Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பாபநாசம்

பாபநாசம்,Papanasam
  • பாபநாசம்
  • கமல்ஹாசன்
  • பிற நடிகைகள்: கெளதமி
  • இயக்குனர்: ஜீத்து ஜோசப்
06 ஜூலை, 2015 - 15:44 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பாபநாசம்

தினமலர் விமர்சனம்



கமல், இந்த படத்திற்கு தான் நியாயமாக உத்தமவில்லன், உத்தமநாயகன்.. இப்படி ஏதாவது பெயர் சூட்டியிருக்க வேண்டும்... காரணம், இப்படத்தில் கமலின் பாத்திரம் அப்படி! அவரது அழகிய குடும்பத்திற்கும், அந்த ஊருக்கும் உத்தம நாயகனாக தெரியும் கமல், போலீஸ்க்கு உத்தம வில்லனாகிறார்! ஆனாலும், பாவங்களை கழுவும் இடம் பாபநாசம் என்பதாலும், இப்படத்தின் கதைக்களமும் பாபநாசம் என்பதாலும் பாபநாசம் டைட்டிலும் படத்திற்கு பக்காவாக பொருந்துகிறது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில், கேபிள் டிவி நெட்வொர்க் உள்ளிட்ட பிஸினஸ்களை செய்யும் சுயம்புலிங்கம் எனும் கமலுடைய குடும்பம். அழகிய மனைவி ராணி எனும் கௌதமி, அழகிய இரண்டு மகள்கள் என அளவான குடும்பம். ஊரில், உழைப்பால் உயர்ந்து நல்ல பெயரும், புகழும் உடைய குடும்பமாக திகழ்கிறது.


வயதிற்கு வந்த மூத்த மகள் செல்வி எனும் நிவேதா தாமஸ், குட்டி மகள் மீனா எனும் எஸ்தர் அனில் இருவரும் கமலின் செல்லமோ செல்லம்! அப்படிப்பட்ட மூத்த மகள் செல்வியை, ஸ்கூல் டூர் செல்லும்போது எதிர்பாரத விதமாக, அவர் குளிக்கும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு வௌியூர் மாணவன் ஒருவன், தன் இச்சைக்கு இணங்குமாறு வீடு தேடி வந்து மிரட்டுகிறான். இது தாய் கௌதமிக்கு தெரியவருகிறது. அம்மாவும், பொண்ணும் அவனுக்கு பேசி புரிய வைத்து செல்போன் பதிவை அழிக்க வைக்கலாம்... என அந்த மாணவனிடம் பேசுகின்றனர். உன் மகள் நிர்வாணத்தை என் செல்போனிலிருந்து அழிக்க வேண்டுமென்றால் அவள் என்னுடன் படுக்க வேண்டும்... அல்லது நீ படுக்க வேண்டும்... என கௌதமியை மிரட்டுகிறான் அந்த மாணவன்.


இதைக்கேட்டு வெகுண்டெழும் சுயம்புலிங்கம் கமலின் மூத்த பெண் வாரிசு, அவன் கையில் இருக்கும் செல்போனை அடித்து நொறுக்க, அருகில் கிடக்கும் தடியை எடுக்கிறார். அது அந்த மாணவனின் உயிரையே பறிக்கிறது. இராவோடு இராவாக அம்மாவும், பொண்ணும் சேர்ந்து அரக்க பறக்க அவனை தங்கள் வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு விடியற்காலை வீடு திரும்பும் கமலிடம் நடந்ததை சொல்லி பதறுகின்றனர்.


இறந்து போனவன் திருநெல்வேலி மாவட்டத்தின் பெண் ஐ.ஜி.யின் ஒரே மகன் என்பது தெரிந்ததும், கமல் மாஸ்டர் பிளானில் இறங்குகிறார். போலீஸிடமிருந்து மனைவியையும், வயதுக்கு வந்த மகளையும், கூடவே, குடும்ப கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டி கமல் செய்யும் செட்-அப்புகளும், போடும் நாடகங்களும் தான் பாபநாசம் படத்தின் மொத்த கதையும்!


