Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கப்பல்

கப்பல்,Kappal
09 ஜன, 2015 - 15:53 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கப்பல்

தினமலர் விமர்சனம்


இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுகிறது என்றதுமே கப்பல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு, கோடம்பாக்கத்தில் எக்கச்சக்கமாக எகிறிவிட்டது. அந்த எதிர்பார்ப்பை, வைபவ் - சோனம் பாஜ்வா ஜோடி நடித்திருக்கும் கப்பல் எந்தளவிற்கு கலர்ஃபுல்லாக பூர்த்தி செய்திருக்கிறது? கப்பல் கமர்ஷியலா? கலெக்ஷன்ஃபுல்லா?! என்பதை இங்கு பார்ப்போம்...


கதைப்படி., சிறுவயது முதலே உயிர் நண்பர்கள் வைபவ், கருணாகரன், அர்ஜூனன், கார்த்திக், வெங்கட்சுந்தர் ஐவரும்!. பள்ளி, கல்லூரி என தொடரும் இவர்களது நட்பில் சிறுவயது முதலே ஒரு சத்தியம் கட்டி காக்கப்படுகிறது அது., இந்த ஐவர் குழுவில் யாரும் காதலிக்கவோ, கல்யாணம் கட்டிக்கவோ...கூடாது...காரணம், காதலியோ, மனைவியோ., வந்துவிட்டால் நட்பு கெட்டு நண்பர்கள் பிரிய நேரிடும் என்பதுதான். ஆனால், ஆரம்பம் முதலே, அவ்வளவாக விபரம் தெரியாத வயதில் வேண்டாவெறுப்பாக சத்தியம் செய்து கொடுத்துவிட்டு, எதிர்படும் பெண்களை எல்லாம் வயசுக்கோளாறில் வெறிக்க வெறிக்க பார்க்கும் வைபவ்., வாலிப பருவத்தை எட்டியதும் மேற்படி காரணத்திற்காகவே, நண்பர்களை பிரிந்து மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.


பெண்கள் விஷயத்தில் கில்லாடியான வைபவ், சென்னையில் வந்து இறங்கியதும், ரூம்மேட் விடிவி கணேஷின் விசித்திர ஐடியாபடி, ஒரு வசதியான வீட்டு வெண்ணைய் மாதிரியான லட்டு பெண்ணை தேடிப்பிடிக்கிறார். அவர்தான் கதாநாயகி சோனம் பாஜ்வா. பப்பில் செம மப்பில் இருக்கும் சோனம் பாஜ்வாவிற்கு உதவி செய்யப்போய் அவரையே காதலியாக கப்பென்று தன் இதயத்தில் பிக்ஸ் செய்துவிடும் வைபவ்., சோனத்தை துரத்தி, துரத்தி காதலித்து...ஓ..சாரி., தொந்தரவு செய்து ஒருவழியாக காதலியாக அடைந்து காஸ்ட்லீ வாழ்க்கையை அடையப்போகும் நேரத்தில், மயிலாடுதுறையில் இருந்து, இவர்களது காதலுக்கு கட்டையை போடுவதற்கென்றே வந்து சேருகின்றனர் வைபவிடம் சிறுவயதில் சத்தியம் வாங்கிய நண்பர்கள்!.


நண்பர்களது சைல்டிஷ்தனமான தடை பல கடந்து வைபவ் - சோனம் பாஜ்வாவின் காதல் கப்பல் கரைசேர்ந்ததா? அதில் மூழ்காத ஷிப்பான பிரண்ட்ஷிப் மூழ்கியதா..? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், சூடாகவும், சுவையாகவும் மூன்றில் இரண்டுபாகம் கலர்ஃபுல்லாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கும் படம்தான் கப்பல்!. தமிழ்படம் மாதிரி பிற படங்களையும் நக்கலும் நையாண்டியும் செய்து ரசிகர்களை குதூகல கடலில் நீந்தவிடுவது கப்பல் படத்தின் பெரும்பலம். ஆனாலும் ஒரு பேன்டசியான காமெடி காதல் படமான கப்பல் கிட்டத்தட்ட இரண்டேமுக்கால் மணிநேரம் ஜவ்வாக ஓடுவதுதான் ஒரே குறை!.


