நேர்மையான என்கவுன்ட்டர் போலீஸ்க்கும், கோணலான எடுபிடி அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்குமிடையில் நடக்கும் முட்டலும், மோதலும், கூட்டலும், கழித்தலும் தான் என் வழி தனி வழி படத்தின் மொத்த கதையும்! எல்லாம் அவன் செயல் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்.கே., இயக்குநர் ஷாஜி கைலாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம்!
நேர்மையான என்-கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆர்.கே., இளவரசு, தலைவாசல் விஜய், மீனாட்சி தீட்சித் உள்ளிட்ட தனது டீமுடன் ஆர்.கே. செய்யும் என் கவுன்ட்டர் கொலைகளே, ஒருநாள் அவருக்கு எதிராக திரும்புகின்றன! அவரது அன்பு அம்மா சீதாவை ஆர்.கே., கண்முன்பே அவை பலிவாங்குகின்றன. இதில் வெகுண்டெழும் ஆர்.கே. மேலும் அதிரடியில் இறங்குகிறார்.
அதனால் இதுநாள் வரை ஆர்.கே.வுக்கு கவசமாக இருந்த போலீஸ் துறையே அவருக்கு எதிராக திரும்புகிறது. அரசியல்வாதிகளின் கைகூலிகளாக இருக்கும் ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், என் கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெற்றிச்செல்வன் எனும் ஆர்.கே.வையே என்-கவுன்ட்டரில் தீர்த்துக்கட்ட சட்டத்தை வளைத்து திட்டம் தீட்டுகின்றனர். அவர்களது திட்டத்தை தவிடு பொடியாக்கி அந்த அதிகாரிகளின் பின்னணியில் இருக்கும் அமைச்சர் ரோஜா, இன்டர்நேஷனல் வில்லன் ராஜிவ் கிருஷ்ணா உள்ளிட்டவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்பும் ஆர்.கே., சட்டத்திற்கு கட்டுப்பட்டு சரண் அடைந்து, தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அபாண்ட குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பிக்கிறார்.? எனும் கதையுடன் ஆர்.கே., பூனம் கவுரின் காதலையும் கலந்துகட்டி என் வழி தனி வழியை வழக்கமான கமர்ஷியல் வழியில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் ஷாஜி கைலாஷ்!
என் கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் வெற்றி செல்வனாக ஆர்.கே. கம்பீரமாக, சமூக விரோதிகளை ட்ப-டுப் என்று சுட்டுத்தள்ளுகிறார். மீனாட்சி தீட்சித்துடன் அழகு, அழகிய அயல்நாட்டு லொகேஷன்களில் எல்லாம் டூயட் பாடுகிறார். ஆர்.கே..வின் நடை, உடை, பாவனையில் ஒரு போலீஸ் ஆபிஸராக இருக்கும் கம்பீரம், குரலிலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருந்தால் மேலும் பிரமாதமாக இருந்திருக்கும்.
பூனம் கவுர், ஆர்.கே.வின் முறைப் பெண்ணாக வந்து ஹீரோவை உருகி உருகி காதலித்து, டூயட் பாடி மகிழ்ந்து காணாமல் போகிறார். இன்னொரு நாயகி மீனாட்சி தீட்சித்தும், என்-கவுன்ட்டர் போலீஸ் வேலையில் விரும்பி வந்து சேர்ந்து ஒன்றிரண்டு ரவுடிகளை சுட்டுதள்ளி, அதன்பின் ஆர்.கே.வை சுட முயலும் போலீஸ் ஆபிசர் ஆஷிஸ் வித்யார்த்தியையும் சுட்டு கவனம் ஈர்க்கிறார்.
தம்பி ராமையா, சிங்கமுத்து திருட்டு கோஷ்டியின் காமெடி டிராக் கடிக்கிறது. ஆஹா பட நாயகர் ராஜிவ் கிருஷ்ணாவின் வில்லத்தனம் வெறும் பேச்சளவில் மட்டும் இருப்பது என் வழி தனி வழி படத்தின் பெரும் பலவீனம்.
சீதாவின் தாய்பாசம் பலம்! வில்லி ரோஜாவும் பலம்! தலைவாசல் விஜய், இளவரசு, ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, விசு, பயில்வான் ரங்கநாதன், அஜய் ரத்னம், பாவா லட்சுமணன், சங்கிலி முருகன், ஞானவேல், பொன்னம்பலம், டி.பி.கஜேந்திரன், மதன்பாப், மோகன்ராம், அன்பாலாயா பிரபாகரன், ராஜ்கபூர், கராத்தே ராஜா உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டமாளமே படத்தில் இடம்பெற்றிருப்பது படத்திற்கு பெரும் பலம்!
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வைரமுத்து, இளைய கம்பனின் அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள், வி.பிரபாகரின் வசனங்கள், ராஜரத்தினத்தின் அழகிய ஔிப்பதிவு, தவிர., ராணுவத்திற்கு இருப்பது மாதிரி போலீஸ்க்கும் தனி நீதிமன்றம், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு இராணுவத்தை பயன்படுத்தி ஊழலை ஒழிப்பது... உள்ளிட்ட மெஸேஜூகளுக்காகவும், ஷாஜி கைலாஸின் இயக்கத்தில், என் வழி தனி வழியை பார்க்கலாம், பாராட்டலாம்!
மொத்தத்தில், என் வழி தனி வழி - வழக்கமான தமிழ் சினிமா கரம் மசாலா கலந்த புதிய போலீஸ் வழி!