கமலும், அவரது குடும்பமும், போலீஸுக்கு போக்கு காட்டி தப்பித்ததா.? அல்லது சிக்கி சின்னாபின்னமானதா.? என்பதை இதுவரை தமிழ் படங்களில் பார்த்திராத வித்தியாசம், விறுவிறுப்புடன் பாபநாசம் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.


சுயம்புலிங்கமாக கமல்ஹாசன், வழக்கம் போலவே தான் ஏற்று நடிக்கும் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். முன்பாதி படத்தில் ஆரம்பகாட்சி தொட்டு இடைவேளை வரை கமல், தனது கேபிள் டிவி.,யில் அர்த்தராத்திரியில் போடும் அந்தமாதிரி படங்களை பார்த்துவிட்டு வந்து, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான கௌதமியிடம் இளமை ததும்ப செய்யும் சில்மிஷங்களில் ஆகட்டும், அதே கேபிள் நெட்வொர்க்கில் பகலில் போடும் நல்ல சினிமாக்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு, சினிமாவையே கல்வியாக்கி கொண்டு நான்காம் வகுப்பு வரையே படித்த கமல், போலீஸ்க்கு போக்கு காட்டுவதிலாகட்டும்... என ஒவ்வொரு காட்சியிலும் தன் பாணியில் தனி முத்திரை பதித்து தன் இந்தப்படத்தில் முத்த காட்சி இல்லாத குறையை போக்கியிருக்கிறார்.


ஐந்து பைசாவை கூட அளந்து அளந்து செலவு செய்யும் கமல், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாதது, மாமனாரின் சொத்துக்கு ஆசைப்படாதது, சிகரெட் அட்டையில் செலவு கணக்கு எழுதுவது, டீக்கடையில் லஞ்சலாவண்ய போலீஸ்களை கேலி கிண்டல் செய்வது, கொலை பழியில் சிக்க இருக்கும் குடும்பத்தை காப்பாற்றிட வேண்டி இறுதி வரை போராடுவது, இறுதியில் பெத்த மனம் பித்து என்பதற்கு ஏற்ப... தன் பிள்ளையால் தன் போலீஸ் வேலையை ராஜினாமா செய்த பெண் ஐஜியிடமும், அவரது கணவரிடமும், உலகத்தில் எங்கிருந்தெல்லாமோ மனிதர்கள் வந்து பாவங்களை கழுவும் பாபநாசத்தில், நான் கொஞ்சம் கொஞ்சமாக என் பாவங்களை கழுவி கொள்கிறேன் என கண்ணீர் விடுவது... உள்ளிட்ட ஒவ்வொரு காட்சியிலும் கமல், போலீஸின் கைகளை மட்டுமல்லாது ரசிகர்களையும் சீட்டோடு கட்டிப்போடுகிறார்.


ராணியாக கமலின் காதல் மனைவியாக கௌதமி, நீண்ட இடைவௌிக்கு பின் கமலின் மனைவியாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்பதே பொருந்தும். போலீஸ் விசாரணையில் ஒவ்வொரு முறையும் உளறி கொட்டி விடுவாரோ.? என பயம் கொள்ளும் ரசிகனை, பக்காவாக அதேமனநிலையில் வைத்துக்கொண்டு இருந்து நடிப்பில் வென்றிருக்கிறார்.


கமலின் மூத்த மகள் செல்வியாக வரும் நிவேதா தாமஸ், இளைய மகள் எஸ்தர் அனில் இருவரும் கமல்-கௌதமி மாதிரியே பாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கின்றனர்.