வாசுவாக வைபவ் இன்னசென்ட் முகத்தில் எதிர்படும் பெண்கள் மீதெல்லாம் ஏக்கத்தை காட்டி என்னமாய் நடித்திருக்கிறார்...?! வாவ்., வைபவ்...வாரே வா! பள்ளி பருவந்தொட்டே பெண்கள், வைபவை கிராஸ் செய்யும்போதெல்லாம் அவர் முகத்தில் 100 வாட்ஸ் பல்பு எரிவதும், அறியாத வயசில் தெரியாத்தனமாக விருப்பமே இல்லாமல் நண்பர்களுக்கு காதலிக்க மாட்டேன்..என சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதை காப்பாற்றவும் முடியாமல் காதலிக்கவும் முடியாமல் தடுமாறும் இடங்களில் செமயாய் எக்ஸ்பிரஷன்கள் காட்டியிருக்கும் வைபவ்., சென்னையில் இருந்து அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் வந்ததாக ஒரு லெட்டரை ரெடி செய்து மாயவரத்து நண்பர்களிடமிருந்து தப்பிக்க போடும் பிளானில் தொடங்கி ., சென்னையில் அடைக்கலம் கொடுத்த விடிவி கணேஷின் படுக்கை அறையை, கதவிடுக்கு வழியாக எட்டிப்பார்த்து அகப்பட்டு வழிவதுவரை சகலத்திலும் சக்கைபோடு போட்டிருக்கிறார். சோன்பப்டி சோனம் பாஜ்வாவுடன் காதல் காட்சிகளில் ஒட்டி உறவாடி கிச்சுகிச்சு மூட்டுவதிலும் வைபவ் உச்சம் தொட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்!.


நாயகி சோனம் பாஜ்வா., சும்மா கும்முன்னு இருக்கிறார். ரசிகர்கள் கம்முன்னு இருப்பார்களா?. அம்மணி அல்ட்ராமார்டனாக ஸ்கிரீனில் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் விசில் சப்தம் தூள் பரத்துகிறது. கிளாமரிலும் சரி., வைபவ்வுடனான காதல் காட்சிகளிலும் சரி...எக்கச்சக்க நெருக்கம் கிறக்கம் காட்டி ரசிகனின் உள் இருக்கும் ரசிகனை தூண்டிவிட்டு ரசிகனை, தியேட்டர் சீட்டோடு கட்டிப்போட்டு என்னமோ ஏதேதோ செய்கிறார் சோனம். சோனத்தி்ற்காகவே, இன்னுமொருமுறை போவணும் கப்பலுக்கு!. அதிலும் அந்த பப் மப்பு காட்சிகளும் படுக்கையில் இருந்து அம்மணி விழிக்கும் காட்சிகளும் சாதாரண ரசிகனை ஒன்ஸ்மோர் சொல்லவைக்கும் ரகம்!.


கருணாகரன், அர்ஜூனன், வெங்கட்சுந்தர், கார்த்திக் உள்ளிட்ட ஹீரோ வைபவின் மயிலாடுதுறை நண்பர்களில் கருணா வில்லனாகவும் இல்லாமல் காமெடியனாகவும் இல்லாமல் விழிகளாலேயே உருட்டி அதட்டி ஸ்கோர் செய்திருக்கிறார். அந்த விஷயத்தில் கில்லாடியான விடிவி கணேஷ், வழக்கம்போலவே தன் கரகர குரலில் கண்டதையும் பேசி கப்பல் படத்திற்கு கரம் மசாலா சேர்த்திருக்கிறார் பலே, பலே!. மாப்பிள்ளை அபய்யாக வரும் ஸ்டீவ் பரிதாபமாக கவனிக்க வைக்கிறார், வைபவ் அண்ட் கோவினரின் ரோல்மாடல் ரோபோ ஷங்கர் மாதிரி ஆட்கள் ஊருக்கு ஒருவராவது தேறுவார்..என்பதால் அவரது பாத்திரத்துடனும் பக்காவாக ஒன்றமுடிகிறது!.


