4

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா மற்றும் பலர்
இயக்கம் - லெனின் பாரதி
இசை - இளையராஜா
தயாரிப்பு - விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்

சினிமாவை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல் ஒரு கலையாக அதிகபட்ச நேசத்துடன் பார்ப்பவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு படைப்பைக் கொடுக்க முடியும். தமிழ் சினிமாவில் அபூர்வமாக வரும் யதார்த்தப் படங்களின் வரிசையில் கூட இந்தப் படத்தைச் சேர்த்துவிடக் கூடாது. இது அந்தப் படங்களிலிருந்தும் விலகி நிற்கும் ஒரு முழுமையான வாழ்வியல் பதிவாக அமைந்துள்ளது.

தன்னைவிட பல கோடி ரூபாய் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் செய்யாத ஒரு விஷயத்தை இந்தப் படத்தின் மூலம் செய்து காட்டியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குனர் லெனின் பாரதி சொன்ன கதையைக் கேட்டு அது எப்படி திரையில் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அதற்காக சில பல கோடிகளை செலவு செய்து இயக்குனரின் எண்ணங்களை நிறைவேற்றிய அவருக்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

இதுவரை தமிழ் சினிமாவில் யதார்த்தப் படங்கள் என்று சொல்லி யார் யாரோ பாராட்டுக்களையும், விருதுகளையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை படத்தைப் பார்த்தால் நிச்சயம் கூனிக் குறுகிப் போய்விடுவார்கள் என்பது நிச்சயம். யதார்த்தப் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படத்தை ஒரு வரையறையாக அமைத்துவிட்டார் இயக்குனர் லெனின் பாரதி.

படத்தின் ஆரம்பத்திலேயே நாம் பார்க்கப் போவது ஒரு படமல்ல ஒரு வாழ்க்கை என்பதை மனதுக்குள் விதைத்துவிட்டார்கள். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஒரு மழைக் காலத்தில் விடியும் நாளில் ஆரம்பமாகும் கதை, அப்படியே கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், குதிரை பாஞ்சான் மெட்டு, சதுரங்கப் பாறை, தலையங்காவல் எனப் பயணித்து கடைசியில் ஒரு காற்றாலை இறக்கையின் உச்சிப் பார்வையில் முடியும் வரை மேடு, பள்ளம், திருப்பம் நிறைந்த ஒரு வாழ்க்கைப் பயணத்தை நம் உள்ளுக்குள் ஆழமாகப் புதைத்துவிடுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து தினமும் மலை கிராமங்கள் வழியே பயணித்து மலை மீதுள்ள மக்களுக்கும் உதவி செய்து, தன் முதலாளியின் எஸ்டேட்டிலிருந்து ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு பின் கீழேயிறங்கும் ரங்கசாமி-யின் (ஆண்டனி) வாழ்க்கைப் பயணம்தான் இந்தப் படத்தின் கதை. ரங்கசாமியின் வாழ்க்கையோடு அந்த கிராம மக்களின் வாழ்க்கை, துன்பம், இன்பம், ஏக்கம், பெருமை, போராட்டம் பல விஷயங்களைச் சொல்லி முடிகிறது படம்.

கூலித் தொழிலாளியாக இருக்கும் ஒருவன் ஒரு துண்டு நிலத்தையாவது வாங்கி விவசாயம் செய்யலாம் என்று பார்த்தால் அவனை இந்த சமூகமும், மக்களும், எப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள் என்பதும் படத்தில் உண்டு.

அதிகம் அறிமுகமில்லாத, ஒரு சில படங்களில் நடித்த நடிகரான ஆண்டனியை அப்படியே ரங்கசாமியாக நடமாடவும், நடிப்பென்பதை தெரிய வைக்காமலும் திரையில் வாழ விட்டிருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. இயக்குனரின் எண்ணத்தை தன் நடிப்பின் வழியே அவ்வளவு யதார்த்தமாய் பதிவு செய்திருக்கிறார் ஆண்டனி. அவருடைய ஆடையிலிருந்து, நடையிலும், உடல் மொழியிலும் ரங்கசாமி மட்டுமே நம் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.

ரங்கசாமியின் மனைவி ஈஸ்வரியாக (காயத்ரி கிருஷ்ணா) எந்த வித ஒப்பனையும் இல்லாமல் அந்தக் கிராமத்து இளம் பெண்ணாக, மனைவியாக, தாயாக வாழ்நதிருக்கிறார். இந்தப் படம்தான் இவருடைய அறிமுகப் படம். இதற்குப் பிறகுதான் ஜோக்கர் படத்தில் நடித்திருக்கிறார். அறிமுகப் படத்திலேயே இப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள சிலர் சினிமாவிற்கு சம்பந்தமில்லாதவர்கள் என்பது ஆச்சரியத் தகவல். தோழர் சாக்கோ, எஸ்டேட் ஓனர் ரவி, கங்காணி, கணக்குப் பிள்ளை, ஊத்து ராசா, வனகாளி, கிறுக்கு கிழவி, அடிவாரம் பாக்கியம், சுருளி, பாய், தள்ளாத வயதிலும் மூட்டையைச் சுமக்கத் துடிக்கும் அந்தப் பெரியவர் என அனைவருமே ஒவ்வொரு விதத்தில் நம்மிடம் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இம்மாதிரியான படங்களுக்கு இளையராஜாவின் இசையைவிட்டால் வேறு யார் பொருத்தமாக இசையமைக்க முடியும். அதுவும் அவருடைய சொந்த ஊரான பண்ணைபுரம் சார்ந்த ஒரு கதை என்றால் சொல்லவா வேண்டும். இசையால் படத்தின் உணர்வுகளை மேலும் தூண்டிவிட்டிருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒவ்வொரு பாதையிலும் நம்மையும் கூடவே கையைப் பற்றி அழைத்துச் செல்லும் உணர்வைத் தருகிறது. காசி விஸ்வநாதனின் நேர்த்தியான படத் தொகுப்பு படத்தை இன்னும் மெருகேற்றியிருக்கிறது.

தமிழ் சினிமாவை தீவிரமாக நேசிக்கும், மாறுபட்ட படங்களைப் பார்க்க ரசிக்கும், உண்மையான சினிமா எது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படும், நல்ல படம் வந்தால் மட்டுமே போய்ப் பார்ப்பேன் என்ற வைராக்கியத்துடன் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

மேற்குத் தொடர்ச்சி மலை - மலைப்பு

 

பட குழுவினர்

மேற்குத் தொடர்ச்சி மலை

  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