பொல்லாத போலீஸ் கலாபவன் மணி, நல்ல போலீஸ் இளவரசு, டீக்கடை பாய் எம்.எஸ்.பாஸ்கர், சப்-இன்ஸ் - அருள்தாஸ், பெண் போலீஸ் ஐஜி கீதா பிரபாகர் எனும் ஆஷா சரத், அவரது கணவர் பிரபாகராக ஆனந்த் மகாதேவன், மாமனார் - டெல்லி கணேஷ், மாமியார் - சாந்தி வில்லியம்ஸ், ஸ்ரீராம், அபிஷேக், சார்லி, வையாபுரி, நெல்லை சிவா, ரோஷன், காவிபெரிய தம்பி, மதனகோபால் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள், ரெம்பான்பால்ராஜின் கலை இயக்கம், அயூப்கானின் படத்தொகுப்பு, எழுத்தாளர் ஜெயமோகனின் வசன வரிகள், சுதீப் வாசுதேவ்வின் ஔிப்பதிவு, ஜிப்ரானின் இசை உள்ளிட்ட ஒவ்வொன்றும் ஜீத்து ஜோசப்பின் எழுத்து-இயக்கத்திற்கு பக்காவாக பலம் சேர்த்திருக்கின்றனர்.


நான்காம் வகுப்பு படித்துவிட்டு, ஐ.ஜி. மகனின் கொலையில் போலீஸ்க்கே போக்கு காட்டும் கமலும், அவரது குடும்பமும் ஆகஸ்ட் 2ம் தேதி, தென்காசியில் நடந்த சுவாமிஜியின் சொற்பொழிவில் கலந்து கொண்டதா...? இல்லையா..? என்பதை இந்தகாலத்தில் நிச்சயம் அங்கு எப்படியும் பதிவு செய்யப்பட்டிருக்கும் வீடியோ பதிவில் கேட்டு வாங்கி போட்டு பார்த்திருந்தாலே, கமல் போலீஸ்க்கு போக்கு காட்டுவது புலப்பட்டிருக்குமே எனும் கேள்வி.?! ரசிகர்களுக்கு எழாத வகையில் படத்தின் கதையையும், திரைக்கதையையும், காட்சியமைப்புகளையும் பக்காவாக நகர்த்தியிருப்பதாலேயே கமலின் பாபநாசம் ஜெயித்திருக்கிறது.


த்ரிஷ்யம் எனும் பெயரில் மலையாளத்தில், மோகன்லால் நடித்து வெளிவந்து வெற்றிப்பெற்ற சூப்பர்-டூப்பர் ஹிட் படத்தின் ரீ-மேக் தான் தமிழ் பாபநாசம் என்றாலும், நிச்சயம், பாபநாசம் - கமலின் முந்தைய படங்களை காட்டிலும் வசூல் பணம் வாசம் ஜாஸ்தி வீசும்!!




குமுதம் சினி விமர்சனம்


தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று ஒரு சின்ன வட்டத்தில் வாழும் சராசரி தந்தை சுயம்புலிங்கம். கேபிள் டி.வி. சர்வீஸ் செய்து வரும் அவருக்கு இரண்டு மகள்கள்.

மூத்த மகள் பள்ளி டூர் போன இடத்தில் அவள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து, அதைக்காட்டி அவளை அடைய மிரட்டுகிறான் ஐ.ஜி.மகன். அதை தாய் கௌதமி தடுக்க, அந்த போராட்டத்தில் ஐ.ஜி. மகன் கொல்லப்படுகிறான். படிக்காத சுயம்புலிங்கம் இந்த சிக்கலில் இருந்து மகளையும் குடும்பத்தையும் காப்பாற்றுவதுதான் கதை.

மலையாளத்தில் வெற்றிபெற்ற இந்த கதையை, எந்த சமரசமும் இல்லாமல் கமலை வைத்து தமிழில் தந்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். மிரட்டும் கதைக்கும் திரைக்கதைக்கும் ஏற்ப கமலின் ஒத்துழைப்பும் கிடைத்ததால் இயக்குநருக்கு வெற்றி.

