Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

மெட்ராஸ்

மெட்ராஸ்,Madras
  • மெட்ராஸ்
  • கார்த்தி
  • நடிகை:கத்ரீனா தெரஸா
  • இயக்குனர்: ரஞ்சித்
15 அக், 2014 - 17:18 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மெட்ராஸ்

தினமலர் விமர்சனம்


அட்டகத்தி பா.இரஞ்சித்தின் எழுத்து, இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் பக்கா ஆக்ஷன், கமர்ஷியல் படம்தான் மெட்ராஸ். முன்பாதி படம் பழைய மெட்ராஸ் மாதிரி பளபளப்பாகவும், பரபரப்பாகவும், பின்பாதி இன்றைய சென்னை மாதிரி கலீஜாகவும், மெர்சலாகவும், நெர்சலாகவும், புரியதா புதிராய் இருப்பதும் தான் மெட்ராஸின் ப்ளஸ், மைனஸ்!


கதைப்படி, வடசென்னையின், பரபரப்பான ஏரியாவில் உள்ள ஒரு சுவற்றுக்காக ஒருகட்சியும், அதிலிருந்து பிரிந்து வந்த புதுக்கட்சியும் அடிக்கடி மோதிக் கொண்டு சில உயிர்களை பலி கொடுக்கின்றன. அதில் அதிகம் பலிக்கு உள்ளாவதும், பாதிப்பிற்குள்ளாவதும், புதிய கட்சியில் அதிகளவில் இருக்கும் அந்த ஏரியாவாசிகள் தான். இதில் மெர்சலாகும் அன்பு எனும் புதுக்கட்சியின் தீவிர தொண்டனான ஏரியாவாசி, தன் கட்சியின் ஏரியா தலைவர் கட்டளைப்படி குட்டி சுவற்றை தன் கட்சி சின்னம் வரைவதற்கு பயன்படுத்திக் கொள்ள சபதம் ஏற்கிறார்.


வேலை, காதல், காதலி, குடும்பம் என திரியும் அன்புவின் நண்பரும், ஹீரோவுமாகிய காளி எனும் கார்த்தி, சம்பந்தமில்லாமல் இவர்களது பாலிடிக்ஸில் தலையை விட்டு, எதிர்பாராமல் ஒரு கொலையை செய்வதுடன், நண்பன் அன்புவையும், விரோதிகளின் கொலைவெறிக்கு பலி கொடுக்கிறார். அதன்பின்னும் காதல், காதலி, குடும்பம் என மனதை தேற்றிக் கொள்ள முயலும் கார்த்திக்கு, ஒருகட்டத்தில் தான் செய்த கொலைக்காக சிறை செல்ல தயாரான அன்புவை கொன்றது விரோதிகள் அல்ல, கூடவே இருந்த துரோகி... என்பது தெரியவர, வில்லன்களை பழிவாங்க களம் இறங்கினாரா.? காதலியுடனான இல்வாழ்க்கை தான் பெரிதென இருக்கிறாரா.? இல்லை இரண்டிலும் வெற்றி பெறுகிறாரா.? என்பது க்ளைமாக்ஸ்!


கார்த்தி, காளியாக முன்பாதியில் காதலி, நட்பு, முட்டல், மோதல் என ஜாலியாக கவர்கிறார். பின்பாதியில் காளி அவதாரமாக ரசிகர்களை காலி செய்கிறார்(தியேட்டர் இருக்கையில் இருந்தும் தான்...)! காதலியுடன் அவர் கட்டிபிடி காட்சிகளிலும், முத்தமிடும் காட்சிகளிலும் காட்டும் ரொமான்ஸ் ஆகட்டும், நண்பனுக்கு ஒன்றென்றால் பதறும் வீரத்தில் ஆகட்டும், ஆக்ஷ்னில் குதித்து கண்மண் தெரியாமல் அதிரடியில் இறங்கும் காட்சிகளிலாகட்டும், அத்தனையிலுமே கார்த்தி புதியதொரு உயரத்தை மெட்ராஸ் படத்தில் பூர்த்தி செய்திருக்கிறார் என்றால் மிகையல்ல! அதிலும் அதிரடியாய் எதி்ர்பாராது ஒரு கொலையை செய்யும் இருட்டு காட்சியில் மிரட்டியிருக்கிறார் மனிதர்! அதிலும் கார்த்தி, நார்த் மெட்ராஸ் பையனாகவே மாறி வாழ்ந்திருக்கிறார்.


