகனியின் கண்முன், அவரது துப்பாக்கியாலேயே தீர்த்து கட்டும் கதாநாயகராக கச்சிதமாக நடித்திருக்கிறார் விமல்!


புன்னகைப்பூ, அறிந்தும் அறியாமலும் தொடங்கி, இந்த காவல் வரை பல படங்களைத் தயாரித்த மலேசிய ரேடியோ ஜாக்கி கீதாவின் கதாநாயகி கனவு ஓரளவு பூர்த்தியான மகழ்ச்சி. அம்மணியின் முகத்தில் மேலும் இளமையை கூட்டியிருப்பது ரசிகனுக்கு ஆறுதல்!


சமுத்திரகனி, மிடுக்கு நிரம்பிய நேர்மையான போலீஸ், அதுவும் என் கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியாக படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். ஆனாலும், பீச்சில் பலூன் சுடும் கடைக்காரராக அவர் அறிமுகமாகும் காட்சியே ரசிகனுக்கு அவரை போலீஸ் அதிகாரியாக காட்டிவிடுவதும், அவரது என்-கவுண்ட்டர் டீமில் திருமணமாகி ஒருவாரமே ஆன ஒரு காவலர் இடம்பெறும் போதே, அவர் ரவுடிகளுக்கு இரையாகபோவதை யூகிக்க முடிவதும் பலவீனம்.


வில்லன் கருணா - தேவா, பார்பியா ஹண்டா, எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து, அஸ்வின், அம்மா சிவா, வெங்கட் உள்ளிட்டவர்களில் நமோ நாராயணனின் பாத்திரம் சுவாரஸ்யம், அஸ்வினின் முடிவு உருக்கம்!


ஜிவி.பிரகாஷ் குமாரின் இசை, தருண்குமாரின் பின்னணி இசை, என்கே.ஏகாம்பரத்தின் ஔிப்பதிவு, சில்வாவின் சண்டை பயிற்சி உள்ளிட்ட ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், நாகேந்திரனின் இயக்கத்தில், காவல் ஏற்கனவே பார்த்த காவல்துறை திரைப்படங்களை கண்முன் நிறுத்துவதால் சற்றே கண்ணை கட்டுகிறது! ஆனாலும், தாதாயிசமும் - காவல் ஹீரோயிசமும் நம் நாட்டிலும், தமிழ் படங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றென்பதால் காவல், ரசிகனுக்கு பார்க்க வேண்டுமெனும் ஆவலை தரலாம்!


மொத்தத்தில், காவல் - கூவல் (அறைக்கூவல் அல்ல...!)




குமுதம் சினி விமர்சனம்


சென்னையை கதிகலங்க வைக்கும் தாதா கருணாவை என்கவுன்ட்டர் செய்ய, போலீஸ் எடுக்கும் அதிரடி ஆக்ஷன்தான் "காவல் படம்!


போலீஸ், ரவுடி மோதல் என்றால் நம் கண்முன் என்னென்ன வருமோ - தடிதடியான தங்கச்சங்கிலி போட்டிருக்கும் ரவுடி. துடிக்கத்துடிக்க நடக்கும் கொலைகள். தண்ணி அடிப்பது - என்று எல்லாமே வழக்கம் போலவே வருகிறது.

நாயகன் விமல். காவலர்களின் மகன்கள் எப்படியிருப்பார்களோ, அப்படியே இருக்கிறார். அஸ்வின் உள்ளிட்ட நண்பர்களுடன் குடிப்பது, ஊர்சுற்றுவது, நாயகி கீதாவை லவ்வுவது என வழக்கமான ஹீரோத்தனம். கடைசியில் துப்பாக்கியை கையில் கொடுத்து ரவுடியை சுடும் வேலையைக் கொடுத்து சமாளித்துவிட்டார்கள். நாயகி கீதா ஊறுகாய்தான்.

சமுத்திரகனிதான் முழுப் படத்தையும் தன் தோளில் சுமக்கிறார். அந்த போலீஸ் மிடுக்கும், கோபமும், ரவுடியை என்கவுன்ட்டர் செய்ய அவர் எடுக்கும் அதிரடி ஆக்ஷன்களும் படத்திற்கு பெரிய பலம்.

ரவுடி கருணாவாக வரும் தேவா மிரட்டுகிறார். காவலர்களாக வரும் எம்.எஸ். பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து போன்றவர்கள் லஞ்சம் வாங்குவதும், மகன்களை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றத் துடிப்பதும் அசல் போலீஸ்காரர்கள் தோற்றார்கள்.

காவல் நிலையத்திற்கு எதிரிலேயே இலவச சட்ட உதவி மையம் அமைத்து, பொது மக்களிடமிருந்து காசைக் கறக்கும் கேரக்டரில் வரும் நமோநாராயணன் சிரிக்க வைக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் பெரிய ப்ளஸ்.

சமுத்திரகனி பலூன் விற்பதுபோல் ரவுடிகளை கண்காணிப்பது, திருமணமான ஒரு வாரத்தில் போலீஸ் அதிகாரி பலியாவது உள்ளிட்ட போலீஸ், ரவுடி மோதல் காட்சிகள் அரதப்பழசு. என்றாலும் நட்புக்காக, கௌரவத்திற்காக, பகைக்காக கொலை செய்த காலம்போய் பணத்திற்காக கூலிப்படைகளை வைத்து கொலை செய்யும் காலமாக மாறிவிட்டது என்பதைத் தெளிவாகப் பதிவு செய்திருப்பது புதிது. விறுவிறுப்பான திரைக்கதை - இயக்குநர் வி.ஆர். நாகேந்திரனை தூக்கி நிறுத்துகிறது. கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


காவல் - சல்யூட்




குமுதம் ரேட்டிங் - ஓகே




வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

காவல் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in