படத்தில் கமல் என்ற நடிகர் தெரியவில்லை. பாபநாசம்வாசியான சுயம்புலிங்கமாகவே மாறியிருக்கிறார். மகளைக் காப்பாற்ற அவரது ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் எழும் ஒரு வலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் தந்தையின் அடையாளம் அது. ஒவ்வொரு காட்சியிலும் அவரது உடல்மொழி அசரவைக்கிறது. போலீஸ் விசாரணையில் தன்னை அடித்த நொறுக்கிய பின்னர், தன் மகளை அடிக்கப் போகும்போது, உண்மையை மகள் சொல்லிவிடுவாளோ என்ற பதட்டத்தில் அவர் காட்டும் கண்சாடை அப்ளாஸ்.

சம்பவம் நடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதியை தான் சந்திக்கும் ஒவ்வொருவர் மனதிலும் பதியவைக்க அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அதில் போலீஸ் தோற்றுப் போவது திரைக்கதையின் உச்சம்.

கௌதமியிடம் கொஞ்சல், கெஞ்சல், மகள்களிடம் பாசம், கஞ்சத் தனமில்லாத சிக்கனம், மகள்களுக்கு போலீஸிடம் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் விதம் எதிலும் ஒரு துளியும் மிகை இல்லாத நடிப்பு. கிளைமாக்ஸில் மகனை இழந்த ஐ.ஜி. கீதாவும் அவரது கணவரும் பேசும்போது உடல்மொழியை காட்டாமல், வெடித்து வரும் அழுகையை சமாளித்து தன் பாவத்தை இந்த பாபநாச தீர்த்தம் தீர்க்கும் என்றபோது கமலின் நடிப்பை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. இயக்குநருக்கும் இதில் பங்கு உண்டு. இருவருக்கும் ஒரு சல்யூட்.

கௌதமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். இயல்பான நடிப்பு என்றாலும் தோற்றத்தில் தளர்ச்சி. கமலுடனான கொஞ்சலில் நெருடல் தருகிறது.

ஐ.ஜி.யாக வரும் ஆஷா சரத்தும், அவரது கணவராக வரும் ஆனந்த் மகாதேவனும் மகனை இழந்த பெற்றோரின் தவிப்பை காட்டி கைதட்டல் வாங்குகிறார்கள். அதிகாரி என்றாலும் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.

மகள்களாக வரும் நிவேதாவும், எஸ்தரும் கண்கலங்க வைக்கிறார்கள். எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, டெல்லிகணேஷ், ஐ.ஜி. மகன் ரோஷன் மனதில் நிற்கிறார்கள். கமல் குடும்பத்தார்மேல் கலாபவன் மணி காட்டும் கோபமும் அடியும் பயங்கரம்.

நெல்லை மாவட்டத்தின் பின்னணி ஒளிப்பதிவுக்கு கை கொடுத்திருக்கிறது. "திரிஷ்யம் படத்தின் அதே வீடோ என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது வீடு. எடிட்டிங்கில் வேகம் தெரிகிறது. பாடல்களைவிட பின்னணி இசைதான் பிரமாதம்.

எல்லோரையும் திருநெல்வேலி பாஷையில் வசனம் பேச வைக்க இயக்குநருக்கு துணிச்சல் வேண்டும்.

கொலை நடந்த உண்மையைச் சொல்லாமலும் அதே நேரம் ஐ.ஜி. கீதாவுக்கும் அவரது கணவருக்கும் புரிகிற மாதிரி சொல்லும் அந்த கிளைமாக்ஸும், தடயங்களை மறைத்துவிட்டால் சரியாகிவிடுமா என்ற கேள்விக்கு, கமல் - கௌதமி உரையாடலும் இயக்குநரை தூக்கி நிறுத்துகிறது.

பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்துவரும் குடும்பத்தினருக்கு இது ஒரு எச்சரிக்கை. சரியான வளர்ப்பு இல்லாமல் கெட்டுப்போய்விடும் ஆண் பிள்ளைகளின் பெற்றோருக்கு இது ஒரு பாடம். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு அதி முக்கியமான படம்.




பாபநாசம் - பரவசம்




குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

பாபநாசம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in