அப்ப நீங்க லவ் பண்ணலையா.? என தண்ணி பிடிக்கும் இடத்தில் கார்த்திக்கு கன்னி வைக்கும் ஒரு காட்சி போதும் புதுமுக நடிகை கேத்ரீன் தெரஸாவின் நடிப்பாற்றலை பாராட்ட என்றாலும், ஒவ்வொரு காட்சியிலும் அம்மணி, அசத்தியிருக்கிறார் அசத்தி! அதிலும் கார்த்தியை அடிக்கடி இழுத்தனைத்து கொடுக்கும் முத்தக்காட்சிகளில், நம்மையும் அறியாமல் நாம் சீட் நுனிக்கு வந்துவிடுகிறோம் என்றால் பாருங்களேன்!


கார்த்திக்கு பார்க்கும் பெண்களை எல்லாம் நொட்டை, நொல்லை சொல்லிக் கொண்டு, வரம் பெற்று பெற்ற பிள்ளடா நீ... என்று கார்த்தியை பார்த்து அடிக்கடி சொல்லும் பாரதிராஜாவின் அறிமுகம் ரமா, வெற்றிலை காசுக்காக கார்த்திக்கு ஐஸ்வைக்கும் பாட்டி கேரக்டர், நண்பன் கேரக்டர் அன்பு, பெருமாள், கண்ணன், மாரி விஜி, ஜானி, புளூ பஸ் டான்ஸ் குழு, அன்புவின் மனைவி மேரி, பழைய ரவுடி ஜானி உள்ளிட்ட எல்லோரும் சபாஷ் சொல்லும் படி நடிப்பை வழங்கியுள்ளனர். அதிலும், போலீஸ் அடியால் லூசு தனமாக மெட்ராஸ் பாசையில் உதார் விடும் பழைய ரவுடி ஜானியின் நடிப்பும், துடிப்பும் பிரமாதம்!


சந்தோஷ் நாராயணின் இசையில், அந்த சாவு கானா... பாடலும், ஆகாயம் தீ பிடிச்சா... எனத் தொடங்கி தொடரும் பாடலும் சூப்பர்ப்! முரளி.ஜியின் ஒளிப்பதிவு, இருட்டிலும் மிளர்கிறது. பிரவினின் படத்தொகுப்பு முன்பாதியில் பாராட்டும்படியும், பின்பாதியில் படுத்தும்படியும் இருக்கிறது!


பின்பாதியில் ஒருசில குறைகள் இருந்தாலும், மெட்ராஸ் கதைகளை அழகாக சொல்ல, பா.இரஞ்சித்தை விட்டால் ஆளில்லை எனும் அளவில் இருக்கிறது அட்டக்த்தி இரஞ்சித்தின் எழுத்தும், இயக்கமும்!


ஆகமொத்தத்தில், தொடர் தோல்விகளை தந்த கார்த்திக்கு முன்பாதி மெட்ராஸ் - புதிய அட்ரஸை தந்திருக்கிறது! பின்பாதி.?!!







----------------------------------------------------------



கல்கி சினி விமர்சனம்





பின்தங்கிய மக்களுக்கு கல்வி மட்டுமல்ல, அரசியல் அறிவும் தேவை என்பதையும், வடசென்னை வாழ் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி தேவை என்பதையும் சமூக அக்கறையோடு சொல்லும் படம் மெட்ராஸ்.


"அட்டக்கத்திக்குப் பிறகு இயக்குநர் ரஞ்சித்துக்கு இன்னொரு ஹிட். கார்த்தி படம் முழுக்க வட சென்னை இளைஞராகவே வாழ்ந்திரக்கிறார். நீண்ட நாளைக்கு பிறகு அவருக்கு மீண்டும் பேர் சொல்லும் படம் மெட்ராஸ்.


ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் கார்த்தியை சமூகசூழல், அரசியல் எப்படி அவன் வாழ்க்கையைத் திசை திருப்புகிறது என்பதே கதை. ஹவுசிங் யூனிட்டில் வாழும் காளிக்குத் தன்னை யாராவது காதலிக்க வேண்டும். ஜாலியாக இளமையைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா பார்க்கும் பெண்களையெல்லாம் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி அம்மாவே தட்டிக் கழிப்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது என்று நண்பர்களோடு கலாய்க்கும் இயல்பான வேடத்தில் கார்த்தி.


தன் நண்பன் அன்புக்காக அடிக்கடி சண்டையில் இறங்கும் கார்த்தியின் முன்கோபத்தால் நண்பனையே இழக்க வைக்கிறது. ஒரு கொலைக் கும்பல் அன்புவை சதித்திட்டம் தீட்டி போட்டுத் தள்ள சிக்கலில் மாட்டுகிறார் கார்த்தி. அதிலிருந்து மீள்வதையும், கலைஅரசியாக வரும் காத்ரினாவைக் காதலித்து கைபிடிப்பதையும் திரைக்கதை நகர்வில் சூப்பராக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.