அந்தோணியின் படத்தொகுப்பு, தினேஷ் கிருஷ்ணன்.பி.யின் ஒளி்ப்பதிவு, நடராஜன் சங்கரனின் இசை உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுக இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ், மயிலாடுதுறையையும், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியையும், டி.ஆரின் ஒருதலைராகத் திற்கு அப்புறம் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். அதேநேரம்., நண்பர்கள் ஐந்துபேரில் ஒருவருக்கு நண்பர்களின் தடையை மீறி திருமணம் நடந்துவிடுகிறது. அதனால் அவர்கள் செய்த சத்தியமும் காலாவதியாகி விடுகிறது...எனும்போது வைபவின் காதலுக்கு அவர்கள் குடைச்சல் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்?. என ரசிகர்கள் லாஜிக் பார்க்காதிருந்தால் கப்பல் கரைசேர்ந்துவிடும்!.


ஆகவே, கப்பல் - கலர்புல், காமநெடி- காமெடி ஜொள்ளு - லொள்ளு நிரம்பிய கமர்ஷியல் கலக்கல்!. கலெக்க்ஷன்புல்லா.?!




கல்கி சினி விமர்சனம்


நகைச்சுவைக்கு என்று தனியே காட்சிகள் இருந்த ட்ரெண்டை மாற்றி, முழுக்க முழுக்க நகைச்சுவையாலேயே நிரம்பி வழியும் படம்தான் கப்பல். இதில் தரமானவையும் உண்டு. இரட்டை அர்த்தம் மற்றும் ஆபாசம் போன்றவையும் ஆங்காங்கே உண்டு. படத்தில் பார்த்த முகங்கள் அதிகம் இல்லாமல் இருப்பதால் ஒருவித ஃப்ரெஷ்னெஸ் நிலவுகிறது. பெண் சகவாசமே கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்ளும் நண்பர்களில், ஹீரோவுக்கு உடன்பாடு இல்லை. அவருக்கு நண்பர்களும் வேண்டும்; காதலும் வேண்டும். இதுதான் கதையின் மையப்புள்ளி.

கதாநாயகியைப் பெரும் குடிகாரியாகவும், ஆண் நண்பருடன் (கதாநாயகக் காதலன் அல்ல என்பதைக் கவனிக்கவேண்டும் மை லார்ட்!) அர்த்த ராத்திரியில் அலைபவராகவும் ஆரம்பத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதன்மூலம், தான் மாத்தி யோசித்திருப்பதை வெளிப்படுத்துகிறார். ஆனால், அடுத்த காட்சியிலிருந்து தமிழ்படக் கதாநாயகிக்குரிய குணாதிசயங்களோடு மாற்றிவிடுகிறார். அதேபோல பயத்தில் சிறுநீர் கழிப்பது, மது அருந்துவதுபோன்ற காட்சிகளை சினிமாவின் மரபை மீறாமல் காட்சிப்படுத்தி, தான் "மாத்தாமல் யோசிப்பவர் என்பதையும் இயக்குநர் தெளிவாக்குகிறார்.

காட்சிகளோடு இரண்டறக் கலந்த நகைச்சுவை இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். தான் அலுவலகத்தில் இருப்பதை செல்போனில் கதாநாயகன் புருடாவிடுவதை ஜெர்க்குடன் காய்கறி வாங்கும் பெண் பார்க்கும்போது, "எம்.டி., பார்க்கிறாங்க. அப்புறம் பேசுறேன் என்ற சீன் இதற்கு நல்ல உதாரணம். ஹீரோவுக்குக் காதல் ஆலோசகராகத் தனிப்பட்ட குரலுடன் வரும் வி.டி.வி. கணேஷ் எதைச் சொன்னாலும் - எதைச் செய்தாலும் தியேட்டரே சிரிப்பில் குலுங்குகிறது.

பாட்டிலும் காமெடி வழிகிறது. "ஊருவிட்டு ஊருவந்து ரீமேக் சுமார் ரகம். கெட்ட வார்த்தை போட்டி, விரசம்தான் என்றாலும் தியேட்டரில் சிரிப்பொலி காதைப் பிளக்கிறது.




கப்பல் - கரை சேரும்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

கப்பல் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in