தமிழ் சினிமாவின் பாதையை திருப்பிப்போட்ட 16 வயதினிலே படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. 80களின் ஹீரோ, ஹீரோயின்களால் முதலாளி என்று அன்பாக அழைக்கப்பட்டவர். பல காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் 16 வயதினிலே டிஜிட்டல் வெர்சனை வெளியிடும் பணியில் இறங்கினார். தற்போது அவர் மகன் மிதுன் குமார் களத்தூர் கிராமம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
16 வயதினிலே படத்தை டிஜிட்டலாக்கியர் இவர்தான். இயக்குனர் மகிழ்திருமேனியிடம் உதவியாளராக இருந்தவர் இப்போது ஹீரோவாகிவிட்டார். களத்தூர் கிராமத்தை ஏ.ஆர்.மூவி பேரடைஸ் சார்பில் சீனு ராஜ் தயாரிக்கிறார். எஸ்.ஏ.ராஜ்கண்ணு இணை தயாரிப்பாளர். இளையராஜா இசை அமைக்கிறார்.
மிதுன் குமார் ஜோடியாக ஏக்னா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் மகாதேவப்பா, தருண் சத்ரியா நடிக்கிறார்கள். தமிழ் மற்றும் கன்னட மொழியில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் தூத்துக்குடி பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.