படத்தின் முக்கியமான ஹீரோ என்றால் ஹவுசிங் யூனிட்டில் இருக்கும் அந்த சுவர்தான். அரசியல்வாதிகள் தங்கள் கௌரவத்துக்காக சுவர் பயன்படுத்தி அதனால் தலைமுறை தலைமுறையாக வரும் பகையைக் காட்டி புதிய கோணத்தில் எழுதியுள்ளார் இயக்குநர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி ரசிக்க வைக்கிறது. பாடல்கள் கேட்கலாம்.


மெட்ராஸ் - நல்ல மெட்ராஸ்







-----------------------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்



வடசென்னைதான் கதைக்களம். அங்குள்ள ஒரு சுவர்தான் ஹீரோ. அந்த சுவருக்காக நடக்கும் கொலைகளும் அடிதடிகளும் தான் கதை.


"அட்டகத்தியில் காதலை ஜாலியாகச் சொல்லி எளிதாக வெற்றிகண்ட ரஞ்சித், "மெட்ராஸில் ஒரு சீரியஸாக விஷயத்தை சீரியஸாகவே சொல்லி ஜெயித்திருக்கிறார். கூடவே, தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த கார்த்தியை கைகொடுத்து தூக்கியும் விட்டிருக்கிறார்.


தங்கள் ஏரியா சுவரை, பக்கத்து ஏரியா அரசியல்வாதி கண்ணன் ஆக்ரமித்து, அவரது அப்பாவின் போஸ்டரை ஒட்டுகிறார். அதை எதிர்க்கும் கார்த்தியின் நண்பன் அன்புவை, அவர் கண் முன்னாலேயே படுகொலை செய்துவிடுகிறார்கள். நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்குவதும் சுவரை மீட்பதும் என்று வடசென்னை வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.


வடசென்னை வாசிகளின் பாடி லாங்வேஜுடன் மெட்ராஸ் பாஷையையும் இயல்பாகப் பேசி அசத்துகிறார் காளியாக வரும் கார்த்தி. நண்பன் கொலையைக் கண்டு பொங்குவது, காதலிக்க அவர் படும் அவஸ்தை, நண்பனுக்காக எதிரிகளுடன் சண்டை போடுவது என்று எதிலும் குறை வைக்காத நடிப்பு. பருத்தி வீரனுக்குப் பிறகு எப்படியும் ஜெயித்தே ஆவது எனற வெறி கார்த்தியின் நடிப்பில் தெரிகிறது.


ஹீரோயின் கேத்ரின் தெரஸா வடசென்னை வாசியை மிஞ்சிய அழகு. கார்த்தியை காதலிப்பது, பழிவாங்கத் துடிக்கும் கார்த்தியின் மனதை மாற்ற முயற்சிப்பது என்று நன்றாகவே நடித்திருக்கிறார். "ஓன்னதா பிடிச்சிருக்கு. என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று கோப்படுவதில் கூட அழகு!


இவர்களைத் தவிர்த்து கார்த்திக்கின் நண்பனாக அன்பு கதாபாத்திரத்தில் வருளம் கலையரசன் கார்த்திக்கு ஈடுகொடுத்த நடிப்பு.


சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அருமை. பாடல்கள் கேட்க மனதிற்கு இதம், கானா பாலாவின் பாடல்கள் சோகத்திலும் மனதிற்கு ஆறுதல்.


மூன்று மணி நேரப் படம் என்றாலும் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டது எடிட்டிங் தான். படத்தின் பெரிய பலம் சண்டைக் காட்சிகள் ஃபுட்பால் விளையாட்டையும், கார்த்தி போடும் சண்டைகளையும் மாற்றி மாற்றி காட்டி மிரட்டுகிறார் ஒளிப்பதிவாளர்.


வடசென்னையை அணுஅணுவாக ஆய்வு செய்திருக்கிறார் இயக்குநர். வழக்கமான பழிவாங்கும் வன்முறைக் காட்சிகள்தான் படம் முழுக்க வருகிறது என்றாலும், அதிகார வர்க்கத்தினரின் சுயநலத்திற்காக, அப்பாவி மக்கள் பலிகடா ஆக்கப்படுவதையும் அரசியல் சூழ்ச்சியையும் துணிவோடு பேசியிருப்பதால் குறைகள் கண்ணில் படவில்லை. இதற்கு ஒரு தீர்வாக "படிக்கலாமா? என்று சிறுவர்களைப் பார்த்து கேட்பதில் இருக்கிறது இயக்குநரின் டச்!




மெட்ராஸ் - காளியாட்டம்.




குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மெட்ராஸ் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in